31. எல்லாம் அவனென்றால்?

நமக்குத் தேவையான வெளிச்சம் விளக்கில் இருந்தே கிடைத்துவிடுகிறது என்பதனால், சூரியனே தேவையில்லை என்று சொல்லிவிட முடியுமா?!
31. எல்லாம் அவனென்றால்?

பல நாள் பயணத்தை முடித்துவிட்டு, ஆசிரமத்துக்குத் திரும்பி இருந்தார்கள் குருவும் சிஷ்யனும். திட்டமிட்டிருந்தபடி பல ஆலயங்களுக்குச் சென்று வந்திருந்தனர்.

சொர்க்கமே என்றாலும் அவரவர் இருப்பிடம் போலாகுமா? பிரிந்திருந்த ஆசிரமத்தை மறுபடியும் பார்த்த பெருமகிழ்ச்சியில் திளைத்திருந்தான் சிஷ்யன். தூசி படிந்திருந்த ஆசிரமத்தைச் சுத்தம் செய்துகொண்டிருந்தான்.

‘‘எப்படி இருந்தது இந்தப் பயணம்?’’ என சிஷ்யனிடம் கேட்டார் குரு.

‘‘நன்றாகத்தான் இருந்தது..’’ என்று சொன்னவன், தயங்கித் தயங்கி திரும்ப வந்தான். ஒரு கேள்வியையும் கேட்டான்.

‘‘இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான் என்றுதானே நீங்கள் போதித்திருக்கிறீர்கள்?’’ என்றான்.

‘‘ஆமாம், அதிலென்ன சந்தேகம். உன்னிலும் இருக்கிறான், என்னிலும் இருக்கிறான், ஒவ்வொரு ஜீவராசிகளுக்குள்ளும் இறைந்து இருக்கிறான். அதனால்தான் அவன் எல்லாம் வல்ல இறைவன்..’’ என்றார் குரு.

‘‘அப்படியானால், நாம் ஏன் கோயிலுக்குச் செல்ல வேண்டும்?’’ என்றான் சிஷ்யன்.

அவனை உற்றுப் பார்த்தார் குருநாதர். மறுபடியும் ஒருமுறை விளக்கமாக அதே கேள்வியைக் கேட்டான்.. ‘‘நமக்குள்ளேயே இறைவன் இருக்கிறான் எனும்போது நாம் கோயிலுக்குச் சென்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமேதும் இல்லையே குருவே.. நாம் ஏன் அலைந்து திரிந்து ஆலய தரிசனம் செய்ய வேண்டும்?’’ என்றான்.

கேள்விகள் ஆறு வகைப்படும். அறி வினா, அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா என்பதாகும். சிஷ்யனின் ஐய வினாவுக்கான பதிலைக் கூற முற்பட்டார் குரு. சிஷ்யனின் ஐயங்களையும், அறியாமையையும் போக்க வேண்டியது குருவின் கடமைதானே.

‘‘ஆசிரமத்துக்குள் விளக்கு இருக்கிறது. அதனால் தேவையான வெளிச்சம் நமக்குக் கிடைக்கிறது. இங்கே நமக்குத் தேவையான தண்ணீரும் இருக்கிறது. சரிதானே நான் சொல்வது?’’ என அறி வினா எழுப்பினார்.

‘‘ஆமாம் குருவே..’’ என்றான் சிஷ்யன்.

‘‘நமக்குத் தேவையான வெளிச்சம் விளக்கில் இருந்தே கிடைத்துவிடுகிறது என்பதனால், சூரியனே தேவையில்லை என்று சொல்லிவிட முடியுமா?! நமக்குத் தேவையான தண்ணீர் நம் இருப்பிடத்திலேயே இருக்கிறது என்பதற்காக, சமுத்திரத்தைப் பார்த்து பரவசம் கொள்ளும் அனுபவத்தை வேண்டவே வேண்டாம் என்று தள்ளிவிட முடியுமா?!’’ என்று அவனிடம் கேட்டார் குரு. சிஷ்யனின் கேள்விக்குப் பதிலாக, குருவிடமிருந்து எதிர்க் கேள்விகளே கிடைத்தன.

ஆனால், சிஷ்யன் சிந்திக்கத் தொடங்கினான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com