4. நட்பா, காதலா?

தன்னை அறிதலில் சென்ற வாரத்தில் ரயில் பயணத்திற்கு நாம் முன் பதிவு செய்திருக்கிறோமா என்று சிந்தித்தோம்.
4. நட்பா, காதலா?

தன்னை அறிதலில் சென்ற வாரத்தில் ரயில் பயணத்திற்கு நாம் முன் பதிவு செய்திருக்கிறோமா என்று சிந்தித்தோம்.

ரயிலில் ஏழையும் பணக்காரனும், படித்தவனும் பாமரனும், யோகியும் நோயாளியும், நல்லவனும் கெட்டவனும், சம்சாரியும், சன்யாசியும் ஒன்றாய்ப் பயணிக்கிறார்கள்.

மனிதர்களில் ஏழை பணக்காரன் என்ற வர்க்க வேறுபாடுகள் ஏன் என்ற கேள்வி காலங்காலமாக எழுந்து கொண்டுதான் இருக்கிறது. தனியுடைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிச் சமத்துவத்தைக் கொண்டு வர, பொதுவுடைமை இயக்கம் எவ்வளவோ போராடிக் கொண்டுதான் வருகிறது.

பொருளாதாரத்தில் எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் வீடு என்று கொடுத்துவிடலாம்.

ஆனால் எல்லோருக்கும் ஒரே பிரச்னை, எல்லோருக்கும் ஒரே நோய், எல்லோருக்கும் ஒரே ஆயுள் என்று இல்லையே! மனிதனுக்கு மனிதன் இவற்றில் மாறுபாடுகள் ஏற்படுகிறதே. இந்த வேறுபாடுகளை மாற்ற முடியவில்லையே அது ஏன்?

இந்த மாறுபாடுகளின் மூலம் எங்குள்ளது?

அது அவரவர் முகத்தில் உள்ளது. அந்த முகத்தின் உச்சியில் உள்ளத் தலை எழுத்தில் உள்ளது.

அப்படியா? என்றார் நண்பர் சுவாமிநாதன்.

ஆம். ஒரு மனிதனின் முகம் போல இன்னொரு மனிதனின் முகம் இருப்பதில்லையே. உலகில் எத்தனையோ கோடி மனிதர்கள் பிறந்து மடிந்து போனார்கள். எத்தனையோ கோடி மனிதர்கள் இன்றைக்கு வாழ்ந்து கெண்டிருக்கிறார்கள். இத்தனை பேரில் ஒருவர்  முகத்தைப் போலவே  இன்னொருவர் முகம் இருப்பதில்லையே! ஏன்? இந்த வேறுபாட்டின் மூலம் என்ன என்று யோசித்தீர்களா?

அதுபோல இன்னொரு அதிசயம். உலகில் உள்ள மனிதர்களில் ஒருவருக்கு உள்ள கைரேகை இன்னொருவருக்கு இருப்பதில்லையே, அதுவும் ஏன் என்று யோசித்தீர்களா?

முகமும் கைரேகையும் மட்டும்தானா? உடல் வடிவம்கூட ஒருவரைப் போல் ஒருவருக்கு இருப்பதில்லையே!

ஒருவர் குள்ளம்; ஒருவர் உயரம்!

ஒருவர் குண்டு; ஒருவர் ஒல்லி!

ஒருவர் கருப்பு; ஒருவர் சிவப்பு!

மனிதர்கள் வெவ்வேறானவர்கள் என்பதனால்தான் இத்தனை கோடி ‘ஆதார் அட்டைகள்’ நமக்குத் தேவைப்படுகின்றன.

சமூகமாக ஒன்று கூடி இருந்தாலும், இன்னும் தனித்தனியாகத்தான் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

சமூகத்திற்கு விரோதமானவனும் அங்குதான் இருக்கிறான்!

வன்முறையாளர்களும், தீவிரவாதிகளும் ஆகாயத்திலிருந்தா குதித்து வந்தார்கள்? அல்லது ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் விலங்குகளாக வந்தார்களா?

நம்மோடு பிறந்து நம்மோடு உண்டு படித்து ஓடி விளையாடி ஒன்றாய் வளர்ந்தவர்கள்தானே? எப்படி நமக்கே விரோதிகளாக மாறினார்கள்?

ஒன்றாக வாழ்ந்தாலும் அவரவர் எண்ணப்படி மனிதர்கள் வெவ்வேறாகவே இருக்கிறார்கள். ஆனால் உணர்வுகள் எல்லோருக்கும் ஒன்றாகத்தானே உள்ளன? என்றார் நண்பர் சுவாமிநாதன்.

ஆமாம், ஐம்புலக் கருவிகளும், ஐம்புலன் உணர்வுகளும் அனைவருக்கும் ஒன்றுதான். அவை முன்னிட்ட முயற்சிகளும் அனுபவங்களும் மட்டும் மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறதே, அதைக் கவனித்தீர்களா? என்றேன்.

அதுதான் ஏன் இந்த மாறுபாடு? என்றார் சுவாமிநாதன்.

அதற்கு ஒரு உண்மைச் சம்பவத்தைச் சொல்கிறேன் கேளுங்கள் என்றேன்.

நானும் நண்பன் கிறிஸ்தோபரும் இணைபிரியாமல் சுற்றிக் கொண்டே இருப்பதைப் பார்த்துவிட்டு, நீங்கள் இருவரும் இணைபிரியாத தம்பதிகள் போலிருக்கிறீர்களே என்று கேட்காதவர்கள் இல்லை!

ஆணும் ஆணும் திருமணம் செய்து கொள்ள முடியாது. பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ள முடியாது.

இது நடைமுறைச் சிக்கல்!

இதுவே ஆணும் பெண்ணுமாக நாங்கள் பழகியிருந்தால் எங்கள் திருமணத்திற்கு இல்லைத் தடைக்கல்!

அவ்வளவு நட்பு!

அவன் பள்ளிப் படிப்பு முடிந்ததும் தனது சகோதரியின் கணவர் ராணுவ அதிகாரியாக வேலை பார்க்கும் அஸ்ஸாம் காடுகளுக்குப் போய்விட்டான்.

நண்பனின் இழப்பால் கை ஒடிந்த நிலையில்  முடமாகிப் போனேன். தினமும் குளிப்பது கூட இல்லை. தலை வாருவதும் இல்லை. தாடி விட்டுக் கொண்டு திரிந்தேன்.

ஒரு  நண்பனைப் பிரிந்ததால் காதலியைப் பிரிந்த தேவதாஸின் நிலைக்கு ஆளாகிவிட்டேன்! சரியாகச் சாப்பிடுவது இல்லை; உறங்குவதும் இல்லை!

நண்பனை எண்ணி எண்ணிக் குமைந்து கொண்டிருந்தேன். என்ன கொடுமை இது எனக்கு மட்டும் ஏன் இந்தச் சோதனை? நண்பனை என்னிடமிருந்து ஏன் இந்த விதி பிரிக்க வேண்டும் என்று உள்ளுக்குள்ளேயே  நொந்து நொந்து நூலாகிப் போயிருந்தேன்.

அவனது சகோதரியும் கணவரும் அவனை அஸ்ஸாமிலேயே வேலையில் அமர்த்திவிடப் போவதாக நண்பன் கடிதம் போட்ட போது மேலும் இடிந்து போய்விட்டேன். ‘பட்டக் காலிலேயே படும்; கெட்டக் குடியேதான் கெடும்’ என்பது எனக்கே உரித்தாகிவிட்டது! இனியும் நான் தேறுவது இயலாத காரியம் என்று விரக்தியின் உச்சத்திற்கே போய்விட்டேன்.

ஒருநாள்

நண்பனிடமிருந்து திடீரென்று கடிதம்! நான் அடுத்த வாரம் எங்கள் சொந்த ஊருக்கே திரும்பி வருகிறேன் என்று எழுதியிருந்தான்!

அந்தக் கடிதத்தைப் பார்த்தபோது எனக்குள் ஏற்பட்ட இன்ப அதிர்ச்சிகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது!

காடுகளிலும் மலைகளிலும் கண்களை மூடிப் பசி, தாகம், தூக்கத்தை மறந்து கடும் தவம் இருக்கும் தவசிக்குக் கடவுள் நேரடியாகத் தோன்றினால் அவனது மனம் என்ன பாடுபடுமோ அந்தப் பாடுபட்டது என் மனது!

கண்ணிமைக்கும் நேரத்தில் என் நடவடிக்கைகள் புயல் போல மாறின!  இடி மின்னல் வேகத்தில் முடி வெட்டி முகச் சவரம் செய்து, நீராடிப் புத்தாடை அணிந்து கொண்டு நண்பனை எதிர்நோக்கிக் காத்திருந்தேன்!

பல மாதங்களுக்குப் பிறகு நண்பனை  நேரில் கண்டபோது ஏற்பட்ட அனுபவம் இருக்கிறதே, அவற்றை வார்த்தைகளால் எழுத முடியாது!

ஆரத் தழுவிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் சொரிந்தேன்.

ஆனால் அவனோ அழவேயில்லை! நான் அழுவதையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

என் முதுகைத் தடவிக் கொடுத்து ஆறுதல் சொல்லித் தேற்றினான்!

நான் அவனைக் கண்டு அழுததைப்போல அவனும் என்னைக் கண்டு ஏன் அழவில்லை? என்று அப்போதுதான் யோசித்தேன்!

நான் வைத்த அளவுக்கு அவன் என் மீது அன்பு வைக்கவில்லையோ? அப்படி என்றால் அவன் என் மீது வைத்த நட்பு பொய்யோ? என்றெல்லாம் என் குழந்தை மனது உள்ளுக்குள் தேம்பித் தேம்பி அழுதது.

அவன் ஜாலியாக வெளியூர் போனதால் என் இழப்பு அவனுக்குப் பாதித்திருக்க முடியாது என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்.

நண்பர்கள்தான் ஆத்மாக்களின் நேரடிப் பந்தங்கள்! நண்பர்களைப் பிரித்தால் ஆத்மா துடிதுடித்துப் போய்விடும். உயிர்களைக் பிரிப்பது உயிரோடு கொல்வதுற்குச் சமம். கொல்லாமல் கொல்லும் கொடிய தண்டனை இரண்டு நண்பர்களையோ காதலர்களையோ பிரிப்பது!

அன்றைக்கு ஆணுக்கு ஆண்  தோழன்.

இன்றைக்கு ஆணுக்கு ஆண் மட்டும் தோழன் அல்ல; பெண்ணும் தோழி!

அன்றைக்கு பெண்ணுக்குப் பெண் தோழி.

இன்றைக்குப் பெண்ணுக்குப்  பெண் மட்டுமல்ல தோழி; ஆணும் தோழன்!

ஒரே பாலினத்தைச் சேர்ந்த நட்புறவை விட ஆண் பெண் நட்பு அதீத வலிமை கொண்ட நட்பாகிவிடுகிறது. காரணம் அங்குள்ள பால்வேறுபாடுகள்.

ஆண் இரும்பு என்றால் பெண் காந்தம்.

பெண் இரும்பு என்றால் ஆண் காந்தம்.

இன்றைக்கு இருபாலருமே இரும்பும் காந்தமுமாக ஒருவரை ஒருவர் ஈர்த்துக்கொண்டு பழகி எல்லை மீறிச் சென்றுவிட்டார்கள்! உடல் சார்ந்த பால் வேறுபாடுகள் உளம் சார்ந்த ஈடுபாடுகளை ஊக்கப்படுத்துகிறது. அதனால் பிரியாத நட்புக்கு மணவாழ்வு மட்டும்தான் ஒரே தீர்வு என்று ஓடிப் போய்க் கல்யாணம் செய்து கொள்கிறார்கள்!

காலம் மாறிவிட்டது

பிள்ளைகளின் காதல் வேகத்தைக் கண்டு பெற்றோரே வீட்டைவிட்டு ஓடிப் போய்விடலாமா என்று வழிதேடுகிறார்கள், இன்று!

காதல் திருமணங்கள் பெற்றோரைக்கொண்டே பெற்றோர்  முன்னிலையில் பத்திரிகை அடித்து மண்டபம் பிடித்து பிரமாண்டமாக நடத்தப்படுகிறது.

காதல் திருமணங்களில் பெற்றோர் முகத்தில் ஈயாடுவது இல்லை. கொலு பொம்மைகளைப் போலத்தான் மணமேடைகளில் கைகட்டி நிற்கிறார்கள்.

பெற்றோரின் முதுகுக்குப் பின்னால் பிள்ளைகளின் அத்துமீறல் துப்பாக்கி முனைகளாக அழுத்தப்படுகின்றன.

இவற்றைக் காதல் திருமணங்கள் என்று சொன்னால் காதலுக்கே களங்கம் ஆகிவிடும்!  பழைய காரை ப் பழுது நீக்கிப்  புது வண்ணம் பூசிப் புத்தம் புதுக் காராக விற்பனை செய்வது போல நட்புக்கு காதல் திருமணங்கள் என்ற வர்ணம் பூசப்படுகிறது.

அதனால்தான் பழைய கார்கள் சாயம் வெளுத்துப்போய் மீண்டும் விற்பனைக்கு வந்துவிடுகின்றன. வேறு வேறு துணைகளைத் தேடி விவகாரத்து என்ற வில்லங்கச் சான்றிதழ்களுக்காக கோர்ட்டுகளில் வந்து தவம் கிடக்கிறார்கள் தம்பதிகள்.

பழசு பழசுதான். புதிசு புதிசுதான்.

நட்பு நட்புதான்.

காதல் காதல்தான்.

ஆணுக்கும் ஆணும், பெண்ணுக்குப் பெண்ணுக்கமாக ஒரே பாலினத்திற்குள் உண்டாகும் நட்பு மட்டுமே நிலைக்கும்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் நட்பு காதல் ஆகிவிட முடியாது. அது காதலாகவும் கூடாது!

நட்பு காதலாக்கப்பட்டால் இருக்கின்ற நட்பும் கெட்டுவிடும்!

நட்பு வேறு; காதல் வேறு.

காதல் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படுவது.

காமத்தைக் கொண்டு விளையும் காதல், கணவன் மனைவியாக ஒன்று கூடிச் சிற்றின்பத்தில் திளைத்துப் பேரின்பத்தில் போய்க் கரை சேர்ப்பது.

அதுதான் காதல்  திருமணங்களின் தாத்பர்யம்.

இப்போது சொல்லுங்கள், ஆணும் ஆணுமாக,  பெண்ணும் பெண்ணுமாக இப்படிக் கரை சேர முடியுமா?

ஓரினச் சேர்க்கை ஒரு தேங்கிய குட்டை, நாற்றமடிக்கும்! அதைப் பேசாதீர்கள் என்றார் நண்பர் சுவாமிநாதன்.

அஸ்ஸாமிலிருந்து நண்பன் கிறிஸ்தோபர் வந்து சேர்ந்தான்.

அதற்கு முன்னதாக எங்கள் ஊரைப் பற்றிய ஒரு இனிப்பான  செய்தி.

எங்கள் கிராமத்தில் ‘திருநெல்வேலி லாலா மிட்டாய்க் கடை’ ஒன்று இருந்தது. இப்போதும் இருக்கிறது. அன்றைக்கு அது பழமையான கடை. மிகமிக எளிமையாக ஒரே ட்யூப்லைட்டோடு இருந்தாலும் சுவையில் ஊருக்கே வெளிச்சம் போட்டது அக்கடை! இனிப்போ, காரமோ அங்கே போய் எதை வாங்கி வாயில் போட்டாலும் அது சுவைக்கும்!

இன்றைக்கு அந்தக் கடை ஒரு குட்டி நட்சத்திர  ஓட்டல் போல கால வேஷம் போட்டுக் கொண்டு கலர்க் கலராய் விளக்குகளோடு ஜொலிக்கிறது. அதன் சுவை கூட அதனால் சோபித்து விட்டதோ என்று எண்ணுவதுண்டு.

அந்தக் காலத்தில்

அந்தக் கடையின் வியாபாரிகளைப் பார்த்தாலே  பிரமிப்பாக இருக்கும்!

அவர்கள் கையால் பதார்த்தங்களை வாங்கிச் சாப்பிட ஆவலாக இருக்கும். வாட்ட சாட்டமாக வெள்ளை வெளேர் என்று அழகாகவும், திடகாத்திரமாகவும் இருப்பார்கள். பளிச்சிடும் தூய ஆடை அணிந்திருப்பார்கள். அவர்கள் இனிப்புக் காரங்களை  அலுமினியக் கரண்டிகளால் அள்ளி எடை போட்டுக் கொடுக்கும் அழகை  ரசித்துக் கொண்டே இருக்கலாம்!

‘பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்தாற்போல’ என்ற பழமொழி இந்தக் கடையை முன்னிட்டுத்தான் வந்திருக்குமோ என்றுகூட எண்ணத் தோன்றும்.

அந்தக் கடைக்குச் சென்ற அனுபவத்தைப் பற்றித்தான் இப்போது சொல்லப் போகிறேன். நண்பனை அழைத்துக்கொண்டு அந்த லாலா மிட்டாக் கடைக்குச் சென்றேன். ஷோ கேஸில் அழகழகாய் மைசூர் பா, ஜாங்கிரிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அகலமானத் தாம்பாளத்தில் கொட்டப்பட்டிருந்த கருஞ்சிவப்பு நிறத்து அல்வா ஆவி பறக்க  மிதந்து கொண்டிருந்தது! மேகம் மூடிய பிறை நிலாக்கள் போல முந்திரிப் பருப்புகள் அல்வாவின் மேற்பரப்பில் ஆங்காங்கு மறைந்தும் மறையாமல்  கிடந்தன.

எனக்கு அல்வாவைத் தவிர எந்த இனிப்பும் பிடிக்காது.

‘உனக்கு என்ன வேணும் கேளுடா’ என்று நண்பனிடம் சொன்னேன். நண்பன் அல்வாவைத்தான் கேட்பான் என்று எதிர்பார்த்தேன்.

எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றமாகும்!

நண்பன் லட்டைப் பார்த்துக் கை நீட்டினான்.

அது கொஞ்சம் காய்ந்தாற் போல இருக்கிறது. அல்வா சூடா இருக்குடா என்றேன்.

லட்டு பழைசானாத்தான்டா டேஸ்ட்டா இருக்கும் என்றான்.

முகம் சுளிக்கவில்லை; உளம் சுளித்தேன்.

இரண்டு பேரும் ஓருயிர் ஈருடலான நண்பர்கள்தான்.

அல்வா, லட்டு, ஜாங்கிரி அத்தனைக்கும் ஒரே சீனிதான். ஆனால் அவற்றுக்குள் ஒரு சுவை வேறுபாடு!

உடன் சேர்க்கப்படும் அரிசியோ, கோதுமையோ, கடலை மாவோ அவற்றின் கலவைக்குத் தக்கப்படி சர்க்கரையின்  சுவையே மாறிப் போய்விடுகிறது.

மனிதர்களின் கர்ம வினைகளுக்குத் தக்கபடி ரசனைகளும் மாறுபடுகின்றன என்ற  உண்மை அப்போது எனக்குத் தெரியவில்லை. அதுதான் மனிதனுக்கு மனிதன் குண வேறுபாடுளைத் தோற்றுவிக்கின்றன.

அஸ்ஸாமில் சில வருடங்கள் இருந்துவிட்டு வந்ததற்குள்ளாகவே  நண்பனிடம்  குண வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கக் கண்டேன்.

அவன் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டு வந்திருக்கிறான்.

நானோ அவனையே கற்பனை செய்து கொண்டு காலத்தை வீணாக்கியிருக்கிறேன்!

ஏற்றத் தாழ்வுகள் பொருளாதாரத்தில் மட்டுமல்ல, அவரவர் வினை வாழ்க்கையிலும் கூட  இருக்கிறது என்ற உண்மை அப்போதுதான் தெரிந்தது!

எங்கே  அந்த முன் வினைகள்?

ஞானம் விரியும்…

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com