தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சித் தலைமை பதவியை துறக்க ராகுல் முடிவு: செயற்குழு மறுப்பு!

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று கட்சித் தலைமை பதவியை துறக்க ராகுல் முடிவு செய்துள்ளார்.
தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சித் தலைமை பதவியை துறக்க ராகுல் முடிவு: செயற்குழு மறுப்பு!


புது தில்லி: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று கட்சித் தலைமை பதவியை துறக்க ராகுல் முடிவு செய்துள்ளார்.

இன்று காலை புது தில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், கட்சித் தலைமை பதவியில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்தி அளித்துள்ளார்.

ஆனால், ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்துள்ள செயற்குழு உறுப்பினர்கள், கட்சித் தலைவராக ராகுல் தொடர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். 

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியடைந்த நிலையில், அக்கட்சியின் செயற்குழு கூட்டம் சனிக்கிழமை காலை தொடங்கியது. 

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியாயின. இதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 90 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 52 இடங்களிலும் வெற்றி பெற்றாலும், பல இடங்களில் நோட்டாவை விட குறைவான வாக்குகளையே அக்கட்சி பெற்றது.

இந்த தோல்விக்கு 100 சதவீத பொறுப்பையும் தான் ஏற்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். இந்நிலையில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

வெற்றி பெறாத வியூகம்..: மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, ரஃபேல் போர் விமான ஒப்பந்தம், ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவற்றை குறிப்பிட்டு பாஜகவுக்கு எதிராக ராகுல் தீவிர பிரசாரம் செய்தார். எனினும், அவரது தொகுதியான அமேதியில் கூட இந்த முறை ராகுலால் வெற்றி பெற இயலவில்லை. பல மாநிலங்களில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை மற்றும் நோட்டாவை விட குறைவான வாக்குகள் பெற்றுள்ளது. 

18 மாநிலங்களில் காங்கிரஸுக்கு "பூஜ்யம்'..: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஆந்திரம், அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், உத்தரகண்ட் உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் காங்கிரஸ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களிலேயே வெற்றி பெற்றிருந்தது. இந்த முறை சற்று அதிகரித்து 52 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜிநாமா..: உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த படுதோல்விக்குப் பொறுப்பேற்று அந்த மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் தனது ராஜிநாமா கடிதத்தை கட்சி மேலிடத்துக்கு அனுப்பியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனது சொந்த தொகுதியில் தோல்வியுற்றதற்குப் பொறுப்பேற்று அமேதி மாவட்ட காங்கிரஸ் தலைவர் யோகேந்திர மிஸ்ரா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

ஒடிஸா சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் படுதோல்வி அடைந்ததற்குப் பொறுப்பேற்று, அந்த மாநில காங்கிரஸ் தலைவர் நிரஞ்சன் பட்நாயக் தனது ராஜிநாமா கடிதத்தை ராகுல் காந்திக்கு அனுப்பி வைத்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com