இது சிக்ஸர்களின் காலம்

36. ஒரு கிரிக்கெட் வீரருக்குள் ஒளிந்திருக்கும் பல்வேறு திறமைகள்!

ராம் முரளி

டூ ப்ளிஸஸுக்கு அப்போது 16 வயது ஆகியிருந்தது. கிரிக்கெட் பயிற்சிகளில் மிகத் தீவிரமாக ஈடுப்பட்டு வந்து கொண்டிருந்த அதே தினங்களில் ரக்பி விளையாட்டின் மீது அவரது ஆர்வம் வெகுவாக வளர்ந்திருந்தது. அவரது தந்தை 1980-களில் ரக்பி விளையாட்டில் வட டிரான்ஸ்வல் அணியின் சார்பாக பல போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதனால், தனது மகனும் ரக்பியில் இணைந்திருக்க வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது. எனினும், தனது ஆசைகளை அவர் டூ ப்ளிஸஸின் மீது திணிக்கவில்லை. சிறுவனான டூ ப்ளிஸஸ் ஒருபுறம் கிரிக்கெட் பயிற்சியிலும், மறுபுறம் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் ரக்பி விளையாடுவதிலும் தனது பெரும் பொழுதுகளை செலவிட்டு வந்தார். 

ரக்பி ஒரு முரட்டுத்தனமான விளையாட்டு, கைகளில் பந்தை ஏந்திக் கொண்டு, மைதானம் முழுக்க ஓடியாடியபடியே இருக்க வேண்டும். பிற வீரர்கள் எப்போதும் ஒருவர் மற்றவரின் மீது மோதிக் கொண்டு விழுவதும் அதனால் பலத்த காயங்கள் ஏற்படுவதும் வழக்கமாகவே இருக்கும். இக்காலங்களில், பல உபகாரணங்களை அந்த விளையாட்டுகென்று உருவாக்கியிருக்கிறார்கள். விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பு வெகுவாக பேணப்படுகிறது. ஆனால், டூ ப்ளிஸஸ் ரக்பி விளையாடிய போது, தோள்களை பாதுகாக்கும் மட்டை கவசம்கூட கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை. இதனால், ரக்பியை விளையாடுவது அத்தனை எளிதானதாக இல்லை. 

மைதானம் முழுக்க ரக்பி பந்தை சுமந்து கொண்டு பிற வீரர்களின் அணைப்பில் இருந்து தப்பி ஓடுவதில் உள்ள கிளர்ச்சி டூ ப்ளிஸஸுக்கு பிடித்திருந்தது. எனினும், முழுவதுமாக ரக்பியை அவர் தனது மனதில் நைந்து கொள்ளவில்லை. கிரிக்கெட்டும், ரக்பியும் பால்யத்தின் இரு கண்களாக அவருக்குள் தோற்றம் கொண்டிருந்தன. இந்த நிலையில், ஒருமுறை ரக்பி விளையாடும்போது அவருக்கு பலமான காயம் ஏற்படுகிறது. முரட்டுத்தனமான தாக்குதலில் சிக்குண்டு அவரது கை மணிக்கட்டில் முறிவு ஏற்பட்டு சிகிச்சை மேற்கொள்ளும் சூழல் உண்டானது. பலமான உடல் வலி இருந்ததோடு, அப்போது தொடர்ச்சியாக தான் ஈடுபட்டுவந்த கிரிக்கெட் பயிற்சியில் கலந்து கொள்ள முடியாததும் மிகுந்த சிரமமாக இருந்தது. கிட்டதட்ட இரண்டு மாதங்கள் அவரால் கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட முடியாவில்லை.   

இந்த இடைவெளியை அவரால் எளிதாக கடக்க முடியவில்லை. ஒவ்வொரு தினமும் கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்ளும் நினைவுகள் மனதில் விரிகின்றன. இனி ஒருபோதும் ரக்பி விளையாட்டில் தன்னை இணைத்து கொள்ள போவதில்லை என்று உறுதியாக தீர்மானிக்கிறார். உடல் தேர்ச்சியுற்று மீண்டு வந்ததும், ஒரு முழுமையான கிரிக்கெட் உயிரியாக தன்னை வடிவமைத்துக் கொள்கிறார். அதன் பிறகு கிரிக்கெட் அவரது வாழ்க்கையாகிப் போனது. இன்றைக்கு மிகத் தரம் வாய்ந்த முன்னணி கிரிக்கெட் வீரர் என்பதோடு ஒரு பலமான சர்வதேச கிரிக்கெட் அணியை தலைமை தாங்கி வழி நடத்தியும் வருகிறார். 

வளர்ந்து வரும் காலத்தில் அவர் எடுத்த முடிவு ஒன்று இன்றைக்கு அவரது வளர்ச்சி மிகுந்த கிரிக்கெட் அடையாளத்துக்கு மிக முக்கியமான காரணியாக கருதப்படுகிறது. அவரது 21-வது வயதில், இங்கிலாந்தை சேர்ந்த நாத்தின்ஹம்ஷேர் அணி சார்பாக கிரிக்கெட் விளையாட அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதனை ஏற்றிருந்தால், இன்றைக்கு டூ ப்ளிஸஸ் இங்கிலாந்து அணிக்காக விளையாடிக் கொண்டிருப்பார். தென் ஆப்பிரிக்காவில் இருந்து இடம்பெயர்ந்து முழுமையான இங்கிலாந்து கிரிக்கெட் வீரராக உருவெடுத்திருப்பார். 

கெவின் பீட்டர்சன் அவ்வகையில், தென் ஆப்பிரிக்காவில் பிறந்து சந்தர்ப்ப சூழல்களால் இங்கிலாந்து அணியில் விளையாடியவரே. இங்கிலாந்து அணி கெவின் பீட்டர்சனை எப்படி பாரபட்சமாக நடத்தியது என்பதை அவரது சுயசரிதையில் இருந்து நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. இங்கிலாந்து அணியின் மூர்க்கமிக்க கிரிக்கெட் வீரர் என புகழப்பட்டு, அவ்வணியின் அபாயகரமான விளையாட்டாளராக கருதப்பட்ட நிலையிலும், அவ்வணி வீரர்களும், அதன் நிர்வாகமும் அவரை இரண்டாம்பட்சமாகவே நடத்தியது. அதிர்ஷ்டவசமாக டூ ப்ளிஸஸுக்கு அத்தகையை அனுபவங்கள் உண்டாகவில்லை. அவர் தனக்கு முன்மொழியப்பட்ட வாய்ப்பை முற்றிலுமாக மறுத்து ஒதிக்கிவிட்டார். உள்ளூர் அளவிலேயே தனது திறன்களை மெல்ல மெல்ல மேம்படுத்தி வளர்த்தெடுத்தார்.     

ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பதற்கு வெளியிலும் டூ ப்ளிஸஸுக்கு பல முகங்கள் உண்டு. சமீப காலங்களில் கடலில் சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவது அவரது பெரும் பொழுதுபோக்காக இருக்கிறது. சுருண்டு முன் வரும் நீர் மடிப்புகளின் மீது ஏறி புரள்வதும், மீண்டும் கடலுக்குள் விழுவதும் அவருக்கு புத்துணர்வூட்டும் செயலாக இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா அணியின் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவராக ஸ்டெயின் தான் நீர் சறுக்கு போட்டியை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தவர். சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம், ஸ்டெய்ன், டூமினி, டூ ப்ளிஸஸ் முதலியோர் இவ்விளையாட்டில் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்று வருகிறார்கள். இன்ஸ்டாகிராமில் அவர்களது புகைப்படங்களை நம்மால் பார்க்க முடிகிறது.

அதே போல, சமையல் கலையிலும் டூ ப்ளிஸஸ் கை தேர்ந்தவர். ஏபி டிவில்லியர்ஸுக்கும் அவரது திருமண தினங்களின்போது டூ ப்ளிஸஸ் சில பிரத்யேகமான சமையல் குறிப்புகள் வழங்கியிருக்கிறார். பல்வேறு ருசி மிகுந்த உணவுகளை சுவைபடச் சமைப்பதில் அவர் கெட்டிக்காரர் என அவரது நண்பர்கள் குழாம் தெரிவிக்கின்றனர். ‘புரோட்டீயஸ் மக்களுடன் நாம் சமைக்கிறோம்’ என்றொரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தென் ஆப்பிரிக்காவில் நடைப்பெற்று வருகிறது. அதில் டூ ப்ளிஸஸ் ஒருமுறை கலந்து கொண்டார். ஆட்டிறைச்சியை மிகுந்த சுவையுடன் மணம் கமழ அவர் சமைத்துக் கொடுத்ததில், சுற்றியிருந்த அனைவரும் அதிசயித்துப் போனார்கள். அன்றைய நிகழ்வில் பத்துக்கு ஒன்பது மதிப்பெண் அவரது சமையலுக்கு வழங்கப்பட்டது. டூ ப்ளிஸஸுக்கு இதனால் ஆச்சர்யம் உண்டானது. ஒரு நவயுக கிரிக்கெட் நாயகனாக உருவெடுத்திருக்கும் டூ ப்ளிஸஸ் நவரசங்களும் கற்றுத் தேர்ந்தவராக இருக்கிறார். 

