அஞ்சுகறி சோறு

4. பூமிப்பற்று

தினமணி

அந்தக் கிராமத்தில் இருக்கும் தாத்தாவின் மூன்று பேரப்பிள்ளைகள் ஆற்று ஓரமாக மீன்பிடித்துக்கொண்டே பேசிக்கொள்கிறார்கள். ஒருவனுக்கு பதிமூன்று வயதிருக்கும், ஒருவனுக்கு ஏழு, இன்னொருவனுக்கு ஐந்து இருக்கலாம்.

அப்போது, ‘ஹாய் டூட், எனக்கு இந்த பொம்மையை வச்சுகிட்டு அந்த மீன் தூண்டில் தர்றீங்களா’ என்று ஒரு பணக்கார வீட்டுப்பையன் அங்கே வந்து கேட்கிறான். ‘இது உலகத்த அழிச்சு செஞ்ச ப்ளாஸ்டிக் பொருள்ல செஞ்சதுறா, தாத்தா பாத்தா திட்டுவார்றா. சரி பரவால்ல, நீ புடிக்கிற எல்லா மீனையும் தந்துரணும் சரியா’ என்று சொல்லிவிட்டு, அந்த பையனிடம் தூண்டிலைக் கொடுக்கிறான் மூத்த பேரன்.

‘இந்த புழுவெ மீன் சாப்பிடுது. மீனெ நாம சாப்பிடுறோம். ஒலகம் நம்பள சாப்பிடுது’ என்று தத்துவம் சொல்லிக்கொண்டே, ஒரு பேரன் தூண்டிலில் இரையை மாட்டுகிறான்.

‘வானத்துல ஏரோப்ளான்ள பறந்து பறந்து ஒரே ட்ராஃபிக் ஜாமாக்கிட்டாங்க. பொண்டாட்டிக்கு மோதிரம் வாங்குறதுக்கும், ட்ரெஸ் வாங்குறதுக்கும் கண்டதுக்கும் பறக்குறாங்க. ராக்கட் விட்டுவிட்டு வானத்துல ஓட்டையாக்கிட்டதாலே நம்மளுக்கு காத்தே கெடைக்காது. எல்லாம் செத்துபோயிருவோம்’ என்கிறான் இன்னொரு பேரன்.

‘தாத்தா சொன்னாரு’ என்று அடிக்கடி அக்குழந்தைகள் சொல்லிக்கொண்டாலும், வயதுக்கு மீறிய பேச்சாகவும், திணிக்கப்பட்டதாகவும் அது காதில் விழுகிறது. ஆனால் அக்குழந்தைகள் பெரும்பாலும் தாத்தாவோடே இருப்பதனால் அப்படிப் பேசும் வாய்ப்பு உண்டு என்றும் எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது.

சரி, யார் அந்த தாத்தா? அவர்தான் மன்சூர் அலிகான். அந்தக் கிராமத்தில் ஒரு விவசாயி. படம் முழுவதும் அவர் கோவணத்துணியோடுதான் வருகிறார். அது அவருக்குப் பொருத்தமானதாகவே உள்ளது. ‘தாயே பூமாயி, ஏர் உலுகையில உனக்கு வலிச்சா மன்னிச்சுக்க தாயீ’ என்று பூமியைத் தொட்டு வணங்கிவிட்டுத்தான் அவர் நிலத்தினுள் இறங்குகிறார். இறங்கியதும், கந்தனை அழைத்து, ‘கந்தா கந்தா வரணும், மழை இந்தா இந்தான்னு தரணும்’ என்று பாடிக்கொண்டு, அவர் வயலுக்குள் மாடுகளைச் செலுத்துகிறார். இப்படித்தான் படம் துவங்குகிறது.

