எட்டாம் ஸ்வரங்கள்

16. குந்தவை

ஹேமா பாலாஜி

அழகும் விவேகமும் சரி விகிதத்தில் பெற்ற, ராஜ தந்திரம் மிக்க சோழ இளவரசி. இப்படி அறிமுகமாவது தான் அவளுக்குப் பொருத்தமாக இருக்கும். அதன் பின்னரே அவளது பிறப்பும் குலமும் வருவது சிறக்கும். பண்டைய காலத்தின் ஏனைய இளவரசிகளைப் போல, அரசிகளைப் போல அல்ல குந்தவை. இன்னாரின் மகள் இன்னாரின் மனைவி இந்த தேசத்து ராணிகளுள் ஒருவர் என குந்தவையை வரிசைப்படுத்திவிட முடியாது. சராசரி இளவரசிகளின் நடுவே குந்தவை அதி வித்தியாசமானவள். தகப்பன் மேலும் தம்பி மீதும் கணவன் மீதும் கொண்ட பாசத்தையும் நேசத்தையும் காதலையும் விட சோழ தேசத்தின் மீது அளவு கடந்த பற்று கொண்டவள். தீராக் காதல் கொண்டவள். சோழ தேசத்தின் நலனுக்காக எதையும் இழக்கத் துணிந்தவள் குந்தவை.

இப்போது குந்தவையின் வரலாற்றைப் பார்ப்போம். குந்தவை சுந்தர சோழரின் மகள், ஆதித்த கரிகாலனின் தங்கை, ராஜராஜ சோழனின் தமக்கை, வீரன் வல்லவைரையர் வந்தியத்தேவனின் காதல் மனைவி. இத்தனைக்கும் மேலாக தன்னை தன் சுய அடையாளங்களாலேயே நிறுவிக் கொண்டவள்.

சோழ வம்சத்தில் மூன்று குந்தவைகள் உண்டு. சோழ அரசர்களுள் ஒருவரான அரிஞ்செயச்சோழன் கீழை சாளுக்கிய இளவரசி குந்தவையை மணந்தார். இவர் வீமன் குந்தவை எனக் குறிப்பிடப்படுகிறார். இவரே சோழகுலத்தின் முதல் குந்தவை. அரிஞ்செயச்சோழன் இரண்டாவதாக வைதும்ம அரசகுலத்தைச் சேர்ந்த கல்யாணி என்ற இளவரசியையும் மணந்தார். இவர்களுக்குப் பிறந்தவர் தான் சுந்தர சோழர்.

சுந்தரசோழர் தன் பெரிய தாயார் மேல் இருந்த பக்தியும் அன்பையும் வெளிப்படுத்தும் விதமாக தனக்குப் பிறந்த மகளுக்கு குந்தவை என்று பெயரிட்டு மகிழ்ந்தார். சுந்தர சோழரின் மகள் குந்தவைக்கு மந்தாகினி என்ற இன்னோரு பெயரும் உண்டு. இவர் சோழர் குலத்தின் இரண்டாம் குந்தவையாக வருகிறார். இவருக்கு ஆழ்வார் பரந்தகன் குந்தவை பிராட்டியார், வல்லவைரையர் வந்தியதேவர் மாதேவியார், (சோழர்களின் மாதண்ட நாயக்கர்களுள் ஒருவரும் வாணர் குலத்து குறுநில மன்னனுமான வல்லவரையன் வந்தியத்தேவனை மணந்ததால் இப்பெயர்) உடையார் பொன்மாளிகையில் துஞ்சிய தேவர் திருமகளார் ஸ்ரீபராந்தகன் குந்தவை பிராட்டியார் என்று சோழர்களின் கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் குறித்து வருகின்றன. இந்த குந்தவையை நம் கட்டுரையின் நாயகி.

குந்தவை என்ற பெயரை சூட்டுவது சோழர் குலத்தின் பொதுவான வழக்கமாக இருந்தது. இரண்டாம் குந்தவையின் சகோதரன் ராஜ ராஜ சோழன் தன் தமக்கை பராந்தகன் குந்தவையார் மேல் இருந்த அலாதி பிரியம் மற்றும் பக்தியினால் தன் மகளுக்கும் குந்தவை எனப் பெயரிட்டான். இவள் சோழர் குலத்தின் மூன்றாம் குந்தவையாவாள்.

