19.மிதமிஞ்சிய கொண்டாட்டங்கள் எனக்குப் பிடிக்கும்! கிரிஸ் கேயலின் ஆசை என்ன?

மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான கிரிஸ் கேயலுக்கு இன்று 39-வது பிறந்தநாள்.
19.மிதமிஞ்சிய கொண்டாட்டங்கள் எனக்குப் பிடிக்கும்! கிரிஸ் கேயலின் ஆசை என்ன?

மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான கிரிஸ் கேயலுக்கு இன்று 39-வது பிறந்தநாள். ஜமைக்காவில் உள்ள சான்சேரி ஹாலில் இன்றிரவு வெகு விமர்சையாக அவரது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நிகழவிருக்கின்றன. வழக்கமாக, தனது பிறந்த தினத்தை உற்சாகத்துடன், அதிக பொருட்செலவில் அமர்க்களமாக கொண்டாடுவது அவரது வழக்கம். 2016-ல் தொடர்ச்சியாக ஆறு தினங்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை கேயல் ஏற்பாடு செய்திருந்தர். இன்றைய பார்ட்டிக்கு கறுப்பு வெள்ளை உடைகளைதான் அனைவரும் அணிந்து வர வேண்டுமென அன்பு கட்டளையிட்டிருக்கிறார் கிரிஸ் கேயல்.

கிரிஸ் கேயலின் துவக்க கால வாழ்க்கை மிகுந்த நெருக்கடியும், பெரும் போராட்டங்களும் நிரம்பியது. அவரது தந்தை உள்ளூர் காவல்துறை பணியில் ஈடுபட்டிருந்தார். அவரது தாயார் தெருவில் சிற்றுண்டிகள் விற்கும் வேலையை செய்து கொண்டிருந்தார். பள்ளி கல்வி தொகையை கட்டுவதில் கூட அவரது குடும்பத்துக்கு வெகுவான சிரமம் இருந்திருக்கிறது. கைச் செலவுக்காக அவ்வப்போது தெருவில் கிடக்கும் பொருளை எடுத்துச் சென்று கடைகளில் விற்பதும், சில அரிதான தருணங்களில் உணவகங்களில் இருந்து சிற்றுண்டிகளை திருடவும் கூட கிரிஸ் கேயல் செய்திருக்கிறார். இன்றைய வெகு பிரபலமான கிரிக்கெட்டராக இருக்கும் கிரிஸ் கேயல் நினைத்துப் பார்க்கவியலாத சிரமங்களை எல்லாம் தனது சிறு வயதில் அனுபவம் கொண்டிருக்கிறார். ஜமைக்காவில் செய்தியாளர் ஒருவரிடம் இது குறித்து கண் கலங்கிய நிலையில் கிரிஸ் கேயல் தெரிவித்திருக்கிறார்.

உணவும், வசிப்பிடத்தையும் தவிர மற்றவை அனைத்தும் கிரிஸ் கேயலுக்கு பெரும் கனவுகளாகவே இருந்திருக்கின்றன. வழக்கமான கரீபியன் நிலத்தை சேர்ந்த எந்தவொரு சிறுவனையும் போல, பெரும் பணம், சொகுசான வாழ்க்கை சூழல், மிதமிஞ்சிய கொண்டாட்டங்கள் என கிரிஸ் கேயலின் மனமும் அலைபாய்ந்தயபடியே இருந்திருக்கிறது. விரைவாக, தங்களது குடும்பத்தை சூழ்ந்திருக்கும் நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுத்து, தனக்கிருக்கும் வண்ணமயமான கனவுகளை நிஜமாக்கும் தினங்களை பேருவகையோடு எதிர்பார்த்து காத்திருந்தார்.

அக்காலங்களில் இருந்தே மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து கொண்டு தெருவில் கிரிக்கெட் விளையாட துவங்கிவிட்டார். அவரது குடும்பத்தில் எல்லோருக்கும் கிரிக்கெட் விளையாட்டின் மீது பெரும் ஆர்வம் இருந்திருக்கிறது. குறிப்பாக, கேயலின் தாத்தா சில உள்ளூர் போட்டிகளில் எல்லாம் விளையாடியிருக்கிறார். அவருடன் நேரத்தை செலவிடுகையில், கிரிக்கெட் சார்ந்து பேசுவதும், விளையாடுவதும் கேயலின் வழக்கமாக இருந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் கிங்க்ஸ்டனில் அமைந்திருக்கும் பிரபல பயிற்சிக் கூடமான லூகாஸில் இணைந்து தனது கிரிக்கெட் திறனை மேம்படுத்திக் கொண்டார். ஆனால், இன்றைக்கு அடைந்திருக்கும் நிலையையெல்லாம் அப்போது கற்பனையில் கூட கிரிஸ் கேயல் உருவாக்கிப் பார்த்தவரில்லை. 

கிரிஸ் கேயல் சிறுவயதில் ரோலிங்டன் நகரத்தின் இருதய பகுதியென்று அழைக்கப்படும் செயிண்ட் ஜேம்ஸ் தெருவில் வளர்ந்து வந்தார். அவருடன் சேர்த்து கேயலின் பெற்றொருக்கு மொத்தம் ஆறு பிள்ளைகள். வெகு சிறிய அளவிலான வசிப்பிடமொன்றில்தான் அவர்கள் அனைவரும் வாழ்ந்து வந்தார்கள். எதையும் வெகு அசால்ட்டாகவும், எத்தகைதொரு நெருக்கடியிலும் தனது உற்சாகத்தை இழந்துவிடாத பண்பும் கேயலுக்கு கிரிக்கெட் வழியிலான புகழ் உருவாகியதற்கு பின்னர் வந்தவை அல்ல. அவர் மிகச் சிறிய வயதிலிருந்து அவ்விதமாகத்தான் வளர்ந்திருக்கிறார். சிறுவயதில் அவரை மற்ற சக நண்பர்கள், ‘கிராம்பி’ என்றே அழைப்பது வழக்கம். கிராம்பி என்றால் மிகுதியான கிறுக்குத்தனங்கள் நிரம்பியவன் என்று பொருள். ஒருவகையில் அவரது இத்தைய இயல்புக்கு அவர் வளர்ந்த சூழல் பெரும் காரணமாக இருக்கலாம் என்றே கருதப்படுகிறது.

தான் வளர்ந்த பகுதியைப் பற்றி கிரிஸ் கேயல், ‘அங்கிருக்கும் பெரும்பாலான சிறுவர்கள் அபாயகரமான சூழலில் வாழ்ந்து வருகிறார்கள். நான் ஒரு வெற்றி அடைந்திருக்கும் விளையாட்டு வீரனாக உருவாகியிருக்கிறேன். ஆனால், எனது பின்னணியும், வளர் பருவமும் நிலையானதொரு வாழ்க்கையை கொண்டிருக்கவில்லை. சேரியில்தான் எனது மிகுதியான நேரத்தை செலவிட்டிருக்கிறேன். ஆனால், வயது ஏற ஏறத்தான் வாழ்க்கை புரிகிறது. நாங்கள் எத்தனை ஆபத்து சூழ்ந்த நிலையில் வளர்ந்து வந்திருக்கிறோம் என்பது புரிகிறது. என் போன்ற சிலர் இப்போது அவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறோம். பரந்த அளவிலான வாழ்க்கை இருக்கும் போதும், சிறிய வெளியினுள்ளாக சோர்ந்தும், களைத்தும், நம்பிக்கையற்றும் வாழ வேண்டாமென நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தெருவில் இறங்கி துப்பாக்கி சண்டையிட்டு, ஒரு உயிரை கொலை செய்தவன் என்கின்ற அவப் பெயருடன் சிறையில் அடைப்பட்டு வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டாமென்று நாங்கள் அவர்களை தொடர்ந்து எச்சரித்து வருகின்றோம்’ என்று குறிப்பிடுகிறார்.

