ஞானயோகம்

8. வினைகளைச் சீவும் ஆயுதம்

தி. இராசகோபாலன்

சென்ற அத்தியாயத்தில் இதயத்தின் 'வருடலை' இதயத் தாக்குதல் என்று நோயாக்கிப்  பலியாகும் அறிவிலிகளைப் பற்றிப் பார்த்தோம்.

தோன்றுவது யாவுமே மறையும். பிறப்பது யாவுமே இறக்கும். நோய்கள் யாவுமே குணமாகும். இதுதான் மெய்ப்பொருள்.

நோய்கள் யாவுமே குணமாகுமா, அது எப்படி? என்றார் பிரேம்.

தோன்றுவது யாவுமே மறையும் போது நோய்கள் யாவுமே குணமாகாதா? பிறக்கப் போய்த்தானே துன்பப்படுகிறோம். பிறக்காமலே போய்விட்டால்?

அது முடியுமா?

ஏன் முடியாது, பிறப்பதே அதற்குத்தானே பிரேம்? இந்தப் பிறவி தோன்றுவதற்குக் காரணம் முற்பிறவி அல்லவா. இனி ஒரு பிறவி வேண்டாம் என்று இந்தப் பிறவியில் அல்லவா கற்றுக் கொள்கிறோம்? என்றேன். 

முற்பிறவி முற்பிறவி என்கிறீர்களே எனக்கு அதில் உடன்பாடு இல்லை. இப்பிறவி இருக்க, இதன் அனுபவங்கள் எதிரில் காத்திருக்க எதற்காக இல்லாத முற்பிறவியைப் பற்றி நாம் யோசிக்க வேண்டும்? என்று கேட்டார் நண்பர் பிரேம். 

நண்பரே இந்தப் பிறவியின் அனுபவங்கள்  எதிரில் காத்திருக்கிறது என்றீர்களே, உங்களுக்கு என்ன அனுபவம் காத்திருக்கிறது, அதைச் சொல்லுங்களேன் என்று கேட்டேன்.

பிரேம் பதில் ஏதும் சொல்லாமல் நடந்து கொணடிருந்தார்.

சொல்லுங்கள் என்ன அனுபவங்கள் உங்களுக்குக் காத்திருக்கின்றன? என்று மீண்டும் கேட்டேன். 

என்ன அனுபவம் என்று எப்படிச் சொல்ல முடியும்? என்ன நடக்கிறது என்று நடக்கும்போதுதானே சொல்ல முடியும்? 

சரி நடக்கப்போவது நீங்கள் விரும்பும் அனுபவமாக இருக்க வேண்டுமா? விரும்பாத அனுபவமாக இருக்க வேண்டுமா? என்று  மீண்டும் கேட்டேன்.

விரும்பாத அனுபவங்களை யார் விரும்புவார்கள்? விரும்பிய அனுபவங்களைத்தான் விரும்புகிறேன். விரும்பியவற்றை அனுபவிப்பது தானே வாழ்க்கையின் வசந்தம்?

இந்த வசந்தம் எல்லோருக்குமே கிடைக்கிறதா? இல்லையே, நீங்கள் ஒரு அனுபவத்தை விரும்பிக் கொண்டிருக்கும்போது விரும்பாத அனுபவம் ஒன்று நடந்து விடுகிறதே, அது ஏன் என்று சிந்தித்தீர்களா?

தெரியாததால்தானே பதில் சொல்ல முடியாமல் தயங்குகிறேன். விரும்பிய அனுபவங்கள் ஏன் விரும்பியபடிக் கிடைப்பதில்லை?

வரப்போகிற அனுபவங்கள் ஒவ்வொன்றும்  வந்த அனுபவங்களின் விளைவுகள் பிரேம்.

புரியவில்லையே.

சென்ற பிறவில் எப்படி வாழ்ந்தோம் என்பதை இந்த வாழ்வின் அனுபவங்கள் சொல்லி விடும். எதிர்பார்த்த இன்பங்கள் மட்டுமன்றி எதிர்பாராத இன்பங்களும் இந்தப் பிறவியில் ஒருவனுக்கு கிடைக்கிறது. 

துன்பம் இந்த அளவு தான் வரும் என்று எதிர்பார்த்திருப்பான். ஆனால் அவன் சற்றும் எதிர்பாராத பெருந்துன்பம் வந்து அவனை வளைத்துப் போட்டுக் கொள்கிறதே!

ஒருவன் நிம்மதி கிடைத்தால் போதும் என்று நிம்மதியை  மட்டும் எதிர்பார்க்கிறான். ஆனால் அவனிடம் இருக்கிற நிம்மதியும் பறி போய் விடுகிறதே!

நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்டால் எனக்குப் பயமாய் இருக்கிறதே என்றார் பிரேம்.

வாழ்க்கை பயங்கரமானதுதான் அதில் சந்தேகமில்லை பிரேம், அதாவது துன்பத்தில்!

அதுபோல-

வாழ்க்கை அதிபயங்கரமானதுதான் அதிலும் சந்தேகமில்லை பிரேம், அதாவது இன்பத்தில்!

இந்த உண்மை புரியுமா உங்களுக்கு?

அப்போது கடுமையான வெயில். 

அதனால் வழியில் இருந்த ஒரு புளிய மரத்தின் அடியில் போய் நானும் பிரேமும் ஒதுங்கினோம். அப்போது  மரக்கிளையில் கட்டப்பட்டிருந்த ஒரு தொட்டிலில் ஒரு  குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது.

இருவரும் அந்தக் குழந்தை தொட்டிலுக்குள்  தூங்குவதைக் கண்ணுற்று விட்டுப் பிறகு கீழே உட்கார்ந்து கொண்டோம். நிழல் காற்றில் இளைப்பாறினோம்.

தொலைவில் பச்சைப் பேசேல் என்ற  நெல் வயலில் பெண்மணிகள் களை பிடுங்கிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது தொட்டிலில் கிடந்த குழந்தை வளைந்து நெளிந்து லேசாக அழத் தொடங்கியது.

அந்த அழுகைச் சத்தம் விட்டு எங்கள் காதுகளைக் கூட எட்ட வில்லை, அதற்குள் வயலில் களை பிடுங்கிக் கொண்டிருந்த அதன் தாயானவள் தனது கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு வரப்புகளில் தாண்டித் தாண்டி ஓடி வந்து சேர்ந்தாள்.

தொட்டிலில் கிடந்த குழந்தையை வாரி அணைத்துச் செல்லமாக ஒரு முத்தமிட்டுவிட்டு மரத்தின் மறுபக்கமாகச் சென்று மறைந்து அமர்ந்து  அமுது ஊட்ட ஆரம்பித்தாள்.

சற்று நேரத்தில் குழந்தையை மீண்டும் தொட்டிலில் கொண்டு வந்து மெல்லப் போட்டுவிட்டு  ஆட்டி ஆட்டி உறங்க வைத்தாள். குழந்தை நன்றாக உறங்கிய பிறகு மெல்லத் தொட்டிலை விட்டு விட்டு  மீண்டும் வரப்பில் இறங்கித் தன் பணியினைத் தொடர ஓடினாள்.

நாங்கள் மீண்டும் பேச ஆரம்பித்தோம்.

பிரேம் ஆரம்பித்தார்.

சென்ற பிறவிக்கான அடையாளமே இல்லாத போது நாம் சும்மா சும்மா எதற்கெடுத்தாலும் அதையே காரணம் காட்டுகிறோம். எல்லாம் நமக்குள் ஒரு ஆறுதலை ஏற்படுத்துவதாக இருக்காதா? மனிதர்கள் பிள்ளைகளைப் பயமுறுத்துவதற்காகத்தான் 'பூச்சாண்டி’ என்ற கற்பனைக் கதாபாத்திரத்தை உருவாக்கினார்கள். உண்மையில் 'பூச்சாண்டி’ என்று யாருமில்லை. அதுபோல முற்பிறவிகள் என்பதும் ஒரு கற்பனையாக இருக்கக் கூடாதா?

என்று சொல்லும்போது தொலைவில் கிராமத்து மக்கள்  ஐயோ 'தீ... தீ.. தீ.. !’ என்று கூப்பாடு போட்டுக்கொண்டு ஓடுவதைக் கண்டு நானும் பிரேமும் அதிர்ச்சியோடு எழுந்து நின்றோம். 

எங்கய்யா எங்க? என்று ஓடிக் கொண்டிருந்தோரைப் பார்த்து உரக்கக் குரல் கொடுத்தோம்.

அதோ பாருங்க..என்று அவர்கள் கை காட்டிக்கொண்டே ஓடினார்கள். அவர்கள் கை காட்டிய திசையில் அடர்ந்தக் கரும்புகை வானை நோக்கி எழும்பிக் கொண்டிருந்தது!

ஆமாம்!

பாருங்க பிரேம். பூச்சாண்டி காட்டுவதைப் பற்றிச் சொன்னீர்கள். அது ஒரு கற்பனை, வேடிக்கை, நாடகம். ஆனால் அங்கே தெரிகிறது பாருங்கள் வானில் கரும்புகை! அது எப்படி வந்தது? நெருப்பு இல்லாமல் புகையுமா, அது கற்பனையா? வேடிக்கையா? நாடகமா? என்று கேட்டேன்.

ஐயோ நிஜமாகவே நெருப்பு பத்தியிருக்கு சார், என்ன ஆச்சோ தெரியவில்லை  பாவம் என்று பரிதவித்தார்.

தொலைவில் தீயணைப்பு வண்டி ஒன்று ஆடியசைந்துகொண்டு தள்ளாடியபடி முடியாத நிலையிலும் முன்னேறி வந்து கொண்டிருந்தது.  

தண்ணீர் லாரிகள் வேகத்துக்குக் கூட இந்த தீயணைப்பு லாரிகள் போவதில்லையே அது ஏன்? என்றார் பிரேம்.

தண்ணீர் லாரிகள் காலையிலிருந்து மாலை வரை ஊருக்குள் சப்ளை செய்து கொண்டே இருப்பதால் நில்லாது ஓடிக் கொண்டேயிருக்கும். ஆனால் தீயணைப்பு வண்டிகளோ என்றைக்குத் தீப் பிடிக்குமோ அன்றைக்கு மட்டும்தான் ஓடிப் பார்க்கும். உட்கார்ந்தே கிடந்தவனைத் திடீரென்று உசுப்பி விட்டு ஓடச் சொன்னால் என்ன செய்வான்? அவனால்  நடப்பதே சிரமம். இந்தத்  தீயணைப்பு வண்டிகள் நடந்தே போய் அணைப்பதற்குள் அங்கே என்னென்ன விபரீதங்கள் நடந்திருக்குமோ, கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். குறுக்கே வருபவனைக் கூடக் கொன்று விட்டுப் போகும் உரிமம் ஆம்புலன்சுக்கு எழுதிய சட்டத்தில் இருக்கிறது. ஆனால் அதே உரிமம் தண்ணீர் லாரிகளுக்கு மட்டும் எழுதாச் சட்டத்தில் இருக்கிறது! அதை யாரும் கேட்க முடியாது!
 
சென்ற பிறவியைப் பற்றிச் சொல்ல வந்து தீப்பற்றிக் கொண்ட விஷயத்தைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோமே என்றார் பிரேம். 

ஆமாம் பிரேம். நெருப்பில்லாமல் புகையாது. காரணம் இல்லாமல் காரியம் இல்லை. புகையை வைத்து நெருப்பைத் தீர்மானிக்கிறோம். அதுபோல  இந்தப் பிறவியை வைத்து, இதற்குக் காரணமான முந்தையப் பிறவியைத் தீர்மானிக்க வேண்டும்! 

முந்தையப் பிறவி சரி. எதற்காக  அது இப்போதும் வருகிறது?

அப்படிக் கேளுங்கள். நெருப்பு இல்லாவிட்டால் எதற்குப் புகையப் போகிறது? போன பிறவியில் எதையோ விதைத்து விட்டு வந்து விட்டோம். இந்தப் பிறவியில் அதை அறுவடை செய்யப் போகிறோம். அதனால் வருகிறது. வேறு வழியில்லை. 

எதை?

என்ன விதைத்து விட்டு வந்தோமோ அதை!

விதைத்த நினைவே இல்லாத போது எதை விதைத்தோம் என்று எப்படிச் சொல்ல முடியும்? 

நடப்பது நல்லதாயிருந்தால் நல்லதை விதைத்திருக்கிறோம் என்று பொருள். நடப்பது கெட்டதாயிருந்தால் கெட்டதை விதைத்திருக்கிறோம் என்று பொருள்.

கண்ணாடியில் இப்போது காணும் முகம்தான் நிதர்சன முகம். நேற்று பார்த்த முகமோ நாளை பார்க்கப் போகிற முகமோ தெரியாது பிரேம்.

அடடா! 

நடந்து முடிந்ததைத் தேடித் தேடி.. .. காணப் போவது ஒன்றுமில்லை பிரேம். நடக்கப் போவதைப் பற்றிப் பயந்து பயந்தும் ஆகப் போவது ஒன்றுமில்லை பிரேம்.  நம் முன்னால் இப்போது இருப்பதுதான் நடக்கும் உலகம் பிரேம்! நடக்கும் பொழுதுதான் நமக்கு நிச்சயம்! நடக்கும் சம்பவங்கள்தான் நமக்குப் பிரதானம்!

அப்படியா?

ஆமாம். ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள் பிரேம்.  நாம் விதைத்ததுதானே விளையும்! விளையும் போது  விதைகளைத் தடுக்க முடியுமா? முடியாதே.

அப்படி என்றால் வினைத் துன்பங்களை ஒட்டு மொத்தமாக அனுபவித்துத்தான்  தீர வேண்டும் என்கிறீர்களா? வேறு வழியில்லையா?

வேறு வழியில்லைதான். அதற்குத்தான் சித்தர்களும் ஞானிகளும் சகிப்புத் தன்மையை பொறுமையை அமைதியை நமக்குப் போதித்தார்கள். எதுவரினும் ஏற்றுக் கொள்ளப் பழக்கினார்கள். 

தீவினை தீவினை என்கிறார்களே அதன் தன்மை என்ன?

தீ வினைகள்  அதிபயங்கரமானவை பிரேம். அவை யானைகளை, சிங்கங்களைக் கூட வளைத்துப் போட்டு விடும் மலைப் பாம்புகள் போன்றவை! 

ஐயோ!

மலைப் பாம்புகளைக் கூட மற்றவர்கள் வெட்டிக் கொன்று யானை சிங்கங்களை மீட்டுவிட முடியும். ஆனால் வினைப் பாம்புகளை எவராலும் வெட்டி மனிதனை விடுதலை பண்ண முடியாது பிரேம். வினைகளை வெட்டும் ஆயுதங்கள்  எங்கும் இல்லை. எதிலும் இல்லை, எவரிடமும் இல்லை!

அப்படி என்றால் வினைகளுக்குப் பலியாவதைத் தவிர வேறு வழியே இல்லையா?

உண்டு. ஒரே ஒரு மனிதனுக்கு மட்டும் உண்டு.

யார் அந்த மனிதன் மந்திரவாதியா? மகா ரிஷியா? சித்தனா, ஞானியா? யார் என்று சொல்லுங்கள், உடனே போய்ப் பார்ப்போம்.

எவனுமில்லை. 

பிறகு?

நீங்கள்தான்.

நானா?

நீங்களேதான்.

நான்...நானா? அது எப்படி? வினைகைள  அறுக்கும் ஆயுதம் ஒரே ஒரு மனிதனுக்கு மட்டும் உள்ளது என்றீர்கள், அதுவும் என்னிடமே உள்ளது என்று சொல்கிறீர்கள்,  என்ன குழப்புகிறீர்கள்? என்றார் பிரேம். 

ஆம். உங்கள் வினைகளிலிருந்து உங்களை மீட்டுக் கொள்ள உங்களிடமே  உங்களுக்கு என்று ஒரு வழி மறைந்திருக்கிறது!

அந்த சமயம் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை மீண்டும் திடீரென்று துள்ளி நெளிந்து, பயங்கரமாக அலறியது!

நானும் பிரேமும் பயந்து போய் எழுந்து சென்று குழந்தை படுத்துக் கொண்டிருந்த தொட்டிலை  விரித்துப் பார்த்தோம்.

அதற்குள்  'நாலு கால்’  பாய்ச்சலில் தாயானவள்  ஓடி வந்து குழந்தையை வாரி எடுத்துக் கொண்டாள்.

குழந்தையின் முதுகில் ஒரு எறும்பு ஊன்றிக் கடித்தபடிக் குன்றிக் கொண்டிருந்தது! 

அந்தத் தாய் உடனே அதைப் பிடுங்கித் தூர எரிந்தாள்! 

கடிபட்ட இடத்தைத் தேய்த்து விட்டுத் தாலாட்டித் தாலாட்டி சமாதானப்படுத்தினாள். 

கொஞ்சம் கொஞ்சமாகக் குழந்தை அழுகையினைக் குறைத்துக் கொண்டே வந்து  தன் தாயின் முகத்தைப் பார்த்து நன்றிப் பெருக்குடன் சிரிக்க ஆரம்பித்தது. 

பாருங்கள் பிரேம். உங்கள் வினைகளிலிருந்து உங்களை மீட்டுக் கொள்ள உங்களுக்கு என்று  ஒரு வழி இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா? அது இதுதான்!

எது? என்று ஆர்வத்துடன் புருவங்களை அகல விரித்தார் பிரேம்!

ஞானம் பெருகும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

SCROLL FOR NEXT