21. பால் மாறாட்டம்

பெற்ற தாய்க்குப் பிறகு பசுவின் பாலைக் குடித்துத்தான் எல்லாக் குழந்தைகளும் வளர்கின்றன. எல்லாக் குழந்தைகளின் இன்னொரு தாய் பசுதான் என்று சொன்னால் அது மிகையில்லை.
21. பால் மாறாட்டம்

ஆள் மாறாட்டம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். இது என்ன பால் மாறாட்டம் என்கிறீர்களா? பாலை வைத்து செய்யும் ஏமாற்று வேலைகள்தான், வேறென்ன? ‘மாறாட்டம்’ என்ற சொல்லுக்கு ‘மோசடி செய்வது’, ‘இல்லாததை இருப்பதாக பாவனை செய்வது’, ‘இட்டுக் கட்டுவது’, ‘தவறாக இணைத்து உருவாக்குவது’ என சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழகராதி பல பொருள்களைத் தருகிறது.

இவை அத்தனையும் ஒரேயொரு தொழிலுக்குப் பொருத்தமாக இருக்கிறது என்று சொன்னால் அது பால் தொழில்தான். நான் பாலியல் தொழிலைச் சொல்லவில்லை. மாட்டின் பாலை வைத்து செய்யப்படும் தொழிலைச் சொல்கிறேன்!

நமக்குத் தெரிந்ததெல்லாம் பசும்பால்தான். மிஞ்சி மிஞ்சிப் போனால் எருமைப்பால், ஆட்டுப்பால். ஆனால் ஆட்டுப்பால், ஒட்டகப்பால், மான் பால் போன்றவையெல்லாம் நமக்கு அதிகம் பழக்கமான சமாச்சாரங்களல்ல. இன்னும் சொல்லப்போனால், ஆட்டுப்பாலைத் தவிர மற்றவை பற்றி நமக்குத் தெரியாது என்றே சொல்லிவிடலாம். அரேபியர்கள் ஒட்டகப்பால் அருந்துவார்கள். இன்று அரேபியாவில் மட்டுமின்றி, அமெரிக்கா, யூகே, யூஏஈ எனப்படும் ஐக்கிய அராபிய அமீரகம், சொமாலியா போன்ற நாடுகளில் ஒட்டகப்பால் அமோக விற்பனையாம்!

ஓரிரு முறை நபிகள் நாயகம் ஆட்டுப்பால் அருந்தியிருப்பதாகப் படித்திருக்கிறேன். அதுவும் கன்னி ஆட்டின் பால்! கருவுறாத, குட்டி போடாத, கன்னி ஆட்டின் மடியிலிருந்து தன் அற்புதக் கரங்களால் கறந்து கொஞ்சம் அருந்தியிருக்கிறார்கள் என்று வரலாறு கூறுகிறது. அதற்குப் பிறகு ஆட்டுப்பால் அருந்தியவர் எனக்குத் தெரிந்து மகாத்மா காந்திதான்.

எருமை மாட்டுப்பால் இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தான், சீனா, நேபாளம், எகிப்து, ஈரான், மியான்மர், இத்தாலி, துருக்கி, வியட்நாம் என்று உலகெங்கிலும் பருகப்பட்டும் பயன்படுத்தப்பட்டும் வருகிறதாம்.

இப்படியாக, பால் கொடுக்கும் விலங்குகளின் வரிசையில் முதலிடம் வகிப்பது மாடுதான். முக்கியமாக பசு. கோமாதா என்று அது அழைக்கப்படுவது ஒருவகையில் மிகவும் பொருத்தமானதே. பெற்ற தாய்க்குப் பிறகு பசுவின் பாலைக் குடித்துத்தான் எல்லாக் குழந்தைகளும் வளர்கின்றன. எல்லாக் குழந்தைகளின் இன்னொரு தாய் பசுதான் என்று சொன்னால் அது மிகையில்லை. பசும்பால் குடித்து வளராத ஒரு குழந்தைகூட இந்தியாவில் பிறந்து வளர்ந்திருக்க வாய்ப்பில்லை. ஜல்லிக்கட்டில் உயிரைப் பணயம் வைத்துக் காளையைப் பிடிக்கும் காளைகளும் பசும்பால் குடித்து வளர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள்!

