18. கஸ்தூர்பா காந்தி

‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள்’ எனும் சொல் வழக்கு உண்டு.
18. கஸ்தூர்பா காந்தி

‘ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள்’ எனும் சொல் வழக்கு உண்டு. மஹாத்மா வாழ்விலும் இது விதிவிலக்காகவில்லை. காந்தியைப் பற்றி அறிந்த அளவு கூட அவர் மனைவி கஸ்தூர்பா குறித்து நாம் அதிகம் அறிந்திருக்கவில்லை. அவரைப் பற்றிய குறிப்புகள் காந்தியைப் பற்றியதைக் காட்டிலும் மிகக் குறைவே.

மாணவ மாணவிகளாகட்டும், மகளிர்களாகட்டும், அரசியல் அலசும் ஆண்களாகட்டும்,  யார் கஸ்தூரிபாய் என்ற மிக எளிய கேள்விக்கு அவர்களிடம் இருந்து யோசிக்காமல் சட்டென்று வரும் பதில் காந்தியின் மனைவி. அதைத் தாண்டி????...  யோசித்து  சொல்வதற்கு ஒன்றுமில்லை என்பது போல அமைதியே பதிலாகக் கிடைக்கும். அடுத்து  காந்தியைப் பற்றி கேட்கும் போது அதற்கும் உடனடி பதில் வரும். காந்தி நம் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தவர், தேசபிதா காந்தியடிகள், விடுதலைப் போரின் அஹிம்சா வழியில் போராடி வெற்றி பெற்றவர் என்றெல்லாம் காந்தியைப் பற்றிச் சொல்வார்கள்.

காந்தி யார் என்று கேட்டால் அவரது வரலாறைச் சொல்லுபவர்கள் கஸ்தூர்பா யார் என்ற கேள்விக்கு, ‘காந்தியின் மனைவி’ என்பதோடு முடித்து விடுகிறார்கள். இத்தனைக்கும் கஸ்தூர்பா, சுதந்திரப் போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டு பிரிட்டிஷ் ஆட்சியரால் கைது செய்யப்பட்டு வீட்டுச் சிறை வைக்கப்பட்டு, உடல்நிலை குன்றி உயிர் நீத்தார் என்பதே வரலாறு. ஆனாலும் நமது கல்வியின் எந்தப் பாடத் திட்டத்திலும் கஸ்தூர்பா குறித்து முழுமையாகக் கூறப்படவில்லை. காந்தியின் உயிர்த் தியாகம் உலக அளவில் மிக உயர்வாக மதிக்கப்படுகிற போது கஸ்தூர்பாவின் உயிர்த் தியாகமும் போராட்டமும் குறைந்தவை அல்ல.

தனது சத்திய சோதனையில் கூட மனைவி கஸ்தூர்பா குறித்து காந்திஜி எழுதியவை சுமார் 33 விழுக்காடு அளவுதான் இருக்கும். முதலில் அடக்குமுறையை நிகழ்த்துகிற ஒரு சராசரி இந்திய கணவனாக இருந்த காந்தி படிப்படியாக அடைந்த மாற்றத்துக்கு கஸ்தூர்பா முக்கிய காரணம் .

தனக்கென தனித்த வாழ்க்கை என்று எந்த விருப்பமும் இல்லாமல் கணவரின் வாழ்க்கையே தன் வாழ்க்கையாக வாழ்ந்தவர் கஸ்தூர்பா. பல விஷயங்களில் காந்தியின் நிலைப்பாட்டுடன் ஒத்துப் போய் கணவரின் நிழலாக வாழ்ந்து மறைந்தவர். இவர் காந்தியை விட சில மாதங்கள் பெரியவர். இருவரும் ஒரே ஆண்டில் சில மாதங்கள் வித்தியாசத்தில் பிறந்தவர்கள். இரு குடும்பமும் உறவினர்கள்.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியும் கஸ்தூர்பா கபாடியாவும் 1869 ஆண்டு குஜராத்தின் கடலோர ஊரான போர்பந்தரில் பிறந்தவர்கள். கஸ்தூர்பாவின் தந்தை கோகல்தாஸ் கபாடியா ஆப்பிரிக்க, அரேபிய மார்கெட்டுகளில் துணி, தானியம், பஞ்சு போன்றவைகளை வியாபாரம் செய்தவர். காந்தியின் தந்தை கரம்சந்த் காந்தி போர்பந்தர் ஆட்சியாளர் ராணாவிற்கு திவானாக செயல்பட்டவர். மோகன்தாசுக்கும் கஸ்தூர்பாவுக்கும் 7 வயதில் நிச்சயதார்த்தமும் 13 வயதில் திருமணமும் நடந்தது. இத்தம்பதியருக்கு 13 முதல் 31 வயது வரை ஐந்து குழந்தைகள் பிறந்தன. அதில் முதல் குழந்தை பிறந்த சில தினங்களில் இறந்துவிட மீதி நான்கு ஆண் மகவுகள் இவர்களுக்கு இருந்தனர். மூத்தவர்  ஹரிலால் (1888), அடுத்து மணிலால் (1892), மூன்றாவது ராமதாஸ் (1897), மற்றும் தேவதாஸ் (1900).

காந்தி பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டதால் குடும்பப் பொறுப்பு முழுவதும் கஸ்தூரிபாவே கவனித்துக் கொண்டார். மணமான புதிதில் படிப்பறிவில்லாத இவருக்கு கல்வி கற்பிக்கும் வேலையை காந்தியே செய்தார். அதை ஒரு முக்கிய மற்றும் சிறந்த அம்சமாக கருதி மனைவிக்கு ரகசியமாக எழுதப் படிக்கக் கற்றுக் கொடுக்கத் துவங்கினார்.

ஆனால் 130 ஆண்டுகளுக்கு முன்பு மாப்பிள்ளை சிறுவன் மனைவி என்ற சிறுமிக்கு கல்வி கற்பிப்பது நகைப்புக்குறிய வேலையாகவும் பயனற்றதாகவும் கருதப்பட்ட விஷயம். அதனால் இரவு நேரத்தில் யாரும் அறியாமல் படுக்கையில் மட்டுமே இதை ஓரளவு செய்ய முடிந்தது. தம்பதிகளின் இளமையின் விளைவாக உடலுறவுகள் தான் பெரும்பாலும் நடந்தது என காந்தி தனது சுய சரிதையில் பிற்காலத்தில் எழுதினார். தனக்கு கல்வி பயிற்சி தேவையில்லை எனக் கணவரிடம் கூறுவதற்கு பதிலாக கஸ்தூர்பா இரவு கற்றுக் கொண்டதை காலையில் எந்த முயற்சியும் இன்றி மறந்துவிடுவாராம். இதனால் குடும்பப் பெரியவர்களிடம் பொய் சொல்லத் தேவையும் இருக்கவில்லை.

1897-ல் தொழில் நிமித்தமாக, வழக்கறிஞர் பணிக்காக தென் ஆப்பிரிக்கா சென்ற கணவருடன் சென்றார் கஸ்தூரிபா. அங்கு அவர் போராட்டமயமான வாழ்க்கை நடத்த வேண்டியிருந்தது. 1904 முதல் 1914 வரை டர்பன் நகரில் காந்தி குடும்பம் வசித்தது.

அங்கு நிலவிய நிறவெறிக் கொடுமை மற்றும் இந்திய வம்சாவளி தொழிலாளர்கள் மீதான கொடிய சட்டங்களுக்கு எதிராக காந்தி முன்னெடுத்த போராட்டங்களில், கஸ்தூர்பாவும் தோளோடு தோளாக நின்றார். தனியாகவும் பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்த கஸ்தூர்பா, மக்களின் உரிமைகளுக்கு வலுவாகக் குரல் எழுப்பினார். 1913-ல் நடந்த பீனிக்ஸ்வாசிகளின் படையெடுப்பு போராட்டத்தை தலைமை வகித்து முன் நடத்தினார்.  இதில் கலந்து கொண்டால் சிறைச்சாலை செல்ல நேரிடும், யோசித்து முடிவெடு என்று காந்திஜி கூறிய போதும், உங்களால், நம் மகன்களால் சிறைவாசத்தை ஏற்க முடியும் எனும் போது என்னாலும் முடியும் என்று உறுதியுடன் நின்று அறப் போராட்டத்தில் கலந்து கொண்டார் கஸ்தூர்பா.

அதன் விளைவாக கைது செய்யப்பட்டு, மூன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். அரசால் கைது செய்யப்பட்ட முதல் பெண் சத்யாகிரகிகள் என்ற பட்டத்தை இப்பெண்கள் பெற்றனர். முதல் சிறை வாழ்வின் கடுமையான சூழலை சமாளிப்பாதற்கான மன உறுதியை அவ்விளம் பெண்களுக்கு அளித்தார். பல கடினமான சிறை வேலைகளை முடிப்பதற்கு அவர்களுக்கு ஊக்கமளித்தார். சிறையில் அளிக்கப்படும் அசைவ உணவை பெண்களால் உண்ண முடியாது என்று பலமுறை அவர் கேட்டுப் பார்த்தும் பயனில்லை.

நேடால் சிறையில் பெண்களின் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. அசைவம் சாப்பிட மாட்டேன் என்றவர்களுக்கு அழுகிப் போன பண்டங்களே சைவ உணவாகக் கொடுக்கப்பட்டன. பணம் கொடுக்க தயாராக இருந்து வெளியில் இருந்து உணவு பெற சித்தமாக இருந்தும் அவர்களுக்கு அவ்வுரிமை மறுக்கப்பட்டது. இது சிறைச்சாலை. உங்கள் இஷ்டப்படி ருசியாக உண்ண உணவு விடுதி இல்லை என்ற நையாண்டியான பதிலே கிடைத்தது.

மூன்று மாதக் குழந்தையோடு கைது செய்யப்பட்ட இளம் தாய் ஒருவர், மருத்துவ பராமரிப்பின்மையால் சிறையிலிருந்து வெளி வந்தவுடன் இறந்தார். உடலை உருக்கும் காய்ச்சலில் பலர் சிகிச்சையின்றி தவித்தனர். தனது 44 வயதில் கஸ்தூரிபாவிற்குக் கிடைத்த சிறைவாசம் அவர் எதிர்பார்ப்பிற்கு மேலாக உடலையும் உள்ளத்தையும் உருக்கிற்று. தானும் தனது கணவர், மகன்கள் மோதிலால், ராம்தாஸ் ஆகியோரும் ஒரே சமயம் வெவ்வேறு சிறைகளில் இருப்பதை எண்ணி உருகினார். ஆனால் தான் சிறைபட்டது தவறு என்று மட்டும் நினைக்கவில்லை. இக்கடினமான சூழ்நிலையிலும் மனதை வலுவாக்கவும் சோர்விலிருந்து அனைவரும் மீளவும் மாலையில் பஜனை பிரார்த்தனைகள் நடத்தினார்.

இத்தனை துன்பங்களை அனுபவித்தாலும் ஒருபோதும் அவர் வருத்தப்பட்டு கலங்கியது இல்லை.  காந்திஜி கைதான நேரங்களில் அறப் போராட்டங்களை தலைமை தாங்கி நடத்திய பெருமையும் இவருக்குண்டு.

காந்தி பொது வாழ்வில் பெண்கள் ஈடுபட எது தடை என யோசித்து பார்த்த பொழுது அவர்களுக்கு பாதுகாப்பின்மை தான் முக்கிய காரணம் என உணர்ந்தார். ஆகவே முன்னுதாரணமாக, 1906 இல் பிரம்மச்சரியத்தை தன் மண வாழ்வில் மேற்கொண்டார். அதற்கு முழு ஒத்துழைப்பையும் கொடுத்து கஸ்தூர்பாவும் விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டார்.

தென் ஆப்ரிக்காவில் ஆஸ்ரமம் அமைத்து காந்தி தங்கிருந்த பொழுது, லாரன்ஸ் எனும் காந்தியின் முதன்மை செயலாளர் ஆன தமிழர் ஒரு நாள் மலம் கழிக்கும் சட்டியை சுத்தம் செய்ய மறந்து வெளியேறி விட்டார் .காந்தி தன் மனைவியை அதை சுத்தம் செய்ய சொன்னார். கஸ்தூர்பா விருப்பமின்றி முகச்சுளிப்புடன் சுத்தம் செய்ய ஆரம்பித்தார். காந்தியோ சிரித்த முகத்துடன் அதை செய்ய வேண்டும் என வற்புறுத்த அவர் என்னால் அது முடியாது என அழமாட்டாத குறையாகக் கூறி மறுத்தார்.

இதைப் பற்றி தனது சுய சரிதையான சத்திய சோதனையில்

‘அவள் பாண்டத்தை முனகிக் கொண்டே எடுத்துப் போனது மட்டும் என்னை திருப்திப்படுத்தவில்லை. அவள் அதை மகிழ்ச்சியோடு செய்ய வேண்டும் என எதிர்பார்த்தேன். என் வீட்டில் இத்தகைய-நான்சென்ஸை அனுமதிக்க மாட்டேன் என உரத்த குரலில் கூறினேன். என் வார்த்தைகள் அம்பைப் போல் அவளை குத்தின. உங்கள் வீட்டை நீங்களே வைத்துக் கொண்டு என்னை இங்கிருந்து போக விடுங்கள் என்றார். பரிதாபம் என்பது என்னுள்ளே உலர்ந்துவிட்டது. அவள் கையை பிடித்து தரதர என இழுத்துச் சென்று அவளை வெளியே தள்ள வாசல் கதவை திறந்தேன். கண்ணீர் வெள்ளமாய் பெருக அவள் கேட்டாள், உங்களுக்கு வெட்கம் இல்லையா? உங்களையே மறந்து இப்படி நடந்து கொள்வதா? நான் எஙகே செல்ல முடியும்? இங்கு எனக்கு உதவ யார் இருக்கிறார்கள்? உங்கள் மனைவி என்பதால் உங்கள் அடியையும், உதையையும் நான் பொறுத்துக் கொள்ள வேண்டுமா? முறையாக நடந்து கொண்டு கதவை மூடுங்கள். நாம் இருவரும் இப்படி நடந்து கொள்வதை யாரும் பார்க்காமல் இருக்கட்டும். நான் மிகவும் தைரியசாலி போல் முகத்தை வைத்துக் கொண்டாலும் மிகவும் அவமானப்பட்டு கதவை மூடினேன். பல சண்டை சச்சரவுகள் நடந்தாலும் இறுதியில் சமாதானமே நிலவியது. என் மனைவியின் நிகரற்ற சகிப்புத்தன்மையால் அவளே இறுதியில் வெற்றி பெறுகிறாள்’ என்று காந்தி கூறியிருக்கிறார்

1915-ல் பாரதம் திரும்பியது காந்தி குடும்பம். அதன் பிறகு இந்திய விடுதலைப் போரில் களமிறங்கினார் காந்தி. அவருக்கு உற்ற துணையாக கஸ்தூர்பா காந்தி விளங்கினார்.

இரண்டாம் உலக யுத்தத்தில் ஜப்பான் நுழைந்து  தென் ஆசியாவில் ஒரு பெரும் அபாயம் (threat) ஏற்பட்ட போது பிரிட்டன் இந்திய மக்கள் தலைவர்களை கேட்காமல் இந்திய ராணுவத்தை யுத்தத்தில் ஈடுபடுத்தியது. உடனடியாக இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்காவிட்டால் காந்தியின் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் துவக்கப்படும் என அறிவிக்கப்படது. இது பற்றி முடிவெடுக்க ஏ.ஐ.சி.சி. பம்பாயில் கூடிய போது, பொதுக் கூட்டத்தில் பேசிய காந்தி,’..ஒரு சிறிய மந்திரத்தை உங்களுக்கு நான் அளிக்கிறேன்..'Do or die’ செயலில் இறங்குவோம் அல்லது சாவோம்’ என்றார். மறுநாள் காலை காந்தி கைதானார்.  அன்று மாலை காந்தி சிவாஜி பூங்காவில் உறையாற்றுவதாக இருந்ததால் பூங்காவில் மக்கள் நிரம்பி வழிந்தனர். அவருக்கு பதிலாக யார் பேசுவது என்று தெரியாத, ஒருவரும் எதிர்பாராத நிலையில்,  ‘கஸ்தூர்பா சன்னமான அதே சமயம் உறுதியான குரலில்,   ‘யாரும் மனம் தளர வேண்டாம். நான் பேசுகிறேன் என்றார்.’  அக்குழுவில் அதிர்ச்சி யான நிசப்தம் நிலவியது. அவர் பொதுக்கூட்டத்தில் பேசி யாரும் கேட்டதில்லை. அவர் எப்போதும் காந்தியின் மனைவி என்ற எந்த ஆரவாரமும் இல்லாமல் பலதரப்பட்ட பணிகளை அமைதியாக செய்துகொண்டிருந்தவர். அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியும் ஆழ்ந்த கவலையும் ஏற்பட்டது.

'இது மிகவும் அபாயகரமானது. உங்களால் இன்னொரு சிறை வாசத்தை தாங்க முடியாது’ என்றெல்லாம் வற்புறுத்தியும், கஸ்தூர்பா, சுத்த அபத்தம். நம்  தேசமே சிறையில் அடைக்கப்படும்போது நான் மட்டும் வெளியே உட்கார்ந்திருப்பேன் என எதிர்பார்க்கிறீர்களா? என தன் நிலைபாட்டை  நியாயப்படுத்தி விட்டார். அப்போதுதான் நீண்ட காய்ச்சலிலிருந்து தேறி, காந்தியுடன் பம்பாய் வந்திருந்த கஸ்தூர்பா அவருடைய வெற்றிடத்தை நிரப்ப தன்னால் ஆனதை செய்யத் துவங்கினார். மக்களுக்கான தனது செய்தியை மிகச் சுருக்கமாக சொல்லி சுசீலா நய்யாரை எழுத வைத்தார்.

மறுநாள் கூட்டத்திற்கு கிளம்பிய கஸ்தூர்பாவிடம் ‘செய் அல்லது செத்து மடி’ என்றெழுதிய அட்டையை அணிந்து கொள்ள அளித்த போது ‘இம்மந்திரம் என் நெஞ்சில்  பொறிக்கப்பட்டுள்ள போது இதை நினைவுறுத்த எனக்கு ஒரு காகிதம் தேவையா?’ என்று கேட்டாராம் அவர். வண்டியில் ஏறும்போது ஒரு இந்திய போலிஸ் அதிகாரி ‘அம்மா தயவு செய்து நீங்கள் கூட்டத்திற்குப் போக வேண்டாம். உங்களை கைது செய்யப் போகிறீர்கள்’ என தன்னுடைய காக்கி உடுப்பின் நியதிகளை மீறி அவரை வேண்டிக் கொண்டபோதும் ‘தங்கள் மகன்களும் மகள்களும் பிரிடிஷ் அரசால் துன்புறுத்தப்படும்போது எந்தத்தாயால் வீட்டில் இருக்க முடியும்? என்று கேட்டு  மோட்டர் வண்டியை நோக்கி ஒரு போர் வீரரை போல் நடந்ததாராம்.  சிவாஜி பூங்காவில் காந்தியின் உரையைக் கேட்க மக்கள் நிரம்பி வழிந்தனர். ஆனாலும் காந்தி அங்கு உரையாற்றமாட்டார் என்பதைக் கேட்டு அவர்கள் இடிந்து போய்விடவில்லை.  யாரும் சிறிதும் எதிர்பாராமல் கஸ்தூர்பா ஆற்றிய இரு நிமிட மிகச் சுருக்கமான உரை அமோகமான வரவேற்பை பெற்றதாக அருண் காந்தி எழுதியுள்ளார்.

வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது (1942) கைது செய்யப்பட காந்தியுடன் கஸ்தூர்பா காந்தியும் கைதானார். இருவரும் பூனாவிலுள்ள ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டனர். 1944-ல் சிறையில் இருக்கும் போதே மரணம் அடைந்தார் கஸ்தூர்பா காந்தி. அவரின் கடைசி விருப்பங்களில் ஒன்று, தன் உடல் தகனம் செய்யப்படும் போது, தன் கணவரால் நூற்கப்பட்ட நூலினைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சேலையை அணிந்திருக்க வேண்டும் என்பதாகும். அதன்படி அந்தச் சேலை கஸ்தூர்பாவிற்கு அணிவிக்கப்பட்டது.

கஸ்தூர்பா குறித்து:

காந்தி:

‘ஹரிஜன்’ என்ற தனது பத்திரிக்கையில் 1938-ம் ஆண்டு டிசம்பரில் எழுதியுள்ள கட்டுரையில், எனது எண்ணத்திற்கேற்ப எனது மனைவியை கொண்டு வர முயன்றபொழுது, அகிம்சை பற்றிய பாடத்தினை மனைவியிடம் இருந்து கற்று கொண்டேன்’ என்று கூறியுள்ளார்.

லார்ட் அட்டென்பரோ:

மகாத்மாவின் மனைவி கஸ்தூர்பா ஓர் அசாதாரணமான பெண்மணி. எதையும் மன்னிக்கும் குணம் உடையவர், மிக தைரியமானவர். நம்ப முடியாத அளவுக்கு விசுவாச குணமுடையவர். காந்தியின் மிக விசுவாசமுடைய சிஷ்யை மட்டும் அல்ல; அவரை கூர்மையாக விமர்சிக்கும் செல்வாக்குடைய விமர்சகரும் கூட. கஸ்தூர்பா வரலாற்றில் ஒரு அடிக்குறிப்பு மட்டுமல்ல.

காந்தியின் செயலாளர் மஹாதேவ தேசாய்:

சொர்க்கத்தில் உள்ள மகான்களோடு வாழ்வது பேரின்பமும் மகிமையும் ஆகும். ஆனால் இப்புவியில் ஒரு மகானோடு வாழ்வதோ? அது வேறு ஒரு விஷயமாகும்!

இசைக்கலாம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com