இது சிக்ஸர்களின் காலம்

40. உலகக் கோப்பை வெற்றி என்பது வெறும் டீஸர் மட்டுமே! சைபரிலிருந்து சாதனை வரை மகேந்திர சிங் தோனி!

ராம் முரளி

ஜிம்பாப்வே அணியின் புகழ்பெற்ற வீரரான ஆண்டி பிளவர் (Andy Flower) சச்சின் டெண்டுல்கரின் திறனைப் பற்றி இப்படி குறிப்பிடுவார், 'கிரிக்கெட்டில் இரண்டே வகையிலான பேட்ஸ்மேன்கள்தான் இருக்கிறார்கள். முதலாவது சச்சின் டெண்டுல்கர். இரண்டாவது மற்ற அனைத்து வீரர்களும்!'. சச்சின் டெண்டுல்கர் நிகழ்த்தியுள்ள சாதனைகளை கருத்தில் கொள்கையில், ஆண்டி பிளவரின் இவ்வார்த்தைகள் முழுமையாக ஏற்கக் கூடியதே. சர்வதேச அளவில் நூறு சதங்களை கடந்த ஒரே விளையாட்டாளர் சச்சின் மட்டும்தான். பன்னெடுங்காலம் கிரிக்கெட் உலகில் தனித்த ஆளுமையாக ரன் மெஷினாக திகழ்ந்தவர் சச்சின் டெண்டுல்கர் ஒருவர் மட்டுமே.

எனினும், 1989-ல் தனது பதினாறாவது வயதில் சர்வதேச ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகமான சச்சின் அப்போட்டியில் ஒரு ரன் கூட சேர்க்காமல் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். கிரிக்கெட் விளையாட்டின் கடவுள் என வர்ணிக்கப்படுகின்ற சச்சின் டெண்டுல்கர் தனது முதல் ஒரு நாள் போட்டியில் சைபரில்தான் ஆட்டமிழந்தார். இயல்பாகவே மைதானத்தில் குழுமியிருக்கும் மக்கள் தொகையின் குரலொலிகளும், முதல் முதலாக சர்வதேச தளத்தில் பங்கேற்கும் பதற்ற உணர்வும் பின்காலத்தில் மிகச் சிறந்த விளையாட்டாளராக பரிணமித்த பலருக்கும் இருந்திருக்கிறது. ஷீகர் தவன், சுரேஷ் ரெய்னா, விவிஎஸ் லஷ்மண், சச்சின் டெண்டுல்கர் மற்றும் மகேந்திர சிங் தோனி என முதல் போட்டியில் பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்த வீரர்களின் பட்டியல் வெகு நீளமானது.

மகேந்திர சிங் தோனி முதல் தர போட்டிகளில் பலத்த அதிர்வுகளை உருவாக்கியதன் காரணமாக, இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் மீதான எதிர்பார்ப்புகள் மிகுதியாகவே இருந்தது. நிலையானதொரு விக்கெட் கீப்பர் இல்லாத கவலையில் ஆழ்ந்திருந்த இந்திய அணி, விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாக திறன் பெற்றிருந்த தோனியின் மீது பெரும் நம்பிக்கை கொண்டிருந்தது. அதே போல, தோனிக்கும் அவர் பங்கேற்கின்ற ஒவ்வொரு போட்டியும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஜார்கண்டில் தனது மிகச் சிறிய வசிப்பிடத்தில் இருந்தபடியே பல்வேறு கனவுகளில் திளைத்திருந்த தோனி இப்போது தன் முன்னால் எழுந்தருளியிருக்கின்ற சவால்களை வெற்றிக் கொண்டாக வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தார். முதல் ஒரு சில போட்டிகளில் அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை. ஏழாவது வீரராக களமிறங்கியதும் அதற்கு ஒரு காரணம். முதல் 4 போட்டிகளில் விளையாடிய தோனி வெறும் 22 ரன்களை மட்டும்தான் குவித்திருந்தார்.

