இது சிக்ஸர்களின் காலம்

20. இதுதான் இதுவே தான் கிரிஸ் கேயலின் ஆகச் சிறந்த நான்கு சிறந்த இன்னிங்ஸ்!

ராம் முரளி

கிரிஸ் கேயல் தனது அதிரடி ஆட்டத்தினால் பல சர்வதேச போட்டிகளை மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றிப் பெற செய்திருக்கிறார். பந்தை உறுதியாக அவர் எதிர்கொள்கின்ற விதமும், ஒருவித ராட்சசதத்தன்மையில் அதனை அணுகி விலாசுகின்ற ஸ்டைலும் உலகெங்கிலும் அவருக்கு பல ரசிகர்களை உருவாக்கியிருக்கிறது. இன்றைய நவீன கிரிக்கெட் வடிவத்தை மிகச் சரியாக தங்களுக்கு ஏற்றாற்போல பயன்படுத்திக்கொண்ட கிரிக்கெட்டாளர்களில் அவரும் ஒருவர். இன்றைக்கு ஐ.பி.எல் போன்ற பல பிரான்சைஸ் கிரிக்கெட்டுகள் உலகெங்கிலும் நிறைய அளவில் உருவெடுத்துவிட்டதால், ஒவ்வொரு சிக்ஸர்களையும், ஒவ்வொரு பவுண்டரிகளையும் பல நிதி முதலீட்டாளர்கள் கூர்ந்து கவனித்தபடியே இருக்கிறார்.

இது ஒருவிதமான பொருளாதார ரீதியிலான மேலெழும்புதலை பலருக்கு உருவாக்கிக் கொடுக்கிறது. குறிப்பாக, மேற்கிந்திய தீவுகள் போன்ற சிறிய நாடுகளில் விளையாடுகின்ற வீரர்களுக்கு இத்தகையை போட்டிகளில் மிகப் பெரிய அங்கீகாரத்தை வழங்குவதோடு வாழ்க்கை சூழலையும் மாற்றியமைத்துவிடுகிறது. ஆனால், அதே தருணத்தில் ’ஜெண்டில்மேன் விளையாட்டு’ என்று கருதப்படுகின்ற கிரிக்கெட்டின் கிளாஸிக் தன்மை இதனால் மெல்ல மெல்ல மங்கி வருகிறது என்கின்ற குற்றச்சாட்டுகளும் ஒருபக்கம் தொடர்ந்து ஒலித்தபடியே இருக்கின்றன.

சொற்ப ஓவர்களில் ஆட்டத்தை குறுக்கும் போக்குகளின் அடிப்படையில் பணமே பிரதானமாக இருக்கிறதே ஒழிய, அது எவ்வகையிலும் கிரிக்கெட்டின் செழுமையாக்கப்பட்ட வடிவமாக ஏற்றக்கொள்ளப்பட மாட்டாது என்ற குரல்கள் ஆங்காங்கே தொடர்ந்து ஒலித்தபடியே இருக்கிறது. ஐந்து தினங்கள் நீளும் டெஸ்ட் போட்டிகளின் மீதிருந்த வசீகரமும், ஐம்பது ஓவர் கிரிக்கெட்டின் மீதிருந்த வசீகரமும் இப்போது இருபது ஓவர் கிரிக்கெட் மீது கவிந்திருக்கிறது. விரைந்து நகரும் இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலும் இதற்கொரு காரணமாக இருக்கலாம்.

ஆனால், இங்குதான் பணமென்பது பெரும் சூதாட்டத்தை நிகழ்த்திப் பார்க்கிறது. குறுகிய நேரத்திற்குள் போட்டியின் முடிவு தெரிந்துவிடுகிறது என்பதாலும், அதிரடி ஆட்டமென்பது அதனது இயல்பாக இருக்கிறது என்பதாலும், பல பல தொழிலதிபர்களும் பெரும் பணத்தை இதன் மீது முதலீடு செய்கிறார்கள். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் விடப்பட்டு தேர்வு செய்யும் நிலை தற்போது உருவாகியிருக்கிறது. இதனால் ஒவ்வொரு விளையாட்டாளரும் தமது இயல்பான ஆட்டத்திறனை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. ’தகுதியானது தப்பிப் பிழைக்கும்’ எனும் சொற்றொடருக்கு ஏற்ப, இருபது ஓவர் போட்டிகளில் தங்களது திறனை சிறப்புற வெளிப்படுத்துகிறவர்கள், தேசிய அணியில் இடம்பிடிக்கிறார்கள். இருபது ஓவர் கிரிக்கெட் என்பது இன்றைக்கு கிரிக்கெட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான வடிவமாக கருதப்படுகிறது.

