22. சேவையின்  மகிமை

அறியாமைதான் நம்மை அடி முட்டாளாக்கி வைத்திருக்கிறது. இனியாவது அறியாமைகளை விலக்கி  
22. சேவையின்  மகிமை



அறியாமைதான் நம்மை அடி முட்டாளாக்கி வைத்திருக்கிறது. இனியாவது அறியாமைகளை விலக்கி  உடலுக்கும் மனதுக்கும்  புத்துயிரூட்டுவோம் என்று சென்ற வாரத்தில் பார்த்தோம்.

மனதின் அறியாமைதான் நல்லதைத் தீயதாகவும், தீயதை நல்லதாகவும் கருத வைக்கிறது. மனிதன்தான்  தேவைக்குரியதை விட்டுவிட்டு தேவையற்றதையே விரும்பிக்கொண்டிருக்கிறான். முன்னோர் சொன்னவற்றை எல்லாம் முறையாகக் கடைப் பிடித்தால் நிச்சயம் துன்பம்  இல்லாமல் வாழலாம். ஆனால் கேட்க மாட்டானே. அதுதான் சிக்கல் என்றேன். 

கேட்காதவனுக்கு உபதேசங்கள் எதற்கு? ஏன் இந்தக் குப்பைகளை எல்லாம் எழுதி வைத்தார்கள்? என்றார் சதாசிவம். அந்தக் குப்பைகள்தான் நம்மை விதி என்ற கொடிய வினைத் துன்பங்களிலிருந்து மீட்க வல்லவை. மனிதன் தன் பாவங்களுக்காக மனம் வருந்தித் தண்டனைக்குத் தலை வணங்கி, இறைவா என்னை  இத்துன்பத்திலிருந்து மீட்டு விடு, மீண்டும் பாவமே செய்யாத நிலைக்கு என்னை மாற்றிவிடு என்று  மன்றாட வேண்டும். அப்படி மன்றாடினால்  இறைவனும் மன்னித்து விடுவானா? மன்றாடினால் மட்டுமல்ல, தனது வாழ்க்கையைப் பிறருக்கான வாழ்க்கையாக மாற்ற வேண்டும்.

அது என்ன பிறருக்கான வாழ்க்கை?

உங்கள் வாழ்க்கை மற்றவர்களால்தானே  பாவப்பட்ட வாழ்க்கையாக மாறியது. அந்த வாழ்க்கையைப் புண்ணியம் மிக்க வாழ்க்கையாக மாற்ற நாம் நமக்கான வாழ்க்கையை மற்றவர்களுக்கான வாழ்க்கையாக மாற்றியாக வேண்டும் என்றேன். 

புரியவில்லையே? என்றார் நண்பர்.

உங்கள் வாழ்க்கையில் பிறர் வாழ்க்கையைப் பார்க்க வேண்டும். பிறர் வாழ்க்கையில் உங்கள் வாழ்க்கையைப் பார்க்க வேண்டும் என்றேன்.

எனக்கு என்று ஒரு குடும்பமும் வாழ்க்கை முறையும் இருக்கிறது. மற்றவர்களுக்கென்று ஒரு குடும்பமும் வாழ்க்கை முறையும்  இருக்கிறது. இதையும் அதையும் போட்டுக் குழப்புவதா? என்றார் சதாசிவம்.

குழப்புவது என்று சொல்வதை விடக் 'கலப்பது' என்று சொல்லிப் பாருங்களேன், நாகரீகமாக  இருக்கும் என்றேன்.

யோசித்துக் கொண்டே இருந்தார்.

என்ன யோசிக்கிறீர்கள், மதி இருக்கும்போது தாராளமாக யோசிக்கலாமே என்றேன். 

மதி என்றால் அறிவுதானே என்று கேட்டார் நண்பர்.

ஆமாம், அதற்கு நிலவுஎன்ற மற்றொரு பெயரும் உண்டு. ஆனால் அறிவு என்பதும் நிலவு என்பதும் இறைவனையே அடையாளம் காட்டுகின்றன! 

நிலவு என்றால் முழு நிலவு, பிறைச் சந்திரன் இரண்டையும் குறிக்கும். பிறைச் சந்திரனைத்தான் சிவன் தன் தலையில் சூடியிருக்கிறான். 

சிவன் தலையில் ஏன் பிறைச்சந்திரனைச் சூடிக் கொண்டிருக்க வேண்டும். முழு நிலவையே சூடிக் கொள்ளக் கூடாதா? என்று கேட்டார் சதாசிவம்.  

முழு நிலவைச் சூடியிருந்தால் குறை நிலாவாகிய பிறை நிலையைக் கடந்து விட்டவன் என்று பொருள்.  அதாவது முழுமை பெற்றவன் என்று பொருள். முழு நிலவைப் பார்க்கச் சந்தோஷமாகவும் இருக்கும். 

அதுவும் எத்தனை நாளைக்கு? அடுத்த நில நாட்களில் அதுவே குறையத் தொடங்கிவிடுமே! நிலவு குறையக் குறைய மனதுக்கு வருத்தமளிக்கும். அது மிகவும் சிறியதாகி ஒருநாள் சுத்தமாகக் காணமுடியாதபடி மறைந்து போயிருக்கும்.  அன்றுதான் “அமாவாசை” ! நிலவைக் காணாத வானம்போல மனமும் அமாவாசை அன்று குறைபட்டுக்கொள்ளும். 

அமாவாசைக்குப் பிறகு மெல்லியதாக வானில் வளர்பிறை தோன்றும். அப்போது மனதுக்குள் ஒரு வகை இனம் புரியாத மகிழ்ச்சியும் தோன்றும்.  காரணம் நிலவு வளர்ந்து முழு நிலவாகப்போகிறது என்ற எதிர்பார்ப்புத்தான்.  

அமாவாசையைக் காரணம் காட்டி, சிவன் தன் தலையில் நிலவை மறைக்க முடியாது. முழு நிலவைக் காரணம் காட்டிச் சிவன் தன் தலையில் முழு நிலவையும் வைத்துக் கொள்ள முடியாது. காரணம் மறுநாள் அந்த முழுநிலவும் தேயத் தொடங்கிவிடும்!

இந்த “வம்பே வேண்டாம்” என்றுதான் அவன்  ஒரே முடிவாகப் “பிறைச் சந்திரனை” மட்டுத் தூக்கி வைத்துக்கொண்டான். 

பொதுவாகப் பிறைச்சந்திரனை வானில் காணும் போது, அது வளர்பிறையா தேய்பிறையா என்று தெரியாது. 

அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறையாகவும் இருக்கலாம். அல்லது-பௌர்ணமிக்குப் பிறகு வரும் தேய்பிறையாகவும் இருக்கலாம். வளர்பிறையா தேய்பிறையா? என்று குழம்புவோர் “சட்”டென்று ஒரு முடிவுக்கு வந்துவிடலாம்.

வளர்பிறையாக இருந்தாலும் சரி, தேய்பிறையாக இருந்தாலும் சரி, இரண்டுமே தவிர்க்க முடியாதது. 

வளர்பிறையும் தேய்பிறையும் அவரவர் “வினை வாழ்க்கை”யினைப் பிரதிபலிக்கும்  கண்ணாடியாகவே அவரவர்க்கு அமைகிறது. இன்பம் வரும்போது- வளர்பிறை நிலவு நமக்கு வாழ்க்கையில்  இன்பம் வளர்வதைக் காட்டுகிறது.

துன்பம் வரும்போது-

தேய்பிறை நிலவு நமக்கு வாழ்க்கையில் இன்பம் குறைவதைக் காட்டுகிறது. 

ஒருநாள் அமாவாசை வந்து சேரும். அப்போது மீண்டும் இன்பங்கள் தலை தூக்கும்.  தொடங்கும்.

இதுதான் வாழ்க்கை.

இந்தச் சுற்று வட்டம் இயற்கைக்கும் வாழ்க்கைக்கும் சரியாகப் பொருந்தும்.

யாருக்கும் எதுவும் நிரந்தரம் அல்ல!

வாழ்வில் இன்பமும் துன்பமும் உண்டு.

இந்த இரண்டுமே வாழ்க்கையில் நிரந்தரம் அல்ல.

நிலவில் வளர்ப்பிறை தேய் பிறை உண்டு. 

அந்த நிலவுக்கே  அமாவாசையும், பௌர்ணமியும் நிரந்தரம் அல்ல!

இதுதான் உண்மை. இதுதான் நிரந்தரம். 

இதை அனைவருக்கும் அறிவுறுத்தவே சிவன் தலையில் நிரந்தரமாகப் பிறை நிலாவைச் சூடிக்கொண்டிருக்கிறான். 

இனிமேல் அவரவர் வாழ்க்கையில் ஏற்படும்  கஷ்ட நஷ்டங்களை வைத்து அது வளர்பிறையா தேய்பிறையா என்பதை அவரவரேக் கண்டு கொள்ளலாம். 
*


இருவரும் சடையுடையார் ஹோட்டலில்  ஊத்தப்பத்திற்கு  ஆர்டர்  கொடுத்து விட்டுக் காத்திருந்தோம். அகலசகலமான இரண்டு ஊத்தப்பங்கள்  வந்து அவரவர் இலைகளில் விழுந்தன. 

சதாசிவம் ஆவி பறந்த ஊத்தப்பத்தைப் புரட்டிப் போட்டார்.

ஏன் அப்படிப் பார்க்கிறீர்கள்? என்றேன்.

இரண்டு பக்கமும் வெந்துள்ளதா என்று பார்க்கிறேன் என்றார்.
வெந்துள்ளதா? 

ஓ...நன்றாக!  ஒரே மாதிரி வெந்துள்ளது. ஓரங்கள் “மொறு மொறு” வென்றுள்ளது. நடுப்பகுதியில் மேடான பகுதிகள் மட்டும் முறுகிப்போயுள்ளன. மற்ற பகுதிகள் “மெத்துமெத்”தென்று உள்ளன. எப்படி இவ்வளவு பதமாகவும் இதமாகவும் சுடுகிறார்கள்? என்று கேட்டார்.

சர்வர் சட்டினி சாம்பார் கிண்டிகளை எடுக்கப் போயிருந்தார்.

அப்போது சதாசிவத்திடம் அந்த ஊத்தப்பத்தைக் கொஞ்சம் விண்டு வாயில் வைத்துச் சுவைத்துப் பாருங்களேன் என்றேன்.

எதற்கு? சட்டினி வரட்டுமே என்றார்.

நானே எனது ஊத்தப்பத்தைக் கொஞ்சமாக விண்டு வாயில் வைத்துச் சுவைத்தேன்.

என்னைப் பார்த்துவிட்டு அவரும் விண்டு சுவைத்தார். ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? என்றார்.

இரண்டு பக்கமும் வெந்துள்ளது என்று சொன்னீர்கள். சாப்பிடாமல் சொன்னது குறைதானே. சாப்பிட்டுப் பார்த்துச் சொன்னால்தானே அது சரியாக இருக்கும் என்றேன்.

ஓ.. என்று தலையாட்டினார்.

“கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய்”.

“எப்பொருள்  யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு” அல்லவா? 

இந்தத் தோசை இரண்டு பக்கமும் வெந்துள்ளது என்பதை எவரிடமாவது விசாரிக்க முடியுமா. பார்வைக்கு வெந்துள்ளது. சுவைத்துப் பார்த்தால்தானே உண்மை தெரியும். 

அதற்கு மட்டுமல்ல, சட்டினி சாம்பார் விழும் முன்பே சுவைத்துப் பாõத்தால் அது பழைய மாவா, புதுமாவா, உப்பு உள்ளதா இல்லையா, போதுமா போதாதா போன்ற பலவிஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்  அல்லவா?

ஊத்தப்பத்திற்குள்  இத்தனைத் விஷயங்களா? என்றார் சதாசிவம்.

கேட்டுக் கொண்டிருந்தபோதே சர்வர் வந்து சாம்பார் சட்டினிகளைக் கொட்டினார். இருவரும் சுவைத்துக்கொண்டே பேசினோம்.

உங்கள் வாழ்க்கையில் பிறர் வாழ்க்கையை ருசிக்க வேண்டும். பிறர் வாழ்க்கையில் உங்கள் வாழ்க்கையை ருசிகக வேண்டும் என்று சொன்ன போது அது எப்படி சாத்தியம் என்றீர்களே, அதற்கான விடை இப்போது கிடைத்துவிட்டது என்றேன்.

விடையா, எங்கே கிடைத்தது, எப்போது கிடைத்தது? என்றார் சதாசிவம். இதோ இங்கு இப்போது, இந்த ஊத்தப்பத்திற்குள் ஊற்றப்பட்டுள்ளது கிடைத்தது என்றேன்.

இந்த ஊத்தப்பத்திலா என்றவாறு மென்று கொண்டே இலையில் இருந்த ஊத்தப்பத்தைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தார் சதாசிவம். 

நன்றாகப் பாருங்கள். ஊத்தப்பத்தின் ஒரு பக்கம் உங்கள் வாழ்க்கை. மற்றொரு பக்கம் மற்றவர்கள் வாழ்க்கை! உங்கள் வாழ்க்கையில் மற்றவர்கள் வாழ்க்கையைப் பார்க்க வேண்டும். மற்றவர்கள் வாழ்க்கையில் உங்கள் வாழ்க்கையைப் பார்க்க வேண்டும். 

என்ன சொல்கிறீர்கள் என்று சதாசிவம் கேட்டுக் கொண்டிருந்தபோது சர்வர் வந்து மேலும் சாம்பாரையும சட்டினியைம்  ஊத்தப்பங்கள் மீதும் ஊற்றிவிட்டுச் சென்றார்.

ஊறி உருக்குலைந்த ஊத்தப்பங்களை  நொறுக்கிவிட்டுச் சுவைத்தோம்.

சட்டினி சாம்பாரைத் தொட்டுத் தொட்டுச் சாப்பிடுதைவிட இப்படிக் குழைத்துச் சாப்பிட்டால் இன்னும் சுவையாக உள்ளது அல்லவா? அதுபோலத்தான் மற்றவர்களுக்கு  சேவை செய்து வாழும் போதுதான் நம் வாழ்க்கை சுவையாக இருக்கும். அதாவது ஊத்தப்பத்தின் முன்பக்கமும் பின்பக்கமும் உடைந்து ஒன்றாகிப் போய் சுவைக்கும் போது ஏற்படும் சுவைபோல. அந்தச் சுவைக்குக் காரணம் ஒன்று கலப்பு. சாம்பாரும், சட்டினியும் அன்பும் சேவையும். வாழ்க்கையின் சுவைக்கு மற்றவர்களோடு ஒன்று கலக்க வேண்டும். அதற்கு மற்றவர்களிடம் அன்பு காட்டிச் சேவை செய்ய வேண்டும். அதுதான் பேரின்பம். அதுவே  பேரானந்தம். 

அப்படியா என்றபடி முகத்தை அன்னார்ந்து பார்த்து வாயில் தண்ணீரை  ஊற்றினார் சதா.

ஆமாம் சதா, சேவையை விடப் பெரிய மன்னிப்பு வேறில்லை. சேவையை விடப் பெரிய பரிகாரம் வேறில்லை. சேவையை விடப் பெரிய சாபக்கேடும் வேறில்லை. காரணம் சேவையை விடப் பெரிய தான தர்மம் வேறில்லை. சேவையை விடச் சிறந்தது உலகத்தில் எதுவுமே இல்லை!

அப்படியா!!

ஆம், இந்த ஊத்தப்பப்பம் மட்டுமல்ல, வடையோ, பஜ்ஜியோ எதுவானாலும் அதற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. இரண்டு பக்கம் இல்லாமல் எதுவுமே இல்லை.

ஒற்றை அரிசியாகட்டும், ஒரு காயாகட்டும், ஒரு கனியாகட்டும். .. பொருட்கள் மட்டுமல்ல-

பொழுதுகூட இரவும் பகலும் என்று இரண்டாக உள்ளது. 

சுவைகூட இனிப்பு கசப்பு என்று இரண்டாக, 

நிறங்கள்  கருப்பு வெள்ளை இரண்டாக,

உணர்வுகள் இன்பம் துன்பம் என்று இரண்டாக,

காட்சிகளில் தோற்றம் என்று  மறைதல் என்றும் இரண்டாக, செயல்பாடுகளில் கூட வருவதும்  போவதுமாகிய இரண்டு உள்ளது

உட்காருவது எழுவதும் இரண்டாக, 

இறுதியாக நின்று கொண்டிருப்பதும் நெடுஞ்சாண் கிடையாப் படுத்து விடுவதுமாக  எல்லாமே இரண்டு இரண்டாக உள்ளதல்லவா? 

உயிர்களுக்குக் கூட பிறப்பு இறப்பு என்று இரண்டு பக்கம் உள்ளது.

நம் வாழ்க்கை சுவையாக இருக்க வேண்டுமானால் மற்றவர்கள் வாழ்க்கையும் சுவையாக இருக்க வேண்டும்.

ஊத்தப்பத்தின் ஒருபக்கச் சுவைதான் மறுபக்கமும் இருக்கும்.

ஆனால் அதைஉண்ணும் மனிதனின் உள்ளத்தில் ? எத்தனை வேறுபாடு, பகை?
ஊத்தப்பத்தின் ஒரு பக்கம் மட்டும்போதும் என்று சொல்ல முடியுமா?

ஆனால் தான் மட்டும் நன்றாக வாழ்ந்தால் போதும் என்று  நினைக்கிறார்கள். அது முற்றிலும் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதாகும்.

அது ஒரு குற்ற வாழ்க்கை!

நாம் மற்றவர்களுக்குச் சேவை செய்தால் நம் வாழ்க்கை குற்றமற்றதாகிவிடும். 
இதைத்தான்” ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளதானே வளரும்” என்ற பழமொழியாக்கிச் சொன்னார்கள் முன்னோர்கள். 

ஞானம் பெருகும்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com