கேதார்நாத் குகையில் மோடி 17 மணிநேரம் தியானம்: பத்ரிநாத் கோயிலிலும் வழிபாடு

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோயிலுக்கு சனிக்கிழமை சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள குகையில் சுமார் 17 மணி நேரம் தியானம் மேற்கொண்டார்.
பிரதமர் நரேந்திர மோடி, தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட படம்.
பிரதமர் நரேந்திர மோடி, தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட படம்.

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோயிலுக்கு சனிக்கிழமை சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள குகையில் சுமார் 17 மணி நேரம் தியானம் மேற்கொண்டார். பின்னர் பத்ரிநாத் கோயிலில் அவர் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு நடத்தினார்.
ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல், இறுதிக்கட்ட வாக்குப்பதிவுடன் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. வரும் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்காக, பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார். இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், உத்தரகண்ட் மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணமாக அவர் சனிக்கிழமை வருகை தந்தார்.
இமயமலையில் 11,755 அடி உயரத்தில் அமைந்துள்ள கேதார்நாத் கோயிலில், பாரம்பரிய உடையணிந்து வழிபாடு நடத்திய அவர், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்தார். பின்னர், கேதார்நாத் கோயிலுக்கு அருகே உள்ள குகைக்கு பிற்பகல் 2 மணியளவில் சென்று தியானத்தில் அமர்ந்தார். பின்னர், ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு குகையிலிருந்து வெளியே வந்த பிரதமர் மோடி, மீண்டும் கேதார்நாத் கோயிலில் வழிபட்டதுடன், சிறப்பு பூஜைகளிலும் பங்கேற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கேதார்நாத் கோயிலில் வழிபாடு நடத்தியதை பாக்கியமாக கருதுகிறேன். இந்த வழிபாட்டின்போது இறைவனிடம் நான் எதையும் வேண்டி கேட்கவில்லை. அது எனது குணமும் கிடையாது. மற்றவர்களிடம் எதையும் கேட்கும் இடத்தில் இறைவன் நம்மை வைக்கவில்லை. கொடுக்கும் இடத்தில்தான் வைத்துள்ளார்.
தேர்தல் ஆணையத்துக்கு நன்றி:
தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலில் உள்ள காலகட்டத்தில் எனது கேதார்நாத்-பத்ரிநாத் பயணத்துக்கு அனுமதி அளித்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதேபோல், தேர்தல் பரபரப்புக்கு இடையே நேரம் ஒதுக்கி இங்கு வந்த ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
கேதார்நாத்தில் இயற்கைச் சூழல், சுற்றுலா நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காணொலி முறையில் இப்பணிகளை நான் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறேன் என்றார் அவர்.
கடந்த 2 ஆண்டுகளில் பிரதமர் மோடி கேதார்நாத்துக்கு வருவது இது 4-ஆவது முறையாகும்.
பத்ரிநாத் கோயிலில் வழிபாடு: கேதார்நாத் கோயிலிலிருந்து இந்திய விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் பத்ரிநாத் கோயிலுக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார். இதுதொடர்பாக பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் கமிட்டியின் தலைவர் மோகன் பிரசாத் கூறியதாவது:
பிரதமர் மோடி, பத்ரிநாத் கோயிலில் சுமார் 20 நிமிடங்கள் வழிபாடு நடத்தினார். பின்னர், கோயில் வளாகத்துக்குள் சுற்றி வந்த அவர், தரிசனத்துக்காக காத்திருந்த பக்தர்களுடன் கைகுலுக்கினார். பத்ரிநாத் கோயில் வளாகத்தை விரிவுபடுத்துதல், தொலைதொடர்பு சேவையை வலுப்படுத்துதல் ஆகிய பணிகள் தொடர்பாக பிரதமரிடம் மனு அளித்தேன். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருவதில் கூடுதல் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார் என்றார் மோகன் பிரசாத்.
கேதார்நாத்-பத்ரிநாத் ஆகிய கோயில்களும் குளிர்கால இடைவெளிக்கு பிறகு அண்மையில்தான் திறக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com