15. டிசம்பர் 13, 2015 ரோஹித் சர்மாவின் வாழ்க்கையில் மிக முக்கியமான தினம்! ஏன்?

ரோஹித் சர்மா தற்போது இந்திய அணியின் துணை கேப்டனாக பொறுப்பு வகிக்கிறார்.
15. டிசம்பர் 13, 2015 ரோஹித் சர்மாவின் வாழ்க்கையில் மிக முக்கியமான தினம்! ஏன்?

‘ஒவ்வொரு முறை இந்திய அணிக்காக விளையாடும்போதும் பொறுப்புணர்வு அதிகமாக இருக்கிறது. அதிலும், கேப்டனாக பதவி வகிக்கும்போது இந்த பொறுப்புணர்வு கூடுதலாகவே இருக்கும். நீங்கள் எல்லாவற்றையும் முன்னால் நின்று தலைமையேற்று வழிநடத்திச் செல்ல வேண்டும். அணி வீரர்களும் உங்களது தலைமையேற்பை எவ்வித குறுக்கீடுகளுமின்றி ஏற்று பின்பற்றச் செய்தல் வேண்டும்’ – ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா தற்போது இந்திய அணியின் துணை கேப்டனாக பொறுப்பு வகிக்கிறார். சில தொடர்களில் கோலி ஓய்வில் இருக்கும்போது, இந்திய அணியின் கேப்டன் பதவியையும் ரோஹித் சர்மா வகித்திருக்கிறார். அவர் கேப்டனாக தலைமையேற்ற போட்டித் தொடர்களில் இந்திய அணி வெற்றியடைந்திருக்கிறது. கோலியை போன்று அதீத ஆக்ரோஷத்துடன் செயல்படாது, மிக அமைதியுடன் தனது ஒவ்வொரு அணி வீரர்களின் மீதான நம்பிக்கையில், அவர்கள் தங்களது முழுத் திறனையும் எவ்வித நெருக்கடியும் இல்லாமல் விளையாடும் சூழலை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். அடிப்படையில், மிகவும் கூச்ச சுபாவம் மிகுந்த ரோஹித் சர்மா, பெரும்பாலும் அமைதியாகவே களத்தில் காணப்படுவார். சில எதிர்பாராத தருணங்களும், அணி வீரர்கள் முக்கியமான தவறுகளை செய்திடும்போதும் தனக்குள்ளாக தலையசைத்துக் கொண்டு அந்த சூழலை கடக்க முயல்வாரே தவிர, அணியினரை திட்டுவதோ கோபப்படுவதோ மிக அரிதாகவே நிகழும்.

முதல் முதலாக, இந்திய அணியின் கேப்டன் பதவி ரோஹித் சர்மாவின் கைவசம் அளிக்கப்பட்டது 2017-ம் ஆண்டில். இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளை கொண்ட அந்த தொடரில் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. அதனால், ரோஹித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்றார். இரு தொடர்களையும் இந்திய அணியே கைப்பற்றியது. ரோஹித் சர்மா கேப்டனாக இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திச் செல்லும் அதே தருணத்தில், தனது பேட்டிங் திறனையும் சரிவர கையாண்டார். மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட அந்த தொடரில் 217 ரன்கள் குவித்து, அந்த தொடரின் அதிகபட்ச ரன்களை குவித்த வீரர் என்கின்ற பெருமையையும், மூன்று இருபது ஓவர் போட்டிகளை கொண்ட தொடரில் 162 ரன்கள் குவித்து, அந்த தொடரிலும் அதிகபட்ச ரன்களை குவித்த வீரர் என்கின்ற பெருமையையும் ரோஹித் சர்மா பெற்றார். கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே இந்திய அணியை வெற்றியை நோக்கி இழுத்துச் சென்றது அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் பெருமைமிகு தருணங்களாக  இருக்கின்றன.

அதே போல இவ்வாண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற நிதாகஸ் தொடரிலும் இந்திய அணியின் கேட்பனாக தலைமை தாங்கிய ரோஹித் சர்மா, அந்த தொடரை இந்தியா கைப்பற்றவும் முக்கியமான காரணமாக இருந்தார். ரோஹித் சர்மா கேப்டனாக சிறப்பாக செயல்படுவதற்கு அவருக்கு, ஐ.பி.எல் போட்டித் தொடரில் மும்பை அணியை தலைமை தாங்கி வழி நடத்திய அனுபவங்களே  பெரிதும் உதவியிருக்கின்றன.

2013-ம் ஆண்டிலிருந்து மும்பை அணியை தலைமையேற்றும் வழிநடத்தும் ரோஹித் சர்மா இரண்டு முறை ஐ.பி.எல் போட்டித் தொடரை மும்பை வெல்ல காரணமாக இருந்தவர். ஐ.பி.எல் போட்டித் தொடரில் மூன்று முறை இறுதிப் போட்டி வரையிலும் அணியை அழைத்துச் சென்ற இரண்டு கேப்டன்களில் ரோஹித் சர்மா இரண்டாவது இடத்தில் இருப்பவர். முதல் இடத்தை தோனி தக்க வைத்துள்ளார். ஐ.பி.எல் தொரில் கேப்டனாக விளங்கியதுதான் அவரது கிரிக்கெட் வாழ்க்கையை மிகுந்த அர்த்தபூர்வமானதாகவும், பொறுப்புமிக்கதாகவும் ஆக்கியிருக்கிறது.

டிசம்பர் 13, 2015 அவரது வாழ்க்கையில் மிக முக்கியமான தினம். ரோஹித் சர்மாவை கிரிக்கெட் களத்தில் மட்டுமல்லாது சொந்த வாழ்க்கையிலும் பொறுப்புமிக்கவராக மாற்றிய தினம். தனது நீண்ட நாள் காதலியான ரித்திகா சாஜ்தேஹ்ஹை அன்றைய தினத்தில்தான் ரோஹித் சர்மா மணமுடித்தார். ரித்திகாவும், ரோஹித்தும் சிறு வயது முதலே ஒன்றாக வளர்ந்தவர்கள். ரோஹித் சர்மாவின் மனதுக்கு உகந்த நெருக்கமான தோழியாகவே ரித்திகா இருந்துக் கொண்டிருந்தார். அதீதமான நேசிப்பு எப்படி காதலாக உருவெடுத்தது என்பதை இருவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. திருமணத்துக்கு முன்னதான ஆறு வருடங்களில் இருவரும் நெருக்கமாக பழகி வந்தார். ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையில் சோர்வும், நம்பிக்கையின்மையும் சூழும்போதெல்லாம் ரித்திகாதான் அவரை தேற்றி விடுவார். தன்னம்பிக்கை பெருகும் வார்த்தைகளை நிறைய சொல்லுவார். ரோஹித்துக்கு அந்த நாட்களில் அவையெல்லாம் மிகவும் முக்கியமானதாக இருந்தது.

ஒவ்வொரு போட்டியின் போதும் ரித்திகா அப்போதே விளையாட்டு மைதானத்துக்கு வந்துவிடுவார். ரோஹித் சர்மாவின் ஆட்டத்தை வெகுவாக ரசித்து உற்சாகமூட்டியபடியே இருப்பார். ரோஹித் சர்மாவுக்கு தனது வாழ்க்கையில் தவிர்க்க விடக் கூடாத உயிராக ரித்திகா மாறிப் போயிருந்தார். ஏப்ரல் 28, 2015-ல் ரித்திகாவை தான் முதல் முதலாக கிரிக்கெட் விளையாடிய ரோரிவ்லி மைதானத்துக்கு அழைத்துச் சென்ற ரோஹித் சர்மா, அங்கு மோதிரம் ஒன்றை அவர் முன்னால் நீட்டி தனது காதலை வெளிப்படுத்தினார். ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் விளையாட்டின் மீதான காதல் அந்தளவிற்கு மிகத் தீவிரமானது. ரித்திகாவுக்கும் பெரும் மகிழ்ச்சி உண்டானது. உடனடியாக, இந்த தகவல் ஊடகங்களில் பேசப்பட்டன. அப்போதுதான் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப் பெரிய சாதனைகளை படைத்துக் கொண்டிருந்த ரோஹித் சர்மாவின் காதல் விவகாரம் பூதாகரமாக மீடியாக்களில் பகிரப்பட்டு பரபரப்புடன் பேசப்பட்டது. இதனால், மிக விரைவாகவே இருவருக்குமிடையில் நிச்சயதார்தம் செய்யப்பட்டது.

