38. நான் நிகழ்காலத்தில் வாழ்ந்திட ஆசைப்படுகிறேன்! தோனியின் வெற்றியின் ரகசியம்!

38. நான் நிகழ்காலத்தில் வாழ்ந்திட ஆசைப்படுகிறேன்! தோனியின் வெற்றியின் ரகசியம்!

ராஞ்சியில் அமைந்திருக்கின்ற டி.ஏ.வி. ஜவஹர் வித்யா மந்திர் பள்ளியில் அன்றைய மாலையில் நிறைய மாணவர்கள் மைதானத்தில் குவிந்திருக்கிறார்கள்.

'நான் நிகழ்காலத்தில் வாழ்ந்திட ஆசைப்படுகிறேன். அதே சமயத்தில் கடந்த காலத்தில் இருந்து படிப்பினைகளை பெற்றிடவும், எதிர்காலத்துக்குக்கான திட்டமிடல்களை வகுக்கவும் நான் ஒருபோதும் தவறுவதே இல்லை' – மகேந்திர சிங் தோனி

ராஞ்சியில் அமைந்திருக்கின்ற டி.ஏ.வி. ஜவஹர் வித்யா மந்திர் பள்ளியில் அன்றைய மாலையில் நிறைய மாணவர்கள் மைதானத்தில் குவிந்திருக்கிறார்கள். பல்வேறு விளையாட்டு போட்டிகளுக்கான பயிற்சிகள் அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் கிரிக்கெட் விளையாட்டில் சில மாணவர்கள் ஈடுபட்டிருக்க, மற்றொரு புறத்தில் கால்பந்தாட்டமும் மிகத் தீவிரமாக நடைபெறுகிறது. மாணவர்களின் ஆரவாரம் மைதானம் முழுக்க பெருகியிருக்கிறது. எங்கும் கூச்சலும், குரலொலியும் நிரம்பியிருக்கிறது.

திரண்டு குவிந்திருக்கும் மாணவர் கூட்டத்துக்கு மத்தியிலும் ஒரேயொரு சிறுவனை பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி அடையாளம் காண்கிறார். ஏழாம் வகுப்பு மாணவனான அந்தச் சிறுவன் கால்பந்தட்டத்தில், கோல் கீப்பராக விளையாடிக் கொண்டிருக்கிறான்.

தனக்கெதிராக உதைத்துத் தள்ளப்படும் அனைத்து பந்துகளையும் அவனால், லாவகமாக கையாள முடிகிறது. அவனை கடந்து கோல் போடுவதற்கு, மற்ற மாணவர்கள் கடினமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்தச் சிறுவன் ஒட்டுமொத்த பிற விளையாட்டாளர்களுக்கும் தனது உறுதியான ஆட்டத்தினால், சவால் விடுத்துக் கொண்டிருக்கிறான். உடல் சோர்வுற்று தன்னம்பிக்கையில் குலையும் நிலை வரையில் மாணவர்களும் தொடர்ந்து பந்தை கோல் போஸ்டுக்குள் உதைத்துத் தள்ளுவதற்கு  முயற்சிக்கிறார்கள். அந்தச் சிறுவனான தோனி ஒருவரையும் தன்னை வெல்வதற்கும் அனுமதிக்காமல், மிகத் தீவிரமாக தான் இருக்கும் இடத்தில் நின்றபடியே பந்தின் போக்கை கூர்மையாக அவதானித்துக் கொண்டிருக்கிறான்.

தொலைவில் இருந்து தோனியின் அசாத்திய நம்பிக்கையை பார்க்கும் கேசவ் பானார்ஜிக்கு அவனது சாதுர்யமான ஆட்டம் பிடித்து விடுகிறது. அவரது மூளையில் வேறொரு திட்டம் திரள்கிறது. கேசவ் பானார்ஜி அந்த பள்ளியின் தலைமை விளையாட்டு பயிற்சியாளர். ஆறாம் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கால் பந்தாட்டம், கூடைப் பந்தாட்டம் மற்றும் கிரிக்கெட் பயிற்சிகளை அளிப்பவர் அவர்தான். அவரது தலைமையின் கீழ்தான் அனைத்து சிறுவர்களும், தங்களது விளையாட்டு திறன்களை மேம்படுத்திக் கொண்டிருந்தனர்.