நான் தாய்ப்பால் குடித்து வளர்ந்த பிள்ளையல்ல. எனக்கு அந்தப் பாக்கியம் கிட்டவில்லை. புட்டிப்பால் கொடுத்தார்களா என்றும் தெரியாது. ஆனால், ஒரு மீனவத்தாய் எனக்கு கொஞ்சகாலம் பால் கொடுத்தாளாம். அதனால்தானோ என்னவோ எனக்கு மீன்கள் மீது ரொம்ப பாசம்! போகட்டும், பாலுக்கு வருவோம்.

எப்போது வீட்டுக்குள் போனாலும், அல்லது வீட்டைவிட்டு வெளியே போனாலும், நாம் அல்லது நம் வீட்டுப் பெரிசுகள் உறுதிப்படுத்திக்கொள்ள விரும்பும் ஒரு விஷயம் வீட்டில் பால் இருக்கிறதா என்பதுதான். ஏனெனில், பிள்ளைகளிலிருந்து பெரியவர்வரை அது தேவைப்படுகிறது. அந்த அளவுக்குப் பாலோடு நம் வாழ்க்கை பின்னப்பட்டிருக்கிறது என்று சொன்னால், அது நூற்றுக்கு நூறு சத்தியமான சொல்லாகும். பால் இல்லையெனில் டீ, காஃபி குடிப்பது எப்படி? டீ, காஃபி இல்லாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா?!

ஆனாலும் டீ, காஃபி குடிக்காமல் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்காக நடிகர் சிவகுமார் அவர்களை சந்திக்க அவரது இல்லம் சென்றேன். டீ, காஃபி எது வேண்டும் தம்பி என்று கேட்டார். நான் டீ என்றேன். எனக்கும் என் மனைவிக்குமாக இரண்டு கப்புகள் டீ கொண்டுவரச் சொன்னார். உங்களுக்கு அண்ணன் என்று கேட்டேன். நான் கடந்த நாற்பது ஆண்டுகளாக டீ, காஃபி குடிப்பதில்லை என்று சொன்னார்! அவரது ஆரோக்கியத்தையும் அபார நினைவாற்றலையும் நாடறியும்.

என்றாலும், எனக்கு தேநீர் குடிப்பதில் அலாதி விருப்பம். ஆனால், பலர் குடிப்பது மாதிரியாக அல்ல. ஒரு கண்ணாடி க்ளாஸில் கால் கப் அளவுக்குத்தான் குடிப்பேன். ஏன் கண்ணாடி க்ளாஸ் என்றால், தேநீர் கண்களுக்குத் தெரிய வேண்டும்! நிறம், மணம், சுவை என்று சொல்வார்களே, அதில் அதன் நிறம் எனக்கு முதலில் பிடித்த மாதிரி இருக்க வேண்டும்! க்ளாஸ் நிறைய கொண்டுவந்தால், அதைப் பார்க்கவே எனக்கு வெறுப்பு வரும்.

நல்ல கெட்டியான, திண்மை மிக்க பாலில், ஒரு சொட்டுகூட தண்ணீர் கலக்காமல், அப்படியே சுண்டவைத்து, ‘மூன்று ரோஜாக்கள்’ தேயிலையை அதில் போட்டுக் கொதிக்கவைத்து, சீனியையும் அதிலேயே போட்டுக் கலக்கி, கொஞ்சம் இஞ்சி தட்டிப்போட்டு, வடிகட்டி இறக்கி, சுடச்சுட ஊற்றி, அதில் ஒரேயொரு துளி நெய் கலந்து, அந்த வாசனையை முகர்ந்துகொண்டே மெல்ல மெல்ல உறிஞ்சி ரசித்துக் குடிக்க வேண்டும். நெய் என்றால் பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் போலி நெய் அல்ல. வெண்ணெய்யை உருக்கி, அந்தச் சட்டிக்குள் முருங்கைக் கீரையைப் போட்டு இறக்கிய கமகம சாப்பாட்டு நெய்!

இவ்விதமாக, நான் கடந்த காலத்தில் ஒரு நாளைக்கு பத்து க்ளாஸ்கள் தேநீர்கூட அருந்திக்கொண்டிருந்தேன். பின்னர் அது ஐந்தாகி, இப்போது இரண்டாகிவிட்டது! பாலில்லாத தேநீர், சுலைமானி, கட்டன் சாயா-வெல்லாம் என் நாக்குக்கு சரியாக வராது! ஆனால், அந்த இரண்டு கோப்பைகள்கூட இனி இருக்காதோ என்ற நிலை ஏற்பட்டுவிட்டது இப்போது!

