19. புகைப் பிடிக்காத பொஸ்கி!

சிகரெட்டை அப்படியே ஜோபியிலே வெச்சிண்டா கௌரவமா இருக்காதுன்னு, பத்து சிகரெட்டையும் வெள்ளை சிப்பாய்களா வரிசையா சிகரெட் கேஸிலே வெச்சுக்குறது அந்தக் காலப் பெரிய மனுஷர்கள் பழக்கம்.
19. புகைப் பிடிக்காத பொஸ்கி!

மழைன்னு பெருசா பெய்யாம அச்சுப்பிச்சா ஒரு குளிரை மட்டும் கிளப்பிவிட்ட பெதாய் புயலை நறுக்குன்னு நாலு தஞ்சை ஜில்லா வசவு வார்த்தைகளால் உரக்க அர்ச்சித்துவிட்டு, பஞ்சாமி புத்தக அலமாரியில் கண்ணை மூடிக்கொண்டு கையில் படும் புத்தகத்தை எடுத்தவர் திடுக்கிட்டார். பக்கத்தில் இருந்த சிவசாமி காதில் விழுந்திருக்குமோ?

‘அப்படிப் போடுங்க அண்ணா. ஏன்னா, நானும் மழையைத் தராத இந்த வெறும் பயலை, தப்பு வெறும் புயலைத் திட்டணும்னு துடிச்சிண்டு இருந்தேன். வசவு வார்த்தை பத்தி தி. ஜானகிராமன் ஒரு கதையிலே என்ன எழுதி இருக்கார் தெரியுமா?’

‘அவருக்கென்னடா, உவமையிலே மன்னனாச்சே. அந்த வார்த்தைகளைச் சொல்லாமல் சொல்லி இருப்பாரே. சொல்லு கேப்போம்’.

‘ராமசுப்பு குடியானவனைத் திட்ட ஆரம்பிச்சா, புழுத்த நாய்கூட குறுக்கே போகாது’.

‘இவ்வளவு அம்சமா எழுதினவன் 60 வயசிலேயே போயிட்டானே. மகாபாவி!’

‘அண்ணா, ஜானகிராமனை இதைவிட யாராலும் சுவாதீனமா, உசத்தியா புகழ்ந்துவிட முடியாது. கையிலே என்ன புஸ்தகம். அட! துப்பறியும் சாம்புவா?’

‘அடேய், சிவசாமி! தேவன், ஷெர்லாக் ஹோம்ஸ், அகதா கிரிஸ்டி எல்லாம் கொஞ்சம் படிச்சவனா இருந்தாலும், நானும் ஒரு துப்பறிவாளனா இருக்கணும்னு ஆசையா இருக்குடா? நாளைக்கே நீ பாண்டி பஜாரோ, பிராட்வேக்கோ போய், ஒரு ரெயின் கோட்டு, கருப்புக் கண்ணாடி, பூதக் கண்ணாடி, புகையை இழுத்துவிடற பைப் எல்லாம் வாங்கிண்டு வாடா’.

‘அண்ணா, அப்படியே செஞ்சுட்டாப் போச்சு. ஆனா, இதெல்லாத்துக்கும் மேலே, பார்வையிலே கூர்மை வரணும். நாம பொதுவா பார்க்கிறோமே தவிர கவனிக்கிறது இல்லே. சரி, கடைக்குப் போய் ஒரு மணி தேசாலம் கழிச்சுதானே வந்திருக்கேன். அதுக்குள்ளே உங்களைப் பார்த்து, என்னென்ன செஞ்சிருப்பேள்னு சொல்லட்டுமா?’

பஞ்சாமி திகைத்தார். ‘எ..ன்..ன்.னது? என்னை துப்பறிந்து சொல்லுவியா? சொல்லு பார்ப்போம்’.

‘ம்? யாருக்கோ போன் அட்டெண்டு பண்ணி இருக்கேள். ரிசீவரை சரியா வெக்கலே. பாத்ரூம் போயிட்டு வந்திருக்கேள். கால் ஈரம் காயலே. எவர்சில்வர் சம்படத்தைத் திறந்து தேங்காய் பர்பி தின்னுருக்கேள். ஒரு சில்லு உதட்டோரத்திலே ஒட்டிண்டு இருக்கு. பூனைத் தூக்கம் போட கொஞ்ச நேரம் பெட்டிலே படுத்திண்டு எழுந்திருக்கேள். தலைகாணி பொசிஷன் மாறி இருக்கு. இடது கையை வரக் வரக்குனு சொறிஞ்சிண்டு இருக்கேள். வெள்ளைக் கோடுகள் இருக்கு. பல்லிலே மாட்டிண்ட பர்பியை எடுக்கக் குடைந்து இருக்கேள். குப்பைக் கூடையிலே டூத் பிக் இருக்கு’.

‘அடேய், நிறுத்துடா. உன்னை வெச்சிண்டு எந்த மகா தப்பையும் பண்ணக் கூடாது. மாட்டிப்பேன்’.

‘அண்ணா, தப்பு தண்டாக்கெல்லாம் போறவர் இல்லியே நீங்க? அது சரி, தொரசாமி சார் வந்திருந்தாரா?’

‘அட? அதெப்புடி தெரியும்?’

‘அவர் போட்டுக்கற சென்ட் வாசனை இன்னும் இங்க சூழ்ந்திண்டு இருக்கே’.

‘சரியாச் சொன்னேடா. தொரசாமிதான் வந்திருந்தான். தனியாவா வந்தான்? அவனோட என்னென்ன வாசனை எல்லாம் வந்தது? சென்ட் வாசனை, பொகையிலை வாசனை, ஜர்தாவோ கிர்தாவோ, அந்த வாசனை. சிகெரெட்டு வாசனை. படிப்பு வாசனையைத் தவிர எல்லா வாசனையும் வந்தது. வந்தவன் மூக்காலே அழுதுட்டுப் போனான். அவனோட தங்க சிகரெட் கேஸை காணோமாம். சிக்ரெட் கேஸ்னா தெரியுமாடா, சிவசாமி’.

‘தெரியும் அண்ணா. சிகரெட்டை அப்படியே ஜோபியிலே வெச்சிண்டா கௌரவமா இருக்காதுன்னு, பத்து சிகரெட்டையும் வெள்ளை சிப்பாய்களா வரிசையா சிகரெட் கேஸிலே வெச்சுக்குறது அந்தக் காலப் பெரிய மனுஷர்கள் பழக்கம். சதுர வடிவில் தட்டையா இருக்கும். அதோட சிகரெட் லைட்டர். தீக்குச்சி கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாலேயே சிகரெட் லைட்டரைக் கண்டுபிடிச்சுட்டாங்களாம், அண்ணா? அந்த ஐட்டங்கள் எல்லாம் போயாச்சு அண்ணா’.

‘தொரசாமி மாதிரி சில ஆசாமிகள் கிட்டே இன்னும் ஒட்டிண்டு இருக்குடா. அந்த கோல்டு சிகெரட் டப்பாவை மூணு நாளா காணோமாம். பைத்தியம் பிடிச்சா மாதிரி இருக்காம். அதிலேருந்து எடுத்து, அந்த ‘கேன்சர் ஸ்டிக்கை’ அதிலே ஸ்டைலா தட்டிட்டுப் பிடிச்சாதான் அவனுக்கு ‘கிக்’ கிடைக்குமாம். அதை பரிசாகக் குடுத்தது யாருன்னு எங்கிட்டே ரகசியமா சொன்னான்’.

‘படு ரகசியாகவே இருக்கட்டும் அண்ணா. அது சரி. தொரசாமி சாருக்கு என்ன வேணுமாம்?’

‘இத்தனை நேரம் கதை கேட்டவனா நீ? போடா, போ. அவன் வீட்டுக்கு ஒரு நடை போய் பாத்துட்டு வாடா. உன்னை ஸ்காட்லாண்டு யார்டோட மாம்பல பிராஞ்சுன்னு நினைச்சண்டு இருக்கான்டா?’

‘அப்படியே செஞ்சுடறது அண்ணா’.

*

தொசாமியிடமிருந்து காணாமல் போன தங்க சிகரெட் கேஸ் எப்படி மாயமாகியது? காணாமப் போயிற்றா? அல்லது கள்வர்கள் கொண்டார்களா? சிவசாமியின் தீவிர விசரணைக்குப் பிறகு மீட்கப்பட்டதா? என்பதை இந்தச் சரித்திரத்தின் பின்பகுதியைப் படித்தால் விளங்கும்.

*

தொரசாமி வீட்டில் அவருடைய மனைவி சுந்தரியைத் தவிர சமையல் செய்யும் கனகாவும், ஜெர்மன் ஷெப்பர்டு நாய் பொஸ்கியும் மாத்திரம் இருந்தனர். தொரசாமியின் பொருள்களை மனைவி சுந்தரி தொடமாட்டாள். அவளுக்கு நேரமே இருந்ததில்லை. அந்த மங்கையர் திலகம், தலை வலி, கண் வலி, பல் வலி கை வலி, இடுப்பு வலி, மூட்டு வலி என்று கேசாதி பாதமாக ஏதாவது வலியை ஆஜர்படுத்திக்கொண்டு தைலம், களிம்பு, மாத்திரை, சிரப் இத்யாதிகளின் அனுசரிப்புடன், கட்டிலில் பாதாதி கேசம் தில்லயாடி வள்ளியம்மாள் மாளிகையில் வாங்கிய கைத்தறிப் போர்வையைப் போர்த்திக்கொண்டு முடங்கி இருப்பாள். ஆகவே, தங்க சிகரெட் பாக்ஸை தேட்டை போட இரண்டு பேருக்குதான் சான்ஸ் இருந்தது. சூது வாது அறியாத நாய் பொஸ்கி இதில் ஈடுபட சாத்தியக்கூறுகள் இல்லாததால், கனகாவின் மேல் சிவசாமி கவனத்தைச் செலுத்தினான்.

தொரசாமி வீட்டுக்குப் போன அன்று, கனகாவைக் கூப்பிட்டு விசாரணை நடத்திய சிவசாமி, அவளிடம் பொசுகுக்கென்று, ‘இதோ பாரும்மா, கனகா. சிகரெட் கேஸை எங்கே வெச்சிருக்கே. மரியாதையா கொடுத்திடு. அது சுத்தத் தங்கத்தில் செஞ்சதாம். விலை இன்னித் தேதிக்கு பல ஆயிரம் இருக்கும். இல்லாட்டி, நீ அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குப் போக வேண்டி வரும். அங்கே எனக்கு இன்ஸ்பெக்டர் இந்திராணியைத் தெரியும் என்றான். கனகா ‘திருதிரு’ என்று முழிக்காமல், ‘சார் இதிலே உள் குத்து இருக்கு’ என்றாள்.

‘உள் குத்தா?’ என்றான் சிவசாமி. அவனுக்கு சின்ன வயசில், குழந்தைகளோட அம்மா குத்து, அப்பா குத்து, பாட்டி குத்து, தாத்தா குத்து, பேரன் குத்து, பிடிச்சிக்கோ குத்து விளையாடினது ஏனோ ஞாபகத்துக்கு வந்தது.

‘ஆமா சார். ஐயா வீட்டிலே இல்லே. அம்மா குரு தைலம், பிண்ட தைலம், நீலகிரி தைலம், சைபால், விக்ஸ், பிராஸோ, சீச்சி பிராஸோ இல்லை, எல்லாம் தடவிண்டு நன்னா தூங்கறாங்க. அதிர்வேட்டு போட்டாகூட எழுந்திருக்கமாட்டாங்க. அதனாலே உண்மையைச் சொல்லிடறேன்’.

‘உண்மையைத்தான் சொல்லணும். அதான் கனகாவுக்கு அழகு’ என்றான்.

‘அந்தப் பொட்டியைத் திருடினது பொஸ்கி சார்’.

‘பொஸ்கியா? என்ன கதை விடறே? அது நாய்னா? அதுவும் அல்சேஷன் நாய். திருட்டை கண்டுபிடிக்குமே தவிர, திருடாதே..’

‘நூற்றிலே ஒரு வார்த்தை சார். அது ரொம்ப விசுவாசமான நாய். ஐயா அந்தப் பொட்டியிலிருந்து சிகரெட், சிகரெட்டா ஊதி புகைச்சு, விடாம இருமறதையும், அம்மா அவங்களை திட்டறதையும் பாத்துண்டு இருக்கும். ஒருநாள் என்ன பண்ணிச்சுன்னா, ஐயா இல்லாத சமயத்திலே அதை கவ்விண்டு என்னோட ரூமிலே மறைச்சு வெச்சுடுத்து. அதை என் மூலமா தெரிஞ்சிண்ட அம்மா, ரொம்ப சந்தோஷப்பட்டு அதை தன்னோட பேங்க் லாக்கரிலே வெச்சுட்டாங்க’.

’பொஸ்கிக்கு அது சாப்பிடற தட்டு இல்லேனா சாப்பிட முடியாது. சாப்பிடாது. அதே மாதிரி, அந்த பாக்ஸ் இல்லேனா அவரால லூஸ்லே வாங்கி சிகரெட் பிடிக்க முடியாது. அடைந்தால் மகாதேவி இல்லாவிட்டால் மரணதேவின்னு இல்லாம, நாலு நாள் பைத்தியம் பிடிச்சா மாதிரி இருந்தாலும், அவர் இருமும்போது பொஸ்கியை கவனிச்சார். வழக்கம்போல அது குரைக்காம, ம்..ம்..ம்னு வாலை ஆட்டினதைப் பாத்து, ‘என்னடா இது’ன்னு யோசிக்க ஆரம்பிச்சார். தங்க பாக்ஸ் போனா போச்சு, சிகரரெட் பழக்கம் விட்டுப் போறதே. அதோட பொஸ்கியும் தன்னை பாராட்டறதேன்னு குஷி ஆயிட்டார். அது சைவ நாயானதாலே, விதவித இம்போர்ட்டட் பிஸ்கெட்டா வாங்கிப் போடாறார்’.

‘சாதாரண பிஸ்கெட்டா? தங்க பிஸ்கெட்னா வாங்கிப் போடணும்’ என்றார் பஞ்சாமி.

‘அ-ண்-ணா!’ என்றான் சிவசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com