10. கைகளை  நம்பி

வாழ்க்கையும் நம்பிக்கையும் ஒன்று என்பதை ஒரே வார்த்தைக்குள் உணர்த்தும் நுட்பத்தைக் கொண்ட திட்பமொழி
10. கைகளை  நம்பி

உண்மை பொய் எல்லாம் தேவையில்லை. நம்பிக்கைதான் நமக்குத் தேவை. நம்பிக்கை இருந்தால் கடவுள் உண்டு. நம்பிக்கை இல்லை என்றால் கடவுளே இல்லை என்பதுவரை சென்ற வாரம் சிந்தித்தோம். 

நம்பிக்கை என்ற வார்த்தை தனித்திருப்பது போலத் தோன்றும். ஆனால் அது ஒரு கூட்டு வார்த்தை. ‘நம்’ என்பது இரண்டைக் குறிப்பது. நமது உடலையும் உள்ளத்தையும் குறிக்கும் வார்த்தை. அது மட்டுமல்ல, ஆன்மாவையும் பரமாத்மாவையும் குறிக்கும். 

இரண்டு பேரைச் சேர்த்து ‘நம்’ என்றாகும். இரண்டுக்கும் மேற்பட்டவர்களைச் சேர்த்து ‘நாம்’ என்றாகிவிடும்.

‘நாம்’ என்பது  ‘நமதா’கி பிறகு உலகையே ஆளும்!

தனி மனிதர்களின் நம்பிக்கைகளின் கூட்டு முயற்சியால்தான் இந்த உலகம் சமைக்கப்பட்டிருக்கிறது. 

உலக வளர்ச்சியில் எத்தனை பேரது நம்பிக்கைகள் மறைந்து கிடக்கிறது என்று எண்ணிப் பார்த்திருப்போமோ? அவற்றை எல்லாம் எண்ணி முடியுமா?

நட்சத்திரங்கள் போன்று கணக்கற்றவை அவை.

உணவில்லாமல் பற்பல நாட்கள் இருக்கலாம். 
நீர் இல்லாமல் பல நாட்கள் இருக்கலாம்.  
ஆனால் காற்றில்லாமல் ஓரு நிமிடம்கூட இருக்க முடியாது. 

காற்றுத்தான் உயிர். உயிர்தான் காற்று. உயிர்தான் கடவுள். கடவுள்தான் உயிர்.

‘வசி’ என்றால் காற்று என்று பொருள். அந்தக் காற்றாக இருப்பது சிவம்.  

‘வசி வசி’ என்று சொல்லிக் கொண்டே வந்தால் ‘சிவ சிவ’ என்று பொருள்படும்.

‘சிவ’ என்றால் கடவுள் என்று பொருள்.  அந்தக் கடவுளாக இருப்பது காற்று. ‘

சிவ சிவ’ என்று சொல்லிக்கோண்டே வந்தால் ‘வசி வசி’ என்று பொருள்படும்.

எனவே காற்றும் கடவுளும் ஒன்றே. 

அதாவது காற்று, உயிர், கடவுள் எல்லாம் ஒன்றே!

‘கடவுள் இல்லை’ என்பவர்கள் காற்றை எதற்குச் சுவாசிக்க வேண்டும்? கடவுளே இல்லை என்று சொல்லிவிட்டு மூக்கைப் பொத்திக் கொண்டு இருந்து பார்க்கட்டுமே!

காற்று இல்லாமல் உயிர் வாழவே முடியாது.

அதுபோலத்தான் நம்பிக்கை இல்லாமலும் உயிர் வாழ முடியாது!

‘நம்பிக்கை.. நம்பிக்கை.. நம்பிக்கை.. ‘என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே வாருங்கள்.

‘கைநம்பி.. கைநம்பி.. கைநம்பி.. கை நம்பி..’என்று பொருள்படும். (சிவ சிவ என்பது வசி வசி என்று பொருள்பட்டது போல)

‘கைநம்பி’  என்ற சொல்லைக் கூர்ந்து கவனித்தால், ‘கைகளை நம்பி’ என்ற பொருள்படும்.

கைகளின் நம்பிக்கையால் உருவானதுதான் இந்த உலகு. 

‘தன் கையே தனக்கு உதவி’ என்ற ஒற்றை வரிப் பழமொழி ஒன்றே போதும் கைகளின் அருமையை உணர்த்த!
 