ஏன்? என்ன காரணம்? உறுதி செய்யப்பட்ட சில தகவல்களும் உண்மைகளும்தான்! அப்படி என்ன தகவல்கள் என்கிறீர்களா? தலைகீழாக என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது மாதிரியான தகவல்கள். அவை பசும்பால் தொடர்பானவை. அவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இது.

பாக்கட் பாலில் கொஞ்சம் ‘கெமிகல்’ கலக்கிறார்கள், அதைப்பற்றித்தானே சொல்லவருகிறாய், தெரிந்ததுதானே என்று நீங்கள் நினைத்தால், ஒரு துளி விஷம்தானே, அதை ஒரு டம்ளர் பாலில் கலந்தாலென்ன, குடிமுழுகியா போய்விடும் என்று கேட்பது மாதிரியானது அது!

பாக்கட் பாலில் கொஞ்சமாக கெமிகல் கலக்கப்படுகிறது என்றுதான் நினைக்கிறோம். ஆனால் அந்தக் கொஞ்சத்தின் கதையைப் படித்த பிறகு எனக்கு வந்த அச்சம் கொஞ்சநஞ்சமல்ல. நீண்ட நாள் உயிர் வாழ வேண்டும் என்று விரும்பினால் பாலைத் தவிர்த்துக்கொள் என்று உள்மனசு சொல்ல ஆரம்பித்துவிட்டது. தகவல்களின் கனம் அப்படி. சட்டென்று நடிகர் சிவகுமார்தான் நினைவில் வந்துபோனார்!

பாக்கட் பால் வேண்டாம், ஆனால் தனி மனிதர்கள் வீட்டில் வளர்க்கப்படும் பசு மாட்டின் கறந்த பால் வாங்கிப் பயன்படுத்தலாமே என்ற நினைப்பிலும் மண் விழுந்துவிட்டது. சரி, முதலில் எனக்குக் கிடைத்த தகவல்களை சுருக்கமாகச் சொல்லிவிடுவிடுகிறேன்.

ஒரு சின்ன புத்தகம். என் நண்பர் எழுதியது. சென்னை புத்தகக் காட்சியில் இந்த ஜனவரி மாதம் சென்ற 16-ம் தேதிதான் வெளியிடப்பட்டது. முப்பதே பக்கங்கள். ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன். ஆனால் மூச்சு வாங்க ஆரம்பித்துவிட்டது! புத்தகம்தான் வாமனம். ஆனால் அதில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் விஸ்வரூபம் எடுத்து பயமுறுத்துகின்றன. அந்த நூலில் உள்ள மிகமுக்கியமான தகவல்களை மட்டும் இங்கே பகிர்துகொள்வது ஒரு சமுதாயக் கடமை என்றே கருதுகின்றேன்.

ஏன் பால்?

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாவிட்டாலோ, அல்லது நிறுத்தப்பட்ட பின்னரோ, பல் முளைக்கும் பருவம்வரை கொடுக்கப்படும் உணவு பாக்கட் பால் அல்லது புட்டிப் பால்தான். இது நம் அனைவருக்குமே தெரியும். குழவி முதல் கிழவிவரை பால் குடிப்பதற்கு முதலும் முடிவுமான காரணம் ஒன்றுதான். பாலில் சத்து உள்ளது. அதன் பெயர் கால்சியம் என்பது வேண்டுமானால் நம்மில் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அந்த சத்து நமக்குத் தேவை என்பது மட்டும் எல்லாருக்கும் தெரியும், சரியா? ஏனெனில் பாலில் சத்து எதுவுமே இல்லை என்றிருந்தால் பாலை யார் வாங்கப்போகிறார்கள்?

கால்சியம் நமக்கு மிகவும் அவசியமான ஒரு சத்தாகும். அது இல்லாவிட்டால் தசைகள் சுருங்கி விரியாது, ரத்த ஓட்டம் பாதிக்கப்படும், ஜீரண மண்டலம் ஒழுங்காக இயங்க முடியாது, எலும்புகள் வளராது, உறுதிப்படாது. நம் ரத்தம் கட்டியாவதற்கும் கால்சியம் தேவை. எனவே, கால்சியம் என்ற சத்து நமக்கு இன்றியமையாத ஒரு சத்தாகும். கால்சியம் சத்து குறைந்தால் எலும்பு வளர்ச்சி பாதிக்கப்படும். பலவிதமான நோய்கள் வரும். இதெல்லாம் நமக்குத் தெரியும்தான். கால்சியம் சத்துக் குறைவால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படுமென்று மருத்துவ உலகம் ஏற்கெனவே நம்மை வலுவாக பயமுறுத்தித்தான் வைத்திருக்கிறது!

