திங்கள்கிழமை 12 நவம்பர் 2018

11. டெங்கு காய்ச்சல் 2 - ‘ஏடிஸ்’ கொசு புராணம்!

By பேரா. டாக்டர் முத்துச் செல்லக் குமார்| Published: 11th July 2018 12:00 AM

 

பிற கொசுக்களைப்போல், ஏடிஸ் வகைக் கொசுக்களும் பூச்சியினத்தைச் சேர்ந்தவைதான். இந்தக் கொசுவை ஜெர்மனியைச் சேர்ந்த பூச்சியின ஆராய்ச்சியாளர் ஜோகனன் கண்டறிந்து விளக்கினார்.

இந்த ஏடிஸ் வகைக் கொசுக்கள் கருப்பு நிறமாக இருப்பதுடன், அவற்றின் உடலிலும், கால் பகுதியிலும் வெள்ளை நிறத்தில் கோடுகள் இருக்கும்.

இவை மனிதர்களைப் பகலில் கடிக்கும் குணம் கொண்டவை. குறிப்பாக, அதிகாலை நேரத்திலும், மாலை நேரத்திலும்தான் அதிக அளவில் மனிதர்களைக் கடிக்கின்றன. பிற கொசுக்களைப்போலவே, இவ்வகைக் கொசுக்களிலும் பெண் இனக் கொசுக்களே மனிதர்களைக் கடிக்கின்றன.

இந்தக் கொசுக்கள், சுத்தமான தூய நீரில்தான் முட்டையிடும். மிகச் சிறிய நீர் அளவே, இவை முட்டையிடப் போதுமானது. நாம் பயன்படுத்தி கொட்டிவிடும் சிறிய பிளாஸ்டிக் டம்ளரில் நீர் இருந்தால்கூட அதில் முட்டை இட்டுவிடும்.

சிமெண்ட் தொட்டிகள், தண்ணீர்த் தொட்டிகள், ஆட்டு உரல், பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், திறந்தவெளிக் கிணறு, டயர்கள், வாளி, தேங்காய் ஓடு, ஏசி பெட்டியில் தேங்கும் நீர் என இவை முட்டையிட்டுப் பெருகும் இடங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் போகின்றன. சிறிதளவு நீர் தங்கினால்/தேங்கினால் போதும். அங்கு இந்தக் கொசுக்கள் முட்டையிட்டுவிடும்.

ஆனால், இவை எப்போதும் சுத்தமான நீரில் மட்டுமே முட்டியிடும் என்று சொல்ல முடியாது. சமீபத்திய ஆராய்ச்சிகளின்படி, இவை கழிவுநீரில்கூட முட்டையிடக்கூடியவை. குறிப்பாக, திறந்த நிலையில் உள்ள கழிவு நீர்த்தொட்டி (செப்டிக் டேங்க்), அதில் இருந்து இருந்து வெளியேறும் கழிவு நீரிலும், வீட்டைச் சுற்றி தேங்கும் கழிவு நீரிலும் இந்தக் கொசு முட்டையிடும்.

ஏடீஸ் என்ற பெயர் கிரேக்க மொழியில் இருந்து வந்தது. இதற்கு உற்சாகமின்மை என்று பொருள். ஏடிஸ் வகைக் கொசுக்களில் பல வகைகள் இருக்கின்றன.

ஏடிஸ் வகைக் கொசுக்களில் மிக முக்கியமானது ஏடிஸ் இஜிப்டை (Aedes aegypti). இது. ஆப்பிரிக்கக் கண்டத்தில் உருவாகி, இன்று உலகம் முழுவதும் பரவிவிட்டது. அடுத்தது, ஏடிஸ் ஆல்போபிக்டஸ் (Aedes albopictus). இவ்வகைக் கொசுக்கள் ஆசியாவில் உருவானவை. இவை தவிர, ஏடிஸ் பாலிநெசியன்ஸிஸ் என்ற வகையும், ஏடிஸ் நீவியஸ் என்ற வகையும் இருக்கின்றன.

இதில், ஏடிஸ் இஜிப்டை வகைக் கொசுக்களின் ஆயுள்காலம் 30 நாள்கள். ஆல்போபிக்டஸ் வகைக் கொசுக்கள் 55 முதல் 60 நாள்கள் வரை உயிர் வாழும். ஆனால், தற்போது அவற்றின் ஆயுள் சற்று அதிகரித்திருப்பதுடன், அவை பல்வேறு தட்பவெட்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் பண்புகளால், டெங்கு காய்ச்சல் பரவுதல் அதிகரித்துள்ளது. இவை, சுமார் 400 மீட்டர் சுற்றளவு வரைக்கும் பறந்து சென்று நோயைப் பரப்பும் தன்மை கொண்டவை.

மனிதர்களைப் பெண் கொசுக்கள் கடித்து ரத்தத்தை உறிஞ்சுவதற்கு முக்கியக் காரணமே, முட்டையிடுவதற்குத் தேவையான சக்தியையும் ஊட்டத்தையும் பெறுவதற்குத்தான். இந்தக் காரணங்களால், மனிதர்களை ஆண் கொசுக்கள் கடிப்பதில்லை. அவை, தாவரச் சாறுகளை உறிஞ்சி வாழ்கின்றன. இதனால், பெண் கொசுக்களைவிட ஆண் கொசுக்கள் உருவில் சிறியவையாக இருக்கின்றன.

ஆண் கொசுவுடன் பெண் கொசு உறவு கொண்ட மூன்றாவது நாளில் சுமார் 100 முட்டைகள் இடும். இறப்பதற்கு முன் இதுபோல் மூன்று முறை முட்டையிடும். ஆக, ஒரு கொசு உயிருடன் இருந்தால் அதன்மூலம் குறைந்தது 300 கொசுக்கள் உண்டாகிவிடும்.

நான் ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால், ஒரு கொசு இடும் முட்டையில் இருக்கும் தண்ணீர் வற்றி உலர்ந்துபோனால்கூட, பல மாதங்கள் வரை அது அழியாமல் இருக்கும். அதுபோலவே, மிகவும் குளிர் நிறைந்த ஐரோப்பிய நாடுகளிலும் இந்தக் கொசு முட்டைகள் வளர்ச்சியை சுருக்கிக் கொள்ளும் தன்மை கொண்டவை. மீண்டும் கொஞ்சம் தண்ணீர் கிடைத்தால்போதும், முட்டைகள் லார்வா நிலையை அடைந்து விரைவில் கொசுவாக உருமாறிவிடும்.

முட்டையில் இருந்து லார்வா உருவாக ஓரிரு நாள்கள் ஆகும். இந்த லார்வா தண்ணீரில் நீந்தி உயிர் வாழும். சுமார் 5 மி.மீ. அளவே உள்ள இது, தண்ணீரில் இருக்கும் நுண்ணிய பொருள்களை உண்டு வாழும். ஐந்து நாட்களுக்குப் பிறகு இது பியூப்பா என்ற நிலையை அடையும். இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குப் பிறகு முழு வளர்ச்சி அடைந்த கொசுவாக வெளியேறும். இவ்வாறு, முட்டையிலிருந்து கொசுவாக மாறுவதற்கு 8 முதல் 10 நாள்கள் வரை ஆகலாம்.

டெங்கு காய்ச்சலுக்கு முக்கியக் காரணமாக இருக்கும் ஏடிஸ் வகைக் கொசுக்கள் ஆப்பிரிக்கா, ஆசியா, வடகிழக்கு ஆஸ்திரேலியா, மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகள், வட அமெரிக்காவில் சில பகுதிகளில் பரவியுள்ளன. இந்தப் பூமிப் பந்தில், வடதுருவப் பகுதியில்தான் இதன் பாதிப்பு குறைவாக உள்ளது. மக்கள் தொகைப் பெருக்கம், சுகாதாரச் சீர்கேடுகள் போன்றவற்றால், ஏடிஸ் வகைக் கொசுக்களின் பெருக்கமும் அதிகரித்து, நோய்ப் பாதிப்பு ஏற்படுகிறது.

ஏடிஸ் வகைக் கொசு, எண்ணற்ற வைரஸ்களை ஒரு பெரிய பட்டியலாகத் தயாரித்து வைத்துக்கொண்டு தொடர்ந்து பரப்பி வருகிறது. அவை பற்றி அடுத்து விரிவாகப் பார்க்கலாம். அதற்கு முன் டெங்கு பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளலாம்.

ஒரு கொசுறு செய்தி

கொசுக்களில் இருந்து பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவதால், கொசுக்களின் ஒழிப்புப் பணிக்காக சுமார் ரூ.13 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. பல்வேறு வகையான காய்ச்சல்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ‘ஒருங்கிணைந்த காய்ச்சல் கண்காணிப்பு சிகிச்சை மற்றும் தடுப்புத் திட்டம்’ என்ற ஒரு திட்டத்தை தமிழக அரசு சுமார் ரூ.5 கோடி செலவில் திருப்பூரில் செயல்படுத்த உள்ளது.

(தொடரும்)

Tags : ஏடிஸ் கொசுக்கள் டெங்கு காய்ச்சல் முட்டை லார்வா aedes mosquito dengue fever

More from the section

மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever)
16. சிக்குன்குனியா காய்ச்சல்
15. டெங்கு காய்ச்சல் 6 - டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகள் - சிகிச்சைகள்
14. டெங்கு காய்ச்சல் 5 - டெங்கு காய்ச்சலால் ஏற்படும் பிற பாதிப்புகள்
13. டெங்கு காய்ச்சல் 4 - ரத்தக்கசிவும் தட்டணுக்களும்!