26. ஜாபாலா

தன் சிறிய குடிலின் வெளிப்புறத்தில் தினையை சுத்தம் செய்து கொண்டிருந்தாள் ஜாபாலா.
26. ஜாபாலா

பிரம்மத்தை தியானம் செய்யுங்கள்.

ஒப்பிட இல்லாதவனாய்,

தானே தானாய்,

சத் சித் ஆனந்தமாய் உள்ள

 பரம்பொருளை தியானம் செய்யுங்கள்

- ஜாபாலா உபநிஷதம்

தன் சிறிய குடிலின் வெளிப்புறத்தில் தினையை சுத்தம் செய்து கொண்டிருந்தாள் ஜாபாலா. பறவைகள் வந்து கலயத்தில் இருந்த தினைகளை கொத்திப் போவதைக் கூட கவனிக்கவில்லை. அவள் மனம் வேறு எதிலோ லயித்திருந்தது. இப்படித்தான் கடந்த சில நாட்களாகவே மனம் தவிப்புடன் இருந்து வருகிறது. தன் ஆறு வயதுப் பிள்ளையை முதுகில் தூக்கிக் கொண்டு மலை ஏறுகையிலும் கையைப் பிடித்துக் கொண்டு நதிக்கரையை கடக்கையிலும் மனம் சஞ்சலம் கொள்கிறது. நதிக்கரை அருகே கௌதம முனியின் ஆசிரமத்தை கடக்கும் போதெல்லாம் பிள்ளையின் கண்கள் விரிவடைவதைக் காண்கிறாள். இறுகப் பற்றியிருக்கும் அவன் பிடி சற்றே தளரும், நடை மெதுவாகும், அவ்விடத்தை கடக்கும் வரை தலை ஆசிரமத்தில் வேதம் பயின்று கொண்டிருக்கும் சிறுவர்களை நோக்கி திரும்பியவாறே இருக்கும்.

பின் அவள் பிள்ளை எதையோ எதிர்பார்த்து தாயின் முகம் பார்ப்பதும் பின் அமைதி காப்பதுமாக இருக்கிறான். அவள் ஊகம் சரி என்றால் வெகு சீக்கிரத்திலேயே அவள் மனதில் எதிர்பார்த்திருக்கும் அக்கேள்வியை பிள்ளை கேட்கலாம். அதற்கு தன்னிடம் என்ன பதில் இருக்கிறது? பிள்ளை உண்டான நாளில் இருந்தே தனக்குள்ளாகவே எத்தனை முறை கேட்டுக் கொண்ட கேள்வி அது.  ஒரு வேள்வியைப் போல் தீச்சுவாலையாக தன் அடிவயிற்றில் தொடங்கி உயர்ந்து உயர்ந்து தன் உடல் உயரத்தையும் தாண்டி பற்றி எரிந்து கொண்டிருப்பதை இன்றும் அவளால் அணைக்க முடியவில்லையே.

வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டு வரும் இக்கேள்விக்கு தன்  மகன் மூலமாகவே முற்றுப் புள்ளி வைக்க விரும்பினாள். அவனாகவே கேட்கும்  வரை அமைதி காக்க விரும்பினாள். தாகம், தாகம் என்றால் மட்டும் போதாது தண்ணீரை நோக்கிச் சென்று அள்ளிப் பருகினால் தான் தாகம் தணியும். அவன் தாகம் தீர அவனே நீரை தேடிப் போகும் வழியை கண்டடையட்டும் என்ற தீர்மானத்திற்கு வந்தாள் ஜாபாலா.

அவள் எதிர்பார்த்த அத்தருணம் வந்தது. சிறுவன் தன் தாயின் இடுப்பைக் கட்டிக்கொண்டு அம்மா எனக்கு உன்னிடம் ஒரு வேண்டுகோள் இருக்கிறது. கேட்கட்டுமா? என்றான்.

‘கேள் கண்ணே. கேள்விகளால் தான் அறிவு பெருகும். கேட்க வேண்டும் என்ற வேட்கைதான் நமக்கான பதிலை தேடி அடையச் சொல்லும். கேள்’

‘அம்மா நான் அந்த ஆசிரமத்தில் இருக்கும் சிறுவர்களைப் போல வேதம் கற்க விரும்புகிறேன். என்னை அதற்கு அனுமதிப்பாயா?’