இந்த நிலையில், அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 2005-ம் வருடம், ஏப்ரல் 5-ம் தேதி. பாகிஸ்தான் அணிக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் அந்தத் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறுவதாக இருந்தது. முதலில் பேட்டிங் செய்ய துவங்கிய இந்திய அணியின் சார்பாக, சச்சின் டெண்டுல்கரும், சேவாக்கும் களமிறங்கினார்கள். எதிர்பாராத வகையில் ஒரு சில ஓவர்களிலேயே சச்சின் தனது விக்கெட்டை பறி கொடுத்துவிட, சவுரவ் கங்குலி மூன்றாவது வீரராக மகேந்திர சிங் தோனியை களமிறக்கினார். எவரும் முற்றிலுமாக எதிர்பார்த்திராத ஒரு நகர்வு இது. அதுவரையிலும் விக்கெட் கீப்பர் என்கின்ற அளவில் மட்டும் பொருட்படுத்தப்பட்ட தோனி முதல் முறையாக பேட்டிங் வரிசையில் மூன்றாவது வீரராக கங்குலியால் களமிறக்கப்பட்டார்.

ஒருபுறம் சேவாக், தனது வழக்கமான ஆட்டபாணியில் ரன்களை குவித்துக் கொண்டிருக்க, தோனியும் தன் பங்குக்கு அதிரடியாக விளையாடத் துவங்கினார். நீண்ட தலை கேசத்துடன், கரடுமுரடான ஷாட்டுகளை விளாசிக் கொண்டிருந்த தோனியை பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் முதலில் அலட்சியமாகதான் எதிர் கொண்டனர். ஒன்றிரண்டு பவுண்டரிகளை அவர் விளாசியபோதும், அவர்களது நிலைபாடு அதுவாகவேதான் இருந்தது. எனினும், தோனி அவர்களது அலட்சியத்தை பொருட்படுத்தவில்லை. மெல்ல மெல்ல அவரது ஆட்டம் விஸ்வரூபம் எடுத்தபடியே இருந்தது. மறுபுறம், சேவாக்கும், கங்குலியும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை பறிகொடுத்துவிட, தோனி மட்டும் தனது உறுதியான விளாசல்களால் இந்திய அணியை முன்னகர்த்திக் கொண்டிருந்தார். எதிரணி பந்து வீச்சாளர்கள் அவரது விக்கெட்டை பறிக்க முடியாமல் திணறுகிறார்கள். அப்ரிடி, ரசாக், ஹபீஸ் என எவரொருவரின் சாதூர்யமான பந்துவீச்சும் தோனியின் முன்னால் அன்றைய தினத்தில் எடுபடவில்லை. விரைவாக அரை சதத்தை கடந்து, சர்வதேச அளவில் தனது முதல் சதத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருந்தார் தோனி.

மொத்தமாக நான்கு சிக்ஸர்களுடன், பதினைந்து பவுண்டரிகளும் விளாசி 148 ரன்களை குவித்துவிட்டு ஆட்டமிழந்தார் தோனி. இந்திய விக்கெட் கீப்பர் ஒருவரால் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக அன்றைய தினத்தில் தோனி குவித்த ரன்கள் கருதப்பட்டது. இந்திய வீரர்கள் அனைவரும் அவரது பங்களிப்பால் பெரும் மனநிறைவு கொண்டனர். ஒரு நம்பிக்கைக்குரிய விளையாட்டாளராக தோனியை அந்த போட்டியின் பின்பாக கருதத் துவங்கினர். பல சீனியர் வீரர்களால் நிறைந்திருந்த இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு துடிப்புமிக்க இளைய நாயகனாக தோனி உருவெடுத்திருந்தார். அன்றைய போட்டிக்கு பின்பாக, இந்திய ரசிகர்களும் தோனிக்கு முக்கியம் கொடுக்க ஆரம்பித்தனர். அடுத்தடுத்த போட்டிகளில் தோனி களமிறங்கும்போது கரகோஷமும், ஆரவாரமும் அரங்கத்தில் பெருகியபடியே இருந்தது.

இந்த நிலையில், அதே வருடத்தில் இலங்கை அணிக்கு எதிரான போட்டித் தொடர் ஒன்றில் தோனி மிக அசுரத்தனமாக விளையாடினார். அந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 298 ரன்களை குவித்து வலுவான நிலையில் இருந்தது. தனது இன்னிங்க்ஸை துவங்கிய இந்திய அணி துவக்கத்திலேயே சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை இழந்தது. இதனால், மூன்றாவது வீரராக களமிறங்கிய தோனியின் மீது பெரும் பொறுப்பு கவிந்திருந்தது. தோனியும் தனது இடத்தை இந்திய அணியில் தக்க வைத்துக் கொள்வதில் தீவிரமாக இருந்தார். அதனால், இந்தப் போட்டி அவருக்கு ஒரு நல்வாய்ப்பாகவும் அமைந்திருந்தது. மைதானத்தில் பந்துகள் சிதறிப் பறக்கின்றன. தோனியின் வீரியமிக்க ஷாட்டுகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துகிறது. ஹெலிகாப்டர் ஷாட் உட்பட அவரது விளையாட்டு பாணியே முற்றிலும் புதியதாக இருந்தது. பல பிரத்யேகமான ஷாட்டுகளின் மூலமாக, ரசிகர்களை அதீத மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். 

299 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு தனது இன்னிங்க்ஸை துவங்கிய இந்திய அணியில் தோனி குவித்தது மட்டுமே 183* ரன்களை! அவருக்கு அடுத்த அதிகபட்ச ஸ்கோராக சேவாக்கின் 39 ரன்களே இருந்தன. 15 சிக்ஸர் அன்றைய போட்டியில் தோனி பறக்க விட்டிருந்தார். ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களிடத்திலும் பெரும் தாக்கத்தை இந்தப் போட்டியின் மூலமாக தோனி ஏற்படுத்தியிருந்தார். அடுத்தடுத்த அவரது இன்னிங்க்ஸ்களும், இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கையை அளித்துக் கொண்டிருந்தது. தர வரிசை பட்டியலில் தோனியின் பெயர் முதல் இடத்துக்கு உயர்ந்தது. நாடு முழுக்க தோனி அலை மெல்ல பெருகத் துவங்கியது.

2007-ம் வருடத்தில் மேற்கிந்திய தீவுகள் நிலப்பரப்பில் உலகக் கோப்பை போட்டித் தொடர் நடந்தது. மிகுந்த எதிர்பார்ப்புடன் டிராவிட் தலைமையில் உலகக் கோப்பையில் களமிறங்கிய இந்தியா பெரும் தோல்வி கண்டு லீக் சுற்றுடன் வெளியேறியது. ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் உறையச் செய்த தருணம் அது. இந்தியா வெளியேறியதன் பின்பாக, மற்றைய உலகக் கோப்பை போட்டிகளை காண்பதில் கூட ரசிகர்களுக்கு விருப்பமில்லாமல் போனது. அதோடு, லீக் போட்டியின் மிக முக்கியமான இரண்டு போட்டிகளிலும் மகேந்திர சிங் தோனி ரன் எதுவும் சேர்க்காமல் 'டக் அவுட்’ ஆனார். அது இந்திய ரசிகர்களின் கோபத்தை மேலும் தீவிரமாக கிளர்த்திவிட்டது. அதுவரையிலும் பெரும் நம்பிக்கை நட்சத்திரமாக ஆராதிக்கப்பட்ட தோனியின் மீது எதிர்ப்பு அலை தீவிரமாக பெருகியது. ராஞ்சியில் அப்போது புதிதாக தோனி கட்டியெழுப்பிக் கொண்டிருந்த வீட்டின் மீது பலத்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. தோனி இந்த  நிகழ்வுகளால் மனம் நொந்து போனார். 'எனது வீட்டில் மூன்று நாய்க்குட்டிகள் இருக்கின்றன. நான் தோற்றாலும், வெற்றிப் பெற்றாலும் அவை எப்போதும் மாறாக அன்புடன்தான் என்னிடம் பழகுகின்றன’ என துயருடன் இச்சம்பவத்தைப் பற்றி தோனி பின்னர் குறிப்பிட்டார்.

