25. மனைவி குழந்தைகளிடமிருந்து வாழ்க்கை பாடங்களை பயின்று வருகிறேன்! ஷிகர் தவன்

தனது தொடர் போராட்டத்தின் வாயிலாக இன்றைய இந்திய கிரிக்கெட் அணியில் நம்பிக்கைக்குரிய விளையாட்டாளராக உருவெடுத்திருக்கிறார் ஷிகர் தவன்
25. மனைவி குழந்தைகளிடமிருந்து வாழ்க்கை பாடங்களை பயின்று வருகிறேன்! ஷிகர் தவன்

தனது தொடர் போராட்டத்தின் வாயிலாக இன்றைய இந்திய கிரிக்கெட் அணியில் நம்பிக்கைக்குரிய விளையாட்டாளராக உருவெடுத்திருக்கிறார் ஷிகர் தவன். தோனி, கோலி உள்ளிட்ட இந்திய அணியின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவும் இன்றைய நிலையை ஷிகர் தவன் எய்த முக்கிய காரணமாக கருதப்படுகிறது. எப்போதும் தீவிரமான பயிற்சிகளில் ஈடுபாடு செலுத்துவதும், தன் மீதான தன்னம்பிக்கையை வளர்த்தெடுத்தபடியே இருப்பதும், ஷிகர் தவனை மிக முக்கியமான இந்திய கிரிக்கெட் விளையாட்டாளராக நிலைபெற செய்திருக்கிறது. ”தவனின் நீண்ட கால உழைப்புக்கு ஒரு அர்த்தம் உண்டாகியிருக்கிறது. எங்களது குடும்பம் அவரது வளர்ச்சியால் பெருமைப்படுகிறோம்’ என உற்சாக குரலில் குறிப்பிடுகிறார் ஷிகர் தவனின் தங்கை ஸ்ரேஷ்தா தவன்.

அவரது துவக்க கால பயிற்சியாளரான சின்ஹா, ‘ஷிகர் தவன் திறன்மிக்கவர் என்பதில் சந்தேகமில்லை. அதோடு, அவர் தைரியமாக சில முடிவுகளையும் எடுக்கக்கூடியவர். களத்தில் நிற்கும் எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் அத்தகைய பண்பு மிக முக்கியமானதாகும். என்னிடம் பயிற்சி பெறுவதற்காக அவர் வந்திருந்த நாட்களில் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமல்லாது, விக்கெட் கீப்பராகவும் தவன் இருந்தார். 12 வயதில், பள்ளிகளுக்கிடையிலான போட்டி ஒன்றில் சதம் அடித்து அசத்தினார். அப்போதே, இவர் தனித்துவமானவர் என்பதை உணர்ந்துகொண்டேன். 2004ல் நடைபெற்ற அண்டர் 19 உலக கோப்பையில் 3 சதங்களை அடித்து, சிறப்பாக விளையாடி இருந்தார் என்றாலும், இந்திய அணியில் இடம்பெற வெகுவாக போராட வேண்டியிருந்தது’ என்கிறார்.    

அதே போல, தனது உறுதியான ஷாட்டுகளால் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த இன்னிங்க்ஸ்களை படைத்திருக்கும் ஷிகர் தவன், ஒரேயொரு தவறான ஷாட்டில் இருந்தே தனது ஆட்டத்தின் பாணியை மாற்றிக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது.

2010 -11 ரஞ்சி கோப்பையின் போது, ஷிகர் தவன் இடம்பெற்றிருந்த தில்லி அணி வெற்றிப்பெற ஒரு முழு நாளும், 10 ஓவர்களும் எஞ்சி இருந்தன. அணி வெற்றியடைய வெறும் 136 ரன்களை தேவையாய் இருந்தது. அப்போது களத்தில் நின்றிருந்த ஷிகர் தவன் மிக மோசமான ஷாட் ஒன்றால் தனது விக்கெட்டை பறிகொடுத்துவிட்டார். இதனால், டெல்லி அணி அன்றைய போட்டியில் தோல்வியுற்று, அத்தொடரில் இருந்தே வெளியேறிவிட்டது.