பன்னெடுங்கால கிரிக்கெட் விளையாட்டு கிரிஸ் கேயலுக்கு அவர் நினைத்திராத அளவுக்கு, புகழையும் பெரும் செல்வத்தையும் வாரி வழங்கியிருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் அணிக்காக மட்டுமல்லாமல், ஐ.பி.எல், பிக் பேஷ் போன்ற பல கிரிக்கெட் போட்டிகளிலும் கேயல் உற்சாகத்துடன் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். இன்னும் சொல்ல வேண்டுமன்றால், மேற்கிந்திய தீவுகள் அணியில் கிடைக்கப் பெறும் வருமானத்தை விட உலகளாவிய போட்டிகளில் பங்கேற்பதில்தான் அவருக்கு மிகுதியான பணம் கிடைக்கிறது. இத்தனைக்கும் சமீப காலங்களில், மேற்கிந்திய தீவுகள் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக, 913 தினங்கள் அவ்வணியில் விளையாடாமல் இருந்தார். ஆனால், இந்த இடைவெளிகள்தான் அவரது புகழை மேலும் கூடுதலாக வளர்த்தெடுத்தது. குறிப்பாக, ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் அவர் அடித்த சிக்ஸர்கள் பெரும் வியப்பையும், அதிர்வையும் உருவாக்கியிருந்தன.

கிரிஸ் கேயல் பொதுவாக, தன்னை மிக அதிக ஸ்பெஷலாக நினைத்துக் கொள்பவர். உலகத்தின் எந்த அரங்கத்தில் கிரிக்கெட் போட்டி நடப்பதாக இருந்தாலும், அவ்விடத்தில் தனக்கென தனித்ததொரு உடை மாற்றும் அறையை அணி நிர்வாகம் அளித்திருக்க வேண்டுமென்பது அவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான அவரது சுயசரிதையான, ‘Six Machine’-ல் முழுக்க முழுக்க தன் பற்றிய புகழுரைகளுக்கே அதிக முக்கியத்துவம் அளித்திருக்கிறார். எங்கும் எதிலும் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதையே கேயல் அதிகம் விரும்புகிறார். தானொரு ஸ்பெஷல் உயிரி என்கின்ற நினைப்பு அவருக்குள் ஆழமாக ஊடுருவியிருக்கிறது. செய்தியாளர் ஒருவர், அவரிடம் ஒரு சிறிய குறிப்புப் புத்தகத்தை நீட்டி, ‘மேற்கிந்திய தீவுகள் அணியில் மிக சாந்தமான விளையாட்டாளர் யார்?’ என்று கேட்க, கொஞ்சமும் தாமதிக்காமல் உடனடியாக, ‘நான்தான்’ என்று எழுதிவிட்டு அங்கிருந்து நகர்ந்துச் சென்றிருக்கிறார்.

அவரது இத்தகைய இயல்பு, மேற்கிந்திய தீவுகள் அரசையே வெகுவாக கேள்வியெழுப்பும் நிலைவரை உயர்ந்திருக்கிறது. ‘நான் அரசு குறித்து அதிக அதிருப்தியில் இருக்கின்றேன். நான் அவர்களிடம் சிறிதளவு மரியாதையும், நன்னடத்தையையும்தான் கேட்கின்றேன். நான் இரண்டு முச்சதங்களை விலாசியிருக்கிறேன். எனினும், நாடு திரும்பும் போது என்னை வரவேற்க ஒரேயொரு கேமிரா கூட விமான நிலையத்துக்கு வரவில்லை. அது என்னை பெரிதும் வேதனையடையச் செய்கிறது. ஜமைக்காவில் உள்ள பள்ளிகளுக்காகவும், மருத்துவமனைக்காகவும் நான் பல உதவிகளை செய்திருக்கின்றேன். எனினும், என்னை சரியாக அவர்கள் நடத்துவதில்லை’ என்று விசனப்படுகிறார்கள்.

ஒரு சராசரி கரீபியன் சிறுவனாக தெருவில் வெறும் கனவுகளை மட்டும் சுமந்து கொண்டு அலைந்து கொண்டிருந்த கிரிஸ் கேயல் இன்று அந்நாட்டின் அரசை கேள்வி கேட்கும் நிலை வரை கிரிக்கெட் விளையாட்டு உயர்த்திவிட்டிருக்கிறது. ‘கிரிஸ் கேயல் அகாதெமி’ எனும் பெயரில் மிக உயர்ந்த தரத்திலான பயிற்சிக் கூடத்தையும் கேயல் நடத்தி வருகிறார். இந்த அகாதெமி ஜமைக்காவிலும், லண்டனிலும் செயல்பட்டு வருகிறது. பின்தங்கிய நிலையில் உள்ள சிறுவர்களின் கல்விக்காகவும், பல்வேறு விளையாட்டு திறனை மேம்படுத்திக் கொள்ளவும் உதவும் வகையில் கிரிஸ் கேயல் அகாதெமி செயல்பட்டு வருகிறது.

சிறு வயதிலிருந்தே கேளிக்கைகளில் மிகுதியான பொழுதுகளை கழித்திருக்கும் கிரிஸ் கேயல் ஜமைக்காவில் ‘டிரிப்பிள் செஞ்சுரி ஸ்போர்ட்ஸ் பார்’ என்கின்ற பெயரில் மது விடுதி ஒன்றையும் நடத்தி வருகிறார். அதோடு, தனது மாளிகை போன்றிருக்கும் வீட்டிலும் கூட கேளிக்கைகாக தனி அறைகளை கேயல் ஒதுக்கியிருக்கிறார். அவ்வீட்டில் உறங்கும் அறைகள் மட்டுமே 9. அதோடு ஒன்றிற்கும் மேற்பட்ட நீச்சல் குளமும் அவரது பங்களாவில் இருக்கிறது. அவரது இத்தகைய அதீத கேளிக்கைகளின் மீதான நாட்டம் ஒரே சமயத்தில் கடும் விமர்சனத்தையும், பெரும் வியப்பையும் உண்டாக்கியிருக்கிறது.

ஆனால், கேயல் எது குறித்தும் கவலைப்படுகிறவர் இல்லை. தனது வாழ்க்கையை கூடுமானவரையில் உற்சாகம் மிகுந்ததாக உருவாக்கிக் கொள்வதில் அவருக்கும் எப்போதுமே பெரும் ஆர்வம் இருந்து கொண்டுதானிருக்கிறது. சிறுவயதில் பசிக்கு உணவு திருடிய சிறுவன், இன்று அதற்கு முற்றிலும் நேரெதிரான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். கனவுகளில் சஞ்சரித்துக் கொண்டிருந்த கேயல், தனது கனவுகளுக்கு சிறுக சிறுக உயிரூட்டிக் கொண்டிருக்கிறார். ‘நான் எதுவுமே இல்லாமல் வளர்ந்தேன். இப்போது என்னிடத்தில் மிகுதியான பணம் இருக்கிறது. நான் இப்போது, ‘அந்த கார் வேண்டும், அந்த வீடு வேண்டும்’ என எதன் மீதும் ஆசை கொள்ள முடியும். ஆனால், எனது கனவு இல்லத்தை உருவாக்கிவிட்டேன் என்கின்ற நிறைவு உள்ளுக்குள் உருவாகியிருக்கிறது. இத்தகைய கனவை சுமந்து கொண்டுதான் வாழவாரம்பித்தேன். இப்போது அது எனக்கு கிடைத்துவிட்டது. என்னால் என் நண்பர்களுக்கு உதவ முடிகிறது என்கின்ற தன்னிறைவு எனக்கு உருவாகியிருக்கிறது. எவரொருவரும் இந்த இடத்தை அடைய வேண்டுமென்று விரும்புவது இயல்பானதுதானே’ என்கின்ற கிரிஸ் கேயலிடம், உங்களது தினசரியை நிறைத்திருக்கும் விஷயங்கள் என்னென்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறிய பதில்,

‘ஷவர் குளியல், நல்ல உணவு, உயர் ரகத்தை சேர்ந்த ரம், மிதமிஞ்சிய பார்ட்டி, மீண்டுமொரு மிதமிஞ்சிய குடி, இறுதியாக நல்லுறக்கம், ஏனெனில் மறுநாள் கொண்டாட்டங்களுக்கு தயாராக வேண்டுமல்லவா!’

(சிக்ஸர் பறக்கம்…)     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com