ஏர் உழும்போது பூமித்தாய்க்கு வலிக்கும் என்ற வசனத்தோடு படம் துவங்குவது நம்மை ஒரு கணம் யோசிக்க வைக்கிறது. ஒரு உண்மையான விவசாயியின் உணர்வு அப்படித்தான் இருக்கும். இருக்க வேண்டும். அப்படிச் செய்ய வேண்டியது தவிர்க்க முடியாதது என்றாலும்.  

தாத்தாவுக்கு ஒரு பேத்தி உண்டு. அவள் ஒரு மடிக்கணிணியை வைத்துக்கொண்டு பூமி பற்றி படித்துக்கொண்டும் பார்த்துக்கொண்டும் இருக்கிறாள். பூமி அந்தரத்தில் சுற்றுகிறது என்றும் அதில் வெடி வைத்து தகர்க்கும்போது அது பூமியின் அழிவுக்கே வழிவகுக்கும் என்றும் அவள் தாத்தாவுக்குக் கூறுகிறாள். பேத்தி சொன்னால் சரியாக இருக்கும் என்பது தாத்தாவின் நிலைப்பாடு. அந்தக் கிராமத்தில் லேப்டாப்பா என்ற கேள்விக்குப் பதிலாக அம்மாவின் படம் போட்ட விலையில்லா மடிக்கணினி என்று அதைக்காட்டிவிடுகிறார்கள்! நல்ல லாஜிக்தான்! ஆனால் இந்த லாஜிக், பேரப்பிள்ளைகளின் வயதுக்கு மீறிய பேச்சில் இல்லாமல் போய்விட்டது!

தாத்தாவின் ஒரே கவலை விவசாயம் பற்றியது, இவ்வுலகம் அழியாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பது பற்றியது. அவர் ஒருநாள் நிலத்திலிருந்து திரும்பும்போது, ஒரு இளைஞர் வந்து மாட்டின் கழுத்தில் ஏன் மணி கட்டியிருக்கிறீர்கள் என்று கேட்கிறார். அதற்கு தாத்தா, அது வேலை செய்கிறதா என்று கண்டுபிடிக்க என்று பதில் சொல்கிறார். அதற்கு அந்த இளைஞர், ‘அது நடக்காம நின்றிருச்சுன்னா?’ என்று கேட்கிறார். அதற்கு தாத்தா, ‘அது அப்படியெல்லாம் செய்யாது’ என்கிறார். ‘இல்ல பெரிசு, அது நடக்காம தலைய மட்டும் ஆட்டிகிட்டு இருந்துச்சுன்னா’ என்று கேட்கிறார். அதற்கு தாத்தா, ‘அது ஒன்ன மாதிரி படிச்ச மாடா, போப்பா’ என்று விரட்டுகிறார்! ரசிக்கலாம் என்றாலும், கதையோடு பொருந்தாத நகைச்சுவைத் திணிப்பு என்று பளிச்சென்று விளங்கிவிடுகிறது! நடக்காமல் மாடு நிற்காது என்று தெரிந்திருக்கும்போது, அதன் கழுத்தில் மணிகட்டத் தேவையில்லை அல்லவா!

இவ்வுலகம் பற்றிய அறிவை, அந்த ஊரில் வேலை பார்க்கும் ஒரு வாத்தியாரிடமும் சென்று அவ்வப்போது தாத்தா கேட்டுக்கொள்கிறார். உலகம் அந்தரத்தில்தான் இருக்கிறதா, எப்படிச் சுற்றுகிறது, அப்படிச் சுற்றினால் அதில் உள்ள கடல் நீரெல்லாம் ஏன் கீழே விழவில்லை போன்ற கேள்விகளைக் கேட்டு அவரை இம்சைக்குள்ளாக்குகிறார். வாத்தியார் சொல்லும் பதில்கள் புரியாவிட்டாலோ, சந்தேகம் வந்தாலோ தன் பேத்தியிடம் சென்று சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்கிறார்.     

ஒருமுறை ஒரு பசு கன்றை ஈனுகிறது. அதைப் பார்த்துக்கொண்டிருக்கும் தாத்தா, ‘கர்ப்பிணிப்பெண்ணின் வயிற்றைச் சுற்றி எப்படிப் பனிக்குடம் இருக்குதோ, அந்த மாதிரி இந்த பூமியைச் சுத்தி 40 கிலோமீட்டருக்கு காத்து மண்டலம் இருக்குதாம். அதெ ராக்கட்டா  உட்டுவுட்டு ஓட்டையாக்குறானுவ. காத்தெல்லாம் போயிருச்சுன்னா நாளக்கி நம்மெல்லாம் எப்புடி உயிர் வாழ்றது?’ என்று புலம்பிக்கொள்கிறார். விவசாயமும் விஞ்ஞானமும் தெரிந்த தாத்தாவாக அவர் காட்டப்படுகிறார்.  

கடைசியில் அவர் பயந்த மாதிரியே, இருக்கும் விவசாய நிலங்களையெல்லாம் வெடி வைத்து பொட்டல் காடாக்கி குவாரிகள் கட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள். அதற்காக தாத்தா, வட்டாட்சியர் அலுவலகம் சென்று தாசில்தாரிடம் விவாதம் செய்கிறார். அவரும் இவரைத் திட்டி அனுப்புகிறார். அந்த நிகழ்ச்சியில் சினிமாத்தனமே மேலோங்கி இருக்கிறது.

கடைசியில், ரொம்பக் கவனமாகத் தன் பேரக்குழந்தைகளை ஊருக்கு அனுப்பிவைக்கிறார். பின்பு நடக்கும் அரசியல் கூட்ட மேடையில் ஏறி அரசியல்வாதிகளை எதிர்த்துப் பேசுகிறார். விவசாய நிலங்களை அழித்து குவாரிகள் கட்ட வெடி வைத்துத் தகர்ப்பதை கடுமையாகச் சாடுகிறார். மேடையில் ஏறி அவர்களை அடிக்கிறார். அந்தக் காட்சிகளெல்லாம் சினிமாத்தனத்தின் மிகைகள் என்று சொல்லலாம்.

அதன் முடிவில் அவர் பயந்த மாதிரியே உலகம் அழிய ஆரம்பிக்கிறது. Earth Collapsing என்று காட்டுகிறார்கள். வானளாவிய கட்டடங்கள், சீனப் பெருஞ்சுவர், பிரமிடுகள் எல்லாம் அழிவதாகக் காட்டுகிறார்கள். எல்லாம் முடிந்து Earth No More என்ற வாசகம் காட்டப்படுகிறது.

தயவு செய்து இந்த பூமியைத் தோண்டாதீர்கள். எல்லா அணுகுண்டுகளையும் ஆயுதங்களையும் அழியுங்கள் என்று சொல்லும் ஆங்கில வாசகங்களோடு படம் முடிகிறது. இயக்கம் மன்சூர் அலிகான் என்று வருகிறது.

ஒரு கிராமத்து விவசாயிக்கு இவ்வளவு விஞ்ஞானம் மண்டையில் ஏறுமா என்ற கேள்விக்குப் படத்திலேயே பதிலும் இருக்கிறது. விவசாயி என்றால் ஒன்றும் தெரியாதவர் என்று நினைக்கின்ற மாயையை இப்படம் தகர்க்கிறது. அல்லது விவசாயிகள் அறியாமையில் இருக்கக் கூடாது என்ற அக்கறையை வெளிப்படுத்துகிறது என்றும் சொல்லலாம். அப்படிப்பட்ட கேள்வியே அஞ்ஞானத்தின் விளைவுதான் என்று படம் அடித்துக்கூறுகிறது. ஏன், விவசாய விஞ்ஞானி, பசுமைப்போராளி நம்மாழ்வார் நம்மோடு வாழவில்லையா? நம் காலத்தில் வாழ்ந்து சமீபத்தில் மறைந்தவர்தானே அவர்? படிக்காத கிராமத்து விவசாயியின் தோற்றத்தில் அவர் இருந்தாலும்,  விவசாயத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர் அவர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? மரங்களைத் தன் குழந்தைகளைப்போல் பாவித்தவர் அவர்.