இரண்டாம் குந்தவையும் மூன்றாம் குந்தவையும் சாளுக்கிய மரபை சேர்ந்தவரையே மணம் செய்து கொண்டது பெயர் ஒற்றுமை மட்டுமல்லாமல் வாழ்க்கை இணையிலும் இருவருக்கும் ஒன்று போல் அமைந்துவிட்டது. இரண்டாம் குந்தவை சாளுக்கிய மரபைச் சேர்ந்த வந்தியத் தேவனை மணந்தார். தன் அத்தையைப் போலவே ராஜராஜனின் மகள் மூன்றாம் குந்தவையும் சாளுக்கிய வேந்தனான விமலாதித்தனை மணந்தாள்.

நம் கதையின் நாயகி இரண்டாம் குந்தவை அதாவது குந்தவை நாச்சியார் வந்தியத்தேவனை மணம் புரிந்தமைக்கு காதல்  ஒரு காரணம் என்றாலும் மற்றொரு முக்கிய காரணம் தன் நாட்டை விட்டு பிற இளவரசிகளைப் போல் புகுந்த நாட்டுக்கு செல்ல கூடாது என்ற வலுவான தீர்மானத்தாலும் தான். தன் இன்னுயிர் நீக்கும் வரை குந்தவை சோழ மண்ணில் தான் வாழ்ந்தாள். ஏனைய இளவரசிகளைப் போன்ற வார்க்கப்பட்ட வரையரைக்குள் குந்தவையின் திருமணம் மட்டுமல்ல அவள் தம் மொத்த வாழ்நாளுமே அடங்கவில்லை. அவளது வாழ்க்கை மிகவும் வித்தியாசமானதாகவே இருந்துள்ளது. குந்தவை சுயமாகவும் சுதந்திரமாகவும் இருக்க விரும்பிய பெண். கடைசி வரை அப்படியாக வாழ்ந்தும் காட்டியவர்.

தன் மூத்த சகோதரன் ஆதித்த கரிகாலனின் மர்ம மரணம், அதன் பின் அந்த துக்கத்திலேயே உயிர் இழந்த தந்தையின் மரணம் கூடவே உடன்கட்டை ஏறிவிட்ட தாயின் மரணம் இவை எல்லாம் இள வயதிலேயே சொல்லொண்ணாத் துரயரையும் பாரத்தையும் குந்தவைக்கு கொடுத்துவிட்டது. மூத்த சகோதரனின் இழப்புக்கு பின் அடுத்த வாரிசான இளைய சகோதரனின் உயிரையாவது காக்க வேண்டும் எனும் பொருட்டு அவர்கள் வாழ்ந்த தலைமறைவு வாழ்க்கை எந்த அரசியும், இளவரசியும் சந்தித்திராத ஒன்று. அத்தனை இழப்பையும் ஈடு செய்யும் விதமாக மொத்த அன்பையும் ஈடுபாட்டையும் தன் தம்பி ராஜராஜனுக்காகவும் சோழ மண்ணுக்காகவும் அர்ப்பணித்தாள்.

அவள் சந்தித்த அரசியல் சூழ்நிலையும் சுற்றியிருந்த சூழ்ச்சிகளும் அவளுக்கு அதிக புத்தி சாதுர்யத்தையும் அரசியல் சாணக்கியத்தனத்தையும் தோற்றுவித்திருக்க வேண்டும். ராஜராஜனை அரியணை ஏற்றியதில் இருந்து  அவன் அரசாட்சி காலம் வரை சகலத்துக்கும் பின்புலமாக இருந்து மதியூகத்துடன் செயல்பட்டது குந்தவைதான். 

குந்தவை நாச்சியார் எக்காரணம் கொண்டும் சோழ நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்ற எண்ணத்தில் இருக்கிறாள். ஆரம்பத்தில் இருந்தே தம்பியை தன் அரவணைப்பில் வைத்து தன் சொல்படி நடக்குமாறு கட்டுக்குள் வைத்திருக்கிறாள். இதன் காரணம் தன் மூத்த சகோதரன் ஆதித்த கரிகாலன் மாபெரும் வீரனாக இருந்தாலும், முன் கோபத்தால் மூர்கத்தனமாக நடக்கும் குணத்தை பெற்றிருந்ததும், முன்யோசனை இன்றி பல காரியங்களில் ஈடுபடுவதுமான செயல்களைக் கண்டு அவள் அஞ்சினாள்.

எல்லைகளை விரிவுபடுத்தினாலும் மாவீரனாக இருந்தாலும் செயலில் நிதானமும் ராஜ தந்திரமும் இல்லாமல் நாடாள்வது மிகக் கடினம் என்பதை நன்கு அறிந்திருந்தாள் அம்மாதரசி. வீரம் மட்டுமே அரசாளும் தகுதியாகாது என்பதாலேயே அவள் கரிகாலனின் போக்கைக் கண்டு கவலை கொண்டாள்.

அதற்கேற்றார் போலவே தன் எச்சரிக்கையை மீறியும் கரிகாலன் தனியாக கடம்பூர் மாளிகைக்குச் சென்றதும் அங்கே சூழ்ச்சியாலும் நயவஞ்சகத்தாலும் அவன் படுகொலை செய்யப்பட்டதும் அவளது நெஞ்சில் ஆரா ரணமாகிவிட்டிருந்தது. தமயனை இழந்தாள் பின் தந்தையை இழந்தாள் தாயையும் உடனே இழந்தாள். எஞ்சி இருக்கும் தன் இளைய சகோதரன் அருள் மொழியாவது (ராஜ ராஜன்) தனக்கும் தன் நாட்டுக்கும் மிஞ்ச வேண்டுமே என்ற மாபெரும் கவலையும் அதற்கான பொறுப்பையும் தன் தோள்களில் சுமந்து கொண்டாள்.

பிறப்பால் வளர்ப்பால் அரச குடும்பத்தை சேர்ந்த பெண் என்றாலும் நிஜ வாழ்வில் அவள் ஒரு ஆணைப் போலவே ராஜ தந்திரியாக நுட்பம் மிகுந்த மதியூக மந்திரியாக செயல்பட வேண்டி இருந்தது. ராஜகுமாரிகளுக்கு உண்டான பொழுதுபோக்குகளுக்கும் விளையாட்டுகளுக்கும் அவள் தன்னை அதிகமாக நுழைத்துக் கொள்ளவில்லை.

வந்தியத் தேவன் மீது வந்த காதல் கூட அவள் நாட்டுபற்றை சார்ந்தே அமைந்துவிட்டது. வேற்று நாட்டு அரசனையோ இளவரசனையோ மணந்தால் தான் சோழ நாட்டை விட்டு அங்கு போக வேண்டிவரும். தம்பிக்கும் நாட்டுக்கும் அரணாக இருக்க முடியாத சூழ்நிலை வரும் என்று தன் திருமணத்தைப் பற்றிய யோசனை இன்றியே காலம் கழித்து வந்தாள். அதனால் தானோ என்னமோ அவளது எண்ண ஓட்டத்தை ஒத்திருந்தே காதலும் அவளுக்கு சாதகமாகவே அமைந்துவிட்டது.

ஆம், தன் சகோதரனுக்கு நெருக்கமாக மாதண்ட நாயக்கராக இருந்த வந்தியத்தேவன் மீதே மையல் கொண்டது அவள் மனம். தன் காதலர் வந்தியத் தேவனை உன்னதப் பொறுப்பில் நிறுத்தி, உரிய மரியாதையும் அளித்து அவரது தன்முனைப்பு பாதிக்காமல் பார்த்துக் கொண்டு, அதே சமயம் ஆட்சி அதிகாரத்தைத் தன் கட்டுக்குள்ளும் வைத்திருக்கிறாள். இங்கே நாம் குந்தவையின் அரசியல் திறமையை பாராட்டியே ஆக வேண்டும்.

தன் இசைவுக்கு ஏற்றார் போல் வாழ்க்கையை அமைத்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் தம் தம்பிக்கும் காரண காரியங்களை ஆராய்ந்தே தன்னுடைய நெருங்கிய தோழியையே மணமுடிக்கிறாள். நாடாளும் தம்பியும் தன் கண்பார்வையில் தன் கட்டுக்குள் இருக்கும்படியே பார்த்துக் கொள்கிறாள். அதையும் மிகத் திறமையாக செய்து, யாரும் தான் ஆதிக்கம் செலுத்துவதாக குற்றம் சாட்டாத அளவுக்கு நடந்து கொள்கிறாள். தன் அன்பால், தகுந்த புத்திமதியால், சட்டென்று சுதாரித்து சூழலுக்கு ஏற்ப சாதுர்யமாக முடிவெடுக்கும் திறனால் அனைவரின் இதயத்தையும் கூடவே புத்தியையும் வென்றுவிடுகிறாள்.

புத்தி சாதுர்யம் மட்டுமல்ல மிகுந்த தயாள குணமும் இரக்க சுபாவமும் கொண்டிருந்தவள் குந்தவை. கோயில்களுக்கும் அறப்பணிகளுக்கும் அவள் கொடுத்தது கொஞ்ச நஞ்சமல்ல. அது மட்டுமல்லாது ஆதூர சாலைகள் எனப்படும் மருத்துவமனைகள் நிறுவி இலவச மருத்துவம் வழங்கிய முதல் அரசி குந்தவைதான். சைவ மதத்தைப் பின்பற்றினாலும் மத சார்பின்றி மற்ற பிரிவினருக்கும் கோயில்கள் கட்ட அனுமதித்தாள். இதற்கு சான்றாக இந்நாளில் ‘தாராசுரமாக’ இருக்கும் அந்நாளைய ராஜராஜபுரத்தில் குந்தவை நாச்சியார், பெருமாளுக்கு ஒரு கோயிலும், சிவனுக்கு ஒரு கோயிலும், சைனருக்கு ஒரு கோயிலுமாக மூன்று கோயில்களை ஓரிடத்திலேயே கட்டினார். இம்மூன்று கோயில்களுக்கும் அவர் வழங்கிய கொடைகளை அங்கிருக்கும் கல்வெட்டு கூறுகிறது.

ராஜராஜனின் பதவிக் காலத்தில் ஒரு பொதுக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது என்றும் அதன்படி பிரமதேயங்களிலுள்ள நிலம் வைத்திருக்கும் மற்ற வகுப்பினர் எல்லோரும் தங்களுடைய நிலங்களை விற்றுவிட வேண்டும் என்றும் இந்த கட்டளைக்கு நிலம் பயிரிடுவோரும் மற்ற நில மானியங்களை அனுபவிப்போர் மட்டும் விதிவிலக்கென்று கொண்டு வரப்பட்டதாகவும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. அப்படி விற்கப்பட்ட நிலங்களை  ராஜராஜனின் தமக்கை குந்தவை நாச்சியாரே வாங்கி, அவ்வூர்க் கோயிலுக்குத் தானமாக அளித்தார் என்றும் கல்வெட்டுகளில் உள்ளன.

இப்படி பல தானங்களைக் கோயில்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் செய்யும் ஆற்றல் மிக்கவராக முதலாம் ராஜராஜன் மற்றும் ராஜேந்திரன் காலத்தில் குந்தவை நாச்சியார் இருந்திருக்கிறார். ராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலுக்கு குந்தவை தேவி, 10,000 கழஞ்சு எடையுள்ள தங்கத்தையும் 18,000 கழஞ்சு மதிப்புள்ள வெள்ளிப் பாத்திரங்களையும் கொடுத்து சிறப்பித்திருக்கிறார் என்று, பெரிய கோவில் சுவர்களும் தூண்களும் சொல்லுகின்றன.

குந்தவை நாச்சியார் தனது தம்பியான ராஜராஜன் மீது கொண்டிருந்த அன்பைப் போலவே, ராஜராஜனும் தனது தமக்கையான குந்தவை நாச்சியாரின் மீது பெரும் மதிப்பும், அன்பும் கொண்டிருந்தான் என்பதை  அவன் கட்டிய தஞ்சை ராஜராஜேஸ்வரம் கோயில் 'நாங்கொடுத்தனவும், அக்கன் (குந்தவை) கொடுத்தனவும்’ எனக் கல்வெட்டில் இடம் பெறச் செய்ததில் இருந்தும் மேலும் குந்தவை பிறந்த திருஅவிட்டம் நட்சத்திரத்தில் மிகப்பெரும் செலவில் திருவிழாக்கள் நடத்தியதில் இருந்தும் அறியலாம்.

சுந்தரசோழன், செம்பியன் மாதேவி, அருள்மொழி (ராஜராஜன்) உள்ளிட்ட அரசகுலத்தோர் மட்டுமல்லாமல் சோழ நாட்டு மக்கள் அனைவரின் அன்பையும் பெற்றவர் குந்தவை. அறிவும் அழகும் ராஜ தந்திரமும் மிக்க அபூர்வ ராஜகுல பெண்மணியாகத் திகழ்ந்தவர் குந்தவை நாச்சியார்.

இசைக்கலாம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT