39. மகேந்திர சிங் தோனியின் நிறைவேறாத முதல் காதல்! பிரியங்கா ஜா!

கார்க்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக தோனி பணியில் சேர்ந்த தினம் 14.07.2001.
39. மகேந்திர சிங் தோனியின் நிறைவேறாத முதல் காதல்! பிரியங்கா ஜா!

கார்க்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக தோனி பணியில் சேர்ந்த தினம் 14.07.2001. மாதம் அவருக்கு 3,050 ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. தோனியின் தந்தைக்கு இந்த வருமானமே மிகப் பெரியதாக அன்றைய தினங்களில் தோன்றியது. தோனி கார்க்பூர் நகரத்துக்கு தனது உடைமைகளை சுமந்து கொண்டு வருகிறார். டி.ஆர்.எம் பங்களாவுக்கு அருகில் இருந்த ரயில்வே குவாட்ரஸில் அவருக்கு ஒரு அறை ஒதுக்கப்படுகிறது. எனினும், அவ்வறையில் மேலும் இருவர் தோனிக்கு முன்னதாக வசித்து வந்தனர். ஒரேயொரு அறை மட்டுமே கொண்ட அந்த குவாட்ரஸில் தோனி எவ்வித புகார்களுமின்றி வசிக்கத் துவங்குகிறார். அவரது நினைவுகளில் முழுக்க முழுக்க கிரிக்கெட்டே ஆக்கிரமித்திருக்கிறது.

ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராக குறிப்பிட்ட கால அளவில் பணி செய்து விட்டு, தனது பணி நேரம் முடிவடைந்ததும் உடனடியாக மைதானத்துக்கு கிரிக்கெட் விளையாட செல்வது அவரது வாடிக்கையானது. தோனியுடன் அப்போது அறையில் தங்கியிருந்த சத்திய பிரகாஷ், 'வேலையின் மீதான ஈடுபாட்டை விடவும் விளையாட்டின் மீதுதான் தோனியின் முழுமையான கவனமும் குவிந்திருந்தது. மதியம் இரண்டு மணி தொட்டுவிட்டால், உடனடியாக மைதானத்துக்கு விரைந்து சென்றுவிடுவான்' என்கிறார். இதனால் வேலையில் சில சிக்கல்கள் கூட உருவெடுத்தன. தோனியின் மீது சில புகார்கள் கொடுக்கப்பட்டது. ஆனால், அமினேஷ் குமார் கங்குலியின் முழு ஆதரவு தோனிக்கு இருந்ததால், அவர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தோனியின் பணியென்பது ரயில் நிலையத்தின் ஒவ்வொரு தளமாகச் சென்று, இயக்கத்தில் இருக்கும் ரயிலின் டிக்கெட் பரிசோதகருக்கு உரிய சில குறிப்புகளை வழங்க வேண்டும். பதிலுக்கு அவர் கொடுக்கின்ற குறிப்புகளை எடுத்து வந்து, தனது மேலதிகாரியிடம் சேர்ப்பிக்க வேண்டும். நாளாக நாளாக, தோனிக்கு இந்த பணியின் மீது ஒருவிதமான சலிப்பு மெல்ல உருவாகியபடியே இருந்தது. பெரும் கனவுகளை சுமந்திருந்த தோனிக்கு, ரயில் நிலையத்தில் அங்குமிங்குமென சுற்றி அலைகின்ற பணியின் மீது பிடித்தம் உருவாகவில்லை. எனினும், அப்போதைய அவரது குடும்பத்தின் நிலை காரணமாக தொடர்ந்து பணியில் நீடித்திருக்க வேண்டியிருந்தது.

தோனி பொறுமையுடன் காத்திருந்தார். ஒரு சம்பிரதாயமாக ரயில்வேயில் பணி புரிந்து கொண்டே கூடுமானவரையில் ரயில்வே அணி சார்பாகவும், பீஹார் அணிக்காகவும், அதே சமயத்தில் டென்னிஸ் பந்து அணியான துர்கா விளையாட்டு கழகம் அணியிலும் விளையாடிக் கொண்டிருந்தார். டென்னிஸ் பந்தில் அவர் விளாசிய சிக்ஸர்கள் அவருடன் இணைந்து விளையாடிய அனைவரையும் புருவம் உயர்த்தச் செய்தன. தோனி ரயில்வே அணிக்காக விளையாடிய போது ஒவ்வொரு போட்டிக்கும் தலா 2,000 ரூபாய் வழங்கப்பட்டது. பரபரப்பான பகல் நேர ரயில் நிலைய பணியை மேற்கொண்டவாரே, தனது கிரிக்கெட் திறன்களையும் மேலும் மேலும் பலத்தப்படுத்திக் கொள்ள அவர் தவறவேயில்லை.

அன்றைய காலங்களில், கார்க்பூரில் உடற்பயிற்சி பயிற்றுனராக செயலாற்றிக் கொண்டிருந்த அஷிஷ் தால், 'ஒரு மழைக்காலத்தின் போது, தனது நுரையீரலை
வலிமையானதாக மாற்றிக் கொள்ள, மழையில் நனைந்தபடியே தனியொருவராக மைதானத்தில் புட்பால் உதைத்துக் கொண்டிருந்தார். விளையாட்டை இத்தனை தீவிரமாக கருதிய தோனியை பார்த்து பெரும் மளைப்பாக இருந்தது’ என்கிறார். சிறுவயது முதலே தோனி தான் விளையாடிய அத்தனை அணி வீரர்களிடத்திலும் மிரட்சியை உருவாக்க தவறியதேயில்லை.

அதே போல, கார்க்பூரில் வசிந்திருந்த போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது நண்பர்களுடன் பைக் சவாரி செல்வது அவரது விருப்பமான செயல்களில் ஒன்று. இயல்பாகவே பைக்குகளின் மீது அவருக்கு பெரியளவில் ஆர்வமிருந்தது. பல்வேறு நிலப்பரப்புகளுக்கு, தூரத்தை கணக்கில் கொள்ளாமல் பைக்கில் சுற்றி அலைவதை ஒரு சாகச நிகழ்வாக கருதி தொடர்ந்து இன்றளவும் தோனி பயணம் செய்து வருகிறார். கார்க்பூர் தினங்களில் அவருடன் பைக் பயணத்தில் தீபக் சிங், ராபின், நதீம் ராஜா, விபீன் சிங் முதலிய நண்பர்களும் இணைந்து கொள்வது வழக்கம். புதிது புதிதான நிலங்களையும், காற்றையும் சுவாசிப்பதில் தோனிக்கு அலாதி ஆர்வம் இருக்கிறது.

கார்க்பூரில் தோனி மொத்தமாக மூன்று வருடங்களில் வசிந்திருந்தார். ரயில்வேயில் அவரது பணி 2001-ம் வருடம் துவங்கி 2003ம் வருடத்தில் நிறைவு பெற்றது. இந்த மூன்று வருடங்களில் அழுத்துகின்ற பணிச் சுமையையும் மீறி அவரால் ஓரளவுக்கு மன நிம்மதியுடன் இருக்க காரணம் அவரது நண்பர்களும், பைக் சவாரிகளும், சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் விளையாடுகின்ற கிரிக்கெட்டும் அதோடு அமினேஷ் குமார் கங்குலியின் தன்னம்பிக்கை பெருகும் வார்த்தைகளும்தான். தோனி அந்த மூன்று வருடங்களில் மூன்று முறை அறை மாறியிருக்கிறார். அதில் ஒரு அறை இப்போது தோனியின் பெயரில் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டிருக்கிறது. கனவுகளில் திளைத்திருந்த தோனியின் நினைவுகள் அவ்வறையில் படிந்துள்ளன.

கார்க்பூரில் தோனி குடியிருந்த தினங்களில் நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான சம்பவம் அவ்வப்போது சிலரால் குறிப்பிடப்படுவதுண்டு. ஒருமுறை தோனிக்கும், அவரது அறைத் தோழரான தீபக்குக்கும் பலத்த சண்டை மூண்டுவிட்டது. அது சார்ஜா கோப்பை கிரிக்கெட் நடைபெற்றுக் கொண்டிருந்த தருணம். தோனி ஆர்வமிகுதியில் கிரிக்கெட் போட்டியை காண்பதில் விருப்பமுற்றிருந்தார். ஆனால் தீபக்குக்கு, தொலைக்காட்சியில் அன்றைய தினம் ஒளிப்பரப்பு செய்யப்பட்டிருந்த அமிதாப் பச்சான் நடித்த திரைப்படம்
ஒன்றுதான் முக்கியமானதாக இருந்தது. அதனால், இருவருக்கும் இடையில் பலத்த சண்டை உருவாகிவிட்டது. வாக்குவாதம் கை கலப்பாக மாறுகிறது. இருவருக்கும் இடையில் பிரச்னை உருவாக காரணமாக இருந்த தொலைக்காட்சி தரையில் வீழ்த்தப்பட்டு, சிதறித் தெறித்தது.

மற்றொரு அறைத் தோழரான சத்திய பிரகாஷ் அப்போது தலையிட்டு அந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரவில்லை என்றால், இருவருக்கும் பலமாக காயங்கள் ஏற்பட்டிருக்கும். சினிமாவின் மீது அவருக்கு வெறுப்பெல்லாம் எதுவுமில்லை. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் நீளமான முடி கற்றையுடன் களமிறங்கிய தோனி அதற்கான காரணமாக தெரிவித்தது, தான் பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரஹாமின் ரசிகர் என்பதைத்தான். ஓய்வு நேரங்களில் திரைப்படங்கள் பார்ப்பதும் அவரது பொழுதுபோக்குகளில் ஒன்றாகவே இருந்திருக்கிறது. எனினும், அன்றைய தினத்தில் சார்ஜா கோப்பை நடைபெற்று வந்ததால், தோனியால் தனது ஆர்வத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கிரிக்கெட் விளையாட்டை தன் மனமெங்கும் நிரப்பியிருந்த தோனி, தனது அதீத பிணைப்பினால் ஒரு தொலைக்காட்சியை சிதறடிக்கவும் தயங்கவில்லை. அக்காலத்தில் அதிகளவில் கோபம் கொள்ளும் நபராகத்தான் தோனி இருந்திருக்கிறார். ஒரு துடிப்புமிக்க சீறும் இளைஞராக வளர்ந்து வந்த தோனி சாதுவான மிஸ்டர் கூல் பட்டம் பெற்றதற்கு வேறொரு காரணம் இருப்பதாக பொதுவாக நம்பப்படுகிறது.

அதற்குக் காரணம் பிரியங்கா ஜா. தோனி கல்வி பயின்ற அதே டி.ஏ.வி. ஜவஹர் வித்யா மந்திர் பள்ளியில்தான் பிரியங்கா ஜாவும் படித்தார். இருவருக்கும் பள்ளி காலத்தில் இருந்தே அறிமுகம் இருந்திருக்கலாம். எனினும், அது பற்றிய உறுதியான தகவல் இதுவரையில் வெளியிடப்படவில்லை. பின்காலத்தில், தோனி கிரிக்கெட் விளையாட்டில் மெல்ல மெல்ல வளர்ச்சியுற்றுக் கொண்டிருந்த காலத்தில், அவருக்கு மிகப்பெரிய ஊக்க சக்தியாக விளங்கியவர் பிரியங்கா ஜா. பல்வேறு நம்பிக்கை பெருகும் வார்த்தைகளை சொல்லி சொல்லியே தோனியின் தன்னம்பிக்கையை வளர்த்தெடுத்தார். தோனியின் அசாத்தியமான இன்னிங்க்ஸ்களின் போது பாராட்டு மழை பொழிவதாகட்டும், சரியாக விளையாட முடியாத சூழல்களில் தட்டிக் கொடுத்து துவண்டு போயிருக்கும் தோனியின் மனதை உயிர்ப்பூட்டுவதாகட்டும், பிரியங்கா ஜா தன்னால் இயன்ற வரையில் தோனிக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்.

தோனியின் மனதை முழுமையாக அக்காலங்களில் பிரியங்கா ஆக்கிரமித்திருந்தார். கிரிக்கெட்டுக்கு பிறகு, அவர் நேசம் கொண்டிருந்த ஒற்றை உயிராக பிரியங்கா இருந்தார். எனினும், அவர்களது வாழ்க்கை மிக குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது. துரதிர்ஷ்டவசமாக, கார் விபத்து ஒன்றில் பிரியங்காவின் உயிர் பறிபோனது. தோனியின் வளர்ச்சியை பெரிதும் எதிர்பார்ந்திருந்த பிரியங்கா ஜா அதனை கண்ணுறாமலேயே தோனியின் வாழ்வில் இருந்து மறைந்து போனார்.

தோனியால் முதல் இச்செய்தியை நம்பவே முடியவில்லை. அவரால் அதனை உணரவே முடியவில்லை. அதெப்படி பிரியங்கா போன்ற அபூர்வ உயிர்களை காலம் அத்தனை விரைவாக பறித்துவிட முடியும் என்று தனக்குள்ளாக சொல்லிக் கொள்கிறார். அப்படி நிகழ்ந்திருக்க சாத்தியமில்லை என்று மனதினுள் நம்ப தலைப்படுகிறார். பிரியங்கா! ஆம். தோனியின் மீது பேரன்பும், பெரும் நம்பிக்கையும் கொண்டிருந்த பிரியங்கா இப்போது உயிருடன் இல்லை. யதார்த்தம் அவர் முன் கருணையற்று குரூர உருவில் வளர்ந்து நிற்கிறது. இனியெதுவும் செய்வதற்கில்லை.

தோனி நிலை தடுமாறுகிறார். அவரது மனம் முழுக்க இருள் படர்ந்து வியாபித்திருந்தது. நிகழ்ந்து முடிந்த கோர சம்பவத்தின் அதிர்வுகளில் இருந்து எளிதில் அவரால் மீளவே முடியவில்லை. பல தினங்களுக்கு கனவுகளிலும், நினைவுகளிலும் பிரியங்காவின் ஞாபகம் திரண்டபடியே இருந்தது. கிட்டதட்ட ஆறு மாதங்களுக்கு தோனி வெளியுலக தொடர்புகளை துண்டித்துக் கொண்டு, தனித்து இருந்ததாக சொல்லப்படுகிறது. முதல் காதலின் வலி அவரது மனதை வதைத்து தனிமைப்படுத்தியது. அடுத்த சில மாதங்களில் மெல்ல மெல்ல தோனி அந்த துயர நிகழ்வில் இருந்து மீண்டு வந்தார். எந்த கிரிக்கெட்டை செறிவுப்படுத்திக் கொள்வதற்கு பிரியங்கா உதவியாக இருந்தாரோ, அதே கிரிக்கெட் இப்போது பிரியங்காவின் ஞாபகங்களை துடைத்து அழிக்க உதவிகரமாக இருந்தது. தோனி தன்னை சுற்றிலும் ஒரு வெளி அமைத்துக் கொள்கிறார். பிறரால் எளிதில் உள்நுழைய முடியாத வெளி அது. அதற்குள் அவர் மெல்ல தன்னை பக்குவப்படுத்திக் கொள்கிறார். அவரது இயல்பில் இருந்த ஒட்டுமொத்த சீற்றமும், கிரிக்கெட் விளையாட்டில் இறங்குகிறது. சர்வதேச இந்திய அணியில் தன்னை இணைத்துக் கொள்வதற்கு தயார் செய்து கொண்டிருந்தார். அவரது காலம் மெல்ல அவரை நெருங்கி
வந்தது.

2013-ல் தோனி தனது ரயில்வே பணியை ராஜினாமா செய்துவிட்டு, தனது முழு ஈடுபாட்டை கிரிக்கெட்டில் செலுத்தினார். தோனி ரயில்வேயில் இருந்து விலகிய மூன்றே வருடத்தில் அமினேஷ் குமார் கங்குலியும் உயிரிழந்து விட்டார். இப்போது தோனியின் முழு நேரமும் கிரிக்கெட்டில் மட்டுமே மையம் கொண்டிருந்தது. தொடர்ச்சியாக வாய்ப்பு அமையும் போதெல்லாம் தனது அதிரடி ஆட்டத்தால், எல்லோரையும் தன்வசப்படுத்தினார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏ அணியில் இடம் பெற்றார். பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ச்சியாக இரண்டு சதங்களை விளாசினார். ஒருபுறம் திறன் மிகுந்த விக்கெட் கீப்பராகவும், மறுபுறத்தில் அதிரடியில் விளாசித் தள்ளக் கூடிய பேட்ஸ்மேனாக பரிணமித்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில், இந்திய அணிக்கு அப்போது நிலையானதொரு விக்கெட் கீப்பர் இல்லாதிருந்தது. ராகுல் டிராவிட் தற்காலிக கீப்பராக செயலாற்றிக் கொண்டிருந்தார். வளர்ந்து வரும் விளையாட்டாளர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் பார்தீவ் பாட்டேலின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தன. மிகச் சரியாக அந்த தருணத்தில்தான் இந்தியா ஏ அணியில் தோனியில் ஆதிக்கம் உச்ச நிலையில் இருக்கிறது. வெறும் ஆறே இன்னிங்க்ஸில் மொத்தமாக 362 ரன்களை சேர்த்திருந்தார். இந்திய அணியின் கேப்டனான சவுரவ் கங்குலியும், அணி தேர்வு குழுவில் முக்கிய அங்கம் வகிக்கின்ற ரவி சாஸ்திரியும் தோனியின் ஆட்டத்தால் வெகுவாக கவரப்படுகிறார்கள்.

வங்க தேசத்துக்கு எதிரான போட்டித் தொடரில் தோனிக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. டிசம்பர் 23-ம் தேதி 2004-ம் வருடத்தில் இந்திய அணியில் தோனியின் வருகை நிகழ்கிறது. அது நாள் வரையிலும் தோனி எதிர்பார்த்திருந்த ஒரு தருணம். தனது வாழ்க்கையின் பெரும் போராட்டங்களை கடந்து, பிரியங்கா ஜா உட்பட பல்வேறு இழப்புகளைக் கடந்து, சர்வதேச ஊடகங்களின் கேமிரா உமிழ்ந்து கொண்டிருக்கும் வெளிச்சத்தில் முதல் காலடியை அன்றைய போட்டியில் எடுத்து வைக்கிறார். அவரது நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர் என அனைவரும் தொலைக்காட்சியின் முன்பாக அமர்ந்து தோனியின் அறிமுகத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

அன்றைய போட்டியில், இந்தியா தான் முதலில் பேட்டிங் செய்தது. தோனி ஏழாவது வீரராக களமிறங்குகிறார். முன்னதாக மொகமத் கைஃப் நல்லதொரு அடித்தளத்தை இந்திய அணிக்கு அமைத்து வைத்திருக்கிறார். தோனி களத்தில் இறங்குகிறார். 42-வது ஓவரான அதில், சர்வதேச அளவில் தனக்கு வீசப்பட்ட முதல் பந்தை ஸ்கொயர் லெக் பகுதியில் திருப்பிவிடுகிறார். ரன் எடுக்க வேண்டும் என்கின்ற அவசரம் மனதை அரிக்கிறது. மெல்ல ரன் எடுக்க க்ரீஸில் இருந்து வெளியேறுகிறார். மறுமுனையில் கைஃப் தோனியை பின் திரும்பிச் செல்லும்படி உரக்க கத்துகிறார். தோனி பின் திரும்புகிறார். ஆனால், நொடிப்பொழுதில் அனைத்தும் நிகழ்ந்துவிட்டது.

வங்கதேச வீரர்களின் துடிப்பு மிகுந்த பீல்டிங்கால் தோனி ரன் அவுட் செய்யப்படுகிறார். முதல் போட்டியென்பதால், அவர் களத்தில் நிற்கும் போதே, அவரது உடலில் ஒருவித பதற்றத்தை உணர முடிந்தது. ஆரவாரம் பெருகியிருக்கும் அந்த மைதானத்தில், அவரால் நிலை தடுமாறாமல் இருக்க முடியவில்லை. அன்றைய தினத்தில் தோனியை அங்கு கூடியிருந்த மக்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. நீண்ட முடி கற்றையுடன் களத்தில் இறங்கி, தடுமாறிய தோனியை அவர்கள் அத்தனை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. ஜார்கண்டில் அவரை எதிர்பார்த்து காத்திருந்த ஒட்டுமொத்த நண்பர்களும் அதிருப்தி அடைந்தனர். தோனியை தொலைக்காட்சியின் முன்
அமர்ந்தபடியே திட்டிக் கொண்டிருந்தனர்.

முதல் பந்திலேயே ரன் எதுவும் சேர்க்காமல், தனது விக்கெட்டை பறி கொடுத்திருந்த தோனி ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். மக்கள் கூட்டம் அடுத்து களமிறங்கப்போகும் அஜித் அகார்கரை எதிர்ப்பார்த்து காத்திருந்தது. பரிதாபகரமான முறையில் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறி கொடுத்துவிட்டு, தங்களை கடந்து பெவிலியன் நோக்கி திரும்பும் தோனியை அவர்கள் பொருட்படுத்தவில்லை. மஹியின் மகிமையை அப்போது அவர்கள் உணர்ந்திருக்கவில்லை.

(சிக்ஸர் பறக்கும்…)      

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com