இந்த இன்னிங்க்ஸ் ஷிகர் தவனின் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்திவிட்டது. டெல்லி அணியின் தோல்விக்கு தானே முழு காரணம் என்பதாக கருதத் துவங்கிவிட்டார். பல்வேறு எதிர்மறையான விமரிசனங்களும் ஷிகர் தவனின் மீது வைக்கப்பட்டன. ஷிகர் தவன் பொறுமையாக, தனது ஆட்டத்தில் என்னென்ன தவறுகள் செய்தோம் என்பதை பட்டியலிட்டு, மேலும் சீராக தனது பாணியை வடிவமைத்துக்கொண்டார். அதே ஆண்டு நடந்த மற்றொரு ஆட்டத்தில் மிக நிதானமாக விளையாடி அணியின் வெற்றிக்கு தேவையாக இருந்த 270 ரன்களை அடைய முக்கிய காரணமாக இருந்தார். முந்தைய கால ஆட்ட பாணியில் இருந்து இந்த போட்டியில் அவர் பந்துகளை எதிர்கொள்கின்ற விதம் முற்றிலும் மாறுபட்டிருந்ததாக நினைவுக்கூருகிறார் அன்றைய டெல்லி அணியின் பயிற்சியாளர் விஜய் டாஹீயா.

தவனின் கிரிக்கெட் வாழ்க்கை துவக்க காலத்திலிருந்தே பல்வேறு சறுக்கல்களையும், அவைகளிலிருந்து படிப்பினைகள் பெறுவதும், பின் மீண்டுமொரு வெற்றிக்கரமான தாக்கத்தை ஏற்படுத்துவதுமாகத்தான் இருந்து வருகிறது. குறிப்பிட்டு சொல்லும்படியான சாதனைகளை செய்து இந்திய அணியில் தனது இடத்தை தக்கவைத்திருக்கிறார் என்றாலும், இந்த நிலையை அடைய தன்னில் இருந்த நம்பிக்கையை அவர் எப்போதும் இழக்காமல் இருந்தது ஒரு முக்கிய காரணம். மிக கடுமையான மன போராட்டங்களை சந்தித்த தினங்களில்கூட, விரைவாக இதிலிருந்து மீண்டு விடுவேன் என்று தனக்குள்ளாக அவர் உறுதி செய்துகொள்வார். அவரது குடும்ப உறுப்பினர்களும், அவரது மனைவியான ஆயிஷாவும் அவர் தனது நம்பிக்கையை இழந்துவிடாமல் இருக்க பெரிதும் உதவிகரமாக இருந்திருக்கிறார்கள்.

ஆயிஷாவின் மீதான ஷிகர் தவனின் காதல் மிக தீவிரமானது என்பதோடு மட்டுமல்லாமல் தனித்துவமானதும் கூட. இந்திய அணியில் பெரிதாக எந்தவொரு சலனத்தை ஏற்படுத்தியிருக்காத 2009ஆம் ஆண்டிலிருந்தே இருவரும் நெருக்கமாக பழகி வந்தார்கள். எனினும், ஷிகர் தவன் பொறுமையுடன் தனது தினங்களுக்காக காத்திருந்தார். இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றிய மறுவருடத்தில் அவர்களது திருமணம் நிகழ்ந்தது. முன்னதாக, ஆயிஷா ஷிகர் தவனை விட பத்து வயது மூத்தவர். அதோடு, குத்துச் சண்டை விளையாட்டாளரும்கூட.

இந்திய தந்தைக்கும், பிரிட்டீஷ் தாய்க்கும் பிறந்த ஆங்கிலோ இந்தியரான ஆயிஷா சிறுவயது முதலே ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருபவர். ஷிகர் தவனுக்கு முன்னதாக ஆஸ்திரேலிய தொழிலதிபர் ஒருவரை மணந்திருந்தார். அவர்களுக்கு ரியா, ஆலியா எனும் இரு மகள்கள் இருக்கிறார்கள். எனினும், இவ்வுறவு தோல்வியில் முடிந்துப்போனது. பரஸ்பரம் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து தனித்தனியே விலகிவிட்டார்கள்.

திருமண உறவு முறிவுக்கு பிறகு, மீண்டும் ஆயிஷா குத்துச் சண்டை போட்டிகளில் தன் முழு கவனத்தை குவிக்க துவங்கினார். அத்தகைய தருணத்தில்தான் ஷிகர் தவனுக்கும், ஆயிஷாவுக்கு அறிமுகம் உண்டாகியிருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியில் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் பிரயத்தனத்தில் ஆழ்ந்திருந்த ஷிகர் தவனும், மண உறவு முறிந்த நிலையில் தனிமை உணர்வுக்கு ஆட்கொள்ளப்பட்டிருந்த ஆயிஷாவும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக மாறிவிட்டார்கள்.

ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து கொண்டிருந்த ஆயிஷாவுக்கும், இந்திய ஷிகர் தவனுக்கும் முகநூல் வழியேதான் அறிமுகம் உண்டானது. இருவருக்குமிடையில் அப்போது பொது நண்பராக ஹர்பஜன் சிங் இருந்திருக்கிறார். அவரது முகநூல் பக்கத்தில் ஆயிஷாவை பார்த்த ஷீக்கருக்கு அவர் தனது புகைப்படங்களையும், கூடுதலாக தனது மனவோட்டங்களையும் பகிர்ந்திருந்த விதமும் பிடித்துவிட்டது. உடனே நட்பு விடுப்பு கொடுக்கிறார். அப்போதிலிருந்து இருவரும் நண்பர்களாக பழகத் துவங்கினார்கள். பல்வேறு நெருக்கடியான காலகட்டத்தில் ஒருவருக்கு மற்றவர் உறுதுணையாக இருந்திருக்கிறார். ஆயிஷாவின் அதீத அன்பும், அக்கறையும் ஒரு தருணத்தில் காதலாக மாற்றம் கொள்கிறது. ஆயிஷாவின் இரு மகள்களையும் தனது மகள்களாக ஏற்றுக் கொள்ளவும் ஷிகர் தவன் தயாரானார்.

இந்தியா போன்ற பாராம்பரிய கலாச்சார விழுமியங்களை போற்றும் தேசத்தில், ஷிகர் தவன் – ஆயிஷா காதலை எளிதில் ஏற்றுக் கொள்வதில் சிக்கல்கள் இருக்கின்றன. இருவருக்குமிடையிலான வயது வித்தியாசமே பெரும் குழப்பங்களை ஷீக்கரின் குடும்பத்தில் உருவாக்கியிருந்தது. எனினும், ஷிகர் தவனின் தாய், தனது மகன் மீதான நம்பிக்கையால், அவர்களது காதலுக்கு பக்கபலமாக நின்றார். பல்வேறு காரசாரமான விவாதங்களுக்கு பிறகு, மெல்ல மெல்ல ஷீக்கரை அவரது முழு குடும்பமும் புரிந்து கொள்ள துவங்கினார்கள். இறுதியில் இருவருக்கும் பஞ்சாபி முறைப்படி திருமணம் நடத்தப்பட்டது. திருமண நிகழ்வில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார். விராட் கோலி தனது நண்பரின் திருமணத்தை நடனமாடி கொண்டாடினார்.

ஆயிஷா தொடர்ச்சியாக இந்தியாவில் வசித்து வருபவர் இல்லையென்றாலும், ஷிகர் தவன் விளையாடுகின்ற போட்டிகளில் கலந்து கொண்டு அவரை உற்சாகப்படுத்த தவறியதில்லை. பல முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தில் ஆயிஷா மைதானத்தில் பார்வையாளர்கள் இடத்தில்  அமர்ந்தபடியே கணவருக்கு உத்வேகமூட்டியிருக்கிறார். 2014-ம் ஆண்டியில் இருவருக்கும் ஒரு மகன் பிறந்தான். ஸொராவர் தவன் என மகனுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்தனர் தம்பதிகள் இருவரும்.

ஒரு விளையாட்டாளராக நாம் அறிந்து வைத்திருக்கும் ஷிகர் தவன், நல்லதொரு பண்பாளார் என்பதையும் கடந்து, மிகச் சிறந்த தந்தையாகவும் இருக்கிறார். சமயம் வாய்க்கும்போதெல்லாம் தனது மூன்று பிள்ளைகளுடன் பல்வேறு சாகசங்களில் ஈடுபடுவது அவரது வழக்கம். குதிரையேற்றம் உள்ளிட்ட பிள்ளைகள் விரும்புகின்ற அனைத்து கேளிக்கை நிகழ்வுகளையும் செயல்படுத்தி அவர்கள் சந்தோஷமடைவதை ரசிக்கக் கூடியவராக ஷிகர் தவன் இருந்து வருகிறார். ‘இது போன்ற பிள்ளைகள் எனக்கு கிடைத்திருப்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என நேர்காணல் ஒன்றில் ஷிகர் குறிப்பிட்டிருக்கிறார். அதே போல 2017, மகளிர் தினத்தின்போது தனது பெண் குழந்தைகளின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, ‘வீட்டில் இருப்பவர்களின் கருத்துக்களுக்கு செவி சாய்ப்பதற்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். உங்களது மனைவி மற்றும் குழந்தைகளிடமிருந்து நிறைய வாழ்க்கை பாடங்களை நீங்கள் கற்றுக் கொள்ள முடியும்” என்று பதிவிட்டிருந்தார். அந்த அளவிற்கு, குடும்ப வாழ்க்கையில் பொருந்தியிருக்கின்ற மனிதராக ஷிகர் தவன் இருக்கிறார்.

ஷீக்கரை பற்றி அவரது மனைவி ஆயிஷா குறிப்பிடுகையில், ‘என்னைப் பொருத்தவரையில், அவர் எப்போதும் ஒருவிதமாகத்தான் இருக்கிறார். அதீத அன்பு செலுத்தக்கூடிய மனிதர். வாழ்க்கையில் மிகப் பெரிய தளங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமையாக போராடக் கூடியவர். திருமணத்துக்கு பிறகு, அவரது கிரிக்கெட் வாழ்க்கை பெரிதும் வளர்ச்சியுற்றிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அது அதிர்ஷ்ட்டத்தால் விளைந்ததல்ல. அவரது கடின உழைப்பே அதற்கு காரணம். எங்கள் மீது எத்தகைய நேசத்தை கொண்டிருக்கிறாரோ அதே வகையில், கிரிக்கெட்டையும் அவர் வெகுவாக நேசிக்கிறார். இரண்டையும் கையாளும் திறன்கொண்ட பொறுப்பான மனிதர் தவன். அவரது மனைவியாக இருப்பதற்காக நான் சந்தோஷமடைகிறேன். எது என்னை பெரிதும் வியப்பில் ஆழ்த்துகிறது என்றால், பிரச்னைகளை அவர் எதிர்கொண்ட அதனை நிவர்த்தி செய்கின்ற ஆற்றல்தான்’ என்கிறார்.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உலக கோப்பையை ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஷிகர் தவன், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுநாள்வரையிலும் செய்திருக்கும் சாதனைகளுக்காகவும், தனிப்பட்ட வாழ்க்கையிலும், குடும்பத்தாருடனும் கடைபிடித்திருக்கின்ற மிகுதியான நேசத்தாலும் பல கிரிக்கெட் ரசிகர்களால் போற்றப்படுகிறார். இனி வரவிருக்கும் போட்டிகளில் அவரது ஆட்டத்திறன் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

(சிக்ஸர் பறக்கும்…)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com