சரி படத்துக்கு வருவோம். மன்சூர் அலிகானுக்குப் படத்தில் பெயரொன்றும் இல்லை. படம் முழுக்க அவர் ‘தாத்தா’தான். தாத்தா உலகம் பற்றியும், பூமியைத் தோண்டக் கூடாது என்பது பற்றியும் அக்கறை கொண்டவராக இருந்தாலும், ஒரு கிராமத்து விவசாயிக்கே உரிய குழந்தைத்தனமும் கொண்டவராகவே இருக்கிறார். ‘பூமி சுத்துதுன்னு சொன்னீங்களே, அது தெக்காலேந்து வடக்கால சுத்துதா, இல்ல வடக்காலேந்து தெக்கால சுத்துதா’ என்று பள்ளிக்கூட வாத்தியாரிடம் கேட்கும்போது, அவரது குழந்தைத்தனம் நன்றாக வெளிப்படத்தான் செய்கிறது.  

இசை, பாடல் போன்றவற்றுக்குப் படத்தில் பெரும் பங்களிப்பு ஒன்றுமில்லை. கதையின் ஓட்டத்தில் அதற்கான வாய்ப்பும் இல்லை. அல்லது குறும்படம் என்பதால் அது கொடுக்கப்படவில்லை. ஆனாலும், படம் துவங்கும்போது வரும் புல்லாங்குழல் இசை பொருத்தமாகவும் ரசிக்கும்படியும் உள்ளது. இடையில் தாத்தாவும் நாற்று நடும் பெண்களும் பாடும், ‘மதுர சந்தைக்குப் போற மச்சான், அங்கே மாட்டிகிட்டு இலுக்குறத வாங்கிட்டு வாங்க’ என்ற கேள்விப் பாட்டும், அதற்கு பதிலாக தாத்தா, ‘மாட்டிக்கிட்டு இலுக்குறது என்னா புள்ள’ என்ற பதில் எசப்பாட்டும் ரொம்ப செயற்கையாகத் திணிக்கப்பட்டது தெரிகிறது.

விஞ்ஞான க்ளைமாக்ஸ்

படத்தின் குறிப்பிடத்தகுந்த அம்சங்கள் என்று எனக்குப்பட்டது இரண்டு: ஒன்று, மன்சூர் அலிகானின் மாறுபட்ட நடிப்பு. இரண்டு, தாத்தாவின் நாய் அழுதுகொண்டே வந்து இரவில் அவரை எழுப்பும் காட்சி. அப்படி ஒரு காட்சியை எப்படிக் கற்பனை செய்தார்கள், எந்த அடிப்படையில் கொண்டு வந்தார்கள் என்று ஆச்சரியமாக உள்ளது.

விவசாய நிலங்களெல்லாம் விலைக்கு வாங்கப்பட்டு, அழிக்கப்பட்டு, வெடி வைத்து தகர்க்கப்பட்டு, பொட்டல் காடாக, கிரானைட் போன்ற சமாசாரங்கள் எடுப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுவிட்டன என்ற கருத்து நமக்குச் சொல்லப்பட்டுவிட்ட பிறகு, ஒருநாள் தாத்தா தன் குடிசை வீட்டில் படுத்து உறங்குகிறார். அப்போது அவரது கருப்பு நாய்க்குட்டி ஒன்று நடு இரவில் ஓலமிட்டு அழுதுகொண்டு வந்து அவரை எழுப்புகிறது. ஏன் என்று புரியாத தாத்தா, கொஞ்ச நேரம் சென்ற பிறகு ஏதோ புரிந்துகொண்டவராய் தரையில் காதை வைத்துக் கேட்கிறார். கடல் அலைகளின் இரைச்சல் கேட்கிறது. படத்தின் கிளைமாக்ஸ் என்று அதைத்தான் சொல்ல வேண்டும். படு விஞ்ஞானப்பூர்வமான காட்சி என்றால் அதுதான்.  