இங்குதான் கேயல் போன்ற முழுக்க முழுக்க அதிரடி ஆட்டக்காரர்களின் சாம்ராஜ்யம் விரிகிறது. பொதுவாக, எந்தவொரு கிரிக்கெட் வடிவத்திலும் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள விரும்பாத கேயல், இருபது ஓவர் போட்டிகளை தன்னால் இயன்றவரையில் முழுமையாக பயன்படுத்திக்கொண்டுள்ளார். ராட்சச சிக்ஸர்களை இப்போட்டி தொடர்களில் விலாசியதன் மூலமாக தன்னை மிக அதிக பிரத்யேகமான மனிதராக அவர் உருமாற்றிக்கொண்டுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியில் இருந்து புறக்கணிப்பட்ட போதிலும், எவ்வித துளி வருத்தமுமின்றி அந்த அணியின் நிர்வாகத்தை சாடுவதோடு, தொடர்ந்து ஐ.பி.எல் போன்ற போட்டிகளில் அதீத உற்சாகத்தோடு பங்குகொண்டு வருகிறார். அவரே எதிர்பார்த்திராத அளவுக்கு பெரும் பணத்தையும், புகழையும் ஒருங்கே இப்போட்டிகள் அவருக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கின்றன.

கிரிஸ் கேயல் இத்தகைய மிகுதியான வெளிச்சத்துக்கு வருவதற்கு முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கென்று விளையாடிய காலங்களில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் நான்கு சிறந்த இன்னிங்ஸ்களை இப்போது பார்க்கலாம். இப்போட்டிகளில் அவரது ஆட்டத்திறன்தான் அணியை வெற்றியடைய செய்திருக்கிறது. சாத்தியமே இல்லை என்கின்ற நிலையில் இருந்து அணியை வெற்றி எனும் இலக்குவரை உயர்த்திவிட்டிருக்கும் அவரது மிகச் சிறந்த கிரிக்கெட் செயல்பாடுகள் இவை.

1.333 – 2010ல் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற போட்டி

இந்த போட்டித் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்றது. முதல் போட்டியில், துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கிரிஸ் கேயல் நிதானமாக அன்றைய தினத்தில் தனது பேட்டிங்கை  அமைத்துக்கொண்டார். அனைத்து வீரர்களுடனும் ஆரோக்கியமான பார்ட்னர்ஷிப் வளர்த்துக்கொண்டார். ஒருபக்கம் விக்கெட்டுகள் ஒவ்வொன்றாக சரிகிறது என்றாலும், அவரது ஆட்டத்திறன் மெல்ல சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்தபடியே இருந்தது. வெகு சிறப்பான ஆட்டமொன்று அன்றைய தினத்தில் கிரிஸ் கேயலிடமிருந்து வெளிப்படப் போகிறது என்று எல்லோரும் எதிர்பார்க்க துவங்கிவிட்டார்கள். கிரிஸ் கேயல் மெல்ல மெல்ல தனது அதிரடியை ஆரம்பித்தார். ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் கூடுமானவரையில் மிக அதிகளவில் சிதறடித்தார். பந்துகள் நாலாபுறமும் தெறித்து ஓடின. கொடூரமாக பந்துகளை எதிர்கொள்கின்ற தனது வழமையான ஆட்டத்தை அன்று முழு தீவிரத்தன்மையுடன் வெளிப்படுத்தினார். முடிவில் 34 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் தனது இன்னிங்ஸை முடித்துக்கொண்டார். அந்த போட்டி டிராவில்தான் முடிவடைந்தது என்றாலும், கிரிஸ் கேயல் வாழ்க்கையில் மறக்கவே முடியாத இன்னிங்ஸாக அது அமைந்துவிட்டது.