ஒரு கோல்கீப்பராக தோனியின் செயல்பாடு, அவருக்கு மிகுந்த மன திருப்தியை உண்டாக்குகிறது. அவனை மேலும் வேறு வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்கிறார். பள்ளியின் கிரிக்கெட் அணிக்கு தோனியையே விக்கெட் கீப்பராக தேர்வு செய்யலாம் என்கின்ற எண்ணம் அவருக்குள் உருவாகிறது. பந்துகளை தடுப்பதில் அவன் காட்டும் முனைப்பும், அதீத பொறுப்புணர்வும், கிரிக்கெட் விளையாட்டிலும் தோனிக்கு கை கொடுக்கும் என அவர் தீர்மானமாக நம்புகிறார். அன்றைய கால் பந்தாட்ட பயிற்சியின் நிறைவுக்கு பின்னர் தோனியை நெருங்கும், கேசவ் அவனிடத்தில், 'கிரிக்கெட் விளையாட்டில் விக்கெட் கீப்பராக இணைந்திட விருப்பமிருக்கிறதா?’என்றார். அதற்கு பதிலுரைத்த தோனி, 'எனக்கு வாய்ப்பு அளிப்பட்டால், நிச்சயமாக சேர்ந்துக் கொள்கிறேன்' என்றான். கிரிக்கெட் உடனான தோனியின் உறவு அந்தப் புள்ளியிலிருந்துதான் துவங்குகிறது.

கேசவ் பானார்ஜியின் தலைமையில், ஒரு தினத்துக்கு ஐந்தில் இருந்து ஆறு மணிநேரம் மாணவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. முன்னதாக மாவட்ட அளவில் டென்னிஸ் போட்டியிலும், கால் பந்தாட்ட போட்டியிலும் பங்கெடுத்திருந்த தோனிக்கு, கிரிக்கெட் பயிற்சிகள் புது அனுபவமாக இருந்தன. மெல்ல ஸ்டம்புகளின் பின்னால் நின்றபடியே கிரிக்கெட் விளையாட்டின் சகல நுணுக்கங்களையும் உணர்ந்து கொள்ள துவங்குகிறான். மைதானத்தின் தன்மை, பந்துகளின் சுழல்முறை, பேட்ஸ்மேன்களை பந்துகளை சமயோஜிதமாக மடக்கி குறிப்பிட்ட திசைகளில் விளாசுவது என சிறுக சிறுக கிரிக்கெட் விளையாட்டின் அத்தனை நுட்பங்களும் தோனிக்கு புரிகிறது. விக்கெட் கீப்பராக மிகச் சிறந்த முறையில் தனது பங்களிப்பை செய்கிறான். எனினும், பேட்டிங் மீதான தோனியின் ஆர்வமும் உள்ளூற வளர்ந்தபடியே இருக்கிறது.

கேசவ் பானார்ஜியை பொறுத்தவரையில், தோனியின் விக்கெட் கீப்பிங் திறமையின் மீது அவருக்கு நம்பிக்கை இருந்ததே தவிர, அவனை ஒரு பேட்ஸ்மேனாக அவர் கருதியதே இல்லை. நல்ல உடல் வலுவுடன் ஸ்டம்புகளின் பின்னால் உறுதியுடன் நின்று கொண்டு, பந்துகளை தன்னை கடந்துச் செல்ல அனுமதிக்காமல் இருப்பது மட்டுமே தோனியிடத்தில் அவருக்கு போதுமானதாக இருந்தது. அதனால், பேட்டிங்கின் போது தோனியை ஆறாவது அல்லது ஏழாவது விளையாட்டாளராக களம் இறக்கிவிடுவதுதான் பயிற்சியாளர் கேசவ்வின் வழக்கம். ஒவ்வொரு முறை தோனி கீழ்நிலையில் இறக்கிவிடும் போதும் தனது எதிர்ப்புணர்வை லேசாக காண்பித்துக் கொள்வான். விரைவில் களமிறங்கி அணிக்காக ரன்களை சேர்க்க வேண்டுமென்கின்ற விருப்பம் அவனிடத்தில் மிகுதியாகவே இருந்தது. எனினும், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தோனி தவறியதேயில்லை.' அசாத்திய துணிச்சல்காரன்' என அந்த நாட்களை நினைவுகூருகிறார் கேசவ்.

தோனியின் விளையாட்டு ஆர்வம் மெல்ல பெருகியபடியே இருந்தது. வீட்டில் இருக்கும் நேரத்தில் கூட அவனது மனதில் கிரிக்கெட் சார்ந்த நினைவுகள்தான் எப்போதும் ஆக்கிரமித்திருக்கும். வளரும் காலத்தில் சச்சின் டெண்டுல்கரின் மிகச் சிறந்த ரசிகராக இருந்த தோனி, தனது வீட்டு சுவரில் சச்சினின் உருவப் படத்தை ஒட்டி வைத்துவிட்டு, தினமும் அதனை பரசவம் பெருக பார்த்துக் கொண்டிருப்பான். பிற்காலத்தில், சச்சின் உடன் இணைந்து விளையாடுவோம் என்றோ அல்லது இந்திய அணியின் கேப்டன் பொறுப்புக்குத் தன்னை முன்மொழியப் போகிறவர் சச்சின்தான் என்பதையோ தோனி அப்போது கற்பனையில் கூட நிகழ்த்திப் பார்த்திருக்க மாட்டான். மெல்ல மெல்ல அவனது மனதை கிரிக்கெட் முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது.

தோனியின் தந்தையான பான் சிங் MECON எனும் தொழிற்சாலை ஒன்றில் பம்ப் ஆப்பரேட்டர் எனும் கீழ்நிலை பணியாளராக வேலை செய்துக் கொண்டிருந்தார். அவரது மிக சொற்ப ஊதியத்தில்தான் அவர்களது மொத்த குடும்பமும் நடந்தது. ஜெயந்தி குப்தா மற்றும் நரேந்திர சிங் தோனி இருவரும் தோனியின் உடன் பிறந்தவர்கள். பான் சிங் ஒரு குடும்பத் தலைவராக அனைவரையும் மிகப் பொறுப்புடன் வளர்த்து வந்தார். துவக்கத்தில், தோனி கிரிக்கெட் விளையாட்டை அத்தனை சீரியஸாக அணுகியதை மற்ற சிறுவர்களின் செயலைப் போலவே சாதாரண ஒன்றாக கருதிய பான் சிங், பின்காலத்தில் தனது வாழ்க்கையையே தோனி கிரிக்கெட் விளையாட்டில் அர்ப்பணிக்க போகிறான் என்பதை உணர்ந்ததும் பதறிவிட்டார். மிக எளிய குடும்பத்தில் இருந்து ஒருவர் தேசிய அளவில் இடம் பிடிப்பதெல்லாம் கற்பனைக்கும் எட்டாத செயலென்று அவருக்கு தோன்றியது. எனினும், தோனி தனது தீர்மானத்தில் இருந்து பின்வாங்கவில்லை. பத்தாம் வகுப்புக்கு பின்னர் மேலும் தீவிரமாக கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடத் துவங்குகிறார். 1998-ல் மத்திய நிலக்கரி நிறுவனத்தின் (சிசிஎல்) கிரிக்கெட் அணி (இந்த அணி தற்போது இல்லை) சார்பாக விளையாடும் வாய்ப்பு தோனிக்கு கிடைக்கிறது. அப்போது தோனி பனிரெண்டாம் வகுப்புதான் பயின்று வந்தான். பள்ளி மைதானத்துக்கு வெளியில் அவனது கிரிக்கெட் விளையாடு விரிவடைந்திருக்கவில்லை. ஆனாலும், அவனது அதிரடி ஆட்டத்தால் கவரப்பட்ட சிசிஎல் அணியின் பொறுப்பாளர் தேவல் சஹாய் சிசிஎல் அணியில் விளையாடும் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுக்கிறார். சஹாய்யின் எண்ணம் ரஞ்சி கோப்பையில் கலந்து கொள்வதற்கான துடிப்புமிக்க இளைய அணியை உருவாக்க வேண்டும் என்பதாக இருந்தது.

அந்தப் போட்டி தொடரில், தோனிக்கு துவக்க நிலையில் களமிறங்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதோடு, ஒவ்வொரு போட்டியிலும் தோனி விளாசும் சிக்ஸர்களுக்கு 50 ரூபாய் தருவதாக அவனிடத்தில் சஹாய் தெரிவிக்கிறார். தனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பினை சரிவரி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்ற முனைப்பு தோனியின் மனதில் உருவெடுத்திருக்கிறது. தோனியின் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணமான அந்த போட்டித் தொடரில், தன் மீதான அணி பொறுப்பாளரின் நம்பிக்கையை தோனி பொய்யாக்கவில்லை.

போட்டிகளில் ஒவ்வொரு பந்துகளையும் மைதானத்தின் நாலா திசைக்கும் பறக்க விடுகிறான். பள்ளி அளவில் நடைபெற்ற தொடர் ஒன்றின் இறுதி போட்டியில், சக மாணவனான சபீர் ஹுசைன் உடன் இணைந்து ஒரு போட்டியில் 378 ரன்களை அவர்களது இணை சேர்த்திருந்தது. தோனி அப்போட்டியில் இரட்டை சதம் அடித்திருந்தான். சஹாய்யின் மனதில் தோனி பற்றிய மதிப்பீடுகள் மேலும் உயருகிறது. 'தோனி சுயமான உருவெடுத்த திறமைசாலி. அவனது திறன்களுக்கு ஆசானாக வேறொருவரை சொல்ல முடியாது. இயல்பாகவே அவனிடத்தில் திரண்டிருந்த தீவிரத்தன்மை அவன் சிறந்த கிரிக்கெட்டராக உருவாவதற்கான காரணமாக இருக்கிறது' என்கிறார் சஹாய். அதே போல அப்போதைய சிசிஎல் அணியின் கேப்டனாக இருந்த அடில் ஹூசைன் 'அணி வீரர்கள் ஒவ்வொருவரையும், நான் திட்டுவதற்கு யோசித்ததே இல்லை. ஆனால், தோனியும் சபீரும் அவர்களை கடிந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை எனக்கு வழங்கியதே இல்லை' என்கிறார்.

சஹாய் அதோடு நிறுத்தி விடவில்லை. தொடர்ச்சியாக பீஹார் அணிக்கு விளையாடும் வாய்ப்பினை தோனிக்கு கொடுக்கிறார். ஒரே வருடத்தில் சிசிஎல் அணியில் இருந்து தோனி பீஹார் ரஞ்சி அணியில் இடம்பெறுகிறார். சஹாய்யின் பலமான ஆதரவு தோனிக்கு கிடைத்திருந்தது. இந்த நிலையில் 2001-ம் வருடத்தில், துலீப் கோப்பை எனும் போட்டித் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு தோனிக்கு வழங்கப்படுகிறது. துலீப் கோப்பை தோனியின் வாழ்க்கையில் அடுத்தக் கட்ட நகர்வு வழிவகுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டித் தொடராகும். ஆனால், பீஹார் கிரிக்கெட் நிர்வாகத்தின் கவனக் குறைவினால், தோனிக்கு தான் அணியில் இடம் பெற்றிருக்கும் தகவலே போய்
சேரவில்லை. இறுதி நிமிடத்தில் நண்பர்களின் மூலமாக அறிந்து கொண்டு, அணி நிர்வாகத்தை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, துலீப் கோப்பையில் விளையாடும் ஒட்டுமொத்த வீரர்களும் முன்னதாக புறப்பட்டு சென்றுவிட்டதான தகவல் தோனிக்கு கிடைக்கிறது. அவரது மனதில் துயரம் பெருகுகிறது. தனக்கு கிடைத்திருக்கும் மிக அற்புதமான தருணமொன்று கை நழுவிப் போய்விட்டது என்கின்ற கவலை அவரது மனதை அழுத்துகிறது.

எனினும், நண்பர்கள் ஊக்கப்படுத்தியதால், நொடியும் தாமதிக்காமல் அங்கிருந்து காரில் புறப்பட்டு கொல்கத்தா விமான நிலையத்தை அடைவது என்று முடிவு செய்கிறார்கள். கொல்கத்தா விமான நிலையத்தில் சக அணி வீரர்களுடன் சேர்ந்து கொள்ள முடியும் என்கின்ற நிச்சயம் இருக்கிறது. அதனால், அந்த இரவில் கொல்கத்தாவை நோக்கிய தங்களது பயணத்தை தோனியும் அவரது குழுவினரும் தொடங்குகிறார்கள். பல்வேறு சாலைகளின் ஊடாக நீண்ட தூரம் காரில் பயணித்து விமான நிலையத்தை அடைகிறார்கள். அவர்கள் அவ்விடத்தை அடைந்த சில நிமிடங்களுக்கு முன்பாகத்தான், மற்றைய அணி வீரர்கள் தங்களது விமானத்தில் புறப்பட்டு சென்றுவிட்டதான
தகவல் அவர்களுக்கு கிடைக்கிறது. பெருத்த நம்பிக்கையுடன் வந்த தோனியின் உறுதி குலைகிறது. வெகு அசால்ட்டாக நழுவிப் போன மிகச் சிறந்த வாய்ப்பொன்றை நினைத்து ஏமாற்றத்துடன் மீண்டும் ஊர் திரும்பினார்கள் தோனியும் அவரது நண்பர்களும். இன்றைய தினத்தில் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் நாயகனாக உருவெடுத்திருக்கும் தோனியின் துவக்க நிலை சவால்கள் ஒவ்வொன்றாக உருவெடுத்தபடியே இருந்தன.

வீட்டிலும் பொருளாதார அழுத்தம் தோனியை துயரத்தில் ஆழ்த்தியது. தனது கிரிக்கெட் கனவுகளைப் பற்றி பெற்றோரிடத்தில் விவரிக்க முடியாத நிலை. அதனால் தனது ஆசைகளை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு, தான் ஏற்க வேண்டிய குடும்ப பொறுப்புகளை பற்றி யோசிக்க துவங்குகிறார். அந்த நிலையில் மிகச் சரியாக, மேற்கு வங்கத்தை சார்ந்த சதர்ன் ரயில்வே துறையின் (Southern Railway Department) கிரிக்கெட் அணியின் மேலாளராக இருந்த அமினேஷ் குமார் கங்குலி தோனியைப் பற்றி கேள்வியுற்றார். பீஹார் அணியில் ஒரு திறன்மிக்க கிரிக்கெட் விளையாட்டாளர் உருவெடுத்து வருகிறார் என்பதை அறிந்ததும், உடனடியாக தனது கட்டுப்பாட்டுக்குள் அவரை இழுக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்.

விளையாட்டு கோட்டாவில் பயணச்சீட்டு பரிசோதகராக பணி நியமன உத்தரவு தோனிக்கு தயாராகிறது. ரயில்வேயில் வேலை என்றதும் தோனியின் தந்தைக்கு அதீத உற்சாகம். தனது குடும்பத்தின் பாரம் இனி மகன் தோனியால் குறைந்துவிடும் என்று கணக்குப் போடுகிறார். அப்போது வரையிலும் கூட, தோனி கிரிக்கெட்டை தனது வாழ்வாக கருதுகிறான் என்பதை அவர் உணர்ந்திருக்கவில்லை. தோனியும் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவது என ஒருமனதாக முடிவு செய்கிறார். அந்த தருணத்தில் தோனியின் முன்னால் இருக்கும் ஒரேயொரு வாய்ப்பு அது மட்டும்தான். ரயில்வேயில் பணி செய்து கொண்டே, கிடைக்கின்ற நேரத்தில் கிரிக்கெட் பயிற்சிகளில் ஈடுபடலாம் என்ற எண்ணத்தோடு பணியில் இணைகிறார். எப்போதும் மிகுந்திருக்கும் ஜன நெரிசலும், ரயில் நிலைய புழுக்கமும், தொலைவில் ஒலிக்கும் ஹார்ன் ஓசையும் நிரம்பியிருக்கும் கார்க்பூர் ரயில் நிலையத்தில் ஒரு டிக்கெட் பரிசோதகராக தோனி தனது பணியினை துவங்கினார்.

(சிக்ஸர் பறக்கும்...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com