ஜாபாலா சிறிது நேரம் யோசித்தாள். ஞானத்தை வேண்டி நிற்கும் பிள்ளையை தடுக்க முடியுமா? அவனிடம் ‘கண்ணே ஞானத்தை பெற வேண்டும் என்ற உன்னுடைய வேட்கை மனதிற்கு உவகை அளிக்கிறது. தாராளமாக நீ செல்லலாம். அறிவை அடைவதற்கு யாரும் எத்தடையும் விதிக்க முடியாது. ஆனால் நான் சொல்லும் சில விஷயங்களை மனதில் என்றும் இருத்திக் கொள்’ என்று தொடர்ந்தாள்.

மகனே! சத்' என்ற வேரிலிருந்தே 'சத்தியம்' என்ற வார்த்தை விளைந்தது. 'சத்' என்றால் 'இருத்தல்' என்று பொருள். சத்தியத்தைத் தவிர வேறெதுவும் நிலையானதன்று. சத்தியம் இருக்கும் இடத்தில்தான் களங்கமற்ற அறிவு பிறக்கும். சத்தியமும் நல்லறிவும் இணைந்தால், 'ஆனந்தம்' தானாக வந்து கலக்கும். அதனால்தான், வாழ்வின் பேருண்மையைப் புரிந்து கொண்டவர்கள் ஆண்டவனை, சத்-சித்-ஆனந்தம் என்று அடையாளம் கண்டனர்.

சத்தியத்தை விட சிறந்தது எதுவும் இல்லை. நூறு கிணறுகளை விட, ஒரு குளம் உயர்ந்தது. நூறு குளங்களைவிட, ஒரு வேள்வி உன்னதமானது. நூறு வேள்விகளை விட, ஒரு நல்ல மகன் மேலானவன். நூறு நல்ல பிள்ளைகளை விட, சத்தியமே போற்றத் தக்கது. எல்லா வேதங்களையும் ஓதி, எல்லாப் புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடினாலும் அவற்றின் பயன், சத்தியத்தின் ஒரு பங்குக்கு இணையாகாது.

சத்தியத்துக்கு ஈடான புண்ணியமும் இல்லை; பொய்மைக்கு சமமான பாவமும் இல்லை'.  உண்மை இல்லாத இடத்தில் உயர்ந்த அறம் இல்லை. பிற உயிர்களுக்குத் துன்பம் தரும் செயல்களில் சத்தியம் இருக்காது என்பதே தர்மத்தின் நுட்பம். ஆதலால் நீ என்றும் சத்யம் பிறழாதவனாக நேர்மையானவனாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்’ என்று அவன் முகத்தை கையில் ஏந்தி அன்புடன் நோக்கினாள்.

‘அம்மா! இதுவரை நீயே எனக்கு எல்லாமுமாக இருந்திருக்கிறாய். வேதம் படிப்பித்து தரவில்லையே தவிர எனக்கு காட்டை கற்பித்தவள் நீ. பறவை மொழிகளை, விலங்குத் தடங்களை, வான்குறியை, மண்ணின் மாற்றங்களை என ஒவ்வொன்றையும் கற்பித்தவள் நீ. எல்லாவற்றுக்கும் மேலாக இப்போது சத்தியத்தையும் கற்பித்திருக்கிறாய். உன்னிலிருந்து வந்த நான் உன் வார்த்தைகளை என்றும் மீற மாட்டேன். இது உறுதி’ என்று தாயைக் கட்டிக் கொண்டான்.

கண்களில் நீர் கசிய அப்பிஞ்சுக் கரங்களை பற்றியவாரே ‘மகனே இதையும் கேட்டுக் கொள். ரிஷிகள் ஒருவனுடைய குலம் கோத்திரம் தெரிந்த பிறகுதான் அவனை சிஷ்யனாக ஏற்றுக் கொண்டு ஆத்மஞானம் புகட்டுவார்கள். தங்கள் உபதேசம் விழலுக்கு நீர்பாய்ச்சுவது போன்று வீணாகப் போகாதிருக்கும் பொருட்டு அவர்கள் இம்முறையைக் கையாள்கின்றனர்.  ஆத்ம ஞானம் பெற விரும்புகிறவர் உயர்ந்த பண்பைப் பெற்றிருக்க வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து கொண்டிருக்கும் பழக்கம் இது. கௌதம ரிஷியிடம் வேதம் பயில்வது என்பது ஒரு வரம். அவர் பிராமண குலத்தவருக்கு மட்டுமே கற்பிக்கிறார்.

அவர் உன்னுடைய குலம் எது கோத்திரம் எது தந்தை யார் என்று வினவினால் என்ன சொல்வாய்? என்று கேட்டாள்.

‘அம்மா எத்தனையோ கற்பித்த நீ இதையும் கற்பிக்க மாட்டாயா? அவ்வாறு அவர் கேட்பின் என்ன சொல்ல வேண்டும் நான்’ என்றான் மகன்.

‘கண்ணே! நான் வேடுவகுலத்தைச் சேர்ந்த பெண். சிறு வயதில் நான் பல இடங்களில் வேலை செய்ய நேர்ந்தது. அங்கு பலருடன் தொடர்பு ஏற்பட்டது. என்னால் நீ யாருடைய வித்து என்று கூறமுடியவில்லையடா. வேடுவ குலத்தில் தாயின் குருதியே குலம் சொல்லும். அதனால் நீ உன் உண்மை நிலையைக் கூறி நீ ஜாபாலாவின் மகன் என்று கூறுக’ என்றாள்.

சிறுவனும் கௌதம ரிஷியிடம் காய்ந்த விறகுகளை எடுத்துக் கொண்டு சென்றான். சிறுவன் ஒருவன் விஷய ஞானத்துடன் காய்ந்த விறகுடன் அதுவும் தனியே வந்திருப்பதைக் கண்டு வியப்புடன் பார்த்தார் முனிவர். அவரைச் சுற்றிலும் அவரது சீடர்கள் அமர்ந்திருந்தனர். காய்ந்த விறகை கல்வி கற்கும் குருகுலத்துக்கு எடுத்துச் செல்வது அக்கால வழக்கம். ஞான அக்னியால் தீண்டப்படாத விறகாக நான் இருக்கிறேன். என்னுள் ஞான அக்னியை ஏற்படுத்துங்கள் என்று குறிப்பாகச் சொல்வதாக அர்த்தம்.

அவனைப் பார்த்த கௌதமர் அவனிடம் எல்லாரிடமும் கேட்கும் கேள்வியைக் கேட்கிறார். சிறுவனே உன்னுடைய குலம் என்ன கோத்திரம் என்ன உன் தகப்பனார் யார் என்று கேட்கிறார். சிறு நொடி கூட தயங்காது தன் தாய் தனக்குச் சொல்லியதைக் கூறி, ஆதலால் என் தந்தை யார், என் குலம் என்ன கோத்திரம் என்ன என்ற எதுவும் எனக்குத் தெரியாது. நான் ஜாபாலாவின் மகன் என்பது மட்டுமே நானறிந்தது’ என்கிறான்.

சுற்றி இருந்த சீடர்கள் எல்லாம் குலம் இல்லாதவன், கோத்திரம் பேர் தெரியாதவன்  தந்தை யார் என்றே தெரியாத இழிமகன் என அவனை கேலி பேசி நகைத்தனர். மேலும் குலம் கோத்திரம் இல்லாதவனுக்கு வேதம் எப்படி வரும், நம் குரு அவனை துரத்திவிடுவார் என்றும் தங்களுக்குள் பேசிச் சிரித்தனர்.

ஆனால் கௌதமர் அவனை மரியாதையுடன் பார்த்தவாறே ‘குழந்தாய் இன்றிலிருந்து நீ என் சீடனாகிறாய். நான் உன்னை சீடனாக ஏற்றுக் கொண்டேன். நீ எக்காரணம் கொண்டும் பொய் கூறாது உண்மையை மட்டுமே பேசியதால் இதற்கு முழுத் தகுதி உடையவனாகிறாய். உன் தாய் உன்னை மேன்மையாக வளர்த்திருக்கிறாள். நீ நல்ல வித்து என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. பிராமணன் என்பவன் பிறப்பால் மட்டும் அறியப்படுவதில்லை. உன் நிலை மாறாமல் இத்தனை பேர் மத்தியிலும் உன் மானத்தைக் காத்துக் கொள்ள பொய் கூறாமல் உண்மையை தைரியமாகப் பேசியதால் நீ பிராமணன் ஆகிறாய். அதைவிட சிறந்த தகுதி வேறில்லை. இனி நீ சத்யகாமன் என்ற பெயருடையவனாகிறாய். உன் தாய் உனக்கு சிறந்தவற்றை கூறி வளர்த்திருக்கிறாள். அதனால் உன் தாயின் பெயரே உன் குலப்பெயரும் குடிப்பெயருமாக இருக்கட்டும். நீ இன்று முதல் சத்யகாம ஜாபாலன் என்ற பெயரால் அறியப்படுவாய்’ என்று ஆசிர்வதித்து அவனை சீடனாகச் சேர்த்துக் கொண்டார்.

‘சத்தியவானுக்கு சாதி மற்றும் வருணபேதம் எதுவும் இல்லை' என்கிறது சாந்தோக்ய உபநிடதம். வேதம் ஓதுவதோ, சாத்திரங்களை அறிவதோ ஒருவனுக்கு உயர்வைத் தராது. சத்தியம் சார்ந்த ஒழுக்க நெறிகளே ஒருவனை உயர்த்தும் என்பதற்கு இதை விட வேறு சான்று எதுவும் தேவை இல்லை.

கௌதம ரிஷி சத்யகாமனுக்குப் பூரணமான உபதேசங்களை வழங்கினார். ஜாபாலன் என்று அழைக்கப்பட்ட அந்தச் சத்யகாமன்தான் பின்னாளில் மிகச் சிறந்த மகரிஷியாக மாறினார்.

அதற்கு மூல காரணமாக அவன் தாய் ஜாபாலா விளங்குகிறாள். எப்பெண்ணும் ஒத்துக் கொள்ளத் தயங்குவதை, தன் ஒழுக்கத்தின் மீது கேள்விக்குறியாகும் விஷயத்தை அதுவும் தன் மைந்தனிடமே கூறியதில் அவள் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவளாகிறாள். தன் மகனுக்கு சத்தியத்தை போதித்தன் மூலம் அவனுக்கு குருவின் மூலமாக ஞான மார்க்கத்தை அடையும் வழிகாட்டியாகவும் ஆகிறாள். அவளே அவனின் முதல் குருவாக சிறக்கிறாள்.

அம்புப் படுக்கையில் இருக்கும் பீஷ்மர் தன்னிடம் அறிவுரை கேட்க வந்த தருமனிடம் ‘யுதிஷ்ட்டிரா, சத்தியத்தைக் காப்பதில் ஜாபாலா போல இரு’ என்கிறார். சத்தியமே உலகின் அழியாத நிலைத்தன்மையைப் பெற்றிருப்பது. உலகில் நீயும் நானும் மறைந்தாலும் சத்தியம் என்றும் மறையாதது என்று கூறுகிறார்.

ஒரு பணிப்பெண்ணாக தன் இளமைப் பருவத்தை கடந்து வந்தவள் ஜாபாலா. தன் மகனின் வித்து யாருடையது என்பதே தெரியாத நிலையில் இருந்தவள் ஜாபாலா. ஆனாலும் அவள் கடைபிடித்த சத்தியம் அவளுக்கு வேதத்தில் உயர்ந்த இடத்தைப் பெற்றுத் தருகிறது. அவள் மகன் சத்யகாம ரிஷியால் எழுதப்பட்ட ஜாபாலா உபநிஷதம் வேதத்தில் அழியாத இடம் பெற்று விளங்குகிறது.

இசைக்கலாம்…

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com