4. ‘சிவசாமி, நீ பிசாசுடா!’

கறிகாய்த் தோட்டம் போட்டு, பூச்செடி கொடி, குரோட்டன்செல்லாம் வளர்த்து, அஸ்தினாபுர வீட்டை ஒரு மினி வசந்த பங்களாவா ஆக்கணும்னு சொல்லுவேளே?
4. ‘சிவசாமி, நீ பிசாசுடா!’

ரங்கநாதன் தெருவில் கடை கடையாக ஏறி இறங்கும் குல்லா போட்ட சாயபுவாக, சிவசாமி கையில் தூபக்காலை ஏந்தி ஒவ்வொரு அறையாக சாம்பிராணி புகை மூட்டத்தை ‘புஸ்-புஸ்’ என்று ஊதிக் கிளப்பி உள்ளே விரட்டிக்கொண்டு வந்தான்’.

‘என்ன சாம்பிராணிடா இது? அரிசி உப்புமாவைக் கொஞ்சம் அதிகமா பலகாரம் பண்ணிட்டா மாதிரி அடிவயத்தைக் கலக்கறது? இதை எதுக்குடா போடறறே?’

‘அண்ணா, சாம்பிராணி போட்டா இன்னல்கள், கண் திருஷ்டி, எதிரிகளின் ஏவல், சூனியம் எல்லாம் போயிடும். தேள், நட்டுவாக்காலி, பூரான், அரணைங்கிற விஷ ஜந்துக்கள் விலகிடும். பழுத்த, பழுத்துக்கொண்டிருக்கும் சுமங்கலிகள் சாயந்தரத்தில் தூபம் போட்டா, துரதிர்ஷ்டம், துர்பாக்கியம், தரித்திரம், பீடை, சனியன், வில்லங்கம் எல்லாம் விலகும். குங்குலியம்னு ஒண்ணு இருக்கு..’

‘நிறுத்துடா. வேணும்னா வெள்ளை தாடியை வெச்சுண்டு ஏதான பக்தி சானலிலே ‘கீக்கீ’ன்னு பச்சைக்கிளியா பேசற இளைஞியை சைடிலே வெச்சிண்டு நேயர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லு. நம்ம ஜோலியைப் பாக்கலாம். இன்னியோட அஜன்டா என்னடா?’

‘அண்ணா, ‘அஜன்டா’ங்கிறது ஒரு லத்தீன் வார்த்தை. இங்கிலீஷ் தத்து எடுத்துண்டது. ‘அஜன்டம்’ என்கிற சொல்லின் பன்மை. சரி சரி, கையை ஓங்க வேண்டாம், நிறுத்திடறேன். இன்னிக்கு நீளமா அஜன்டா ஒண்ணும் இல்லே’.

‘ஏன்னடா, பெருசா ஒண்ணும் இல்லே? நம்ம அஸ்தினாபுரம் டெனன்ட் சுப்பையா, வீட்டை காலி பண்ணமாட்டேன்னு, ஊழல்லே பதவி போன மத்திய மந்திரி ஸ்டைலிலே அழிச்சாட்டியம் செஞ்சிண்டு இருக்காரே? அதோட ஒரு வருஷ வாடகை வேற பாக்கி. சுவரெல்லாம் முக்கால்வாசி முப்பத்து முக்கோடி தேவர்களின் படத்துக்காக ஆணி அடிச்சு மாட்டி, மீதிப் பேர்களை வெயிட்டிங் லிஸ்ட்டிலே வெச்சிருக்கார். என்ன பண்ணப்போறே?’

‘தெரியலே அண்ணா?’

‘என்னடா தெரியலே? நம்ம வக்கீல் சிவக்கொழுந்தை நோட்டீஸ் விடச் சொல்லுடா. ‘அண்டர் இன்ஸ்டிரக்ஷ்ன் ஃபிரம் மை கிளைன்ட்டுன்னுதானே ஆரம்பிக்கணும்?’

‘அந்த அஸ்திரமெல்லாம் விட்டாச்சு. ஆனா ஆள் அசர மாட்டேங்கிறார்’.

‘டேய், நான் கோதாலே இறங்கறேண்டா?’

‘எப்படி இறங்குவேள்? அதுக்கு லங்கோடு வேணுமே? நம்மகிட்டே கிடையாதே? அதுவும் சுமோ ரெஸிலர் மாதிரின்னா, அதுக்கு தேவையான தொப்பை வேணும். அந்த ஸ்பெஷல் ஐட்டத்தை ஜப்பான்லேர்ந்து வேற இறக்குமதி செய்யணும். அதுக்கு OGL-ங்கிற ‘ஓபன் ஜெனரல் லைசென்ஸ்’ இருக்கா தெரியலே..’

‘நிறுத்துடா. உன்னை நம்பி பிரயோஜனமில்லை. நம்ம பட்டாளம் பழனிகிட்டே மேட்டரை விடப்போறேன். அப்புறம் பார்’.

சிவசாமி பதறினான். ‘அண்ணா! அந்த கட்டைப் பஞ்சாயத்துக்கார் வேண்டாண்ணா. அதைவிட கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிஞ்சிக்கலாம்’.

‘எப்படிடா முடியும்? நம்ம வீட்டிலே தலையைச் சொறிஞ்சிக்க கொள்ளிக்கட்டை ஏதுடா? மேட்டரை எங்கிட்டே விடு. நான் சாதிச்சுக் காமிக்கிறேன் பாரு’.

‘அப்படியே ஆகட்டும் அண்ணா’.

பஞ்சாமி எழுந்துகொண்டார். சபை கலையலாம்னு பொருள்.

அடுத்த பதினைந்து நாட்கள் கழித்து பஞ்சாமி பீதியுடன் உட்கார்ந்திருந்தார்.

‘அடேய். அந்தப் பட்டாளம் பழனி என்னை அட்டையா உறியறான்டா. ஆனா, சுப்பையா ஸ்தலத்தை விட்டு நகர்றதா காணோம். சிவசாமி காப்பாத்துடா’.

‘அப்படியே செஞ்சுடறேன். நம்ம அஸ்தினாபுர வீட்டிலே பேய் நடமாடறதா ஏற்கெனவே ஒரு புரளியைக் கிளப்பி விட்டுட்டேன் அண்ணா’.

‘எ..எ..என்னது? பேயா? சுப்பையாவோட பொண்டாட்டி இருக்கிற வீட்டிலா. அதெப்படி? லாஜிக் உதைக்கிறதே?’

‘பேய் சீரியல் எக்ஸ்பர்ட் சுந்தர.சி-யைக்கூட ரகசியமா அழைச்சிண்டு போய்க் காட்டினேன்னு சொல்லி, அவரே ‘பேய் இருக்கு’ன்னு சொன்னதா அடிச்சு விட்டேன் அண்ணா’.

‘நெஜமாவா? சிவசாமி, சுந்தர்.சி-யை விடுடா. ‘சி’யோட குஷ்புவும் வந்தாங்களா? நானும் வந்திருப்பேனே. ‘குஷ்புவோட ‘ஒத்த ரூபா தாரேன், நா உனக்கு மட்டும் தாரேன்’ பாட்டு டான்ஸ்னா எனக்கு ஒரு கிக்குடா. டியூனும், ஸ்டெப்பும் பெப்பியா இருக்கும்டா’.

‘அண்ணா, ஆனா பேய் இருக்குன்னு கரடி விட்டதெல்லாம் சுப்பையா கிட்டே பலிக்கலே. காலி பண்ணனும்னா அவருக்கு ‘ஒத்தை ரூபா’ தரணுமாம்’.

‘அட கொடுத்துட்டுப் போறது. பிசாத்து ஒத்தை ரூபா தானே?!’

‘அண்ணா! இப்படி வெள்ளந்தியா இருந்தா எப்படி? அரசியல், ஊழல்வாதிகள், நெம்பர் டூ அக்கவுண்ட் வியாபாரிகள் பரிபாஷையிலே ஒரு ரூபான்னா ஒரு கோடின்னு அர்த்தம்’.

பஞ்சாமி நீர்யானையைப்போல வாயைப் பிளந்தார். ‘எ..எ..என்னது? ஒரு கோடியா?’

‘எனக்கே திக்குனு இருந்தது. ஆனா நான் கமிட் பண்ணிக்கலே. உங்களைக் கேட்டுட்டு சொல்றேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்’.

‘என்னடா? என்ன காரியம் இது? ஒரு கோடியா? நான் என்ன திருப்பதி லட்டு சப்-காண்ட்ராக்டரா என்ன, கோடிகளை பூந்தியா பார்க்கறதுக்கு?’

‘தெரியலே அண்ணா. சுப்பையாக்கு பட்டாளம் பழனியே தேவலை போலிருக்கு’.

அன்று மாலை பஞ்சாமி, ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து மிளகு வடையுடன் திரும்பி வந்தபோது, சிவசாமி அயர்ன் பண்ணிக்கொண்டிருந்தான்.

‘அடேய் சிவசாமி. சுப்பையா சரித்திரம் என்ன ஆச்சு? மெட்ராஸ்ல எந்தக் கோடியிலே வேட்டை ஆடினாலும் என்னாலே ஒரு கோடி திரட்ட முடியாதுடா’.

‘வேண்டாம்ணா. சுப்பையா கார்த்தோலே வீட்டை காலி பண்ணிட்டார். இதோ சாவி’.

‘எ..எ..என்னடா சொல்றே?’ பஞ்சாமி, மேலே சொல்லப்பட்ட நீர்யானைக்கு சவால் விடும் வகையில் இன்னும் பெரிதாக உயரவாட்டில் வாயைப் பிளந்தார்.

‘அஸ்திரத்தால் அழிக்கிறதைவிட தந்திரத்தால் அழிக்கிறது உத்தமம்னு’ ஒரு சொலவடை உண்டு அண்ணா’.

‘யார் சொன்னதுடா? வள்ளுவரா? சாணக்கியரா? ஷேக்ஸ்பியரா?’

‘ஹி.. ஹி.. இந்த இஷ்டன் சிவசாமிதான். காரியம் நல்லபடியா முடிஞ்சுது. சுபம்’.

‘மேட்டரைப் போட்டு உடைக்காம சுபம் கார்டு போடாதேடா. சுருக்கமா சொல்லுடா’.

‘அண்ணா, நான் கிளப்பிவிட்ட பேய் பிசாசு வதந்திக்கெல்லாம் சுப்பையா அசரமாட்டார்னு தெரியும். ஆகையினாலே, நம்ம அஸ்தினாபுர வீட்டுப் புழக்கடையிலே புதையல் இருக்குன்னு ஒரு மலையாள ஜோதிடர் சோழியோ, கோழியோ போட்டுப் பார்த்துச் சொன்னார்னு சொல்லி வெச்சேன். அந்த சமயத்திலே, சுப்பையா யூடியூப்லே புதையல் படம் பார்த்திண்டு இருந்தார். சகுனம் ஆறதுன்னு சுப்பையா மறுநாளே நாலு ஆட்களை வெச்சு தோட்டம் பூரா தோண்ட ஆரம்பிச்சுட்டார். அப்படியே விட்டா மொகஞ்சதாரோ ஹரப்பா லெவலுக்கு அகழாராய்ச்சியாளரா இறங்கிடுவார்னு, அவரை நிப்பாட்டி, ‘சுப்பையா சார். காலம் கெட்டுக்கிடக்கு. இப்போ இது மாதிரி தோண்டினா, உங்களை சிலைகளைத் திருடி புதைச்சு மறைச்சு வெள்ளைக்காரனுக்கு விக்கிற விஷமின்னு சந்தேகப்பட்டு உள்ளே தள்ளிடுவாங்கன்னு அடிச்சுவிட்டேன்’.

‘‘அடப்போய்யா’ன்னு அசல்ட்டா சொன்ன சுப்பையாகிட்டே, அப்புறம் உங்க இஷ்டம். பொன்.மாணிக்கவேல் இந்த தெரு வழியா அடிக்கடி சுமோ ஜீப்பிலே நம்ம வீட்டை நோட்டம் விட்டுண்டே போறார்ன்னு ரகசியமா காதுலே கிசுகிசுத்தேன். சுப்பையா மடியிலே ஏதோ பெருத்த கனம்போல இருக்கு. ஆடிப்போய் மூட்டையைக் கட்டிட்டார்’.

‘சிவசாமி! நீ பிசாசுடா. இல்லை பேயின்னு வெச்சுக்கோ’ என்றார் பஞ்சாமி.

‘அண்ணா, தளதளன்னு கீரை, பிஞ்சா கத்திரி வெண்டை, அவரை புடலை, பாவைன்னு விளையற கறிகாய்த் தோட்டம் போட்டு, பூச்செடி கொடி, குரோட்டன்செல்லாம் வளர்த்து, அஸ்தினாபுர வீட்டை ஒரு மினி வசந்த பங்களாவா ஆக்கணும்னு சொல்லுவேளே? செலவில்லாம, சுப்பையா அருமையா தோண்டிக் கிளறி வெச்சிருக்கார். மழை பெஞ்சதிலே பூமி குளிர்ந்து மண் வாசனை கும்முனு தூக்கலா வரது. உங்களுக்குப் பிடிக்குமேன்னு சூடா மசாலா டீ போட்டிருக்கேன். நீங்க உத்தரவு போட்டா, கொறிக்க தேங்கா, மாங்கா பட்டாணி சுண்டலோட கொண்டு வரேன்’.

*

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com