அப்படி அந்தக் காட்சியில் என்ன இருக்கிறது என்கிறீர்களா? இருக்கிறது. சுனாமி வருவதற்கு நான்கு மணி நேரத்துக்கு முன்பே, சுனாமி வர இருக்கும் ஊரில் இருக்கும் ஆடு, மாடு நாய்களெல்லாம் ஊரை விடு வெளியேறிவிடுகின்றன. காரணம், சுனாமி அலைகள் வெகு தூரத்துக்கு அப்பால் எழுப்பும் ஓசை அவற்றின் காதுகளில் கேட்டுவிடுகின்றன. மனிதர்களின் காதுகளுக்குக் கேட்காத டெஸிபல்கள் மிருகங்களின் காதுகளுக்குக் கேட்கும்.

மனிதர்களின் கேட்கும் அளவு 0-விலிருந்து 20 கிலோஹெர்ட்ஸ் வரை என்று சொல்லப்படுகிறது. ஆனால் ஒரு நாயின் கேட்கும் சக்தி 67-லிருந்து தொடங்குகிறது.  ஆடு மாடுகளுக்கோ 125-லிருந்து தொடங்குகின்றன. அவை 45,000 ஹெர்ட்ஸ்வரை கேட்க முடியும் என்று சொல்லப்படுகிறது!

தாத்தாவின் கருப்பு நாய் அழுதுகொண்டே வந்து தன் எஜமானனை எழுப்பும் காட்சியில் அந்த அறிவியல் உண்மை சுட்டப்படுகிறது.  இப்படி ஒரு காட்சியை வைத்ததற்காக மன்சூர் அலிகானை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஒரு நல்ல செய்தியைக் குறும்படம் கூறுகிறது. கொஞ்சம் செயற்கையாக, கொஞ்சம் இயற்கையாக, கொஞ்சம் அஞ்ஞானத்தோடும் கொஞ்சம் விஞ்ஞானத்தோடும். படத்தில் தாத்தாவின் பேரப்பிள்ளைகளாக நடித்தவர்கள் எல்லாருமே மன்சூர் அலிகானின் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் பாராட்டுதலுக்கு உரியது. சப்பாணி கமல் கட்டிய கோவணத்துக்கும், வில்லன் மன்சூர் அலிகான் கட்டிய கோவணத்துக்கும் வித்தியாசம் நிச்சயமாக உண்டு. அது கதைக்கான கோவணம். இது விதைக்கான கோவணம்.   

மன்சூர் அலிகான். இவரை ஒரு வில்லனாக, காமெடி வில்லனாகவெல்லாம் நாமறிவோம். ஆனால்  நாட்டை நேசிக்கின்ற மனிதராக அவரது சமீபகால பேச்சுகளில் இருந்து தெரிந்துகொள்ள முடிந்தது. அவரே கதை வசனம் எழுதி, இயக்கி, தயாரித்து வெளியிட்ட ‘பூதாளம்’ என்ற குறும்படம் அவரையும் அவரது நாட்டுப்பற்றையும், ம்ஹும் இல்லை, பூமிப்பற்றையும்  ஆழமாகப் புரிந்துகொள்ள நிச்சயம் உதவும்.

இன்னும் உண்டு…

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் துறையினா் கொடி அணி வகுப்பு

சின்னம் ஒதுக்கீட்டில் தோ்தல் ஆணையம் பாரபட்சம் -இரா. முத்தரசன் பேச்சு

வாக்களிப்பின் அவசியம் உணா்த்த ஆட்சியரகத்தில் ராட்சத பலூன்

தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வைக்கோல் போருக்கு தீ வைத்த 2 போ் கைது

SCROLL FOR NEXT