தியாகம் செய்ய எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை: இந்திய கம்யூனிஸ்ட் விமர்சனம்

"எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் பாஜகவுக்கு எதிரானவர்கள்; ஆனால், தேர்தலில் அக்கட்சியைத் தோற்கடிப்பதற்கு தொகுதிகளை விட்டுக் கொடுக்கவோ, தியாகம் செய்யவோ அவர்கள் தயாராக இல்லை' என்று இந்திய
தியாகம் செய்ய எதிர்க்கட்சிகள் தயாராக இல்லை: இந்திய கம்யூனிஸ்ட் விமர்சனம்


"எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் பாஜகவுக்கு எதிரானவர்கள்; ஆனால், தேர்தலில் அக்கட்சியைத் தோற்கடிப்பதற்கு தொகுதிகளை விட்டுக் கொடுக்கவோ, தியாகம் செய்யவோ அவர்கள் தயாராக இல்லை' என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி கூறினார்.
வரும் மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு இடையே கூட்டணி உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை சுட்டிக்காட்டி, இந்தக் கருத்தை சுதாகர் ரெட்டி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, பிடிஐ செய்தியாளரிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறியதாவது:
மக்களவைத் தேர்தலையொட்டி, தில்லி, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
காங்கிரஸ் கட்சியும், இதர பிராந்திய கட்சிகளும் நாட்டின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் பேச்சுவார்த்தை நடத்தியதே இந்த தோல்விக்கு காரணமாகும். கூட்டணிப் பேச்சுவார்த்தையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சற்று கவனமாகக் கையாண்டிருக்கலாம். பிற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு அவர் தீவிரமாக முயற்சி செய்திருக்கலாம்.
ஆனால், அவர் அப்படிச் செய்யாமல், கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும் முடிவை கட்சியின் மாநிலத் தலைவர்களிடம் ஒப்படைத்தார். மேலும், அவர்களுக்கு கூடுதல் சுதந்திரமும் அளித்தார். 
அதுமட்டுமன்றி, கூட்டணிப் பேச்சுவார்த்தையை காங்கிரஸ் சற்று முன்கூட்டியே தொடங்கி, தொகுதிப் பங்கீட்டை இறுதிசெய்திருக்கலாம்.
கூட்டணிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததற்கு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் குறுகிய கண்ணோட்டமே காரணமாகும். அவர்கள் அனைவரும் பாஜகவுக்கு எதிரானவர்கள். ஆனால், பாஜகவை தோற்கடிப்பதற்காக, அவர்கள் தங்கள் தொகுதியை விட்டுக் கொடுக்கவோ, தியாகம் செய்யவோ தயாராக இல்லை.
அண்மையில் நடைபெற்ற சில இடைத்தேர்தல்களிலும், 3 மாநில பேரவைத் தேர்தல்களிலும் பாஜகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டாலும்,  மக்களவைத் தேர்தலில் அக்கட்சியைத் தோற்கடிப்பதற்காக, எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பதற்குப் போராடி வருவது துரதிருஷ்டவசமானது.
தற்போது நம்மிடம் இருக்கும் ஒரே வழி, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைப்பதுதான். பாஜக அல்லாத, பாஜகவுக்கு எதிரான கட்சிகள், பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை இன்னும் எனக்கு உள்ளது.
50 தொகுதிகளில் போட்டி: வரும் மக்களவைத் தேர்தலில், நாடு முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 50 இடங்களில் போட்டியிடும். 
கேரளத்தில் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணியில் இடம்பெற்றுள்ளோம். ஒடிஸாவில் காங்கிரஸூடன் கூட்டணி அமைத்துள்ளோம். 
ஆந்திரத்தில் பகுஜன் சமாஜ், ஜன சேனா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி உடன்பாட்டை மேற்கொண்டுள்ளோம்
என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com