37. தாயன்பு

காக்கை தன் குஞ்சுகளுக்குக் கொடுக்கும் இரையையும் குயில் குஞ்சுகளே தட்டிப் பறித்துச் சாப்பிட்டன. உண்ட வீட்டுக்குச் செய்யும் துரோகம் அல்லவா இது!
37. தாயன்பு

‘‘முட்டாள் காகம்..’’ என்று சொல்லியபடியே ஆசிரமத்துக்குள் நுழைந்தான் சிஷ்யன்.

‘‘என்னாயிற்று?’’ எனக் கேட்டார் குரு.

‘‘தாய்க்காகம் இல்லாத சமயம் பார்த்து அதன் கூட்டில் தன் முட்டைகளை இட்டுவிட்டுச் சென்றிருக்கிறது குயில் ஒன்று. இரை தேடச் சென்றிருந்த தாய்க்காகம் திரும்ப வந்தது. தன் முட்டைகளுடன் குயில் முட்டைகளும் கலந்திருக்கிறது எனத் தெரியாமல், அவற்றையும் சேர்த்து அடை காக்கிறது. முட்டாள்தானே அது..’’ என்று கிண்டலும் கேலியுமாகக் கூறினான் சிஷ்யன்.

‘‘காகத்தின் முட்டையும் குயிலின் முட்டையும் நிறத்தில் வேறுபாடு கொண்டதாகவே இருக்கும்’’ என்றார் குரு.

‘‘அப்படியானால்.. அந்த நிற வேறுபாட்டைக்கூட கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் காகம் அடிமுட்டாள்தான்’’ என்றான் சிஷ்யன். கேலிச்சிரிப்பைத் தொடர்ந்தான்.

‘‘அவசரப்பட்டு முடிவெடுக்காதே. தொடர்ந்து அந்தக் கூட்டையும் தாய்க்காகத்தையும் கவனித்துக்கொண்டே இரு. சில நாட்களில் உண்மை எதுவென நீயே அறிந்துகொள்வாய்’’ என்று கூறினார் குரு.

அவர் சொன்னபடி, தினமும் அந்தக் கூட்டின் மீது ஒரு கண் வைத்தவாறே இருந்தான் சிஷ்யன். பொறுப்பாக அடைகாத்து வந்தது தாய்க்காகம்.

ஓரிரு நாட்களில் குயில் குஞ்சுகள் பிறந்துவிட்டன. தான் தேடியெடுத்து வரும் இரையை குயில் குஞ்சுகளுக்கு தாய்க்காகம் ஊட்டிவிடும் காட்சியைக் கண்டான் சிஷ்யன்.

ஆச்சரியம் மேலிட குருவிடம் ஓடிவந்து அந்தச் செய்தியைச் சொன்னான்.

‘‘பொதுவாகவே சீக்கிரம் குஞ்சு பொரித்துவிடும் தன்மை கொண்டவை குயில் முட்டைகள். இன்னும் மூன்று நாட்களில் காகத்தின் குஞ்சுகளும் முட்டைகளை விட்டு உலகுக்கு வரும். அதையும் பார்..’’ என்று கூறி அவனை அனுப்பினார் குரு.

அப்படியே நடந்தது.

கூட்டில் நிறைந்துகிடந்த காக்காய் குஞ்சுகளுக்கும் குயில் குஞ்சுகளுக்கும் வித்தியாசம் பார்க்காமல் இரை தேடி வந்து ஊட்டும் பணியைச் செய்துகொண்டிருந்தது அந்த தாய்க்காகம். அந்தக் காட்சியையும் பார்த்துப் பிரமித்தான் சிஷ்யன்.

பிரமிப்பு விலகாமல் குருவிடம் ஓடிவந்தான். தான் பார்த்த காட்சியைச் சொன்னான்.

‘‘அது குயிலின் முட்டைகள் எனத் தெரிந்தே அடைகாத்திருக்கிறது காகம். பொறுமையாகக் குஞ்சு பொறிக்கவும் செய்திருக்கிறது. தன் குஞ்சுகளுக்கு உணவு கொடுக்கும் அதே அன்புடன் குயில் குஞ்சுகளுக்கும் உணவு கொடுக்கிறது. இந்த உண்மை புரியாமல் நான்தான் அவசரப்பட்டு அதை முட்டாள் என்று கூறிவிட்டேன். உண்மையில் நான்தான் முட்டாள்’’ என்றான்.

புன்னகைத்துக்கொண்டார் குரு.

‘‘அதெப்படி குருவே அந்தக் காகம் இத்தனை பெரிய தியாகத்தைச் செய்கிறது?!’’ என்று கேட்டான் சிஷ்யன்.

‘‘தாயன்பு!’’ என்று ஒரு வரியில் பதில் சொன்னார் குரு.

ஓரிரு நாட்களில் வியர்க்க விறுவிறுக்க ஓடிவந்தான் சிஷ்யன்.

‘‘குருவே.. இன்று அந்தக் காகம் கூட்டில் இருந்த குயில் குஞ்சுகளை கீழே தள்ளி விட்டு விட்டது. தட்டுத் தடுமாறியபடியே எங்கோ சென்றுவிட்டன அந்தக் குயில் குஞ்சுகள்’’ என சோகத்துடன் சொன்னான்.

‘‘காக்கைக் குஞ்சுகளுக்கு முன்பே வெளிவந்துவிட்ட குயில் குஞ்சுகள் காகம் கொண்டு வரும் இரையை முழுதும் உண்டு மகிழ்ந்திருந்தன. காக்கைக் குஞ்சுகள் வெளிவந்த பின்னர், போதிய வலுவடைந்திருந்த குயில் குஞ்சுகள் மொத்த இரையையும் தாங்களே சாப்பிடும் பேராசை கொண்டவையாக மாறின. காக்கை தன் குஞ்சுகளுக்குக் கொடுக்கும் இரையையும் குயில் குஞ்சுகளே தட்டிப் பறித்துச் சாப்பிட்டன. உண்ட வீட்டுக்குச் செய்யும் துரோகம் அல்லவா இது! அதனால்தான் அவற்றைக் கீழே தள்ளிவிட்டது அந்த தாய்க்காகம். இது தாயின் கோபம்!’’ என்றார் குரு.

‘‘காக்கை குயில்கள் எங்கள் ஜாதி..’’ என சத்தம் போட்டுப் பாடியபடியே வெளியே ஓடினான் சிஷ்யன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com