12. மலரினும் மெல்லிது - 3

காதலை உண்டாக்கக்கூடிய பெண் இயல்பிலேயே நாணம் கொண்டவளாகவும், உயிரை உறிஞ்சிவிடுவது போன்ற பார்வை கொண்டவளாகவும், முக்கியமாக மார்பகங்களைத் துணி போட்டு மறைக்கக்கூடியவளாகவும் இருப்பாள்.

மார்புத்துணி

உயிரை உருவி எடுத்துவிடுவது போன்ற பார்வை பெண்களுக்கு வேண்டும் என்று வள்ளுவர் சொன்னதைப் பார்த்தோம். அதோடு அவர் விடவில்லை. பெண்கள் எப்படி உடை அணிந்திருக்க வேண்டுமென்றும் சில குறிப்புகளைக் கொடுக்கிறார். அது, இந்தக் காலத்துக்கு மிகவும் அவசியமான ஒன்று. இந்தக் காலத்து படித்த, படிக்கின்ற, மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களெல்லாம் கவனித்துப் பின்பற்ற வேண்டிய விஷயம் இது என்று கருதுகிறேன். சரி அப்படி என்ன சொல்கிறார்?

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்

நோக்கமிம் மூன்றும் உடைத்து

எமனோ, கண்ணோ, பெண் மானோ என்று புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு மூன்றும் சேர்ந்ததாக அவளது பார்வை இருக்க வேண்டும் என்று அதே அதிகாரத்தில் சொல்லும் வள்ளுவர், பெண்களின் ஆடை பற்றியும் அழகாகக் குறிப்பிடுகிறார். அது என்ன?

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்

படாஅ முலைமேல் துகில்

என்பதுதான் அது. பெண்கள் தங்கள் மார்பகங்களை மறைத்து அவற்றின் மீது துணி ஒன்றைப் போட்டுக்கொள்ள வேண்டும். அந்தத் துணியானது மதயானையின் கோபம் கொண்ட கண்களை மறைக்கும் படாம் போன்றதாகும் என்று இந்தக் குறளுக்கு அர்த்தம்!

கீழ்ஜாதி என்று கருதப்பட்ட பெண்கள் மார்பகங்களை மறைக்கும் ஜாக்கெட் அணியக் கூடாது என்று ஒரு காலத்தில் சதி, ஸாரி, விதி இருந்தது. உதாரணமாக, கேரள வரலாற்றில் கீழ்ஜாதிப் பெண்களும் தலித் பெண்களும், மேல்ஜாதிக்காரர்கள் முன் தங்கள் மார்பகங்களை துணிபோட்டு மறைக்கக் கூடாது. அது மரியாதைக் குறைவாகக் கருதப்பட்டது. ஜாதி என்ற போர்வையில், ஆண்களின் அயோக்கியக் கண்களுக்கு விருந்து கிடைத்துக்கொண்டே இருந்தது. தவறான பார்வையால் கண் போகிறது சோரம் என்று சொல்லும் ஒரு நபிமொழி எனக்கு நினைவுக்கு வருகிறது. ஐந்து விநாடிகளுக்கு மேல் ஒரு பெண்ணை நீங்கள் பார்த்தால், நீங்கள் உங்கள் கண்களால் அவளைத் தொடுகிறீர்கள் என்று அர்த்தம் என்றார் ஓஷோ!

கேரளாவில் நடைமுறையில் இருந்த அந்த விதியை மீறி மார்பகங்கள் மறையுமாறு தலித் பெண்கள் மேலே துணி போட்டுக்கொண்டால், அதற்காக அரசாங்கத்துக்கு வரி செலுத்த வேண்டும்! ‘துணியிருப்ப ‘மணி’ கவர்ந்தற்று’!

அந்த அநியாயத்தை சகிக்கப் பொறுக்காத ஆலப்புழையைச் சேர்ந்த நங்கேலி என்ற பெண் வெகுண்டெழுந்தாள். தன் மார்பகங்களை துணிகொண்டு மறைத்துக்கொண்டாள். மாவட்ட ஆணையர் வந்து, மார்பை மறைத்ததற்காக வரி கேட்டபோது, விளக்கை ஏற்றிவைத்து வாழை இலையை மரபுப்படி விரித்து வைத்து, அதில் வரிப்பணத்தை வைப்பதற்குப் பதிலாக தன் மார்பில் ஒன்றை அறுத்து வாழையிலையின் மீது வைத்தாள். ஆடிப்போனார் ஆணையர். ஆனால், அந்த மானமிகு பெண் இறந்துபோனாள் என்கிறது வரலாறு. இணையத்தில் இந்த வரலாறு இன்றும் படிக்கக் கிடைக்கிறது.

ஆக, மார்பை மறைக்க மேல்துணி போட்டுக்கொண்டதற்காகப் பெண்கள் தங்கள் உயிரையும் கொடுத்திருக்கிறார்கள் என்கிறது நம் வரலாறு. ஆனால், இன்றைய வரலாறு என்ன? ஜாக்கெட் போட்ட பிறகு மார்பின் மீது ‘துப்பட்டா’ அல்லது ‘ஓட்னி’ எனப்படும் மேல்துணி போடுவதையே விரும்பாத கலாசாரம் வந்து, முட்டி, தோள்பட்டை என ஆங்காங்கே கிழிசல்கள் உள்ள ஜீன்ஸ்களைப் போட்டுக்கொண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடனமாடும் ‘ஓட்டைக் கலாசாரம்’ வந்து வெகுநாளாகிவிட்டது! கண்ணியமான உடை அணியாததுதான் பெண்ணியம் என்று நினைத்துக்கொண்டார்கள் போலும்!

பலதரப்பட்ட துறைகளில் உள்ள பெண்களும் ஜாக்கெட் மீது கூடுதலாக ஒரு துணி போட்டு மறைப்பதை விரும்புவதில்லை. அவர்கள் அப்படி இருப்பதைத்தான் ஆண்கள் விரும்புகிறார்கள் என்பது வேறு விஷயம்! ஆனால், திருக்குறள் காட்டும் தனி நெறி, துணி நெறி இதுவல்ல.

ஒரு யானைக்குப் படாம் போட்டிருப்பதைப்போல, யாராலும் தீண்டப்படாத, நிமிர்ந்த மார்பகங்கள் தெரியாதவாறு மறைத்து அவற்றின் மீது துணியொன்றைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று வள்ளுவர் வலியுறுத்திக் கூறுகிறார்! காமத்துப்பால் என்பது அவிழ்த்துப் போட்டுக்கொள்வது பற்றிய கவிதைகள் அல்ல. அவிழ்ப்பது பற்றிப் பேசுவது வாத்ஸ்யாயனம். இது வாத்ஸல்யாயனம். இது நிர்வாணம் பற்றியதல்ல. மானம் பற்றியது. அவசியமான ஆடைகளை அணிந்துகொண்டே காதல் செய்வது எப்படி என்பது பற்றியது!

பெண்ணுக்கு அணிகலன் எதுவென்று வள்ளுவர் சொல்கிறார் தெரியுமா? நாணம். ஆமாம். அது உள்ளிருந்து வர வேண்டும். அப்படி வந்தால்தான் உடலை மறைக்க வேண்டும் என்ற எண்ணமே அவளுக்கு வரும் என்பது குறிப்பு.

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு

அணியெவனோ ஏதில தந்து

நாணம் உடையவளான அப்பெண்ணுக்கு, செயற்கையான அணிகலன்கள் எதுவும் தேவையில்லை என்கிறார் வள்ளுவர். அப்படியானால், நிறைய நகைகளை அணிந்திருக்கும் பெண்ணுக்கு நாணம் குறைவாக இருக்கலாம் என்பதும் குறிப்பு!

தகையணங்குறுத்தல் என்ற அதிகாரத்தில் உள்ள கடைசிக் குறளிலும் ஒரு செய்தி உள்ளது. அதுவும் நமக்கு முக்கியமானதே. அது என்ன?

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்

கண்டார் மகிழ்செய்தல் இன்று

கள்ளை உண்டால் உண்டவருக்கு அது மயக்கம் கொடுக்கும். ஆனால் காமமானது, கண்டவருக்கே மயக்கம் கொடுக்கும் என்கிறார் வள்ளுவர்! ஆனால், கண்டாலே மயக்கம் கொடுக்கும் காதலை உண்டாக்கக்கூடிய பெண் இயல்பிலேயே நாணம் கொண்டவளாகவும், உயிரை உறிஞ்சிவிடுவது போன்ற பார்வை கொண்டவளாகவும், முக்கியமாக மார்பகங்களைத் துணி போட்டு மறைக்கக்கூடியவளாகவும் இருப்பாள் என்பதே, காமத்துப்பாலில் நமக்குக் கிடைக்கும் முதல் குறிப்புகள்.

கண்கள்

காமம் என்பது ஆண் - பெண் உடலுறுப்புகளின் இணைப்பு மட்டுமல்ல. கூடலானது, காதலின் இறுதிக் காண்டம். அது, மன்மத யுத்த காண்டம். அதற்கு முன்னால், பால காண்டம், மாமனார் வீட்டுக் காண்டம், ஐ மீன் அயோத்தியா காண்டம், சுந்தர காண்டம் என்று எவ்வளவோ உள்ளது. அதையெல்லாம் பார்க்க வேண்டாமா?

அதற்குத்தான் கண்களில் தொடங்குகிறார் வள்ளுவர். அங்குதானே எல்லாமே தொடங்குகிறது?! பெண்களின் கண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பல குறிப்புகளைக் கொடுக்கிறார். அவற்றில் சிலவற்றைப் பற்றிக் கொஞ்சம் பார்த்தோம். ஆனால் இன்னும் நிறைய உண்டு. அவற்றையும் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. காதலுக்குக் கண் எவ்வளவு முக்கியம் என்று அவற்றில் இருந்து தெரிந்துகொள்ளலாம். நாம்தான் ‘காதலுக்குக் கண் இல்லை’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்! லைலாவைவிடவும் அழகான பெண்களைக் காட்டியபோது, மஜ்னூன் சொன்னானாம்: ‘லைலாவை என் கண்களால் பாருங்கள்’!

அதுதான் காதல் பார்வை. வள்ளுவரும் கண்களை லேசில் விடுவதாக இல்லை.

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு

நோய்நோக்கொன் றந்நோய் மருந்து

இந்தக் குறளை எளிமைப்படுத்தி நிறைய கவிதைகள், திரைப்படப் பாடல்கள் எல்லாம் வந்துவிட்டன. ஆனால், அது திருக்குறளில் உள்ள கருத்துதான் என்று நமக்குத் தெரியாமல் இருக்கலாம். அவள் பார்க்கிறாள். அவளது ஒரு பார்வை காதல் நோயை ஏற்படுத்துகிறது. இன்னொறு பார்வை அந்நோய்க்கு மருந்தாகிறது என்கிறார் வள்ளுவர்.

இதையே கொஞ்சம் மாற்றி,

கண்ணே நீ என்னைப் பார்த்தபோது என் கண்ணில் ஒரு முள் குத்தியது.

முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டும்?

எங்கே, இன்னொரு முறை பார் .

என்று ஒரு புதுக்கவிதை கூறுகிறது! ‘உன்னை நான் பார்க்கும்போது, மண்ணை நீ பார்க்கின்றாயே, விண்ணை நான் பார்க்கும்போது, என்னை நீ பார்க்கின்றாயே’ என்ற கண்ணதாசன் பாடலும் எளிமைப்படுத்தப்பட்ட திருக்குறள்தான்.

கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல

‘பார்வை ஒன்றே போதுமே, பல்லாயிரம் சொல் வேண்டுமா’, ‘ஓராயிரம் பார்வையிலே, உன் பார்வையை நான் அறிவேன்’ போன்ற கண்ணதாசன் பாடல்கள் நினைவு வருகிறதா? அதுவும் காமத்துப்பால்தான்! கண்கள் அனிச்சம், குவளை ஆகிய மலர்களைப்போல இருப்பதாகவும், அவற்றைவிடவும் அழகாகவும் மென்மையாகவும் இருப்பதாகவும் பல பாடல்களில் வள்ளுவர் சிலாகிக்கிறார். காதலில் கண்களுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை இதிலிருந்து ஓரளவு புரிந்துகொள்ளலாம்.

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள

இதுதான் காதல் க்ளைமாக்ஸின் ஆரம்பம். கண்டு, கேட்டு, தொட்டு, முகர்ந்து என ஐம்புலன்களுக்கும் காதலில் வேலை உள்ளது. ஆனால் அது தொடங்கும் இடம் கண்களாகும்.

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள்

இது ஓர் அருமையான புதுக்கவிதை போலவே உள்ளது. காதலி ஒரு நெருப்பு. ஆனால், வித்தியாசமான நெருப்பு. நீங்கினால் அது சுடுகிறது; நெருங்கினால் குளிர்கிறது என்கிறார் வள்ளுவர்!

தன் அழகை மறைத்தல்

     மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்

     பலர்காணத் தோன்றல் மதி

ஏ நிலவே, மலர் போன்ற கண்ணை உடைய என் மனைவியின் முகம்போல ஆக நீ விரும்பினால், நான் மட்டும் காணத் தோன்றுவாயாக. பலரும் காணும்படி தோன்றாதே என்று இக்குறளுக்கு விளக்கம் தருகிறார்கள்.

நிலவுக்குச் சொல்வதைப்போல, வள்ளுவர் அழகாக நம் பெண்களுக்கான ஒரு செய்தியை இதில் சொல்கிறார். பெண்கள் தங்கள் அழகை உரியவனுக்கு மட்டும்தான் காட்ட வேண்டும். ஊருக்கெல்லாம் காட்டிக்கொண்டு அலையக் கூடாது என்பதுதான் அது. நலம் புனைந்துரைத்தல் என்ற அதிகாரத்தின் மையச் செய்தியாக நான் இதைப்பார்க்கிறேன்.

மனைவியின் உமிழ் நீர்

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி

வாலெயிறு ஊறிய நீர்

இனிய மொழி பேசுகின்ற இவளுடைய வெண்முத்துப் பற்களிடையே சுரந்துவரும் உமிழ் நீர், பாலும் தேனும் கலந்தாற்போல் சுவை தருவதாகும் என்று இதற்குப் பொருள் தருகிறார்கள். ஒரு கணவனும் மனைவியும் காதல் உறவில் எந்த அளவு அந்நியோன்னியமாக இருக்க வேண்டும் என்பதற்கான குறிப்பை இந்த வெண்பாவிலிருந்து நாம் அறியலாம்.

இதைப் படித்தபோது, புதிதாகத் திருமணமான கணவன் தன் மனைவியின் உமிழ் நீரைச் சுவைப்பது பற்றிய ஒரு நபிமொழி என் நினைவுக்கு வருகிறது. புதுமணத் தம்பதியர் எவ்வளவு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று நான்காம் நூற்றாண்டில் வள்ளுவர் சொன்ன கருத்தை, ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த இறைத் தூதர் பிரதிபலித்திருப்பது சந்தோஷமளிக்கிறது. ச்சீ எச்சிலையா என்று சொல்பவர்கள், நினைப்பவர்களெல்லாம் மன்மத சுகங்களை அறியாதவர்கள் என்றுதான் வள்ளுவர் கூறுகிறார்.

 மடலேறுதல்

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்

பெண்ணின் பெருந்தக்க தில்.

இந்தக் குறளுக்கு பொருள் புரிய வேண்டுமெனில், முதலில் மடலேறுதல் என்றால் என்ன என்று தெரிய வேண்டும்.

தான் காதலித்த பெண்ணை அடைய முடியாத காதலன், இரு பக்கங்களிலும் கருக்குள்ள காய்ந்த பனை மட்டையால் குதிரை ஒன்றை அமைத்து, அதை அலங்கரித்து, சிறு மணிகள் மயிலிறகுகளெல்லாம் சூட்டி, பூமாலை தொடுத்து, தன் காதலியின் படத்தை வரைந்து அக்குதிரையின் கழுத்தில் தொங்கவிட்டு, தன் கழுத்தில் எருக்கலம் பூமாலை அணிந்துகொண்டு குதிரையில் ஏறி அமர, பக்கத்திலுள்ள சிறுவர்கள் அக்குதிரையை இழுத்துக்கொண்டு தெருவழியே செல்வார்கள். தெருவிலுள்ளோர் அக்காட்சியைப் பார்த்து மகிழ்வார்கள் அல்லது பரிகசிப்பார்கள். குதிரையை இழுத்துச் செல்லும்பொழுது, பனங்கருக்கு காதலன் உடம்பை ஆங்காங்கே குத்தி ரத்தம் வரலாம். காமவெறியுடன் காதலன் இருப்பதனால், அதனை அவன் பொருட்படுத்தமாட்டான். அதைக் கவனித்த பெரியவர்கள் பேசி இருவருக்கும் திருமணம் நடத்திவைப்பதும் நிகழும்.

மடல் ஊர்தல் (மடலூர்தல்) அல்லது மடலேறுதல் என்பது சங்க கால வழக்கங்களில் ஒன்று. ஒருமுறை மடலேறிய காதலன் அல்லது சங்கத் தலைவன், திருமணத்துக்குக் காதலி ஒப்புக்கொள்ளவில்லையென்றால், மறுமுறை மடலேறுவதில்லை. தன் வாழ்வை முடித்துக்கொள்வதும் உண்டு.

சுருங்கச் சொன்னால், தன் காதலை ஒருத்தி ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், அதை ஊரே அறியும்படிச் செய்வது ஆண்களின் வழக்கமாகும். ஆனால், நிறைவேறாக் காதலை பெண்கள் அப்படி ஊரறியச் செய்யலாமா? இந்தக் கேள்விக்குத்தான் வள்ளுவர் இந்தக் குறள் மூலம் பதில் சொல்கிறார். அது என்ன பதில்?

கொந்தளிக்கும் கடல் போலக் காதல் நோய் துன்புறுத்தினாலும் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை என்று கூறுகிறது மேலே உள்ள குறள். அதாவது, தன் மனத்தில் உள்ள காதலை ஊருக்கெல்லாம் தம்பட்டம் அடித்துச் சொல்வது ஆணுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். ஆனால் பெண்ணுக்கு அது அழகல்ல என்று அர்த்தம்!

மறு சோறு உண்டு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com