சர்வதேச ஒரு நாள் உலகக் கோப்பை போட்டித் தொடரில் மிக மோசமான தோல்வியை இந்தியா தழுவியிருந்த நிலையில், இருபது ஓவர் போட்டிக்கான முதலாவது உலகக் கோப்பையை நடத்த ஐசிசி முனைப்பாக இருந்தது. அப்போதுதான் பரவலாக கவனம் பெற்று வந்துக் கொண்டிருந்த இருபது ஓவர் போட்டிகளை மேலும் பிரபலமடைய செய்ய, அந்த உலகக் கோப்பை வழிவகை செய்யும் என்று கணிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் போட்டிகள் நடைபெறும் என்று ஐசிசி முடிவு செய்தது. பொதுவாக, இருபது ஓவர் கிரிக்கெட்டின் மீது அப்போது பெரியளவில் நம்பிக்கைகள் உருவாகததால், சீனியர் வீரர்கள் அதன் மீது அதிக அக்கறை செலுத்தவில்லை. அதனால், பல புதியவர்களுக்கு இடமளிக்கப்பட்டிருந்தது. இந்திய அணி சார்பில், இளம் அணியை வழி நடத்திச் செல்லும் பொறுப்பை மகேந்திர சிங் தோனி ஏற்றிருந்தார். ஒருநாள் போட்டிகளில் அவர் உண்டாக்கியிருந்த அதிர்வுகளின் காரணமாக, இருபது ஓவர் கிரிக்கெட் அணியை தலைமை தாங்கும் பொறுப்பு அவர் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

சில பல வெற்றிகளையும், தோல்விகளையும் கடந்துதான் இந்தியா உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு வந்தது. மறுமுனையில் பாகிஸ்தான் அணியும் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியிருந்தது. பொதுவாக, இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் அதிக முக்கியத்துவம் பெற்று விடும். இரு நாட்டு கிரிக்கெட் அணிகளும் மோதும் போது, இரு நாடுகளுமே மோதிக் கொள்வதைப் போன்ற பதற்றம் உண்டாகிவிடும். பாகிஸ்தான் அணியை ஒரு ஜென்மாந்திர பகை அணியாக இந்தியாவும், அவ்வகையிலேயே இந்தியாவை பாகிஸ்தான் அணியும் பல காலமாக கருதி வருகின்றன. இந்த நிலையில், முதல் இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதியது இரு நாட்டு ரசிகர்களுக்கும் பெருத்த ஆர்வத்தை உண்டாக்கியது. இரு நாட்டு மக்களும் தொலைக்காட்சியின் முன்னால் பரபரப்புடன் அமர்ந்திருந்தார்கள்.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணிக்கு கவுதம் கம்பீர் நல்லதொரு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார். 54 பந்துகளை எதிர்கொண்ட அவர், 75 ரன்களை குவித்திருந்தார். இதன் மூலமாக, இந்திய அணி இருபது ஓவர்களில் 157 ரன்களை குவித்தது, ஓரளவுக்கு நல்ல நிலையில் இருந்தது. பின்னர் ஆட வந்த பாகிஸ்தான் வீரர்களும் வெகு சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தனர். ரன்களை விரைந்து சேர்த்தார்கள். குறிப்பாக, மிஸ்பாக் உல் ஹாக் அபாயகரமான மனிதராக தோன்றினார். ஹர்பஜன் சிங்கின் ஒரு ஓவரில் மூன்று சிக்ஸர்களை அடித்து, அணியை வெகு சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருந்தார்.

மறுபுறம் மகேந்திர சிங் தோனியும் ஸ்டம்புகளின் பின்னால் நின்றபடியே இந்திய அணியை வழிநடத்தினார். ஃபீல்டிங்கில் மாற்றம் செய்தபடியே இருந்தார். பாகிஸ்தான் வீரர்களின் மீது முடிந்த வரையில் அழுத்தத்தை உருவாக்கினார். இறுதியில், பாகிஸ்தான் அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவையாய் இருந்தது.

இந்நிலையில், தோனி முற்றிலும் எதிர்பாராத ஒரு முடிவை எடுத்தார். அனுபவம் வாய்ந்த ஹர்பஜன் சிங்குக்கு ஒரு ஓவர் எஞ்சியிருந்த நிலையிலும், புதியவரான ஜோஹிந்தர் சர்மாவுக்கு கடைசி ஓவரை பந்து வீச தோனி அழைப்பு விடுத்தார். எல்லோருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. கேப்டனாக தோனியின் அனுபவமின்மையே ஜோஹிந்தர் சர்மாவுக்கு அவர் வாய்ப்பு வழங்க காரணம் என எல்லோரும் பேசத் துவங்கி விட்டார்கள். கிரிக்கெட் வர்ணனையாளர்களில் இருந்து வீட்டில் தொலைக்காட்சியில் போட்டியை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் வரையில் தோனியின் இந்த முடிவு குறித்து எதிர்மறையான எண்ணத்தில் இருந்தனர். எனினும், தோனி தனது மனக் கணக்குகளால் ஜோஹிந்தரை இறுதி ஓவர் வீசத் தேர்வு செய்திருந்தார்.

அந்த ஓவரின் முதல் பந்தில் மிஸ்பாக் உல் ஹக் ரன் எதுவும் எடுக்கவில்லை. இந்திய ரசிகர்களிடத்தில் பெருமூச்சு எழுந்தடங்குகிறது. அடுத்த பந்தை ஜோஹிந்தர் வீசுகிறார். மிஸ்பாக் நேராக பந்துவீச்சாளரின் தலைமேலாக வலுவாக உயர்த்தி அடிக்கிறார். சிக்ஸர்! அவ்வளவுதான். இந்திய ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக நம்பிக்கையை இழந்துவிட்டார்கள். இன்னும் நான்கு பந்துகளில் ஏழு ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டும். மிஸ்பாக் உல் ஹக் போன்ற அனுபவமிக்க ஆட்டக்காரரால் மிக எளிதாக அந்த இலக்கை அடைந்து விட முடியும் என இந்திய அணியின் மீதான நம்பிக்கையை இழக்கிறார்கள். ஒன்பது விக்கெட் விழுந்திருந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கும் அது இக்கட்டான நிலைதான் என்றாலும், மிஸ்பாக் உல் ஹக் போன்ற வீரர் களத்தில் இருக்கும் வரையில் இந்தியாவின் வெற்றி என்பது சாத்தியமானதல்ல.

ஜோஹிந்தர் சர்மா அடுத்த பந்தை வீசுகிறார். மிஸ்பாக் உல் ஹக் முழுவதுமாக தனது வலப்புறம் நகர்ந்து பந்தை ஸ்கையர் லெக் பகுதியில் தூக்கி அடிக்கிறார். எல்லோரும் ஆட்டம் முடிவடைந்துவிட்டதாக கருதுகிறார்கள். பந்து பவுண்டரியை அடைந்திருக்கும் என்பது எல்லோரின் அனுமானமாக இருக்கிறது. ஆனால், முற்றிலும் எதிர்பாராத வகையில், தோனி ஸ்கொயர் லெக் பகுதியில் ஸ்ரீசாந்தை நிறுத்தி வைத்திருந்தார். பந்து மெல்ல மேலிருந்து கீழிறங்குகிறது. ஒட்டுமொத்த ரசிகர்களும் அவ நம்பிக்கையுடன் பார்த்துக் கொண்டிருக்க, இப்போது ஸ்ரீசாந்த் அந்த பந்தை கேட்ச் பிடித்து விடுகிறார். அந்தத் தருணத்தை நம்பவே சில நொடிகள் பிடிக்கின்றன. இந்திய ரசிகர்கள் ஆரவாரத்தில் துள்ளி குதிக்கிறார்கள். மிஸ்பாக் உல் ஹக் சோர்ந்த முகத்துடன் மைதானத்தில் அப்படியே உறைந்து அமர்ந்துவிட்டார். மைதானம் முழுக்க இந்திய ரசிகர்களின் ஆராவாரத்தால் அதிர்கிறது. தோனி தோனி என அரங்கம் முழுக்க ரசிகர்களின் குரலொலியால் நிரம்புகிறது. கடைசி நேரத்தில் தோனி எடுத்த முக்கிய முடிவுதான் இந்திய அணி அன்றைய போட்டியில் வெற்றி பெறக் காரணமாக அமைந்தது என ஊடகங்கள் புகழ்ந்து தள்ளின. தோனி ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் ஆதர்சமாக மாறினார். ஆனால், பிற்காலத்தில் தோனி அடைந்திருக்கும் பெரும் பெரும் வெற்றிகளை கணக்கில் கொண்டு பார்க்கும்போது, 2007 இருபது ஓவர் உலகக் கோப்பை வெற்றி என்பது வெறும் டீஸர் மட்டுமே என்பதை நம்மால் உணர முடிகிறது!

(சிக்ஸர் பறக்கும்…)
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT