35. யார் நல்லவன்?

நான், எனது என்ற வார்த்தைகள் அகம்பாவத்தின் அடையாளங்கள். அதை மறந்து, மற்றவர்களை மதித்து அவர்கள் மீது அக்கறை கொண்டவர்களே நல்லவர்கள்.
35. யார் நல்லவன்?

இரண்டு நண்பர்கள் அன்று ஆசிரமம் வந்து, குருநாதரை வணங்கினார்கள். ஆசிர்வதித்தார் குரு. அவர்கள் பேசப்போகும் வார்த்தைகளுக்காகக் காத்திருந்தார்.

அவர்களுக்குள் என்ன பிரச்னை என்பதைத் தெரிந்துகொள்வதில் சிஷ்யனுக்கும் ஆர்வம் ஏற்பட்டது. குருவின் அருகே வந்து அமர்ந்துகொண்டான்.

‘‘நாங்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வருகிறோம். இருவரும் நெருங்கிய நண்பர்கள்’’ என்றான் முதலாமவன்.

‘‘ஆமாம் குருவே..’’ என்றான் இரண்டாமவன்.

‘‘நல்லது. என்ன பிரச்னை உங்களுக்குள்?’’ என்றார் குரு.

‘‘இருவருக்குள் யார் மிகவும் நல்லவன் என்று எங்களுக்குள் ஒரு விவாதம் வந்தது. எவ்வளவு யோசித்தாலும் எங்களால் விடையைக் கண்டுபிடிக்க முடியவில்லை’’ என்றான் முதலாமவன்.

‘‘நல்லவன், நல்லது என்பதை எப்படி அளவிடுவது எனத் தெரியவில்லை குருவே. உங்களைச் சந்தித்தால் ஒரு தெளிவு பிறக்கும் என்பதற்காகவே இங்கு வந்தோம்..’’ என்றான் இரண்டாமவன்.

பிரச்னை என்ன என்பது சிஷ்யனுக்கும் புரிந்தது. குரு என்ன தீர்வு கொடுக்கப்போகிறார் என்பதை அறிந்துகொள்ளும் ஆவல் அவனுக்கும் அதிகமானது.

இரு இளைஞர்களையும் ஆழமாக உற்று நோக்கினார் குரு. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகை புரிந்துகொண்டார்கள். அது அவர்களுக்குள் இருக்கும் நல்ல நட்பை உணர்த்தியது. இருந்தபோதும் அவர்களை சோதித்துப் பார்க்க முடிவெடுத்தார் குரு.

முதலாமவனைப் பார்த்துக் கேட்டார் குரு.. ‘‘உன் நண்பனைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?’’.

‘‘இவனே என்னைவிட நல்லவன். அதைச் சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறான்’’ என்று குருவிடம் சொன்னான் அவன்.

இப்போது இரண்டாமவன் முறை. ‘‘நீ உன் நண்பனைப் பற்றி என்ன நினைக்கிறாய்?’’ என்று கேட்டார் குரு.

‘‘இவன்தான் என்னைவிடவும் நல்லவன். ஆனால் நான் சொல்வதை நம்ப மறுக்கிறான்’’ என்றான் அவன்.

சிஷ்யனுக்கு தன் கண்களையும் காதுகளையும் நம்பவே முடியவில்லை. நானே இவனைவிடவும் நல்லவன் என்றுதான் இருவரும் தனித்தனியே சொல்லப்போகிறார்கள் என எதிர்பார்த்துக் காத்திருந்தான் அவன். ஆனால், இருவருமே ஒருவரையொருவர் உயர்வாக மதிப்பிட்டுப் பேசியதைக் கேட்டு வியப்பானான்.

‘‘நீங்கள் இருவருமே நல்லவர்கள்தான். அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது’’ என்றார் குரு. அவர்கள் புன்னகையில் தானும் சேர்ந்துகொண்டார்.

‘‘நான், எனது என்ற வார்த்தைகள் அகம்பாவத்தின் அடையாளங்கள். அதை மறந்து, மற்றவர்களை மதித்து அவர்கள் மீது அக்கறை கொண்டவர்களே நல்லவர்கள். அந்த வகையில் நீங்கள் இருவருமே ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இருவருமே நல்லவர்கள்தான். யார் முன்னே, யார் பின்னே என்று ஆராயும் சிந்தனையை விட்டுவிடுங்கள்’’ என்று கூறினார் குரு.

அதை ஏற்றுக்கொண்டு இருவரும் மகிழ்ச்சியோடு விடைபெற்றனர். நல்லவர்களை அளவிடுவதற்கான வழிகாட்டுதலை அறிந்துகொண்டதில் சிஷ்யனுக்கும் மகிழ்ச்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com