ஆச்சரியமூட்டும் அறிவியல்!

மருத்துவ பச்சை குத்துதல்

ஹாலாஸ்யன்

‘‘சாப்பிடப் போலாமா? எனக்கு சரியான நேரத்துக்கு சாப்டுடணும். ஷுகர் இருக்கு” சமீபகாலமாக இந்த வாக்கியத்தை நாம் அடிக்கடிக் கேட்கிறோம்.

கணையத்தின் லாங்கர்ஹான் திட்டுகள் (Islets of Langerhans) சுரக்க வேண்டிய இன்சுலின் குறைந்தாலோ அல்லது உடலின் செல்கள் இன்சுலினுக்கு மரத்துப்போனாலோ, நீரிழிவு நோய் ஏற்படுகிறது. உடலின் எரிபொருளான சர்க்கரையை செல்கள் எடுத்துக்கொள்வதற்கும், உபரிச் சர்க்கரையை சேமித்துவைக்கவும் இன்சுலின் அவசியம். இன்சுலின் இல்லையென்றால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு எகிறிப்போகும். செல்களுக்குள் சர்க்கரை போகாததால், தொடர்ச்சியான பசி, உபரிச் சர்க்கரையை வெளியேற்ற சிறுநீரகங்கள் சிறுநீராய் வெளியேற்றும். அதனால் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை ஈடுகட்ட தொடர்ச்சியாக தாகம். இதெல்லாம் சிக்கல்கள். இவை தவிர, காயங்கள் ஆறாமல் போதல் போன்று ஏகப்பட்ட உபரித் தொந்தரவுகள். நிரந்தரத் தீர்வுகளாக சில முறைகள் பரிந்துரை செய்யப்பட்டாலும், இதன் சிக்கல்கள் வாழ்க்கை முறையால் வருவதென்பதால், சர்க்கரை அளவை சரியான அளவில் வைத்துக்கொள்வதே வழியாக இருக்கிறது.

சாப்பிடுவதற்கு முன்னரும் பின்னரும், ரத்தத்தின் சர்க்கரை அளவை விரல்முனையில் சிறு ஊசியால் குத்தி ஒரு துளி ரத்தத்தை சர்க்கரை அளவு பார்க்கும் கருவிக்குள் வைத்து அளவிட்டுக்கொள்கிறார்கள். அந்தச் சிறு காகிதத்தில் சில நொதிகளைப் பூசி வைத்திருப்பார்கள். அது க்ளுக்கோஸுடன் வினைபுரிந்து மெஷினுக்குள் செலுத்தப்படுகையில், ரத்தத்தில் எவ்வளவு க்ளுக்கோஸ் இருக்கிறது என்று திரையில் காண்பித்துவிடும். அதைப்பொறுத்து, உணவு உண்டோ அல்லது இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டோ சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் விரல்முனையில் ஒரு துளி ரத்தம் எடுக்கும்போது கொஞ்சம் வலி இருக்கத்தான் செய்யும். அதற்குப் பதில், ஒரே ஒருமுறை மொத்தமாக வலியை அனுபவித்துவிடலாம். சர்க்கரை அளவை அது சொல்லிவிடும் என்ற நிலை வந்தால் எப்படி இருக்கும்?

உடனே உடலுக்குள் ஏதோ ஒரு கருவியை வைத்துத் தைத்து அது தகவல்களை வெளியிடும் என்று நினைத்தால், சாரி! நீங்கள் நிறைய ஹாலிவுட் படங்கள் பார்க்கிறீர்கள். இது அதற்கும் மேலே. பச்சைக் குத்துதல். மருத்துவ பச்சைக் குத்துதல். இது ஏதோ மருத்துவ முத்தம் மாதிரியான சமாசாரம் இல்லை. இதன் மாதிரி ஆய்வுகள் செய்யப்பட்டுவிட்டன.

டெர்மல் அபிஸ் (dermal abyss) என்ற பெயரில் ஹார்வார்டு மற்றும் எம்.ஐ.டி. ஆராய்ச்சியாளர்களின் கூட்டு யோசனை இது. நவீன மருத்துவத்தையும் பச்சைக் குத்துதல் என்ற ஒரு தொன்மையான கலையையும் ஒன்று கலக்கும் முயற்சி.

நம் உடலின் மிகப்பெரிய உறுப்பு தோல். தோலின் மேற்புறம், இறந்துபோன செல்கள் மேல்நோக்கி நகர்வதால் உருவாவது. அதற்குக் கீழே நரம்புகள் இருக்கும். அதன் கீழே உயிருள்ள செல் அடுக்கு. இந்த மேற்புற செல் அடுக்கு இல்லாமல், நரம்புகள் வெறுமனே வெளியில் தெரிந்தால், நம் மேல் தென்றல் வந்து தீண்டினாலே வலி உயிர் போகும். மேல்நோக்கி வளரக்கூடிய அடுக்கின் கீழ் இருக்கும் செல்கள் பெரும்பாலும் அங்கேயேதான் இருக்கும். அந்த அடுக்கில்தான் பச்சை குத்துவார்கள்.

பச்சை குத்துதல் மிகத் தொன்மையான சடங்கு. கிட்டத்தட்ட உலகின் எல்லா நாகரிகங்களிலும் சான்றுகள் இருக்கின்றன. சமூக அந்தஸ்தை, சில குறிப்பிட்ட சாதனைகளைக் குறிக்க, அழகியல், மேலும் தான் இந்தக் குழுவை கூட்டத்தைச் சேர்ந்தவன் என்று ஒரு அடையாளமாக பச்சை குத்துதல் இருந்திருக்கிறது. ஜப்பானிய மற்றும் சில ஆப்பிரிக்கப் பழங்குடிகளில், போரில் முதல் முறையாக எதிரியின் தலையைத் துண்டித்ததன் அடையாளமாக ஒருவருக்குத் தலையில் பச்சை குத்தப்படுமாம். கொஞ்சம் அமெரிக்கப் படங்கள் பார்த்திருந்தால், அங்கிருக்கும் ஸ்பானிய மொழி பேசும் தாதா கும்பல்கள், தங்கள் குழுவுக்குள் அடையாளமாக ஒரு குறிப்பிட்ட வடிவத்தை பச்சை குத்திக்கொண்டிருப்பதை கவனித்திருக்கலாம். ஜெயிலுக்குச் சென்று திரும்பினால், சில தாதா கூட்டங்களில் இப்படி பச்சை குத்திவிடுவார்கள். நம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பச்சை குத்தியவர்களை ராணுவத்தில் சேர்க்கத் தயங்கியதற்குக் காரணம் இதுவாகக்கூட இருக்கக்கூடும்.

சிறு ஊசி முனைகளில் வண்ண மையை எடுத்துக்கொண்டு, சருமத்தில் துளையிட்டு மையை கொஞ்சம் ஆழத்துக்குக் கொண்டுபோய், அங்கிருக்கும் செல்களில் செலுத்துவதுதான் பச்சை குத்துவதின் அடிப்படை. நச்சுத்தன்மை இல்லாத இந்த வண்ணங்களை, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வெளியேற்ற முயன்றுவிட்டு, அப்புறம் இருந்து தொலையட்டும் என்று விட்டுவிடும். மேல்நோக்கி நகராத செல்களில் செலுத்தப்படும் மை அங்கேயே காலம் முழுக்க இருக்கும். சருமத்தினுள் சில மில்லிமீட்டர்கள் அடியில் இருப்பதால், வண்ணமும் பார்வைக்குத் தெரியும். நவீன பச்சை குத்தும் இயந்திரங்கள் இன்னும் நுண்ணிய ஊசிகளை சருமத்துள் செலுத்தி மையை பீய்ச்சுகிறார்கள். இன்னும் துல்லியமான வடிவங்கள் கிடைப்பதுடன், பல வண்ணங்களில் பச்சை குத்தவும் முடியும். பல வண்ணங்களில் குத்துவதால், அதை பச்சை குத்துதல் என்று சொல்ல முடியாதுதான். இருந்தாலும் பரவாயில்லை.