ரோஹித் சர்மா – ரித்திகாவின் திருமணம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்தியாவின் பல முக்கிய பிரபலங்களில் திருமண விழாவில் கலந்து கொண்டார்கள். சச்சின், அம்பானி குடும்பத்தினர் என பலரும் நேரடியாக வருகைப் புரிந்து மணமக்களை வாழ்த்தினார்கள். ரோஹித் சர்மாவின் காதல் மனைவியுடனான திருமண வாழ்க்கை அந்த தருணத்தில் இருந்து துவங்கியது.

மூன்று முறை தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இரட்டை சதம் அடித்துள்ள ரோஹித் சர்மா, தனது மூன்றாவது இரட்டை சதத்தையே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறார். ஏனெனில், அந்த இரட்டை சதத்தை அவர் பூர்த்தி செய்த தினம் 2017ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி. அன்றைய தினம் ரோஹித் சர்மாவின் திருமண நாள்.  தனது காதல் மனைவியை சிறப்பிக்கும் வகையில், அந்த இரட்டை சதத்தை அவர் ரித்திகாவுக்கு சமர்ப்பணம் செய்தார். கூடுதலாக, அன்றைய தினத்தில் ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனும்கூட.   

ரோஹித் சர்மாவுக்கு பொதுவாக கேப்டன் பதவி என்பதையெல்லாம் விட தனது ஆட்டத்திறன் தொடர்ந்து எவ்வித சோர்வுக்குள்ளாக்கும் விளைவுகளையும் உண்டாக்காமல், சீராக செயல்பட வேண்டுமென்பதே மிகப்பெரிய சவாலாக இருந்து கொண்டிருக்கிறது. தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் அவர் தொடர்ச்சியாக ஃபார்ம் இன்றி தவித்து வருகிறார். எனினும், தனது பேட்டிங் திறன் மீது அவருக்கு அதிகளவில் நம்பிக்கை எப்போதும் இருக்கிறது. ‘நான் ஏபி டீவில்லியர்ஸ், தோனி மற்றும் கிரிஸ் கேயல் போன்றவன் அல்ல. என்னால் அவர்களைப்போல பந்தை அதிக வலுவுடன் விளாச முடியாது. நான் எனது ஆத்ம பலத்தையே பெரிதும் நம்புகின்றேன். களத்தில் எனது மூளையை சுறுசுறுப்புடன் வைத்திருப்பதன் மூலமாக, எந்த பந்தை எப்படி எதிர்கொள்வது என்கின்ற திட்டமிடல் என்னுள் உருவாகிறது. அதனை பின் தொடர்ந்தே என் ஷாட்டுகளை நான் வடிவமைத்துக் கொள்கிறேன்’ என்று தனது பேட்டிங் பாணி குறித்து ரோஹித் சர்மா குறிப்பிட்டுள்ளார். 

அடுத்தடுத்த போட்டிகளில் சதமும், அரை சதமும் தொடர்ந்து விளாசித் தள்ளும் பாணியையும், பிறிதொரு தருணத்தில் சொற்பான எண்ணிக்கையிலான ரன்களில் ஆட்டமிழப்பதும் அவரது வழக்கமாக இருக்கிறது. அதனால், ஒரு சமயத்தில் மிகப் பெரிய சாதனைகளை படைத்திருந்தாலும், இன்னமும் உறுதியான நம்பிக்கையை அவரால் ரசிகர்களிடத்தில் ஏற்படுத்த இயலாமல் இருக்கிறது. எனினும், இந்திய அணியில் ரோஹித் சர்மாவின் இருப்பு என்பது மிகுந்த அவசியமானது என்பதை மறுப்பதற்கில்லை. துவக்க ஆட்டக்காரராக களமிறங்கும் ரோஹித் சர்மா கூடுதல் நிதானத்துடன் பொருமையுடன் பந்துகளை எதிர் கொள்ள வேண்டுமென்பதே அவரது ரசிகர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விருப்பமாக இருக்கிறது.  

எதிர் வரும் உலக கோப்பை போட்டித் தொடரில் அவரது பங்களிப்பு இந்திய அணிக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ரோஹித் சர்மாவும் தனது பொறுப்புகளை உணர்ந்தே  இருக்கிறார். அவரது அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு மிகப் பெரிய பலமாகும். மிக எளிய குடும்ப பின்னணியில் இருந்து வந்து பெரும் சாதனைகளின் சொந்தக்காரராக இருக்கும் ரோஹித் சர்மா, உலகக் கோப்பை தொடரில் தன் மீதுள்ள எதிர்ப்பார்ப்புகளையெல்லாம் பூர்த்தி செய்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.  

சிக்ஸர் பறக்கும்……

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com