2.117- 2007ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற போட்டி

இருபது ஓவர் உலக கோப்பையின் துவக்க போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியும், தென் ஆப்பிரிக்க அணியின் மோதின. ஜோகன்னஸ்பெர்க் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் மேற்கிந்திய தீவுகள் அணியே பேட்டிங் செய்தது. துவக்கத்திலிருந்து கேயல் இப்போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தை துவங்கியிருந்தார். பொல்லாக், மக்காயா நிட்டினி, மோர்னே மார்கல் போன்ற தென் ஆப்பிரிக்க அணியின் மிகச் சிறந்த பந்துவீச்சாளர்கள் வீசிய அனைத்துப் பந்துகளையும் கிரிஸ் கேயல் சளைக்காமல் அடித்து நொறுக்கினார். ஓவர்கள் உயர உயர அவரது ஸ்கோரும் மலைக்க வைக்கும் வகையில் உயர்ந்துக்கொண்டிருந்தது. தனியொருவராக 117 ரன்களை அப்போட்டியில் கேயல் குவித்திருந்தார். 7 பவுண்டரிகளும், 10 இமாலய சிக்ஸர்களும் அதில் அடக்கம். கேயலுக்கு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இதுதான் முதல் சதம். அதோடு, சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட்டில் முதன்முதலாக தனியொரு மனிதரால் அடிக்கப்பட்ட முதல் சதமும் இதுதான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வியையே எதிர்கொண்டது. தென் ஆப்பிரிக்கா அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான கிப்பஸ் அந்த போட்டியில் 90 ரன்களை குவித்து அவ்வணியை வெற்றிப் பெற செய்துவிட்டார். எனினும், என்றென்றும் கிரிஸ் கேயலின் பெயர் இந்த சதத்தின் மூலமாக இருபது ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் தனித்துவத்துடன் நிலைத்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

3.133 - 2006ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பையின் அரை இறுதி போட்டி

2006ல் நடைபெற்ற ஐசிசியின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அது. ஜெய்ப்பூரில் நடந்த அப்போட்டியில் முதல் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 258 ரன்களை சேர்த்திருந்தது. மைதானத்தின் கடினத்தன்மை காரணமாக அக்களத்தில் பேட்டிங் செய்வது மிகவும் சிரமமாக இருந்தது என முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க வீரர்கள் புகாருரைத்திருந்தனர். அதனால், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சவால் அதிகமாக இருந்தது. கேயல் வெகு பொறுமையுடன் தனது இன்னிங்ஸை துவங்கினார். பந்துகள் தனது சுழல் திறனை இழக்கும்வரையில் அவரது வழக்கமான ஆட்டம் வெளிப்பட்டிருக்கவில்லை. நிதானமாக ஒவ்வொரு பந்துகளாக எதிர்கொண்டிருந்தார். ஆனால், பந்துகள் எவ்விதமான சுழற்சியுமின்றி நேராக வருகிறது என்பது புரிந்ததும் அவரது ஆட்டத்தின் போக்கு மாறிவிட்டது. அதன்பிறகு, பந்துகள் பவுண்டரிகளை நோக்கி அணிவகுக்க துவங்கிவிட்டன. 135 பந்துகளில் 133 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு நகர்த்தினார் கிரிஸ் கேயல். மிக பொறுப்புடன் கிரிஸ் கேயல் விளையாடிய மிக முக்கியமான போட்டி இது. இதன் வெற்றிதான் மேற்கிந்திய தீவுகள் அணியை இறுதி போட்டியில் பங்கேற்க வழிவகை செய்தது.

4.100 – 2016ல் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற போட்டி

முக்கியமான கிரிக்கெட் தொடர்களில் எல்லாம் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலமாக, ஒரு நிரந்தர அதிர்வை உருவாக்கிவிடும் கிரிஸ் கேயலின் மற்றுமொரு சிறப்புமிக்க ஆட்டம் 2016ல் நடைபெற்ற இருபது ஓவர் உலக கோப்பை தொடக்க போட்டியிலும் வெளிப்பட்டது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 183 ரன்களை குவித்திருந்தது. இருபது ஓவர்களுக்கு இது மிகவும் கடினமான இலக்குதான் என்றாலும், கேயல் அசுரத்தனமான ஆட்டத்தால் அப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி அடைந்தது. குறிப்பாக, இங்கிலாந்து ஸ்பின்னர்களை கிரிஸ் கேயல் இப்போட்டியில் பந்தாடிவிட்டார். பதினெட்டே ஓவர்களில் அணியை வெற்றிக்கு உயர்த்திச் சென்ற கிரிஸ் கேயல் இப்போட்டியில் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 11. ஒன்றிரண்டு சிக்ஸர்களின்போது பந்து மைதானத்திற்கு வெளியிலேயே சென்றுவிட்டது. கிரிஸ் கேயலின் வெகு சிறப்பான ஆட்டங்களில் இதுவும் குறிப்பிடத்தகுந்த போட்டியாக இருக்கிறது.

கிரிஸ் கேயல் கிரிக்கெட் விளையாட்டில் குறிப்பிடத்தகுந்த சாதனைகளை படைத்துள்ள தனித்துவமான குணவியல்புகளை கொண்ட மனிதராகவே எல்லோரும் அறிந்து வைத்திருக்கிறோம். துவக்க கால போராட்ட வாழ்க்கை என்பது இருக்கிறது என்றாலும், கரீபியன் தீவுகளை சேர்ந்த பெரும்பாலானோரின் வாழ்க்கைச் சூழலும் அப்படியாகத்தான் இருக்கிறது. எனினும், துள்ளலும் வெகுவான கொண்டாட்ட மனோநிலையும் கொண்ட  கிரிஸ் கேயலுக்கு மற்றுமொரு சிக்கலும் இருந்திருக்கிறது. பல காலமாக அவரது இருதய துடிப்பு சீரற்றத்தன்மையில்தான் இயங்கிக் கொண்டிருந்திருக்கிறது.  ”இது பல வருடங்களாகவே தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது. இயல்புக்கு மாறான வேகத்தில் எனது இருதயம் துடிப்பதை பலமுறை உணர்ந்திருக்கிறேன். பேட்டிங் செய்யும்போது ஒருவிதமான சோர்வு நிலையை எனக்கு உண்டாக்கியிருக்கிறது. எனினும், இதைப் பற்றி கவலைப்பட எதுவுமில்லை” என்றவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், 2005-ல் ஆஸ்திரேலியாவுக்கு நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றின்போது இவ்வுணர்வுகள் அவருக்கு மிகுதியாக எழுந்துள்ளது. மனமும், உடலும் அழுத்துவதைப்போல உணர்ந்திருக்கிறார். அதனால், உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையின் முடிவில் அவரது இருதயத்தில் சிறியளவில் துளை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கிரிஸ் கேயலுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது என்றாலும், அந்த தகவலை பெற்றோருக்கு தெரிவிக்க வேண்டாமென்று கிரிஸ் கேயல் மருத்துவர்களுக்கு கோரிக்கை விடுத்தார். இந்த தகவலின் மூலமாக அவர்களை பதற்றப்படுத்த அவர் விரும்பவில்லை. அதனால், அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படாமலேயே அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு, அவரது சுவாசம் சீராக இயங்கத் துவங்கியது. தனது முழு இயல்புக்கு கிரிஸ் கேயல மீண்டும் திரும்பினார். கொண்டாட்டங்களும், சர்ச்சைகளும், சாதனைகளும் இதன்பிறகான காலத்தில்தான் கிரிஸ் கேயல் வெகுவாக எதிர்கொண்டார். தனது அறுவை சிகிச்சைக்கு பிறகான வாழ்க்கைக் குறித்து கிரிஸ் கேயல் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

'அதன்பிறகுதான், வாழ்க்கையின் முக்கியத்துவம் எனக்கு புரிந்தது. என் வாழ்க்கைப்போக்கையே மாற்றி அமைத்த தருணம் அது. அதன்பிறகு, என் தினசரிகளின் ஒவ்வொரு தருணத்தை மிகுதியாக கொண்டாட வேண்டுமென்று முடிவு செய்தேன். என்னால் இயன்றவரையில், வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் ரசித்து அனுபவிக்க முடிவு செய்தேன். இப்போது அதைத்தான் செய்துக்கொண்டிருக்கிறேன்' என்கிறார்.

(சிக்ஸர் பறக்கும்…)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT