பாஜக சார்பில் இதுவரை 306 வேட்பாளர்கள் அறிவிப்பு

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 306 வேட்பாளர்களை பாஜக இதுவரை அறிவித்துள்ளது. இதில் முதல் இரு கட்டத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் அனைவரும் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.
பாஜக சார்பில் இதுவரை 306 வேட்பாளர்கள் அறிவிப்பு

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 306 வேட்பாளர்களை பாஜக இதுவரை அறிவித்துள்ளது. இதில் முதல் இரு கட்டத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் அனைவரும் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.
அதேசமயம், பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் கான்பூர் தொகுதிக்கான வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. 
9 வேட்பாளர்கள் அடங்கிய 7-ஆவது பட்டியலை பாஜக தலைமை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. அவர்களில் 6 பேர் சத்தீஸ்கர் மாநில மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள். இது தவிர தெலங்கானா, மகாராஷ்டிரம், மேகாலயம் ஆகிய மாநிலங்களுக்கு தலா ஒரு வேட்பாளர்கள் அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் ரமண் சிங், ராஜ்நந்த் கோன் தொகுதியில் போட்டியிடுவார் என்ற ஊகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகுதி வேட்பாளராக சந்தோஷ் பாண்டே என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த வியாழக்கிழமை பாஜகவின் முதலாவது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் பிரதமர் நரேந்திர மோடி (வாராணசி), பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா (காந்திநகர்) உள்பட மொத்தம் 184 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இதைத் தொடர்ந்து அன்றைய தினமே டையூ - டாமன் தொகுதிக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை 3 பட்டியல்களையும், சனிக்கிழமை ஒரு பட்டியலையும் பாஜக வெளியிட்டது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள 7 பட்டியல்கள் மூலம் மொத்தம் 306 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், நிதின் கட்கரி, நரேந்திர சிங் தோமர், ஜெயந்த் சின்ஹா, ஸ்ரீபாத நாயக் ஆகியோருக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன.
ரவி சங்கர் பிரசாத்துக்கு பிகாரின் பாட்னா சாஹேப் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் இப்போது பாஜக சார்பில் எம்.பி.யாக உள்ள சத்ருகன் சின்ஹா, தொடர்ந்து மத்திய அரசுக்கும், பிரதமருக்கும் எதிராக கருத்துத் தெரிவித்து வந்ததை அடுத்து அவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. கட்சியின் மூத்த தலைவர் அத்வானியின் காந்தி நகர் தொகுதியில் அமித் ஷா போட்டியிடுகிறார்.
அதேபோல மற்றொரு மூத்த தலைவர் சாந்தகுமாருக்கு இந்த முறை தொகுதி ஒதுக்கப்படவில்லை. ஹிமாசலப் பிரதேசத்தின் காங்ரா தொகுதி எம்.பி.யாக அவர் இப்போது உள்ளார். அத்தொகுதி இந்தமுறை கிஷன் கபூருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் கான்பூர் தொகுதிக்கான வேட்பாளரை பாஜக இன்னும் அறிவிக்கவில்லை. அந்த தொகுதியில் ஜோஷி மீண்டும் போட்டியிட வாய்ப்பில்லை என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. 
பிகாரில் பாஜக சார்பில் போட்டியிடும் 17 வேட்பாளர்களின் பெயர்களை கட்சியின் மத்தியத் தலைமை நேரடியாக அறிவிக்கவில்லை. அந்த மாநிலத்தின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர்களுடன் சேர்ந்து பாட்னாவில் கூட்டாக அறிவிக்கப்பட்டது.
முன்னதாக, ஒடிஸா மாநிலம் புரி தொகுதியிலும் பிரதமர் மோடி போட்டியிடலாம் என்ற கூறப்பட்டது. ஆனால் அந்தத் தொகுதி வேட்பாளராக கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா அறிவிக்கப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com