ஒரு லெக் ஸ்பின்னராக வெகு அரிதான தருணங்களில் மட்டும் சர்வதேச போட்டிகளில் நம்மால் டூ ப்ளிஸஸ் பந்து வீசுவதை பார்க்க முடிகிறது. ஆனால், உள்ளூர் அளவில் தான் பங்கு கொண்ட போட்டிகளில் இரண்டு முறை தொடர்ச்சியாக ஐந்து விக்கெட் விக்கெட்டுகளை எடுத்து அசத்தியிருக்கிறார் டூ ப்ளிஸஸ். இது அவருக்கு உரிதான பிரத்யேக சாதனைகளில் ஒன்று. 

நவம்பர் 23, 2013 அவரது வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தினம். அன்றைய தினத்தில்தான் தனது நீண்ட கால காதலியான இமாரி விஸாரை அவர் திருமணம் செய்து கொண்டார். மார்கெட்டிங் துறையில் பணி செய்து கொண்டிருந்த இமாரி திருமணத்திற்கு பின்னர் அவ்வேலையை ராஜினாமா செய்துவிட்டார். இப்போது தம்பதிகள் இருவரும் பல்வேறு நாடுகளுக்கு பெரும் நேசிப்புடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். ஒரு சமூக வயப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும், மிக பொறுப்பானவராகவும் மேன்மையான பண்புகளையுடையவராகவும் டூ ப்ளிஸஸ் விளங்குகிறார். 

இன்றைக்கு சர்வதேச தளத்தில் டூ ப்ளிஸஸின் இடம் மறுக்க முடியாததாக இருக்கிறது. தர வரிசை பட்டியலில் முதல் பத்து இடங்களில் அவரது பெயரும் இடம் பெற்றிருக்கிறது. அனைத்து வகையிலான கிரிக்கெட் வகைமைகளிலும் (ஒருநாள் போட்டி, டெஸ்ட் கிரிக்கெட், இருபது ஓவர்) சதம் கண்ட வெகு சொற்ப விளையாட்டாளர்களில் டூ பளிஸஸும் ஒருவர். தென் ஆப்பிரிக்கா அணியின் சார்பாக ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் குவித்த வீரரான கேரி கிரிஸ்டியனுக்கு பிறகு, இவரது ஸ்கோரே அடுத்த நிலையில் இருக்கிறது. இலங்கைக்கு எதிரான போட்டியொன்றில் 185 ரன்கள் குவித்து அந்த நிலையை அவர் அடைந்தார். டூ ப்ளிஸஸின் இன்றைக்கு வளர்ச்சி அபரிதமானதாக இருக்கிறது. எனினும், இப்போதைய அவரது இலக்கு எதிர் வரும் உலக கோப்பை போட்டித் தொடர்தான். 

தென் ஆப்பிரிக்கா அணியின் பன்னெடுங்கால உலக கோப்பை கனவை இந்த தொடரில் முன்னால் நின்று ஏந்திச் செல்பவர் டூ ப்ளிஸஸ்தான். 2015 உலகக் கோப்பையிலும் அவரது பங்களிப்பு சிறப்பானதாக இருந்தது. இன்றைய தேதியில் அவர் முன்னிருக்கும் மிக முக்கியமான சவால் எதிர் வரும் உலக கோப்பை போட்டித் தொடர்தான். டெஸ்ட் விளையாட்டில் நம்பர் 1 இடத்தை பிடிக்கச் செய்வதோடு, 2019 உலக கோப்பை தொடரையும் பெற்றுவிட்டால், அதோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடவும் தான் தயாராக இருப்பதாக சமீபத்தில் ஒரு நேர்காணலில் டூ ப்ளிஸஸ் தெரிவித்தார். தென் ஆப்பிரிக்கா அணியின் நெடுங்காலத்திய கனவு டூ ப்ளிஸஸ் காலத்தில் நிஜமாகுமா என்பதை பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும்.

(சிக்ஸர் பறக்கும்…)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT