6. சுவாமி அமேசானந்தா!

வீட்டை மாப் போட்டு துடைக்கிற, ஒட்டடை அடிக்கிற சின்ன ரோபோ ஒண்ணைக் கண்டுபிடிச்சிருக்காளாம். இந்திராணிக்கு வாயெல்லாம் பல்லு.
6. சுவாமி அமேசானந்தா!

‘சிவசாமி, இதென்னடா புதுசா? அச்சரப்பாக்கம் பக்கத்திலே சுவாமி அமேசானந்தான்னு ஒருத்தர் வந்து டேரா போட்டிருக்காராம். அமேசான்கிறது ஒரு காடுதானே?’

‘ஆமாம் அண்ணா. அமேசான், பிரேசில், கொலம்பியா, பெருன்னு தென் அமெரிக்காவிலே வியாபித்து இருக்கற பெரீஈஈஈய காடு. ஆயிரக்கணக்கான ஆறுகளும், விருட்சங்களும் உயிரினங்களும் அங்கே இருக்கு. அதிலே அதிசயம் என்னன்னா, அமேசானிலே மரங்களை வெட்டாம இருந்தா, ஆஸ்திரேலியாவிலே மழை பெஞ்சு வறட்சி இல்லாம இருக்குமாம்’.

‘எப்படிடா? அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் மொட்டைத் தலையும் முழங்காலுமாகத்தானே தள்ளி இருக்கு? அதை விடுடா, பூகோள பரீட்சைக்குப் படிக்கிறோமான? என்னோட பூகோள வாத்தியார் உலகநாதன், ‘டேய்! பூனை மீசை பஞ்சாமி! மேப்பிலே ஆப்பிரிக்கா எங்கே இருக்குன்னு காமி?’ன்னு கேட்டார். எனக்கு சுத்தமாத் தெரியலே, ஆனா கெத்தா, ‘ஆப்பிரிக்கா இருண்ட கண்டம் இல்லையா, சார்! அதான் ஒரே இருட்டு. சரியாத் தெரியலேன்னேன். உலகநாதன் சார் டொங்குன்னு என் தலையோட பூமத்திய ரேகையிலே குட்டினதிலே, எனக்கு அஞ்சு நிமிஷம் லோகமே இருண்டு போச்சு. அதை விடுடா. அச்சரப்பாக்க சுவாமி பத்தி சொல்லு’.

‘சுவாமி அமேசானந்தா, அமேசான் காட்டிலேந்து வந்திருக்கிற சித்தராம். ஒரு கண்டத்திலிருந்து இன்னோரு கண்டத்துக்கு, இளம் சிஷ்யைகள் சூழ அரூபமா பிசினஸ் கிளாஸ் லெவல்லே பறந்தே போய் வருவாராம்’.

‘சாமியார் என்ன ஜாலம் பண்றார்டா? உனக்குத் தெரியுமா?’

வீட்டு வேலைகளைச் செய்யும் இந்திராணி அறைக்குள் வந்தாள். ‘சாமி! இப்பதான் குரியரில் பூந்தொடப்பம் வந்துது. வாங்கிட்டேன். ‘அந்த அச்சரப்பாக்க சாமியார் கிட்டே போய் வந்தேங்க. ஒரே ஆச்சர்யங்க. கூட இட்டுண்டு போன வசந்தலெட்சுமி கூட, ‘இதென்னடி இந்திராணி? எப்டிடி இதுன்னு?’ வாயடைச்சுப் பூட்டா’.

இந்திராணியுடன் நடத்திய கலந்துரையாடல் மூலமாக கிரகித்துக்கொண்டதை சிவசாமி, பஞ்சாமிக்குத் தொகுத்து வழங்கினான்.

‘சித்தர் அமேசானந்தாவை தரிசிக்க வரவங்க பூ, பழம் வெத்தலைப் பாக்கு 500 ரூபாய் நோட்டு காணிக்கையோட ஒரு துண்டுப் பேப்பரில் தங்களுக்குப் பிடிச்ச இரண்டு பிரார்த்தனைப் பாடல்களின் முதலடியை எழுதித் தந்துடணுமாம். அதை அமேசான் சாமி வாங்கி, அவங்க காட்டு மொழியில், ‘ஓபூலோசா’ன்னு ஓலமிட்டு, பிரார்த்தனை வரியை சிஷ்யனை, விட்டு எதிரில் காஸ் பர்னர் மாதிரி இருக்கும் ஒரு எந்திரத்தைப் பார்த்து உரக்கச் சொல்லச் சொல்வாராம். அப்போதான் அந்த ஆச்சரியம் நடக்குமாம்.

‘ஏதான, போபூலோச்சீ…ன்னு பதில் குரல் வருமா?’

‘அதெல்லாம் இல்லேண்ணா. அந்தப் பாட்டை யார் பாடினாங்களோ அது அப்படியே கேக்கறதாம். உதாரணமா, ‘கந்த சஷ்டி கவசம்’னு நம்ம இந்திராணி கேட்டிருந்து அதை சீடர் உரக்கச் சொன்ன உடனே, ‘சூலமங்கலம் சகோதரிகளின், ‘துதிப்போர்க்குன்னு….’ ஆரம்பிச்சு பாட்டு அம்சமா அசரீரியா கேக்குமாம்..’

‘சிவசாமி, நெஜமாவாடா? இதெல்லாம். எப்படிடா நடக்கிறது?’

‘தெரியலே அண்ணா. அதுக்கப்புறம், வந்தவங்க வாயைத் திறக்கச் சொல்லி தொண்டையிலே டார்ச் அடித்துப் பார்த்து குறி சொல்வாராம்’.

‘சிவசாமி! அப்போ இவர் அமேசானந்தா இல்லே. டான்ஸிலானந்தாடா!’

*

வெளியே போயிருந்த சிவசாமி, முளைக்கீரைக் கட்டுடன் டொயோட்டா ஈட்டியாஸ் காரிலிருந்து இறங்கினான்.

‘சிவசாமி, ஏண்டா முளைக்கீரைக் கட்டுக்கே டோயோட்டால வந்து இறங்கறியே, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, நல்லெண்ணெய்னு அம்பானி, அதானி ஐட்டங்களெல்லாம் வாங்கிண்டு வர்றதா இருந்தா, பி.எம்.டபிள்யூலே வந்து இறங்குவியா?’

‘கிண்டலா அண்ணா? ஸ்டேட் பாங்க் சந்துரு டிராப் பண்ணினார். இன்னிக்கு நான் அயோத்யா மண்டபம் பக்கத்திலே நேத்ராவைப் பாத்தேன்’.

‘நேத்ரான்னா யாருடா? ‘மினுக்கப் போறது யாரு?’ நிகழ்ச்சி தொகுப்பாளினியா? பேய் சீரியலிலே போன ஜென்மத்திலே ஒரு ராஜகுமாரியா இருந்து நடப்பு ஜென்மத்திலே நாயா அலையற பேயா? பிசாசா? முனியா?’

‘அண்ணா, ஒரு எபிசோடையே நீங்க டைரக்ட் பண்ணலாம். குடோன்ல சரக்கு இருக்கு. ஆனா நேத்ரா பேய், பிசாசு..’

‘..அப்புறம் முனி..’

‘..ஆமாம் முனி எல்லாம் இல்லே. அச்சரப்பாக்கத்திலே இருக்கா. அவ கிட்டே சுவாமி அமேசானந்தாவைப் பத்திக் கேட்டேன். அந்த ஃபிராடை தெரியுமே. நேத்துதானே அதை ஊர்லேந்து விரட்டி விட்டேனேன்னா’.

‘என்னடா சொல்றே? நேத்ரா பேய் இல்லேன்னே. சரி. பேயை விரட்டறவளா? … இல்லையா? … பின்னே, மந்திரவாதியையே விரட்டறவளா?’

‘அதெல்லாம் இல்லேண்ணா. அவ ஒரு ட்டெக்கி. ரோபோடிக்ஸ் படிக்கறவ. அவதான் அமேசானந்தாவோட டிரிக்கைப் பத்திச் சொன்னா. அந்த ஆள் வெச்சிருந்தது ‘அலெக்ஸா’ங்கிற அமேசானோட கண்டிபிடிப்பு. அதை வீட்டிலே போட்டுண்டு நாம ஆசைப்படறதை ‘ஜக்கம்மா’ன்னு விளிக்கிற மாதிரி, அலெக்ஸான்னு அதனோட காதிலே படும்படி போட்டா, பாட்டு ரெடி. அதை வெச்சுண்டுதான், அமேசானந்தா ஊர் ஜனங்களை ஏமாத்திப் பணம் பண்ணிண்டு இருந்தாராம்’.

‘சிவசாமி. எப்படி எல்லாம் டிரிக் பண்றாங்க பாத்தியா? அது சரி, நேத்ரா யாருன்னு நீ இன்னும் சொல்லலியே?’

‘சொன்னா நம்பமாட்டேள்’.

‘சரி, நம்பமாட்டேன். சொல்லு’.

‘நம்பவே மாட்டேள். நேத்ரா நம்ம வீட்டிலே வேலை செய்யற இந்திராணியோட பொண்ணு’.

‘அட! இந்திராணி பொண்ணா? நெஜமாவா?’

‘ஆமாண்ணா. வீட்டை மாப் போட்டு துடைக்கிற, ஒட்டடை அடிக்கிற சின்ன ரோபோ ஒண்ணைக் கண்டுபிடிச்சிருக்காளாம். இந்திராணிக்கு வாயெல்லாம் பல்லு’.

‘சூப்பர்டா. ஆனா, எனக்கு ஆயிரம் ரோபா வந்தாலும் ஒரு சிவசாமிக்கு ஈடாகாதுடா’.

‘ரொம்ப புகழறேள் அண்ணா. யாரோ பெல் அடிக்கிறா. குரியரா இருக்கும். நாளை பண்ணப்போற கணபதி ஹோமத்துக்கு வேண்டிய காஞ்ச விரட்டியை அமேசான்லே ஆர்டர் பண்ணியிருந்தேன். வந்திருக்கும். வாங்கிண்டு வரேன்’.

*

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com