ஞானயோகம்

12 . கண்ணாமூச்சி விளையாட்டு

தி. இராசகோபாலன்

எழும்போது ஆகாது என்று எழக் கூடாது. அப்படிப்பட்ட அவநம்பிக்கையோடு எழுந்துவிட்டு ‘கடவுளுக்குக்  கருணையில்லை’ என்று சொல்லக் கூடாது. எல்லாம் கை கூடும்’ என்ற நம்பிக்கையோடு எழுந்து பாருங்களேன்!’ என்றேன் நண்பரிடம் சென்ற வாரம்.

ஆக்கல், காத்தல், மறைத்தல், அருளல், அழித்தல் என்ற ஐந்தொழில்களைப் புரிபவன் இறைவன். இதில் மறைத்தல் தொழில்தான் வாழ்க்கைக்கு அர்த்தத்தை அருளும் தொழில்.

எந்தக் கதையிலும் ஒரு உச்ச கட்டம் உண்டு.

சிறுகதையானாலும், பெருங்கதையானாலும், தொடர்கதையானாலும் அதில் கட்டாயம் ஒரு உச்சகட்டம் இருக்கும்.

உச்சகட்டம் இல்லை என்றால் அது கதையே இல்லை.

கதையில் மட்டுமல்ல, கட்டுரைகளிலும் கூட உச்சக் கட்டம் உண்டு!

சிற்றிலக்கியம் பேரிலக்கியம் என்று அத்தனை காவியங்களிலும் இந்த உச்ச கட்டங்கள் தவறாமல் உண்டு.

உச்சகட்டம் இல்லாவிட்டால் அது  படைப்பில்லை.

திரைப்படங்களுக்கு ஜீவனே இந்த உச்சகட்டம்தான்.

நான் சிறு வயதில் குடும்பத்தினருடன் திரைப்படத்திற்குப் போயிருக்கிறேன்.

கதை என்னவென்றே தெரியாத சின்ன வயசு. ஒரு வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருப்பேன். படத்தில் வரும் வண்டி வாகனங்கள், காடு மலைகள், கதாபாத்திரங்கள் அனைத்தும்  திரைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தேன்.

இறுதிக் காட்சி பெரிதும் ஈர்க்கும்  அளவுக்குப் பயங்கர விறுவிறுப்போடு போய்க் கொண்டிருக்கும்.

படம் முடியும் தருணத்தில் உச்சி விளக்கைப் போட்டதுமே  மக்கள் எழுந்து நின்று பார்ப்பார்கள்.

என்னாச்சு, ஏன் எழுந்து நிக்கறாங்கம்மா? என்று கேட்பேன்.

படம் முடிஞ்சு போச்சுடா என்பார்கள்.

படம் முடிந்துவிட்டது என்றால் மனம் உடைந்துவிடும்! விடிய விடியப் படம் ஓடினால் கூடப் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும் பால்யப் பருவம் அது; பகுத்தறிவு முளைவிடாத காலம் அது.

பாலகன் வளர்ந்து இளைஞனான பிறகு படம் பார்த்த அனுபவங்களோ வேறு.

படத்தின் முடிவு எப்படி இருக்குமோ என்று பலவாறும் மனது துருவிக் கொண்டேயிருக்கும்.

எதிர்பார்ப்புக்கு மாறாக முடிவைச் சொல்லியாக வேண்டும் என்பதுதான் திரைப்படங்களுக்குச் சவால்.

பொறுமை இழந்து குரல் கொடுப்பதும் பாதியோடு வெளிநடப்புச் செய்வதும் இன்றைக்கு அதிகரித்து வருகிறது.

இப்படியும் படங்களை எடுத்து இவர்களிடம் அவமானப்பட வேண்டுமா என்று புரஜக்டரோடு முட்டிக்கொண்டிருப்பார் ஆப்பரேட்டர்.

திரைப்படங்கள் வாழ்க்கையின் பிரதிபலிப்புகள்.

வாழ்க்கையிலும் உச்சக்கட்டம் உண்டு. அங்குதான் பிறப்பின் முடிச்சு அவிழ்க்கப்பட்டு வாழ்க்கையின் ரகசியம் அம்பலப்படும்.

அதற்குள்ளாக அவசரப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்து விடுவோரும் உண்டு!

இப்போது வரும் பெரும்பாலான படங்கள் ரசனை உணர்வுகளை ‘உண்டு இல்லை’என்று பண்ணி விடுவின்றன!

அந்தக் காலத்துப் படங்கள் அப்படிப்பட்டவையல்ல, சினிமா வரலாற்றின் சிகரங்கள் அவை!

கருத்தாழமிக்கக் கதை, வசனம், கண்ணுக்கினிய காட்சிகள், காதுக்கினிய பாடல்கள், சிந்திக்க வைக்கும் நகைச்சுவையோடு அறிவுரை சொல்லி உச்சகட்டத்தோடு படத்தை முடிப்பார்கள்.

எதிர்மறையான முடிவுகளைக்கூட நேர்மறையாக மாற்றிக் கதையை மங்களகரமாக முடிக்கும் தார்மீகப் பொறுப்பு அன்றைய இயக்குநர்களிடம் இருந்தது.

‘கருப்பு வெள்ளைப்’ படங்கள் காலத்தால் அழியாத காவியங்கள். அதனால் வெற்றியில் அவை ‘எவரஸ்ட்’டுக்கு இணையாக நிற்கின்றன!

அதன் பின்னர் வந்த வண்ணப்படங்கள் பல சிகரத்தின் அடிவாரத்தில் கூட நிற்கத் திராணியற்றுவிட்டன!

காரணம்-

அன்றைக்குத் தகுதியுள்ள திறமையாளர்கள் கலையுலகிற்குள் காலடி பதித்தார்கள்.

இன்றைக்கு ‘ஆர்வக் கோளாறுகள்’  ஆற்று வெள்ளமாக வந்து ஆட்கொண்டுவிட்டார்கள். 

திரைப்படம் போல வாழ்க்கையிலும் வரும் உச்சகட்டங்கள் நாளை என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

அந்த அச்சத்தைத்தான் ‘மறைத்தல்’ தொழிலில் மறைத்து வைத்தான் இறைவன்.

ஏன் மறைக்கிறான்?

மறைத்தலைத் தேடிக் கண்டடைதல்தான் வாழ்க்கை. அதனால்தான் அந்த  ‘மறைத்த’லை அன்றைக்கே விளையாட்டில் மறைத்து வைத்தார்கள் நம் முன்னோர்கள்.

மறைத்தல் மட்டும் இல்லாது போனால் வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடும்.

மறைத்தல் அத்தியாவசியமானது என்பதால்தான் அதைக் காலத்தோடு தொடர்புடைய பொழுதாக்கி இரவு என்று வைத்தான் இறைவன்.

இரவுப் பொழுது  உறங்குவதற்கு மட்டுமே என்று கருதினால் அது அறியாமை. உறங்குவதற்கு....'ம்’ உரிய பொழுது என்றுக் கருதுவதே அறிவுடைமை.

சிந்திக்காத பறவை விலங்கினங்கள் இரவு ஆனதுமே உறங்கிவிடும்.

சிந்திக்கத் தெரிந்த மனிதனோ இரவானாலும் உறங்குவதில்லை.

இரவெல்லாம் கூட உறங்குவது இல்லை.

இரவெல்லாம் உறங்காத பித்தர்கள் உண்டு.

இரவெல்லாம் உறங்காத சித்தர்களும் உண்டு.

அந்த இரவுக்குள் எத்தனை அச்சங்களும் புதிர்களும் அடங்கியிருக்கின்றன தெரியுமா?

அச்சத்திற்குரிய இரவில்தான் மனிதனின் இச்சைகள் அச்சமின்றிப் பூர்த்தியடைகின்றன என்ற உண்மையைத் தம்பதிகள் புரிந்துகொள்வார்கள்.

