13. மலரினும் மெல்லிது.. - 4

இந்தக் காலத்தில் கணவன் பிரிந்து போவதால் மனைவிக்கு உடல் மெலியுமா? திருமணத்துக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் மாதிரி இருந்தவர்கள், திருமணத்துக்குப் பிறகு ஆர்த்தி கணேஷ் மாதிரி ஆகிவிடுகிறார்கள்!
13. மலரினும் மெல்லிது.. - 4

மடலேறுதல், அதாவது தன் காதலைப் பற்றி ஊரறிய பனைக்குதிரை மேல் ஏறி பறைசாற்றுதல் ஆண்களுக்குச் சரிதான், ஆனால் கடல் அளவு அவளது காதல் பெரிதாக இருந்தாலும் அதைப்பற்றியோ, அது நிறைவேறாததைப் பற்றியோ ஊருக்கெல்லாம் தம்பட்டம் அடிப்பது பெண்களுக்கு அழகல்ல; அந்தத் துன்பத்தைப் பொறுத்துக்கொள்வதுதான் பெண்ணுக்குப் பெருமை என்றும், மடலேறுதல் பெண்களுக்கு இல்லை என்றும் வள்ளுவர் குறிப்புக் கொடுக்கிறார் என்று பார்த்தோம். இனி, கணவன் - மனைவி மற்றும் ஆண் - பெண் காதல் உறவு எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர் கூறுவதைக் கொஞ்சம் பார்க்கலாம்.

பிரிவும் உடல் மெலிதலும்

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க் குரை.

கணவனோ காதலனோ போய் வருகிறேன் என்று சொன்னால், போகமாட்டேன் என்ற செய்தியை வேண்டுமானால் என்னிடம் சொல், சீக்கிரம் திரும்பி வருவேன் என்று சொன்னால், அதை உயிரோடு இருப்பவர்களிடம் சொல் என்று இந்தக் குறளுக்கு அர்த்தம் கொடுக்கிறார்கள் அறிஞர்கள். ஆனால் இப்படி ஒரு வாழ்க்கை இந்தக் காலத்தில் சாத்தியமா?

ஏங்க, சொர்க்கத்துல பெண்களே இல்லையாமே என்று மனைவி கேட்டாள். அதற்கு கணவன் சொன்னான்: ‘அதனாலதான் அதுக்கு சொர்க்கம்னே பேரு’!

‘மனைவிகூட குரூப் ஃபோட்டோவுக்கு சிரிச்ச மாதிரி நிக்கிறோமே, அது என்னா நடிப்பு! எவனாவது நமக்கு அதுக்காக விருது குடுக்குறானா பாரு’ என்று சொன்னார் ஒரு நகைச்சுவைப் பேச்சாளர்! அதைக்கேட்டு கூட்டம் சிரியோ சிரியென்று சிரித்தது. அதற்கு என்ன அர்த்தம்? நம்முடைய காதல் வாழ்வு எப்படி இருக்கிறதென்று எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள் என்றுதானே அர்த்தம்?!

வள்ளுவர் சொல்லுவது மிகைபோலத் தோன்றலாம். ஆனாலும் அவர் விடுவதாக இல்லை! அப்படிச் சொல்லியும், கணவன் / காதலன் பிரிந்து சென்றால் அவளுக்கு என்னாகும் என்ற கேள்விக்கு அழகான ஒரு பதிலைச் சொல்கிறார்:

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை

இறைஇறவா நின்ற வளை.

அவளது கை வளையல் கழன்று விழுந்துவிடுமாம். ஏன்? ஏனெனில், அவன் பிரிந்ததை எண்ணி அவள் மெலிந்துபோவதால்! ஆனால், இந்தக் காலத்தில் கணவன் பிரிந்து போவதால் மனைவிக்கு உடல் மெலியுமா? திருமணத்துக்கு முன்பு கீர்த்தி சுரேஷ் மாதிரி இருந்தவர்கள், திருமணத்துக்குப் பிறகு ஆர்த்தி கணேஷ் மாதிரி ஆகிவிடுகிறார்கள்! கணவர்கள் வெளிநாட்டில் இருந்தாலும்!

கல்யாணம் ஆன கொஞ்ச நாளில், பெண்கள் எப்படியோ குண்டாகிவிடுகிறார்கள் என்பதே பலரது அனுபவம்! ஆனால், மீண்டும் மீண்டும் காதலன் பிரிவினால் உடல் இளைத்து வளையல்கள் கழன்று விழுவது பற்றி வள்ளுவர் பல இடங்களில் கூறுகிறார். ‘உறுப்பு நலனழிதல்’ என்று அதற்கு ஒரு அதிகாரமே கொடுத்து, பத்து குறள்களில் பேசுகிறார்:

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு

தொல்கவின் வாடிய தோள்.

மனைவிக்கும் பெண் தோழிக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா என்று ஒரு கணவனிடம் கேட்டதற்கு, அவன் சட்டென்று யோசிக்காமல் சொன்ன பதில்: 60 பவுண்டுகள்! இது ஒரு நகைச்சுவைத் துணுக்கு. ஆனால், இதில் உள்ள உண்மையின் பின்னால் குண்டான ஒரு சோகம் உள்ளது!

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு 

உரைத்தலும் நாணுத் தரும்.

நாணத்தால், காதலனிடம் காதலை உரைக்கவும் முடியவில்லை; அதேசமயம், மறைக்கவும் முடியவில்லை என்று காதலி சொல்வதாக இக்குறள் சொல்கிறது. காதல் உணர்வு அவ்வளவு நுட்பமானது. ஆனால், இக்காலத்தில் என்ன நடக்கிறது? ‘டேட்டிங்’ செய்துகொண்டிருக்கிறார்கள். தன் மகள் ‘டேட்டிங்’ போயிருக்கிறாள் என்று பெருமையாகச் சொல்லும் பெற்றோரும் உள்ளனர். ஆனால், இங்கேயும் வள்ளுவர் வற்புறுத்துவது, நாணம் என்ற குணத்தைத்தான். காதல் வட்டத்தின் நடுப்புள்ளியாக நாணமே உள்ளது.

இறுக்கமும் நெருக்கமும்

காதலுடைய சிறப்பு என்னவெனில், காதலன் வராவிட்டாலும் பிரச்னை, வந்துவிட்டாலும் பிரச்னை!

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை

ஆரஞர் உற்றன கண்.

என்கிறார் வள்ளுவர். நான் பிரச்னை என்று சொன்னேன் அல்லவா? அது தூங்க முடியாத பிரச்னை! தூக்கம் வராத பிரச்னையல்ல. இரண்டும் வேறு வேறு. பல பேர், தூக்கம் வரவில்லை என்று புலம்புவார்கள். தூக்கம் வருவதற்காக மாத்திரைகளெல்லாம்கூட போட்டுக்கொள்வார்கள்.

எனக்கு ஹார்ட் அட்டாக் வந்து நான் ஐசியுவில் இருந்தபோது, ஒரு நர்ஸ் எனக்கு தூக்க மாத்திரை கொடுத்தார். நான் வழக்கம்போல அதை விழுங்கிவிட்டு, கொட்டக்கொட்ட விழித்துப் படித்துக்கொண்டிருந்தேன். அதிகாலை நான்கு மணியளவில் என்னை வந்து பார்த்த அவர் ஆச்சரியப்பட்டு, கொஞ்சம் அச்சப்பட்டு, ‘சார், உங்களுக்கு நா தூக்க மாத்திரை கொடுத்தேன்ல? சாப்பிட்டீங்களா இல்லியா?’ என்றார். ‘சாப்பிட்டேன். ஆனா எனக்கொரு பழக்கம். மாத்திரை வேலை செய்யுதான்னு அடிக்கடி செக் பண்ணிப் பாத்துக்கிட்டே இருப்பேன்’ என்று சொன்னேன்! அவர் சிரித்துவிட்டு, தன் நெற்றியில் அடித்துக்கொண்டு போய்விட்டார்! இதெல்லாம் என்ன ஜென்மமோ என்பதுபோல!

திருக்குறள் முனுசாமி ஒருமுறை சொன்னார். ‘தூக்கம் வரல, தூக்கம் வரலேங்குறான். நா கேட்டேன், எத்தனை மணிக்கு வரேன்னு சொன்னிச்சுன்னு’! இந்தத் தூக்கமின்மை, காதல் நோயால் வருவதல்ல. ஒரு வேளை, எதிலுமே காதல் இல்லாததால் வருவதாக இருக்கலாம்! ஆனால் வள்ளுவன் சொல்லவரும் தூக்கமின்மை, காதலின் விளைவு. காதலனை எதிர்பார்த்து எதிர்பார்த்து தூங்காமல் காத்திருக்கிறாள் காதலி. அவன் வந்தபிறகும் அவள் தூங்கவில்லை. ஏன்? அவன் தூங்க விடவில்லை! இது வள்ளுவக் காதல் குறிப்பு!

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்

அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

இறுக்கமாக அவனைத் தழுவிக்கொண்டிருந்தேன். பின்பு சற்று விலகிப் படுத்தேன். உடனே, பசலை நிறம் என் மேனியில் படறத் தொடங்கிவிட்டது என்று காதலி கூறுவதாக இக்குறள் கூறுகிறது. உடல்கள் கொஞ்சம் விலகினால்கூட சோகை பிடித்துவிட்ட மாதிரி காதலியின் உடல் ஆகிவிடுவது, காதலின் நெருக்கத்தைச் சுட்டுகிறது. இப்படிப்பட்ட உறவு ஒவ்வொரு தம்பதியருக்கும் இருக்க வேண்டும் என்பதே, வள்ளுவன் மற்றும் என் மன்மத வேண்டுகோள்! இதை நிறைவேற்ற உங்களுக்கு தயக்கம் எதுவும் இருக்காது என்று நினைக்கிறேன்! எங்க சார், புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு வேண்டுமானால் இது சரியாக இருக்கலாம் என்று சிலர் முனகுவது எனக்குக் கேட்கிறது!

டைவர்ஸ் கேக்குறதுக்கு என்ன காரணம் என்று நீதிபதி கேட்டார். கணவன் அதற்குச் சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘திருமணமானதுதான் காரணம் ஐயா’!

ஒரு மனைவி தன் கணவனிடம் ஆர்வமுடன் சொன்னாள்: ‘ஏங்க, பக்கத்து வீட்டுக்காரர் வெளியில போகும்போதெல்லாம், தன் மனைவியை முத்தமிட்டுவிட்டுத்தான் போறார். நீங்களும் அப்படிச் செய்தா என்ன?’

‘நா எப்படிம்மா அப்படிச் செய்ய முடியும்? அவங்க இன்னொருத்தர் பொண்டாட்டியாச்சே’ என்றானாம் கணவன்!

ஒரு வங்கியில் கொள்ளையடிக்க ஒருவன் வந்தான். துப்பாக்கியுடன். தமிழ்ப் படங்களில் வருவது மாதிரி. கொள்ளையடித்துவிட்டு ஒரு ஆளைப் பார்த்து, ‘நா கொள்ளையடிச்சத பாத்தியா?’ என்றான். அவன், ‘ஆமாம் பார்த்தேன்’ என்று சொன்னவுடன் அவனைச் சுட்டுக் கொன்றுவிட்டான். பின்னர் இன்னொருவனைப் பார்த்து அதே கேள்வியைக் கேட்டான். அதற்கு அவன், ‘சத்தியமா நா எதுவுமே பாக்கல ஐயா. ஆனா, இங்க நிக்கிறாளே எம் மனைவி, இவ எல்லாத்தையும் பாத்தா’ என்றானாம்!

நாம் வாழும் திருமண வாழ்க்கைக்கும், வள்ளுவன் காட்டும் வாழ்க்கைக்கும்தான் எவ்வளவு வித்தியாசம்!

மாலை வேளை

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்

வேலைநீ வாழி பொழுது.

என் நண்பர் ஒருவர் அடிக்கடி இப்படிச் சொல்வார்: ‘சாயங்காலமானா என் மனைவி ரொம்ப அழகாயிடுவா’! அவர் மனைவி இயல்பிலேயே அழகான பெண்தான். ஆனால், மாலை வேளை வந்ததும், நண்பரைப் பொறுத்தவரை அது ஸ்பெஷல் அழகாகிவிடும்! திருமணமான தம்பதியருக்கு மாலை வேளை என்பது இன்பமூட்டக்கூடியது. கூடலுக்கான நேரம் நெருங்கிவிட்டது என்பதற்காக அறிகுறி அது என்று வள்ளுவர் குறிப்பு தருகிறார்! அதனால்தான், மணந்தார் உயிருண்ணும் வேலாக அது இருந்தாலும், ‘வாழி’ என்று அது வாழ்த்தப்படுகிறது! காலையில் பிறந்து, பகலெல்லாம் வளர்ந்து, மாலையில் கொல்லும் நோயாகும் இக்காதல் என்றும் கூறுகிறார்.

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி

மாலை மலரும்இந் நோய்.

நினைத்தாலே இனிக்கும்

ஆனால், கூடும் இன்பம் ஒன்றுதான் இன்பம் என்றில்லை. காதலின் சிறப்பே அதுதான். திருமண வாழ்வின் நோக்கம் உடல்களின் கூடல் மட்டுமல்ல. அன்பு, பாசம் இவற்றை இன்னொரு மனுஷி / மனிதன் மீது பொழியமுடியும் என்பதற்கான வாழ்வு அது. மதுவை உண்டால்தான் இன்பம். ஆனால், உண்மைக்காதல் இப்படிப்பட்டதல்ல. கண்டாலும் நினைத்தாலும் அது இன்பம் தரும்.

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்

கள்ளுக்கில் காமத்திற் குண்டு.

என்கிறார் வள்ளுவர். கணவனைப் பிரிந்து வாடும் மனைவி, அவனில்லாதபோது தன்னோடு தானே தனிமையில் பேசிக்கொள்கிறாள். இதனை ‘நெஞ்சொடு கிளத்தல்’ என்று ஒரு அதிகாரமாகவே படைத்து, வள்ளுவர் அதற்குப் பத்து பாடல்கள் கொடுத்துள்ளார்.

அச்சம் என்பது

தனக்குத்தானாகவே பேசிக்கொள்பவர்களை நாம் பைத்தியம் என்று சொல்வோம். ஆனால், உண்மையான காதலுக்கு நம்மைப் பைத்தியமாக்கும் தன்மை உண்டு. அனுபவத்தில் சொல்கிறேன்!

ரொம்ப பயந்தாங்கொள்ளியான நான், காதலித்த கல்லூரிப் பருவத்தில் என் காதலியின் வீட்டுக்கு நள்ளிரவில் சென்றுள்ளேன்! அதில் விசேஷம் என்னவெனில், என் வீட்டுக்குள் செல்ல வேண்டுமெனில், சுமார் இருநூறு அடி நீளமிருந்த முடுக்கு ஒன்றைத் தாண்டித்தான் செல்ல வேண்டும். செகண்ட் ஷோ சினிமா பார்த்துவிட்டு வரும் நான், சந்தைத் தாண்டி வீட்டுக்குள் போக, நிறைய குர்’ஆன் வசனங்களை ஓதிக்கொண்டே ஓடிப்போவேன், அவ்வளவு பயம்! ஆனால், காதலியின் வீட்டுக்கு நள்ளிரவில் சென்றுள்ளேன். ஆனால், இதுவும் கிளைமாக்ஸ் அல்ல. போகும் வழியில் ஒரு சுடுகாடு உண்டு! அதைத் தாண்டித்தான் போவேன்!

காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை

யாமத்தும் ஆளும் தொழில்.

காதல் வேட்கையானது இரக்கமே இல்லாதது; ஏனெனில், அது என் நெஞ்சில் நள்ளிரவிலும் ஆதிக்கம் செலுத்தி அலைக்கழிக்கிறது என்று இக்குறளுக்கு அர்த்தம்! திருவள்ளுவர் ரொம்ப அனுபவப்பட்டிருப்பார்போல! எனக்கென்றே இந்தக் குறளை எழுதியுள்ளார்!

ஒரு குறளில், காதலை தும்மலுக்கு ஒப்பிடுகிறார் -

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்

தும்மல்போல் தோன்றி விடும்.

எவ்வளவுதான் அடக்கினாலும், சட்டென்று நம்மையும் மீறி தும்மல் வெளிப்படுவதுபோல, காதலும் ஒரு கணத்தில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டுவிடுகிறது என்கிறார். ஆனால், நிறைய காதல்கள் தும்மலில் தொடங்கி விம்மலில் முடிந்துவிடுவதுதான் சோகமே!

காதலன் அல்லது கணவனோடு, அவன் வந்த பிறகு சண்டை போட வேண்டும் என்ற முடிவோடு காதலி/மனைவி இருப்பாள். ஆனால், அவன் வந்துவிட்டால், எல்லாவற்றையும் மறந்துவிட்டு அவனோடு கூடி மகிழ்வாள். கோபமெல்லாம், பார்க்காதபோதுதான். கோபமே, பிரிந்து சென்றுபோனதற்காகத்தான். ஆனால், குடும்பங்களில் இன்று என்ன நடக்கிறது?

ஒரு நகைச்சுவைப் பேச்சாளர் சொன்னார். ஒரு கம்பெனியில் மேனேஜராக இருக்கும் அவருக்கு, வட இந்தியாவில் ஏதோ ஒரு விளங்காத ஊருக்குப் பணிமாற்றல் உத்தரவு வந்ததாம். அதுபற்றி அவர் மனைவியிடம் சொன்னபோது, ‘போங்க, நல்ல ஊர்’ என்றாளாம். நீ வரமாட்டியா என்று கேட்டதற்கு, எனக்கு இங்கே இருந்தாதான் குழந்தைகளை, அவர்கள் படிப்பையெல்லாம் கவனிக்க வசதி என்றாளாம். ராமன் இருக்குமிடம்தானேம்மா சீதைக்கு அயோத்தி என்று அவர் சொன்னாராம். அதற்கு அந்த அம்மா, ‘ம்ஹும், ராமனுக்கே அயோத்தி இல்லாமதான் காட்டுக்குப் போனான்’ என்றாராம்! ஆனால், வள்ளுவர் வேறு மாதிரியான மனைவியைக் காட்டுகிறார்.

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து

கூடற்கண் சென்றதுஎன் னெஞ்சு.

ரொம்ப நாள் கழித்து வந்திருக்கிறான். என் கோபத்தையெல்லாம் காட்ட வேண்டும் என்றுதான் விரும்பினேன். ஆனால், அவன் வந்த பிறகு அனைத்தையும் மறந்துவிட்டு, அவனோடு இணைந்துவிட்டேன் என்கிறாள், தன் தோழியிடம்!

மலரினும் மெல்லிது காமம்

இறுதியாக ஒரு குறளைச் சொல்லி, காதல் தொடர்பான கட்டுரைகளை முடிக்கலாம் என்று நினைக்கிறேன். காதல் என்பது மிகவும் மலிந்துவிட்ட இக்காலத்தில், தாய், சகோதரி, பெற்ற பிள்ளை, சின்னக் குழந்தை என்றெல்லாம் பார்க்காமல் வன்முறை நிகழ்த்தும் இக்காலத்தில், இந்தக் குறளை மட்டுமாவது நினைவு வைத்துக்கொள்வது நல்லது.

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்

செவ்வி தலைப்படு வார்.

காதல் இன்பம், மலரைவிட மென்மையானது. அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலர் மட்டுமே என்று வள்ளுவர் அன்றே சொல்லிவிட்டார்!

மென்மை. அதுதான் துவக்கம். அதுதான் முடிவு. வாய்ப்புக் கிடைத்தால் திருக்குறளின் காமத்துப்பால் பற்றி கொஞ்சம் எழுத வேண்டும் என்று விரும்பினேன். அந்த வாய்ப்பை இப்போது பயன்படுத்திக்கொண்டேன்.

காமத்துப்பாலை, முழுமையாக உயர்கல்விக் கூடங்களிலும் பல்கலைக் கழகங்களிலும் பாடமாக வைக்க வேண்டும். இந்த நேரத்தில், சமீபத்தில் மறைந்த கலைஞர் மு. கருணாநிதியை நினைத்துக்கொள்கிறேன். திருக்குறளுக்கு எத்தனையோ பேர் விளக்கம் சொல்லியிருந்தாலும், அவருடைய விளக்கமே மிக எளிமையானதாகவும், பொருத்தமானதாகவும் இருக்கிறது. இக்கட்டுரைகளுக்குப் பெரும்பாலும் அவரது விளக்கங்களையே பயன்படுத்தியுள்ளேன்.

காமம், மலரைவிட மென்மையானது. புரிகிறதா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com