குறையினும் மிகினும்

ஒரு சத்து குறைந்தால் நோய் உண்டாகும். இது நமக்குத் தெரியும். ஆனால் ஒரு சத்து நம் உடலின் தேவைக்கு அதிகமாகக் கிடைத்தால் என்னாகும்? இதுபற்றி யாரும் யோசிப்பதில்லை! அதுவும் நோயைத்தான் கொடுக்கும். நான் சொல்லவில்லை. வள்ளுவரே சொல்லிவிட்டார்:

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று

அப்படியானால், நடக்கத் தெரியாத நாள்முதல், நடக்க முடியாத காலம் வரை பால் குடித்துக்கொண்டே இருந்தால் கால்சியம் எசகுபிசகாக நம் உடலுக்குள் ஏறியிருக்காதா? இப்படி எசகுபிசகாக ஒரு சத்து நம் உடம்புக்குள் ஏறினால் நம் உடல்நலம் எசகுபிசகாக பாதிக்கப்படலாம் என்று நாம் ஏன் யோசிப்பதே இல்லை?!

‘‘உங்கள் குழந்தைக்கு கால்சியம் குறைந்துவிட்டது என்றால், கம்பெனிகள் மருந்து விற்கலாம். கால்சியம் கூடுதல் என்றால் எப்படி மருந்து விற்க முடியும்? எனவேதான், மருந்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் அனைத்தும் சத்துக்குறைவை மட்டுமே பேசுகின்றன. நாமும் பால் பொருள்களை கிலோக்கணக்கில் வாங்கி வாங்கி குழந்தைகளுக்கு புணல் வைத்து ஊற்றாத குறையாக கொடுத்துக் கொண்டிருக்கிறோம்’’ என்கிறது அந்த நூல் (பக்கம் 06).

தேவைக்கு அதிகமாக இப்படி ஒரு சத்து நம் உடலுக்குள் சேருவதனால், எலும்புகள் பலவீனமடைந்து வயதான காலத்தில் தானாகவே உடைந்து போகும், நொறுங்கும் அபாயம் ஏற்படுகிறது. குறிப்பாக, பெண்கள் அதனால் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். இந்தப் பிரச்னைக்கு வழக்கம்போல ஆங்கில மருத்துவ உலகம் ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என ஞானஸ்நானம் செய்துவைத்துள்ளது. அதாவது, பல ஆண்டுகளுக்கு பசும்பால் குடித்துக்கொண்டே இருந்தால் எலும்புகள் உறுதியாவதற்கு பதிலாக, நொறுங்கி விழும் அபாயம் ஏற்படும் என்று அந்த ஒற்றைச் சொல்லுக்கு அர்த்தம்!

2003-ல் அமெரிக்காவில் செய்த ஒரு ஆய்வின்படி, இவ்வித சத்து அதிகரிப்பினால் இறந்தவர்களின் எண்ணிக்கை பத்தாண்டுகளில் பத்து லட்சத்து ஒன்பதாயிரம் பேராம்! அமெரிக்கா அருமையான நாடு. பாலையும் கொடுப்பார்கள், அதைக் குடித்துக்கொண்டே இருப்பதனால் எப்படியெல்லாம் இறப்பு வரும் என்று ஆராய்ச்சி செய்து அறிக்கையும் கொடுப்பார்கள்! கொலையும் செய்துவிட்டு வாயில் பாலையும் ஊற்றுவார்கள்!

மாட்டுப்பாலில் கால்சியம் உள்ளது, ஆனால் அது சாப்பிடும் வைக்கோல், சினிமா போஸ்டர், புல் முதலிய எதிலுமே கால்சியம் கிடையாது. கன்றுக்குத் தேவையான கால்சியத்தை மாட்டின் உடலே உருவாக்கிக்கொள்கிறது. அதேபோல, நமக்கு வேண்டிய சத்துகளையெல்லாம் நாம் சாப்பிடும் உணவிலிருந்து நம் உடலே உருவாக்கிக் கொடுக்கிறது. அதற்குப் பெயர் ‘பயோட்ரான்ஸ்ஃபர்மேஷன்’. இது தொடர்பாக ஏற்கெனவே நான் எழுதியுள்ளேன்.

மறுசோறு உண்டு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com