இந்த மைகள் உயிருள்ள செல்களுள் இருப்பதால், செல்திரவங்களோடு வினைபுரிய முடியும். அதன்மூலம், செல்லுக்குள் இருக்கும் அமிலத்தன்மை, க்ளுக்கோஸ் அளவு, செல்லுக்குள் இருக்கும் சோடியத்தின் அளவு ஆகியவற்றை அறியமுடியும். இப்படி க்ளுக்கோஸ், சோடியம், அமிலத்தன்மை ஆகியவற்றின் அளவைப்பொறுத்து, நிறம் மாறக்கூடிய ஒரு மையை வைத்து பச்சை குத்திவிட்டால், குளுக்கோஸ் அளவோ, சோடியம் அளவோ எவ்வளவு இருக்கிறதெனக் கண்ணால் பார்த்துத் தெரிந்துகொண்டுவிடலாம்தானே. அதைத்தான், மேற்சொன்ன இரு பல்கலைக் கழக ஆய்வாளர்களும் செய்திருக்கிறார்கள். இப்படி, உடலுக்குள் இருக்கும் பொருட்களின் செறிவு மாற்றத்தைக் கொண்டு நிறம் மாறும் பொருட்களுக்கு உயிர்-மை (biomarkers) என்று பெயர்.

பன்றியின் தோலை எடுத்து அதில் இந்த மைகளைக் கொண்டு பச்சை குத்திப் பார்த்ததில் பக்காவாக வேலை செய்திருக்கிறது. இன்னும் சில விலங்குகளில் சோதித்து, அதன்பின்னர் மனிதர்களுக்கு வந்துவிடலாம்.

இதில் குறிப்பிடத்தகுந்த நன்மைகள் இருக்கின்றன. மின்சாரத்தால் இயங்கும் ஒரு கருவியை உள்ளே வைக்க வேண்டுமெனில் அதற்கு ஆற்றல் அவசியம். ஆனால் இந்த மைகள் வேதியியல் ஆற்றலால் இயங்குபவை. நம் உடல் போன்ற ஒரு மிகப்பெரிய வேதியியல் தொழிற்சாலையில், இவை தங்குதடையின்றி பழுதின்றி இயங்கமுடியும்.

தினமும் விரல்நுனி ரத்தத்தை, அம்மன் பட வில்லன்கள் ரத்தக் காவு கொடுப்பதுபோல் கொடுப்பதை நிறுத்திவிடலாம். மேலும், மாற்றம் நிகழ்ந்தால் உடனுக்குடன் நிறம் மாறி இவை காண்பிக்க வல்லவை (real time monitoring).

இதில் சில சவால்களும் இருக்கின்றன. எல்லோருக்கும் பச்சை குத்துதல் சரியாக வரும் என்று சொல்ல முடியாது. சிலருக்குத் தடித்து ஒவ்வாமை வர வாய்ப்பு உண்டு. ஊதா, இளஞ்சிவப்பு, நீலம் போன்ற நிறங்களிலேயே இவை இருப்பதால், அடர்நிறத் தோல் உள்ளவர்களின் சருமங்களில் இதன் நிற வேறுபாடுகள் பெரிய அளவில் தெரியாமல் போகலாம்.

ஆனால், இது சோதனை ஓட்டம்தான். இந்த உயிர்-மைகளை இன்னும் ஆராயலாம். மாறுதல்கள் கொண்டுவந்து, நமக்கு வேண்டும்படி வடிவமைக்கலாம். இன்னும் பல தகவல்களைச் சேமிக்கும்படியான உயிர்-மைகளைக் கண்டுபிடிக்கலாம். சாத்தியங்கள் ஏராளமானவை.

கொஞ்சநாள் போனபின் நம்மூரிலும் வரலாம். எந்த ஸ்டார் வேண்டுமோ, அந்த ஸ்டாரின் உருவத்தைக் குத்திக்கொள்ளலாம். ஸ்டார்களுக்கா நம்மூரில் பஞ்சம்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

SCROLL FOR NEXT