புது மணத் தம்பதிகளுக்கு ஏன் ‘முதல் இரவு’ என்று வைத்தார்கள்? ‘முதற்பகல்’ என்று வைத்திருக்கலாமே?

புதுமண மக்கள் பட்டப் பகலில் ஒன்று கூட முடியாது. சூரியன் சந்திரனை மேகம் சூழ்ந்திருப்பது போல மணமக்கள்  முகத்தை நாணம் மூடியிருக்கும். 

இரவுதான் அவர்களுக்கு நாணம் கலையும் நேரம். கார்மேகம் போன்ற கூந்தலும் கலையக் கூடிய நேரம்.

நீ யாரோ, நான் யாரோ என்று கூடும் மணமக்களை இரவுப் பொழுதுதான் இணைய வைத்து இறுகச் செய்துவிடுகிறது. ஈருடல் ஓருடலாகி  ‘உனக்கு நான்  எனக்கு நீ’  என்று ஒப்பந்தம் இட்டுக் கொண்டுதான் பிரிந்து விலகி விடியலை எதிர்கொள்வார்கள். முதல் இரவுதான் மணமக்களை ‘முதல் பகல்’ என்ற புதுவாழ்வுக்கு  அடித்தளமிடுகிறது.

ஆனால் அப்படிச் சேர்ந்தவர்களும்கூட ஒருநாள் பிரிந்துவிடுவார்கள்!

கணவனும் மனைவியும் குடுமிப் பிடிசண்டை போட்டுக் கொண்டு ஆளுக்கொரு திசைக்குப் புறப்படுவார்கள்.

ஊர்ப் பெரியவர்கள் ‘எல்லாம் நாளை பேசிக் கொள்ளலாம்’ என்று கூறி வீட்டுக்குள் அனுப்பிவைப்பார்கள்.

இரவில் அவர்கள் ‘எப்படியோ’ ஒன்று கூடி காலையில் சமாதானமாகியிருப்பார்கள்.

‘கள்ளம்’ இல்லாத காரணத்தால் சண்டையிட்டாலும் கூடிவிடுவார்கள் சிறுவர்கள்.

‘காமம்’ உள்ள காரணத்தால் சண்டையிட்டாலும் கூடிவிடுவார்கள் தம்பதிகள்.

மனிதநேயம் இரவில்தான் மலர்கிறது என்றால் மிகையாகாது.

இரவுப் பொழுது சூரிய ஒளி படாத உலகின் மறுபகுதி. அது சுழன்று கொண்டே இரு இருப்பதால் இருட்டு போய் கொண்டும் வெளிச்சம் வந்து கொண்டும் இருக்கிறது என்ற  உண்மை தெரிந்தால் எதற்காக பயம்  வரப் போகிறது?

விஞ்ஞானம் இந்த உண்மையைச் சொல்லி இரவுப் பயத்தை நீக்கியது.

ஆனால் இரவை அதனால் நீக்க முடியவில்லையே! வளர்ந்த மனினுக்குப் பூமியின் மறுபகுதி இருட்டு என்று புரிய வைக்கலாம். ஆனால் பிறந்து வளரும் குழந்தைக்குப் புரிய வைக்கமுடியுமா?

அது இருட்டைக் கண்டு பயப்படுவது இயற்கைதானே? அந்த இருட்டுப் பயம்தானே அதனை அன்னையின் அன்புக்குள் ஆழமாக நுழைத்துவிடுகிறது!

இருட்டைக் கண்டு அழும் குழந்தை பகல் வரும்போது முகம் மலர்ந்து சிரிக்கிறது.

இரவு வருகிறது கழிகிறது. இரவோடு சேர்ந்து நமது அச்சங்களும் கழிந்து விடுகின்றன.

சரி, உலகின் இருட்டைக் கண்டுபிடித்துப் புரிய வைத்த விஞ்ஞானம் மனதின் இருட்டைக் கண்டுபிடிக்க முடிந்ததா? மனதின் இருட்டை அகற்ற வழி சொல்லியிருக்கிறதா? இல்லையே! விஞ்ஞானத்திற்கு மன இருட்டைப் பற்றித் தெரியாது. அதனால்தான் இருட்டைக் கண்டு பயப்படுதற்கு ‘நிக்டோ ஃபோபியா’ என்று பெயரிட்டு அதை மன நோயாக்கிவிட்டது. 

இரவைக் கண்டு அஞ்சாதவன் மனிதனே அல்ல.

ஆனால் பகலை விட மனிதன் அதிகம் சிந்திப்பது இரவில்தான். காரணம் பயம்தான்  அதிலிருந்து மீளும் வழி தேடி மூளையைக் கசக்குகிறது.

இருட்டுத் துன்பத்திலிருந்து மீட்டு எடுக்கிறது. அப்போது துன்பம் எல்லாம் இன்பமாக மாறுகிறது.

இதை நம்ப முடியாதவர்கள் அல்வாவை நினைத்துக்கொள்ளலாம். இன்றைக்கு அந்த நெல்லை அல்வாச் சுவையின் மறைபொருள்  இருட்டுத்தானே. பகல் கடை அல்வாக்களுக்கு இல்லாதச் சிறப்பு அதற்கு இருக்கிறதே!

ஞானத்தின் மூலம் அஞ்ஞானம்தான்.

சிறுவர்கள் ‘கண்ணாமூச்சி’ ஆடும் விளையாட்டு தெரியுமா?

அது விளையாட்டு அல்ல. ஒரு வாழ்க்கைத் தத்துவம்!

தேடும் பிள்ளையும், மறைந்துள்ள பிள்ளைகளும் அச்சத்தோடு இருப்பார்கள். கண்டுபிடித்தவுடன் பயங்கரமாகச் சிரித்து விடுவார்கள். அத்தோடு அவர்களது பயங்கள் மறைந்துபோய்ச் சிரித்து மகிழ்ந்திருப்பார்கள்.

கண்ணா மூச்சி விளையாட்டில் கண்களை மூடிக்கொள்ளும் பொழுது பூமியே இருண்டுவிடுகிறது.

திறக்கும்போது விடிந்துவிடுகிறது!

பகலை இரவாக்கிக் கொண்டு தேடும் ஞான விளையாட்டு அது.

**

அந்த ‘அப்பார்ட்மெண்ட்டி’ல் இருந்த முதியவர் ஒருவர் மருத்துவப் பரிசோதனைக்குப் போயிருந்தார்.

குடும்ப டாக்டர் அந்த முதியவரிடம் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள் என்றார். அந்த முதியவரோ, என்னால் எழுந்து நிற்கவே முடியாதே. நடப்பது எப்படி சார்? என்று கேட்டார்.

நடக்க முயற்சி செய்யுங்கள் என்று சொல்லி அனுப்பினார் டாக்டர்.

சோகத்தோடு வீடு திரும்பினார் பெரியவர்.

மறுநாள்-

நடந்து நடந்து பார்த்தார் முடியவில்லை!

வீட்டுக்குள்ளேயே சாமி படத்துக்கு விளக்கேற்றித் தனது மனக்குறைகளை முறையிட்டார் முதியவர்.

தனது இருக்கையில் வந்து வேதனைக் குறிகளோடு உட்கார்ந்தார்.

அப்போது தனது பேரக் குழந்தைகள் தன் கண் எதிரே கண்ணாமூச்சி ஆடுவதைக் கண்ணுற்றார். சிரித்த முகத்தோடு அவர்களையே ரசித்தார்.

ஒரு பிள்ளையைத் தனது முதுகுக்குப் பின்னால் வந்து ஒளிந்து கொள்ளச் சொன்னார். கண்டுபிடிக்க வந்த பிள்ளையைத் தேட வைத்தார். தனக்குப் பின்னால் ஒளிந்திருந்த பிள்ளை கண்டுபிடித்தும் அவர்களோடு சேர்ந்து தானும் சிரித்து மகிழ்ந்தார். 

அதன் மூலமாகத் தனக்கும் உற்சாகம் கிடைப்பதை உணர்ந்தார்.

ஒருநாள் தனது பேரப் பிள்ளைகளிடம் தன்னைக் கண்டுபிடிக்குமாறு கூறிவிட்டு அவரே போய் ஒளிந்துகொள்ளத் தொடங்கினார். அந்த விளையாட்டில் கால் வலியை, உடல் சோர்வை மறந்தார். பிள்னளைகளோடு பிள்ளைகளாகிச் சிரித்து மகிழ்ந்தார்.

ஒரு மிட்டாயைத் தனக்குள் ஒளித்து வைத்துக்கொண்டு பிள்ளைகள் அதைக் கண்டுபிடிக்கும் போட்டியை வைத்தார். பிள்ளைகள் மிட்டாயைத் தேடும் முயற்சியில் தாத்தாவின் மேல் ஏறி இறங்கி விழுந்து புரண்டு விளையாண்டார்கள். அதிலேயே அவரது அவரது உடல் முழுவதும் இயற்கையாக ‘மஸாஜ்’ செய்யப்பட்டதை உணர்ந்தார். அதிலே ஒரு புத்துணர்ச்சியைக் கண்டார்.

‘குழல் இனிதுயாழ் இனிது என்பதம் மக்கள்

மழலைச் சொல்கேளா தவர்’

என்றார் வள்ளுவர்.

மழலைச் சொல் மட்டுமல்ல, மழலைகளோடு சேர்ந்து விளையாடுவதுகூட உடலுக்கும் உள்ளத்துக்கும் உற்சாகமளிக்கும்!

‘வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்’.

தினம்தோறும் இப்படிப் பேரப் பிள்ளைகளோடு விளையாட ஆரம்பித்தார்.

ஒரு திருமண வீட்டில் அந்த முதியவரைப் பார்த்த அவரது டாக்டர் ‘இப்படி இந்த அளவுக்கு இளையவர் போல மாறினீர்கள்? நான் சொன்னது போலவே தினமும் நடக்கிறீர்களோ? என்று கேட்டார்.

நிற்கவே முடியாதவனை அன்று நடக்கச் சொன்னீர்கள். இப்போதெல்லாம்  நான் தினமும் ஓடிக்கொண்டிருக்கிறேன் என்றார் முதியவர்.

‘ஒளிந்து கண்டுபிடிக்கும்’ விளையாட்டின் உட்பொருளைப் பாருங்கள்.

ஒளிவது பகலாயிருந்தாலும்-அது இருட்டு.

ஒளித்து வைப்பது பகலாயிருந்தாலும்-அது இருட்டு.

இதனை மாற்றிச் சிந்தியுங்கள்.

அஞ்சுவது இருட்டாயிருந்தாலும், தேடுவது-வெளிச்சம்.

தேடுவது இருட்டானாலும் அடைவது-பகல்.

சிந்திக்காமை அஞ்ஞானம்.

சிந்திப்பது விஞ்ஞானம்.

கண்டறிவது மெய்ஞானம்.

பகலில்  ஆகாயம் கண்ணுக்குத் தெரியும். ஆனால் ஞானம் தெரியாது.

இரவில் ஆகாயம் கண்ணுக்குத் தெரியாது. ஆனால் ஞானம் தெரியும்!

அச்சம் தரும் இருண்ட வானில் நம்பிக்கையளிக்கும் நிலவும், மேகங்களும், கண் சிமிட்டும் நட்சத்திரங்களும் நம் எண்ணங்களைக் கட்டவிழ்த்துவிட்டு உண்மையைத் தேடி ஓட வைக்கும்.

அந்தத் தேடுதலுக்கு விடையாகத்தான் கிழக்கு வானம் அதிகாலையில் வெளிரத் தொடங்குகிறது. 

இரவின் அச்சம் தேடுதலைத் தோற்றுவித்து அகத்தும் புறத்தும் ஒரு சேர விடியலை ஏற்படுத்துகிறது.

இரவில்தான் உலகம் விடிகிறது, ஆம்!

அஞ்ஞானத்தில்தான் ஞானம் பிறக்கிறது!

(ஞானம் பெருகும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT