10. இரு! முடி! இருமுடி!!

அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோவில்னு ஒண்ணு இருக்கு. இங்கே ஐயப்ப சாமி கிரகஸ்தரா இருக்கார். பூர்ணா, புஷ்கலான்னு ரெண்டு மனைவிகள். இங்கேயும் தடை இல்லாம போய் சாஸ்தாவைக் கும்பிடலாம். 
10. இரு! முடி! இருமுடி!!

‘சிவசாமி, நீ சபரிமலை போயிருக்கியாடா?’

‘இல்லேண்ணா. போணும்னு ஆசைதான். ஆனா வேளை வரலே’.

‘நானும் போனதில்லைடா. அடுத்த சீஸனிலே போகலாமா?’

‘கட்டாயம் போகலாம், அண்ணா. ஆனா, உங்களாலே 41 நாள் விரதம் இருக்க முடியுமா? வீட்டுக்குள்ளேயே சாக்ஸ் போட்டுண்டுதானே நடக்கப் பழகி இருக்கு?’

‘போணும்னு மனசு வெச்சுக் கிளம்பினா, கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை ஆகிடும்டா. நல்லவேளை, நமக்கு இந்த 10-லேருந்து 50 வரை கட்டுப்பாடெல்லாம் கிடையாது’.

‘அண்ணா மறந்துட்டேன். இன்னிக்கு ஐயப்பன் போன் பண்ணினார்’.

‘எ.. எ.. எ..ன்னது? ஐயப்பன் போன் பண்ணினாரா?’

‘சாமி சரணம்! சாமி சரணம்! அபச்சாரம். அண்ணா மன்னிக்கணும். நான் சொன்னது தாம்பரம் ஐயப்பன் சார். போஸ்ட்டல் சர்வீஸிலிருந்து ரிடையர் ஆனவர். அவருக்கு நம்மை வந்து பாக்கணுமாம். நேர வந்து சொல்றேன்னார். மத்தியானம் மூணு முப்பதுக்கு வரேன்னார். அதோ பெல் சத்தம். அவராகத்தான் இருக்கும்’.

ரிடையர்டு போஸ்ட் மாஸ்டர் ஐயப்பன், தபால் முத்திரை குத்தாமல் தப்பித்துவந்த கவர் மாதிரி நீட்டாக இருந்தார். ஏர்போர்ட்டுக்கு விர்ரென்று கெத்துடன் போகும் சர்க்காரின் சிவப்பு மெயில் வேன் மாதிரி, சரியாக 15.30-க்கு வந்து சேர்ந்தார். முப்பத்தைந்து வருஷ சர்வீஸுக்குப் பிறகு சமீபத்தில்தான் ரிடையராகி இருந்ததால், அவரிடமிருந்து தபால் ஆபீஸ் மெயில் பைகளின் வாசனை வந்தது.

ஐயப்பனுடைய குடும்பத்தாரிடம் இளமை எப்போதும் உற்சாகமாக ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும். அவருடைய தகப்பனார் குப்புசாமி, ஐயப்பனுடைய அண்ணா மாதிரி இருப்பார். ஐயப்பனுடைய மனைவி கல்யாணியைப் பார்த்தால், போன தையில் கல்யாணம் ஆகி அப்போதுதான் புக்ககம் வந்த புதுப்பெண் மாதிரி ஒரு முலாம் பூசி இருக்கும். ஐயப்பனுடைய தங்கை பாரு எனப்படும் பார்வதி, கல்யாணிக்கு சளைத்தவள் இல்லை என்பதுபோல சின்னப் பெண்ணாகத் தோற்றம் அளிப்பாள். ‘அண்ணா, அவர்கள் வீட்டில் யாருக்குமே நரைமுடி கிடையாது. முகத்தில் சுருக்கம் கிடையாது. வீட்டுக்குள் இருக்கும் மாடிப்படிகளை ஆஸ்திரேலிய கங்காருக்கள் மாதிரி தாவித் தாவித்தான் ஏறுவார்கள். ‘எண்ணிக்கோடா’ என்று சொல்லி ஐயப்பன் சார் தோப்புக்கரணம் போட ஆரம்பித்தால், எண்ணுபவர் மயங்கி விழும் வரை போடுவார்’.

சிவசாமி கொண்டுவந்த சூடான ஜவ்வரி வடையையும், அவனுடைய விசேஷ தயாரிப்பான கும்மோணம் டிகிரி காபியையும் குடித்துவிட்டு, நன்றி நவிலலாக, இரண்டு சிறு ஏப்பங்களைத் தலைக்கு ஒன்றாக விட்டார்.

‘டாக்டர் பஞ்சாமி சார், விஷயம் இதான். என்னோட தங்கை பாருவுக்கு கொள்ளை ஆசை. அதை நீங்கதான் தீர்த்து வைக்கணும்’.

கொள்ளை ஆசையா? அப்படி என்ன? அதுவும் நாம தீர்த்து வைப்பதா? பஞ்சாமி, சிவசாமியைப் பார்த்தார். சிவசாமி, பஞ்சாமியைப் பார்த்தான்.

ஐயப்பன் விளக்க உரை அளித்தார். ‘டாக்டர் சார். பாருவுக்கு சபரிமலை போகணுமாம். இருமுடி கட்டிண்டு, சாமியே சரணம் ஐயப்பான்னு விளிச்சு பதினெட்டுபடி ஏறி தரிசனம் பண்ணணுமாம். ஆனா அதிலே ஒரு சிக்கல்’.

‘பத்திலேருந்து அம்பது வரை சபரிமலைக்கு நோ என்ட்ரி ஆச்சே. எப்படி பாரு மேடம் போக முடியும்?’ என்று சிவசாமி கேட்க நினைத்தாலும், கேட்கவில்லை. பஞ்சாமியும் வாயை பெவிகோலால் ஒட்டிக்கொண்டார்’.

‘நீங்க கேக்காம கேக்கறது புரியறது. ஆனா சில உண்மைகளைச் சொல்லி ஆகிடணும். பாருவுக்கு வர புரட்டாசியிலே 51 வயசாகப் போகிறது. ஆனா அவளைப் பார்த்தா தெரியாது. சின்ன வயசிலே பெர்த் சர்டிபிகேட்டிலே பிறந்த தேதியை மாத்திப் போட்டதாலே, ஆவணங்கள் பிரகாரம் 49-தான். சமீபத்திய ஆதாரிலும் அதே. என்ன செய்யறது. மற்றபடி தெய்வ குத்தம் வராது. ஏன்னா?..’

‘ஏன்னா?’

‘ஏன்னா?’

சிவாசமியும் பஞ்சாமியும் ஆளுக்கொன்றாகக் கேட்டனர்.

‘அந்தச் சமாசாரம் எல்லாம் மூணு வருஷம் முன்னேயே டாடா சொல்லிடுத்து’ என்றார், ஒரு சிறு அசட்டுச் சிரிப்புடன். ‘என்ன செய்யலாம்’ என்று தொடர்ந்து கேட்டார்.

‘சிவசாமி, என்னடா செய்யலாம்?’

‘அண்ணா, நான் வெறும் சிவசாமி. குருசாமி இல்லை. இருந்தாலும் தோணினதைச் சொல்றேன். ‘ஐயப்பன், சார். இந்த இக்கட்டோட சபரிமலை போகணுமான? ஹெட்குவார்ட்டர்ஸுக்குப் போகத் தடை இருக்குன்னு பட்டா, குளத்துப்புழா ஸ்ரீ தர்மசாஸ்தா கோவிலுக்குப் போலாமே. அங்கே ஐயப்பசாமி பாலசாஸ்தாவா இருக்கார். ஆகையினாலே, பெண்கள் போறதுக்குத் தடை இல்லை. பாரு மேடம் தாராளமா போகலாம். இந்தக் குளத்துப்புழா நதியிலே நீந்தற மீன்கள் எல்லாம் சாமிக்கு சொந்தமாம். அதிலே ஏதான ஒண்ணு இறந்துபோனா, அதை கோவிலுக்குச் சொந்தமான பட்டுத் துணியிலே கட்டி அடக்கம் பண்ணுவாங்களாம்’.

‘நெஜமாவாடா?’ என்று கேட்டு பஞ்சாமி வியந்து, ஐயப்பனைப் பார்த்து, ‘என்னோட சிஷ்யனைப் பாத்தேளா?’ என்று கண் ஜாடையைக் காட்டிப் பெருமைப்பட்டுக் கொண்டார்.

‘அடுத்ததா, அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோவில்னு ஒண்ணு இருக்கு. இங்கே ஐயப்ப சாமி கிரகஸ்தரா இருக்கார். பூர்ணா, புஷ்கலான்னு ரெண்டு மனைவிகள். இங்கேயும் பாரு மேடம் தடை இல்லாம போய் சாஸ்தாவைக் கும்பிடலாம். ஆனா, ஆரியங்காவு ஸ்ரீ தர்மசாஸ்தா கோவிலுக்குள்ளேயும், சபரிமலை மாதிரி 10-லேருந்து 50 வரை பெண்களுக்கு அனுமதி இல்லை. இங்கே ஐயப்பன் கட்டை பிரம்மச்சாரியா இருக்கார்’.

விவரங்களைக் கிரகித்துக்கொண்ட போஸ்ட் மாஸ்டர் ஐயப்பன், வீட்டுக்குக் கிளம்பினார். ‘பாருகிட்டே பேசறேன். வரட்டுமா?’

பத்து நாள் கழித்து, சிவசாமியுடன் அசோக் பில்லர் பக்கம் பஞ்சாமி போனபோது, எதிரே ஐயப்பனும், பாருவும் வந்தார்கள்.

‘பாரு, இவர்தான் டாக்டர் பஞ்சாமி. உனக்குத்தான் சிவசாமியைத் தெரியுமே’.

‘நன்னாத் தெரியும் அண்ணா. என் கண்களைத் திறந்தவர் ஆச்சே!’

பஞ்சாமி திகைத்தார். கண்களைத் திறந்தவனா? பாரு என்ன சிலையா? சிவசாமி ஸ்தபதியா? கண்களைத் திறக்க?

சிவசாமி நெளிந்தான்.

பாரு கலகலவென்று சிரித்தாள்.

டாக்டர் சார். சிவசாமி சூப்பரா டீல் பண்ணினார். ‘பாரு மேடம், நீங்க தமிழ் டீச்சராச்சே! அதனால ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி எல்லாம் அத்துப்படி ஆகி இருக்கும். எவ்வளவோ தமிழ்ப் புலவர்கள் இருந்தாலும், ஔவையாரை எடுத்துண்டு, உங்க சபரிமலை மேட்டருக்கு ஒரு வித்தியாசமான தீர்வைச் சொல்றேன்னு சொன்னார். ‘ஐயப்பனுக்கும், ஔவையாருக்கும் என்ன சம்பந்தம் இருக்கும்?’னு நான் முழிச்சேன். ‘இருக்கு மேடம்! ஔவையார் கதை உங்களுக்குக் கட்டாயம் தெரிஞ்சிருக்கும். சின்ன வயசிலே ஔவையைக் கல்யாணம் செஞ்சுக்கப் பெற்றோர்கள் கட்டாயப்படுத்தினபோது, இல்வாழ்க்கையில் ஈடுபாடு இல்லாத அவர், இஷ்ட தெய்வமான, வேழமுகத்து விநாயகனை வழிபட்டு, ‘இளமையைத் தருகிறேன், முதுமையைத் தா’ என்று வேண்டினாளாம். விநாயகனும் அவருக்கு முதுமையையும், கிரீடமாக தமிழ்ப் புலமையையும் வழங்கி அருள்புரிய, குமரி ஔவை, பாட்டி ஔவை ஆனாளாம். சுபம்’.

‘சிவசாமி? இதெல்லாம் இருக்கட்டும். பாருகிட்டே நீ என்ன சொன்னே? அவ என்ன சொல்றா. இதுக்கும் சபரிமலைக்கும் என்னடா சம்பந்தம்?’

‘டாக்டர் அங்கிள். சிவசாமி ரொம்ப குசும்புக்காரர். ‘ஔவை மாதிரி, நானும் விநாயகரை வேண்டி கைத்தடியோட, நரைத்த மூதாட்டியா மாறிட்டா, ஆதாராவது ஆவணமாவது, ரைட் ராயலா 18-ம் படிக்கு போகலாம்னு. ஆனா, அது மாதிரி எல்லாம் வேண்டிக்கமாட்டேன். நெஜமாகவே, நடந்துட்டா? அம்மாடி! அதனாலே இன்னும் ரெண்டு வருஷம் பொறுமையா வெயிட் பண்ணி இருந்து, இருமுடி தூக்கலாம்னு மனசை மாத்திண்டுட்டேன்.எப்படி?’

‘பாரு மேடம், உங்களுக்குத் தெரியாதது இல்லை, ‘தொன்மை மறவேல்’, ‘செய்வன திருந்தச் செய்’, ‘ஊக்கமது கைவிடேல்’னு ஔவை ஆத்திசூடியிலே சபரிமலை போக விரும்பும் பெண் பக்தர்களுக்காகவே சொல்லி இருக்கார்னு தோணறது. ‘தொன்மை மறவேல்’ங்கிறது, காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் வழக்கங்களை சுப்ரீம் கோர்ட் சொன்னாலும் கைவிடக் கூடாது என்றும், ‘செய்வன திருந்தச் செய்’ங்கிறது, எதையும் குறை நேராமல் திருத்தமுறச் செய்து முடிப்பது என்றும், ‘ஊக்கமது கைவிடேல்’ங்கிறது, இன்று முடியாவிட்டாலும் நாளை, அதாவது 50 முடிந்தவுடன் செய்யலாம் என்றும் உறுதியுடன் இருக்க வேண்டும்னு எடுத்துக்கலாம் இல்லையா?’

பாரு, சிவசாமியைப் பார்த்து உணர்ச்சிப் பெருக்குடன் கை கூப்பினாள். பஞ்சாமியும், ஐயப்பனும் அவனுடைய முதுகில் தட்டிக்கொடுத்தார்கள். போஸ்ட்டல் ஐயப்பன், முத்தாய்ப்புடன் ‘சாமியே-ய்ய்ய்’ என்று குரல் கொடுக்க, எல்லோரும் கோஷ்டியாக சரணம் ஐயப்பா என்று விளிக்க, மைசூர் போண்டா, காபி குடிக்க சங்கீதாவுக்குள் நுழைந்தனர். ‘மைசூர் போண்டா இங்கே சூப்பரா இருக்கும்’ என்பது சிவசாமி கொடுத்திருந்த சான்றிதழ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com