27. கடித்த நாயைக் கடிக்கலாமா?

துன்பத்தை ஒப்புக் கொள்ளும் பக்குவம் வந்துவிட்டால் வினைகளை ஒப்புக் கொள்ளும் பக்குவமும் வந்துவிடும். 
27. கடித்த நாயைக் கடிக்கலாமா?

துன்பத்தை ஒப்புக் கொள்ளும் பக்குவம் வந்துவிட்டால் வினைகளை ஒப்புக் கொள்ளும் பக்குவமும் வந்துவிடும். 

வினைகளை ஒப்புக் கொண்டால்தான் அதிலிருந்து விடுபட முடியும். அதிலிருந்து விடுபட்டால்தான் பிறவாப் பெருநிலைக்குப் போக முடியும்!

ஆனால் மனிதன் இதைச் செய்வானா? என்று சென்ற வாரத்தில் கேட்டு வைத்தோம். 

மனிதன் இதைச் செய்வானா என்று கேட்டதும் தலையைக் குனிந்து கொண்டு சொரிந்தார் திருச்சி நண்பர்.

அவர் எப்போதும் எதற்கும் தயங்காதவர், மயங்காதவர், சுணங்காதவர், சோர்வு அடையாதவர்.

அவர் வாழ்க்கையில் ஏற்பட்ட சோதனை ஒன்று எவருக்குமே வரக் கூடாத சோதனை!

அதைச் சொன்னால் அவர் மறந்துபோன மனக் காயங்களைக் மீண்டும் குதறிப் புண்ணாக்கியது போலாகிவிடுமே என்று யோசித்தேன். 

'பட்ட காலிலே படும் கெட்ட குடியேகெடும்' என்ற பழமொழிக்கு மீண்டும் நான் அவரைப் பழியாக்க விரும்பவில்லை. 

திருக்குறள் கிட்டத்தட்ட நூறு உலக மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் ராமாயணம் என்ற இதிகாசக் காப்பியம் அதிகபட்சம் 25 மொழிகளில் மட்டுமே மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

திருக்குறள் குறைந்த பரப்புடைய குறுகியத் தென்தமிழ்நாட்டு உபதேச நூல். அதுதான் ராமாயணத்தின் எல்லைகளைத் தாண்டி கடல் கடந்து நிற்கிறது!

ஆனால் பரந்த எல்லைகளைக் கொண்ட பாரதப் பெருங்காப்பியமான ராமாயணம் ஏன் குறைந்த அளவு மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது?

திருக்குறள், ராமாயணம் இவற்றில் உள்ள கலாச்சாரப் பின்னணிகளை  உலக நாடுகளின் கலாச்சாரத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தாலே உண்மை புரிந்துவிடும்.

திருக்குறள் ஒரு பொதுமறை. நம் நாட்டினரும் மேலை நாட்டினரும் கடைப்பிடிக்க வல்லத் தத்துவங்களைக் கொண்டுள்ளது.  ஆனால் ராமாயணமோ இல்லறத்திற்கு மட்டும் உரித்தான இதிசாகம். அது உலகக் கலாச்சாரத்திற்குப் பொருந்தாப் பொதுமறை!

'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற இரண்டே சொல்லால் ஆன உபதேசம் இந்தியக் கணவனும் மனைவியும் மட்டுமேக் கடைப்பிடிக்க வேண்டியப் பண்பாடு ஆகும். இது உலகத் தம்பதிகளுக்குப் பொருந்தாது.

இதைக் கொண்டு போய் உலகத்தாரிடம் சொல்ல முடியுமா?

'ஆடையற்றவன்’ ஊரில் 'கோவணட்ங்கட்டியவன்’ பைத்தியக்காரன்.

திறந்தவெளிச் சேர்க்கையுள்ள (ஓப்பன் செக்ஸ்) நாடுகளில் போய் 'ஒருவனுக்கு ஒருத்தி” வைத்துக்கொள் என்று உளறிக்கொண்டிருந்தால் நாம்தான் பைத்தியம்.

கலாச்சாரச் சீரழிவு

இந்தியாவில் இன்றைக்குக் கலாச்சாரச் சீரழிவுகள் வந்துவிட்டன. 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற பண்பாடு மறைந்து வருகிறதோ என்ற மயக்கம் வருகிறது.

பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் நட்புகள் வரம்பு மீறிப் போய்விட்டதோ என்ற அச்சம் வருகிறது.

'வேலி தாண்டிய வெள்ளாடு’களாக மாணவர்கள் மட்டுமல்ல,மாணவிகளும் தாவி குதிக்கின்றனரோ என்ற கலக்கம் ஏற்படுகிறது.

வெளிநாடுகளுக்குப்போய் வருவோர் அங்குள்ள கலாச்சாரச் சீரழிவுகளைக் கொண்டு வந்து இங்குள்ளோருக்குப் பரப்பி வருகிறார்கள்.தொற்று நோய்களைப் போல  'அசிங்கம் பிடித்தக் கலாச்சாரம்' இங்கும் ஆழமாய்க் காலூன்றுகிறதோ என்ற அச்சம் வருகிறது.

'தங்கப் பதக்கம்' படத்தில் ஒரு பாடல்உண்டு.

'சோதனை மேல் சோதனை போதுமடா சாமி..வேதனைதான் வாழ்க்கை’ என்றால் தாங்காது பூமி.

அந்தப் பாடலின் இடையில் ஒரு வசனம் வரும்.

'மாமா காஞ்சிப் போன பூமி எல்லாம் வத்தாத நதியைப் பாத்து ஆறுதல் அடையும்.
அந்த நதியே காஞ்சி போய்ட்டா?
துன்பப்படுறவங்க எல்லாம் அந்தக் கவலையைத் தெய்வத்துக்கிட்ட முறையிடுவாங்க.
ஆனா தெய்வமேக் கலங்கி நின்னா?
அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?'

அது போலச் சீரழிவுத் தொற்று நோய்கள் பொறுப்புள்ள இந்தியர்களுக்கும் பரவிவிட்டால் என்னாவது? என்று கேட்டார் நண்பர்.

பயப்படாதீர்கள். கலாச்சாரச் சீரழிவுகள் தொற்று நோயாக இருக்கலாம். ஆனால் இங்குள்ளவர்கள் அதற்கு இடம் தரமாட்டார்கள்! அந்த அளவுக்கு இவர்கள்  'இளித்தவாயர்கள்' அல்ல! 'காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை” சித்தர்கள் வாழ்கிறார்கள்!

நாகரீக மோகத்தால் வெளிநாடுகள் போய் பாழாகும் சில பேராடுதான் போய்ச் சேரும் அந்த ஆபாச நோய்கள்!

இங்குள்ளவர்களிடம் நல்ல நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கிறது. பக்தியை விட மேலான 'நோய் எதிர்ப்புச் சக்தி' இருக்க முடியுமா?

வெல்ல முடியாத வல்லமையானப் பக்தி நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கிறது! அதனை மீறி எந்த வெளிநாட்டுக் கலாச்சாரமும் இங்குத் தலை காட்ட முடியாது. வெளித் தெரியாமல் நடக்கும் சில கேடுகளை நாம் கண்டு கொள்ள வேண்டாம். அவற்றைக் கண்டு கொண்டு தண்டித்து களை எடுக்க வேண்டியது  கடவுளின் கடமை. அவன் பார்த்துக் கொள்வான், விட்டு விடுங்கள் என்றேன். 

மகாபாரதம், ராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற இதிகாசங்கள் எல்லாம் காலத்தால் அழியாதக் காப்பியங்கள். 

காப்பியம் என்றால் 'காப்பது' என்று பொருள்.

திருஞான சம்பந்தர் எழுதிய தேவாரத்திற்குப் பெயரே 'திருக்கடைக் காப்பு'.

முன்வினைத் துன்பங்களிலிருந்து நம்மைப் பாதுகாப்பது என்று அதற்குப் பொருள். 

எனவே இங்குள்ள சித்தர்களும், ஞானிகளும், அருளாளர்களும் அருஉருவமாகவே நம்மோடு உலவிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நம்மைக் காப்பாற்றுவார்கள்.  நம்மைக் கைவிட மாட்டார்கள். எதுவும் நம்மை அணுக விட மாட்டார்கள் என்ற நம்பிக்கை வேண்டும்.

ராவண நண்பன்

எனது அந்த திருச்சி நண்பரின் வாழ்க்கையில் ஏற்பட்ட அந்தச் சோதனை ஒரு ராமாயணச் சோதனை.

இப்படிச் சொன்னாலே புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

அவரது மனைவியை ஒரு 'காமத் தெரு நாய்' கடித்துவிட்டது.

அந்த நாயை அவர் வீட்டு நாய் என்று நினைத்துக் கொண்டு உள்ளே அனுமதித்துவிட்டார்.

அந்த நாய்க்கு மனைவியும் பலியாகிப் போனாள்.

நாய் கடித்துவிட்டதே என்று மனைவியைக் கடிக்கவில்லை.

மன்னித்தார்.

அதனால் மனைவியும் திருந்தினார்.

நாய் ஓடி விட்டது. 

காலம் கடந்தது. காயமும் ஆறியது.

மன்னித்தாரே என்று கணவனின் கால்களுக்கு  அவர் மலர் தூவிக் அர்ச்சித்துக் கொண்டிருக்கிறாள், இன்றும்!

அதுவே அக்கணவனுக்கும் மனைவி மீது மிகுந்த அன்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னிக்கும் குணத்துக்குள்ளேதான் மகத்தான எதிர்காலம் மறைந்திருக்கிறது!

நம்புங்கள்.

அதைப் புரிந்து கொள்வதற்கு 'மன்னிக்க முடியாத குற்ற'த்தையும் மன்னித்துப் பார்க்க வேண்டும். 

மன்னிக்கும் மனப்பக்குவம் எல்லோருக்குமே வந்துவிடாது. 

மன்னிக்காத குணம் மனிதனை வெறி பிடித்த மிருகமாக மாற்றிவிடும்! வெறித்தனத்தால் குற்றங்கள் செய்துவிட்டு சிறைக்குள் சென்று கம்பி எண்ண வைத்துவிடும்!

தண்டிக்கப்படுவதால் காலம் விரயம். வெறும் தண்டனை மனிதனை மேலும் மிருகமாக மாற்றிவிடும். அவனை மீண்டும் குற்றவாளியாக்கிவிடும், எச்சரிக்கை!

மன்னிப்பதே திருந்த வழி வகுக்கும் ஒரே மார்க்கம். 

திருந்திவிட்டால் தண்டனை இல்லை. கால விரயமும் இல்லை. அதனால் வருங்காலமும் கனிந்து இனிக்கும்!

இல்லாது போனால் நிகழ்காலமும் எதிர்காலமும் எட்டிக் காயாகக் கசக்கத் தொடங்கிவிடும்!

கட்டிய மனைவியை தெருநாய் கடித்துக் குதறியிருக்கிறது. கடிக்கும் அளவிற்கு கட்டிய மனைவியும் தெரு நாயிடம் பழகியிருக்கிறாள். இரண்டு பேரையுமே தீர்த்துக்கட்டாமல் விட்டு விடுவதா, என்ன அநியாயம் என்று கேட்கத் தோன்றும். 

அநியாயம் அல்ல - 

அது ஒரு அறியாமை!

இதுபோன்ற எத்தனையோ கொடுமைகள், தீமைகள், துரோகங்கள் இருக்கலாம்.

கிறிஸ்த்துவ வேதத்தில் இறைவன்  பத்துக் கட்டளைகளில் ஒன்றாக ‘பிறன் மனைவியை இச்சியாது இருப்பாயாக‘ என்று கட்டளை இட்டுள்ளார். 

மற்றும் ‘பிறன் மனைவியைத் தொடுகிறவன் எவனும் ஆக்கினை தீர்ப்புக்குத் தப்பான்' என்றும், ஒரு ஸ்திரியை இச்சையோடு பார்க்கிறவன் அவளோடு விபச்சாரம் செய்கிறான் என்றும் விபச்சாரகாரன் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரியும் இடத்தில் பங்கடைவான் என்றும் மிகக் கடுமையான எச்சரிப்பு கூறப்பட்டுள்ளது.

ஆணுக்கு ஒரு நீதி பெண்ணுக்கு ஒரு நீதியா?

கிறித்துவ வேதத்தில் சொல்லப்பட்ட காலத்தில் ஆண்கள் மட்டுமே 'பிறன் மனை' நாடுபவர்களாக இருந்தனர் என்பதை இதிலிருந்துப் புரிந்து கொள்கிறோம்.

ஆனால் காலம் மாறிவிட்டது.

கலி முற்றிவிட்டது.

பெண்களும் மாற்றாளின் மணாளனை மயக்கத் தொடங்கியிருக்கிறார்கள், இன்று! கேட்பதற்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. 

இதையே பிறத்தியாள் கணவனை வளைத்துப் போடத் துடிக்கும் பெண்களுக்கும் சொன்னதாகப் படித்துப் பாருங்களேன்!  

ஆனால் எவன் கேட்பான். எவள் கேட்பாள்? கேட்பவர்கள் , சிலரைத் தவிர?

இவற்றைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் கண்மூடித்தனமாக எல்லை தாண்டுகிறார்கள்.

அத்தனைக்கும்  அந்த முன்வினைதான் மூலகாரணம். முன் வினை ஒன்றைத் தவிர சத்தியமாக வேறு காரணம் ஏதுமில்லை!

அதெப்படி முன் வினை என்று உறுதியாகச் சொல்கிறீர்கள்? புரியும் படியாகத்தான் சொல்லுங்களேன் என்று கேட்கலாம்.

வாடகை வீடு

பல வருடங்களுக்கு முன்னால் நான் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தேன்.

சரியாக வாடகை கொடுத்து வந்தேன். எந்தவிதப் பிரச்னைக்கும் இடம் தரவில்லை. ஆனாலும் வீட்டு உரிமையாளர் ஒரு சந்தர்ப்பத்தில் காலி பண்ணச் சொல்லி எனக்கு நெருக்கடி கொடுத்தார்.

நான் காரணம் கேட்டேன். அவர் சொல்ல மறுத்து விட்டார்.

'எனக்கு வீடு வேண்டும் காலி பண்ண முடியுமா முடியாதா? முடியாதென்றால் வீட்டுக்கு ரவுடிகளை அனுப்பிச் சாமான்களை அள்ளி வீதியில் எரியச் செய்வேன்' என்றார். 

ஒரு காவல் ஆணையருக்கு அப்போது யோகா சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அவரிடம்  அதைப் பற்றிச் சொன்னேன். 

அவரோ 'நீங்கள் விடுங்கள் மாஸ்டர், ரவுடிகள் வந்ததும் ஒரே ஒரு கால் மட்டும் பண்ணுங்கள். வீட்டு உரிமையாளர், ரவுடிகள் அத்தனை பேரையும்  குண்டுக் கட்டாகத் தூக்கிக் கொண்டு வந்து உள்ளே தள்ளிவிடுகிறேன்' என்றார்.

அதே சமயம் ஆன்மீகத்தில் இருக்கும் திரு. 'டொயோட்டா' பிரகாஷ் என்பருக்கும் யோகா கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தேன். 

அவர் சொன்ன பதில்தான் எனக்கு நல்லதாகப்பட்டது. அதுவே எனக்கு ஒரு உண்மையை உணர்த்தியது. அதுவே எனக்குத் திருப்புமுனையாகவும் அமைந்தது!

ஆம். அவர் சொன்னது இதுதான்: 'போன பிறவியில் நீங்கள் அந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் மாஸ்டர். உங்கள் 'ஓனர்' அதில் 'டெனன்ட்'  மாஸ்டர். நீங்கள் அவரைக் காலி பண்ணச் சொல்லி டார்ச்சர் கொடுத்திருக்கிறீர்கள். அதைத்தான் அவர் இப்போது உங்களுக்குத் திருப்பிச் செய்கிறார். இல்லாவிட்டால் இவ்வளவு உண்மையான,  எளிமையான, நேர்மையான, எவர் பொருளுக்கும் ஆசைப்படாத ஒரு யோகா மாஸ்டரைக் காலி பண்ணச் சொல்லி 'டார்ச்சர்' கொடுப்பாரா? நன்றாக யோசித்துப் பாருங்கள் மாஸ்டர், புரியும் என்றார்.

அடுத்த நாளே சத்தமில்லாமல் வீட்டைக் காலி பண்ணிவிட்டேன். 

நாம் பிறருக்குச் செய்ததுதான் நமக்கு இன்று திரும்பி வருகிறது.

காலி பண்ணச் சொன்னக் காரணம் என்னவென்ற உண்மை காலி செய்த பிறகுதான் என் காதுகளுக்கு எட்டியது.

அந்த வீட்டில் தொடர்ந்து பனிரெண்டு ஆண்டுகளாக இருந்துவிட்டேனாம். அதனால் சட்டப்படி அந்த வீடு எனக்குச் சொந்தமாகிவிடுமாம்! அதற்காகத்தான் காலி பண்ணச் சொன்னாராம்.

'அட்டாங்க யோகத்தில் முதல் யோகமே 'யமம்' என்ற பற்றறுக்கும் யோகமாகும். அது எவருடைய எந்தப் பொருளுக்கும் ஆசைப்படக் கூடாது என்ற கட்டுப்பாட்டு யோகமாகும். அது அந்த ஓனருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

ஆனால் அந்த வீட்டைக் காலி செய்த பிறகுதான் அதைவிட வசதியும் நாகரீகமும் உள்ள நல்ல வீட்டிற்கு வர நேரிட்டது. 

எனவே, எல்லாம் நன்மைக்கே!

நம் மனைவியோ கணவனோ  இன்றைக்கு நமக்குச் செய்யும் துரோகம் என்பது நாம் போன பிறவியில் நம் மனைவிக்கோ கணவனுக்கோ செய்துவிட்ட துரோகத்தின் பிரதிபலிப்பே அன்றி வேறில்லை!

போகட்டும் விட்டுவிடுங்கள். மன்னிப்பது மனித குணம். திருந்துவதே குற்றவாளியின் குணம். தண்டித்துவிட்டால் திருத்தமுடியாது. திருந்தாவிட்டால் தண்டித்ததே பாவமாகி நம்மைத் தொடரும்.

அது வேண்டாம்!
 
அந்த நண்பர் தன் மனைவியை மன்னிக்கக் காரணம் நான் அவரிடம் சொன்ன இந்த விளக்கமே!

முன்வினையை ஒப்புக் கொள்ளப் போய் அவர் வாழ்க்கையே இன்றைக்கு சுகபோகமாக நிம்மதியாக, சந்தோஷமாக மாறியுள்ளது.

அவர் ஒப்புக் கொள்ளாமல் மனைவி மீது அதிரடி நடவடிக்கை எடுத்திருந்தால் பிரபலமான தினசரிச் செய்தித்தாளிலும், தொலைக்காட்சிகளிலும் அவர்கள் நாறடிக்கப்பட்டிருப்பார்கள்!

மதுரை மையப் பேருந்து நிலையத்தருகில் இருந்த ஒரு கிறித்துவக் கல்லறையில் நான் எப்போதோ பார்த்தஒரு விளம்பர போர்டு இப்போதும் என் மனக்கண்களில் தெரிகிறது.

'இன்று எனக்கு -நாளை உனக்கு!'

மரணம்  மட்டுமல்ல, இன்று பிறருக்குச் செய்யும் பாவங்கள் அனைத்தும் அப்படியே நாளை அப்படியே நமக்கு!

மறந்துவிடாதீர்கள்!

(ஞானம் பெருகும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com