கால்கள் இல்லாவிட்டாலும் கைகளைக் கொண்டு உட்கார்ந்த இடத்திலிருந்தே பிழைத்துக்கொள்ள முடியும்.

கைகள் இல்லாவிட்டால்?

எங்கு போனாலும் எதுவும் செய்ய முடியாது.

பறவை மிருகங்கள் பசியாறக் கைகள் தேவையில்லை. மனிதன் பசியாறக் கைகள் வேண்டும் 

பறவை மிருகங்கள் கூடிக் களித்து இனவிருத்தி செய்யவும் கைகள் தேவை இல்லை

கைகள் இல்லாவிட்டால் மனிதனுக்கு உடற்சேர்க்கையும் இல்லை. 

அன்பைக் காட்ட, அரவணைத்து ஆலிங்கனம் புரிய கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் கட்டில் சுகம் தரக் கைகள் வேண்டும்.

ஆண்மைக் குறைவும் பெண்மைக் குறையும் மனம் சார்ந்தவை, மாற்றிக் கொள்ள முடியும்.  

ஆனால் கைகள் இல்லாவிட்டால் ஆணும் இல்லை. பெண்ணும் இல்லை. 

கலை நயமான படைப்புக்களைப் பார்த்தால் பசி தீரும்.

அதுபோலப் பார்த்து விட்டால் மட்டும் பசியாறாது வயிறும், உடலும்!

மனைவியோடும்/ கணவனோடும் வாழ்க்கை நடத்தக் கைகள் வேண்டும்.

பாடுபட்டுக் குடும்பத்தை நடத்தக் கைகள் வேண்டும்.

பிரசவித்த மனைவி பிள்ளைக்குப் பாலூட்டக் கைகள் வேண்டும்.

மாதா,பிதா, குரு,தெய்வத்தைக் கும்பிடத்தான் முதற்கண் கைகள் வேண்டும். 

பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கவும், மணமுடித்து வைக்கவும் கைகள் வேண்டும்.

இசைக்கருவிகளை  மீட்டவும், ஓவியம் தீட்டவும், காவியம் படைக்கவும், சிற்பங்களைச் செதுக்கவும், கோயில் கட்டிக் கும்பாபிஷேம் நடத்தவும், கோயிலைத் திறந்து மூடவும், திருவிழா நடத்தி வடத்தேர் இழுக்கவும் கைகள் வேண்டும்.

‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’

கோபுரம் கண்ணில் பட்டால் மட்டும் புண்ணியம் ஆகிவிடாது. தலைக்கு மேலே கைகளைத் தூக்கிச் சேர்த்து கூப்பியபடிக் கும்பிடு போடவேண்டும்! அப்போதுதான் புண்ணியம்!

அன்னதானம் செய்வதற்கு அவசியம் கைகள் வேண்டும். 
 
கையெழுத்துப் போடவும், போடத் தெரியாதபோது ‘கைநாட்டு’ப்போடவும் கைகள்தான் வேண்டும்.

படிக்கத் தெரியாத பாமரனுக்கும் அடையாள முத்திரை கைநாட்டு.

இறுதிக் காலத்ததில் அக்கடா என்று ஓய்ந்து போய் உட்காருவதற்கும் கைகள் வேண்டும். 

சோதனைகள் வரும்போதும் தன் கண்ணீரைத் தானே துடைத்துக்கொள்ளவும், மற்றவர்கள் கண்ணீரைத் துடைப்பதற்கும் கைகள்தான் வேண்டும்.

தப்புச் செய்துவிட்டேனே என்று தலையில் அடித்துக்கொள்வதற்கும்  குட்டிக் கொள்வதற்கும் கைககள்தான்  வேண்டும்.

மற்றவர்களுக்கு நல்லது செய்து புண்ணியம் பெறுவதற்கும் கைகள் வேண்டும்; தீமைகளைச் செய்து பாவங்களை சம்பாதிப்பதற்கும் கைகள்தான் வேண்டும்.

வாழ்க்கையில் எந்த ஒரு இழப்பு ஏற்பட்டாலும் கை ஒடிந்தது போலாகிவிட்டார் என்பார்கள்.

கணவனோ மனைவியோ இறந்துவிடும்போது கையொடிந்து போய்விட்டான்/போய்விட்டாள் என்பார்கள்.

உறவுகளைக் கட்டி அணைத்துக்கொள்ளக் கைகள் வேண்டும்.
பிரியும்போது மார்பில் அடித்துக் கொள்ளவும் கைகள் வேண்டும்.

விவசாயம் செய்ய, வியாபாரம் செய்ய, உற்பத்தி செய்ய ஆலைகளில் வேலை பார்க்க என்று பாடுபடக்கூடிய எந்த வேலைக்கும் கைகள் வேண்டும்.

குற்றவாளிகள் தப்பித்து ஓடவும், அவர்களைக் கண்டுபிடித்துக் கை விலங்கிடவும் கைகள் வேண்டும்.

கோர்ட்டில் வாதாடவும், தீர்ப்புகளை எழுதவும் கைகள் வேண்டும்.

சிறைக்குள் போய்க் கம்பி எண்ணவும், கடுங்காவல் தண்டனை என்றால் கல் மண் சுமக்கவும் கைகள்தான் வேண்டும்.

ஒருநாள் விடுதலையாகித் திருந்திவிட்டேன் என்று கையெழுத்துப் போடும் போதும் கை வேண்டும். 

போதுமடா சாமி என்று சிறையைப் பார்த்துக் கும்பிடு போடுவதற்கும், புது வாழ்வைத் தேடி புற உலகைக் கும்பிடுவதற்கும் கைகள் வேண்டும்.

விழும்போது தாங்கிக் கொள்ளவும், எழும்போது ஊன்றிக் கொள்ளவும் கைகள் வேண்டும்.

மனமுறிவு ஏற்படும்போது மனசு விடாதீர்கள். நம்பிக்கை வையுங்கள் என்று கைகளால் தடவிக்கொடுக்க கைகள் வேண்டும். 

நோய்களுக்கு மருந்துண்ணக் கைகள் வேண்டும்.

மரணத் தருவாய் வரை மருத்துவர்கள் கைகளைக் கொண்டுதான் நம்பிக்கையோடு போராடுகிறார்கள்.

முடியாத பட்சத்தில் கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள் என்று கை விரிக்கவும் கைகள்தான் வேண்டும்.

கடவுள் காப்பாற்றுவான் என்று கைதொழுதுகொண்டே நோய்களைக் குணப்படுத்திக்கொள்ளவும் கைகள் வேண்டும். 

ஆடி ஓடித் திரிந்து ஆட்டம் பாட்டம் போட்டு முதுமையில் தள்ளாடிக் கோலூன்றி நடக்கவும் கைகள் வேண்டும்.

கடைசிக் காலத்தில் கடவுளே கதி என்று சரணாகதியாவதற்கும் கைகள் வேண்டும். 

கைகளில் தொடங்கி கைகளில் முடிவதால்தான் மனித சரித்திரத்திற்கு ‘வாழ்க்...கை’ என்ற பெயர் வந்தது. 

வாழ்க்கை என்ற ஒற்றைச் சொல்லுக்குள் ‘நம்பிக்கை என்ற சொல்லும் இருப்பதைக் கவனியுங்கள். வாழ்வாங்கு வாழக் கைகள் அவசியம்’ என்பதையும் கவனியுங்கள். 

வாழ்க்கையும் நம்பிக்கையும் ஒன்று என்பதை ஒரே வார்த்தைக்குள் உணர்த்தும் நுட்பத்தைக் கொண்ட திட்பமொழி  என்பதால்தான் தலைசிறந்த மொழி என்று நம் தமிழ் போற்றப்படுகிறது!

நம்பிக்கைதான் வாழ்க்கை. நம்பிக்கை இல்லை என்றால் கைகளும் இல்லை; வாழ்க்கையும் இல்லை. அவன் மனிதனும் இல்லை.

கைகள் இருப்பதால்தான் குருங்கு கிளை விட்டுக் கிளையும், மரம் விட்டு மரமும் தாவிக்கொண்டே இருக்கிறது.

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன். அவனும் குரங்கைப்போலவேக் கைகளால்தான் முன்னேறி வந்திருக்கிறான். 

மனித நாகரீகத்தின்  மூலக் கூறு அவனது கைகளில் இருந்து புறப்படுகிறது. 

ஆதிமனிதன் கைகளால்தான்  உணவைத் தேடி உட்கொண்டான்.

காட்டு மரங்கள் உரசிக்கொண்டு பற்றி எரிந்தபோதுதான் நெருப்பின் தேவைகளை உணர்ந்தான். காட்டுத் தீயைக் கைகளினால் உண்டாக்க வழி தேடினான்.  அவனது தேடுதல் ஆசையா அல்லது தேவையா? 

அது அவனது தேவை!

அதுதான் நம்பிக்கை. நம்பிக்கை எப்போதுமே தேவைகளோடுதான் சேர்ந்திருக்கும். நீரோடு மீன்கள் வாழ்வது போல.

நம்பிக்கை என்பது தேவைகளின் கனவு. அது ஒரு ஆக்கபூர்வமான நினைவு. நினைப்பதெல்லாம் நடப்பது போன்றதொரு பிரம்மைதான் நம்பிக்கை. அது ஒரு தூண்டுதல். அது ஒரு ஈர்ப்பு.

நெருப்பை உபயோகித்தபோதுதான் அவனிடம்  நாகரீகம் தோன்றியது என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். 

கைகளினால் நெருப்பை உண்டாக்கியது அவனது தேவைகளுக்காக! ஆசைகளுக்காக அல்ல! 

அங்குதான் அவனது நம்பிக்கையும் தோன்றியது!

நம்பிக்கை என்ற நெருப்பிலிருந்தான் நெறிமுறைகள் கொண்ட  மனிதன் தோன்றினான்.

நெருப்பை உண்டாக்கிய ஆதிமனிதன்தான் அத்தனை விஞ்ஞான வளர்ச்சிகளுக்கும் மூல மனிதன்!

அவனது அத்தனைக் கண்டுபிடிப்புகளும் அவனுக்குள் இருந்த கற்பனைகள்தான். 

அதாவது அவன் கண்ட கனவுகள்தான் அவனது தேவைகள்.

தேவைகளுக்காகத்தான் அன்றைய மனிதன் கனவு கண்டான்.

தேவைகள்தான் கனவுகளைத் தோற்றுவித்தன. நம்தேவைகள் அனைத்தையும் தேக்கி வைத்துள்ள கோளம்தான் இந்த பூமி.

இந்தப் பூமி ஒரு கண்ணாடி போன்றது.

நாம் சிரித்தால் அதுவும் சிரிக்கும். 
நாம் அழுதால் அதுவும் அழுகும்.

நம்பிக்கை-

நம் தேவைகளைக்  கேட்டால்  கொடுத்து அருளும்.

ஆசைகளைக் கேட்டாலும் கொடுத்துவிடும். பின்னர் அதைக்கொண்டே அழித்துவிடும்.
 
மனிதனது தேவைகள் அனைத்தையும்  தனக்குள்ளே வைத்திருந்து அவன் கேட்கும்போதெல்லாம் பிரசவித்த வண்ணமிருக்கிறது பூமி. 

தேவைகளின் மீது கொள்ளும் ஆர்வமே ஆவல்.

ஆவல் வேறு, ஆசை வேறு.

ஆவல் நம்பிக்கையைத் தோற்றுவித்து ஆக்கபூர்வமாகச் செயல்பட வைக்கும்.

ஆசையோ பேராசைகளைத் தோற்றுவித்து அழிவுப் பாதையில் கொண்டுபோய்த் 
தள்ளிவிடும். 

எனவே ஆசைக்காக எந்த மனிதனும் கனவு கண்டதில்லை, நன்கு புரிந்துகொள்ளுங்கள். 

தேவைகளுக்காகத்தான்  கனவு கண்டான். அந்தக் கனவுகளை அடையத்தான் காலங்காலமாகக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டான். 

முயற்சி திருவினையாக்கும். 

முயற்சிகளும் உழைப்புமே அவனது கனவுகளை  நனவாக்கி அவனைக் களிப்படைய வைத்திருக்கின்றன! 

அன்றைய மனிதன் கடுமையாகப் போராடிக் கண்டு பிடித்த வெற்றிப் படைப்புக்களில்தான் இன்றைய மனிதன் ‘கால்மேல் கால்போட்டு’க்கொண்டு அமர்ந்திருக்கிறான். 

தேவைகளுக்காகக் கனவு கண்டவன்தான்  ஆக்கபூர்வமாக வாழ்ந்து அடையாளமாக நிற்கிறான்.  

ஆசைகளுக்காகக் கனவு காண்டவன், அடைந்து இன்புற்று சுவடு தெரியாமல் அழிந்து போயிருக்கிறான்! 

எனவே, நம்பிக்கை என்ற சொல்லுக்குத் ‘தேவைகளின் கற்பனை’ என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். 

இப்போது அவரவரிடம் உள்ள ஆசைகளை எல்லாம் ஒரு கணம் ‘ஸ்கேன்’ செய்து பாருங்கள்... எல்லாமே அவரவர் தேவைகளைத்தான் சுட்டிக் காட்டும். 

தேவைகளில் நன்மை மட்டும்தான் இருக்கும். எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தீமை இருக்காது. காரணம் அது உயிரின் தேவை. உயிர்த் தேவைகள் யாவும் நமக்காக நம்மோடு வாழும் இறைவனின் தேவைகள். 

அதனால் அவை ஆசைகளுக்குப் புறம்பானவை. அதாவது இறைவனுக்குப் புறம்பானவை. 

எது தேவையோ அது நல்லதாக அமையும்.

எது தேவையில்லையோ அது கெட்டதாக மாறிவிடும். 

எது ஆசையோ அது கெட்டதாக அமையும்.

எது ஆசையின்மையோ அது நல்லதாக மாறிவிடும்.

காரணம்-
 
தேவை ஆசையாகும்போது பேராசையாகிவிடும்!

பேராசைகள் யாவும் தீமையாகிவிடும்!

அதனால்தான்  ஆசைகளே கூடாது என்றனர் நம் முன்னோர்கள்.
 
ஆய கலைகள் அறுபத்து நான்கிலிருந்து விஞ்ஞானத்தின் வெளிப்பாடுகள் வரை அனைத்துமே தனிமனிதனின் நம்பிக்கை வெளிப்பாடுகளே! 

‘ஆசையே கூடாது’ என்றார் கெளதம புத்தர். புத்தர் மட்டுமல்ல, திருமூலர் திருவள்ளுவர் உள்ளிட்ட நம் ஞானிகள் அனைவருமே அதைத்தான் சொன்னார்கள். 

ஆனால், அவர்களில் ஒருவர்கூட ‘பசியே கூடாது’ என்று சொல்லவில்லையே அது ஏன்? 

பசியைத் தவிர்க்க முடியாது. பசி எழும்போது பத்தும் பறந்து போகும். பசியின் போது உணவின் மீது ஏற்படும் ஈடுபாடு கூடாது என்றால் ஆசையும் கூடாது என்றாகிவிடுமே.

அவர்கள் சொன்னதை உற்று நோக்க வேண்டும்.

ஆசைகள் கூடாது என்றார்கள். ஆனால் தேவைகள் வேண்டுமென்றார்கள். தேவைகளை மனிதன் அடைந்து இன்புற வேண்டும் என்ற நோக்கில்தான் ஆசைகளைக் கூடாது என்றார்கள். 

‘வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய் நீ’

என்ற மாணிக்கவாசகரின் பாடல் வரிகளை விடத் தேவைகளின் அவசியத்தைச் சொல்லும்  தத்துவ நூல்கள் ஏதுமில்லை.

உங்களுக்கு எது தேவையோ அதன் மீது ஆசைப்படலாம். தப்பில்லை. 

‘ஆசையே வேண்டாம்’ என்ற ஞானிகள் இறைவனை எண்ணியே தவம் கிடந்தார்களே, அது அவர்களின் தேவையா? ஆசையா? 

தேவை!

அந்தத் தேடுதலின்  மூலத்தில் போய் நின்றுகொண்டுப் பார்த்தால்தான் அது எத்தனைப் பெரிய தேவை என்ற உண்மை புரியும். அவர்கள் நமக்கு வேண்டாம் என்று சொன்னது ஆசை என்ற பேராசைகளைப் பற்றித்தான் என்ற உண்மை அப்போது புரியும்!

ஆசை வேறு, பேராசை வேறு அல்ல!

அதைப் புரிந்து கொள்ளுங்கள். 

ஞானம் பெருகும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com