அத்தியாயம் - 2

எந்தவித ஈர்ப்பும் ஒருவரை உயர்த்துவதும், தாழ்த்துவதும் - அவரவர் தனித்திறனையும், அறிவின் ஆழத்தையும், நம்பிக்கையின் வலிமையையும், அறியாமையின் எல்லையையும், ஏமாற்றத்தின் எதார்த்தையும் பொருத்துதான் அமையும்.
அத்தியாயம் - 2

‘நம்பிக்கைதான் எண்ணங்களாக மலர்கிறது,

எண்ணங்கள் தான் வார்த்தைகளாக வெளிப்படுகிறது,

வார்த்தைகள் தான் என் செயல்களைத் தீர்மானிக்கிறது,

என் செயல்கள் தான் எனக்கு பழக்க வழக்கமாகிறது,

என் பழக்க வழங்கங்கள் தான், எனக்கு மதிப்பைக் கொடுக்கிறது,

அந்த மதிப்பு தான், என் தலைவிதியை நிர்ணயிக்கிறது’

என்றார் மகாத்மா காந்தி.

நம் தலைவிதியை நிர்ணயிப்பது நமது நம்பிக்கைதான்.

‘நாம் என்னவாக ஆவோம் என்று நம்புகிறோமோ, அதுவாகவே ஆவோம்' என்றார் விவேகானந்தர்.

‘உறக்கத்தில் வருவதல்ல கனவு, உன்னை உறங்கவிட்டாமல் செய்வது தான் கனவு' என்றார் டாக்டர் ஆ.ப.ஜெ. அப்துல்கலாம்.

எனவே கனவு, நம்பிக்கை தான் ஒவ்வொரு மனிதனையும் அந்த இலக்கை நோக்கி நகர்த்துகிறது. ஒவ்வொருவருக்கும் இலக்கு சிறியதாகவும் இருக்கலாம், பெரியதாகவும் இருக்கலாம், ஆனால் இலக்கு என்று ஒன்று இருக்க வேண்டும். ஆனால் ஒவ்வோர் இலக்கும் வெற்றி பெறுவது, அதை முன்னெடுப்பவர்களின் தளராத முயற்சியைப் பொறுத்துதான் அமைகிறது.

பெரும்பாலானவர்கள் இன்றையச் சூழலில் நிதானமாக நினைத்துப் பார்த்தால் நாம் இருக்கும் இன்றைய நிலைக்கும், சிறுவயதில் நாம் கண்ட கனவிற்கும் மிகப்பெரிய இடைவெளியிருக்கும். இந்த பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனிப்பட்ட விருப்பம் இருக்கும், கனவுகள், கற்பனைகள், இலட்சியங்கள் இருக்கும். அந்த கனவுகள், தான் விரும்பும் படிப்பாக இருக்கலாம், தொழிலாக இருக்கலாம், வாழ்க்கை முறையாக இருக்கலாம், நிறையப் பணம் சம்பாதிப்பதாக இருக்கலாம் அல்லது பொது சேவை செய்வதாக இருக்கலாம். தனது கனவுகளை நிறைவேற்றவே ஒவ்வொரு மனிதனும் ஓடுகிறான்.

ஆனால் நிறைய பேர்களின் வாழ்க்கை ஓட்டத்தில் ‘மாற்றுப் பாதையில் செல்லவும்' என்ற போர்டு கட்டயமாகவோ, சந்தர்ப்ப சூழ்நிலையாலோ வைக்கப்பட்டுவிடுகிறது. தங்கள் கனவுகளைத் தலையிலிருந்து இறக்கி வைக்க முடியாமல், தாங்கள் விரும்பாத கட்டாய மாற்று பாதையில் வருத்தத்துடன் செல்பவர்கள் ஏராளம். வேறு வழியில்லை என்றவுடன், தனது கனவுகளையும் இலட்சியங்களையும் சாலையோரத்தில் விட்டுவிட்டு விதி விட்ட வழி என்று செல்பவர்களும் ஏராளம்.

ஓர் இலட்சியத்தை நினைத்து அதற்காகவே தன்னை அர்ப்பணித்து பயணிப்பவர்கள் முதல் வகை என்றால், ஓர் இலட்சியத்தை நினைத்து பயணத்தை தொடங்கி, அதற்கு சம்பந்தமே இல்லாமல் மாற்று பாதையில் பயணித்துகொண்டிருப்பவர்கள் இரண்டாவது வகை. எண்ணிக்கையில் இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்களே மிக அதிகம். அவர்கள் 90 சதவீதத்திற்கும் மேலான மக்கள். முதல் வகையைச் சார்ந்தவர்களுக்காக நிறையப் பேர்கள் பேசியுள்ளார்கள். அவர்கள் சோர்வடைந்தால் நிறைய ஊக்கப்படுத்துகிறார்கள். அவர்களுக்காக நிறையப் புத்தகங்களும், நீண்ட தன்னம்பிக்கை தரும் உரைகளும் உள்ளன.

உதாரணமாக ஒரு கிரிக்கெட் விளையாட்டு வீரரை எடுத்துக் கொண்டால். கிரிக்கெட்டில் உச்சம் தொடுவதுதான் என் இலட்சியம் என்று சொல்லும் விளையாட்டு வீரர், தனது கனவை நோக்கிப் பயணிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு கிரிக்கெட் பேட்டை எப்படி பிடிப்பது என்று கற்றுக் கொள்வதில் தொடங்கி உலக கோப்பையை எப்படி கைப்பற்றுவது என்பது வரை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் அவரை உந்தித் தள்ளுகிறது.

அவரும் தினமும் மைதானத்திற்கு வருகிறார், விளையாடுகிறார், அதைப் பற்றி பேசுகிறார், மேலும் மேலும் கற்றுக் கொள்கிறார், போட்டியில் வெற்றி, தோல்வியைச் சந்திக்கிறார். அவர் தன் இலட்சியம் நிறைவேறும் வரை விளையாடிக் கொண்டேயிருகிறார். அவர் ஜெயித்தாலும் தோற்றாலும் மீசையை முறுக்குவார்.

அதே நபர் சந்தர்ப்ப சூழ்நிலையால், துணிகள் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் மேலாளரானால் எப்படி இருக்கும். அவரது கனவு கிரிகெட்டைப் பற்றியும், அவரது அன்றாட வேலை, துணியின் நிறம், தரம் பற்றியும் இருக்கும். எதையோ பறிகொடுத்ததை போல் தான் இருப்பார். அந்த கனவு பெரும் ஏக்கமாக இருக்கும். சில நேரத்தில் துயரமாகவும் உணர்வார். கிரிக்கெட் பற்றிய பேச்சு வந்தால், நானும் இப்படி வர வேண்டியவன்தான், என் கிரகம் இப்படி வந்து மாட்டிக்கொண்டு இந்த வேலையைச் செய்துகொண்டிருக்கிறேன் என்று புலம்புவார். ஆனால் அவர் தனக்குள் ஒளிந்து கிடக்கும் விளையாட்டுத் திறமை உச்சம் தொடாமலே இருக்கிறது. இந்த இரண்டாவது வகை மனிதர்களை நான் திரும்பிய பக்கமெல்லாம் சந்தித்திருக்கிறேன். அவர்களுக்கானது தான் இந்த தொடர்.

சிறந்த பொறியாளர் ஆகவேண்டும், நிறையச் சம்பாதிக்க வேண்டும், குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற தனது கனவையும், தன் மகனை சான்றோன் என கேட்க ஓடாய்த் தேய்ந்த பெற்றோர்களின் கனவையும், அண்ணன் நம்மை காப்பாற்றுவான் என்று தங்கை வைக்கும் நம்பிக்கையையும் ஒருசேர மொத்தமாகத் தலையில் சுமந்து கொண்டு, பி. இ. முடித்து வரும் இளைஞனை வேலை வாய்ப்பின்மை என்ற சூழல் ‘Take Diversion - மாற்று பாதையில் செல்லவும்' என்று போர்டு வைத்து விடுகிறது. ஒரு குடும்பத்தின் கனவை, ஒரு தலைமுறையின் கனவை தன் தலையிலும், உணவு விடுதியில், உணவு மூட்டைகளை முதுகிலும் சுமந்து கொண்டு பாதை மாறி பயணம் செல்லும் எண்ணற்ற இளைஞர்களைத் தினமும் பார்க்கிறேன்.

திரைத் துறையில் இயக்குநராக நினைத்து இன்று இடைநிலை ஆசிரியராக பணியாற்றுபவர், நல்ல அரசியல் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்று நினைத்து அறநிலையத்துறை துறையில் செயல் அலுவலராகிப்போனவர், தொழிலதிபராக நினைத்து, தனியார் நிறுவனத்தில் மாதச் சம்பளத்திற்கு பணியாற்றுபவர், இப்படி கனவுகளுக்கும், நடைமுறை வாழ்க்கைக்கும் இடையிலான முரண்பாட்டில் சிக்கி விழி பிதுங்கி நிற்பவர்கள் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

இவர்களின் கனவைக் கேட்பதற்குக் கூட ஆளில்லை, அவர்களாலும் சொல்ல முடிவதில்லை. 50 ரன் அடித்த கிரிக்கெட் வீரரிடம் அடுத்த இலக்கு என்ன? என்று கேட்பார்கள், அவரும் 100 ரன் அடிப்பது என்பார். படம் வெற்றி பெற்றுவிட்டால் அடுத்த படம் யாரை வைத்து இயக்கப் போகிறீர்கள்? என்று கேட்பார்கள். அவரும் சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கப் போகிறேன் என்று சொல்வார். பொறியாளராக நினைத்து swiggy, uber Eats போன்ற நிறுவனங்களில் தனது இலட்சியத்திற்கு தொடர்பில்லாத பயணத்தில் இருப்பவர்களிடம், அடுத்து என்ன செய்யப் போகிறாய் என்று கேட்பதற்கு யாருமில்லை. அதையும் தாண்டி ஒருவர் கேட்டு, அதற்கு நான் எல் அண்ட் டி யில் (L&T) தலைமைப் பொறியாளராகப் போகிறேன் என்று தனது கனவைச் சொன்னால், கேள்வி கேட்டவர், ‘நினைப்புதான் பொழப்பை கெடுக்கிறது' என்று கிண்டலடிப்பார், ஆனால் கிண்டல் பண்ணும் ஞானசூன்யத்திற்கு நினைப்பு தான் பிழைப்பை கெடுக்கிறது’ என்று கிண்டலடிப்பார். ஆனால், கிண்டல் பண்ணும் ஞானசூன்யத்திற்கு நினைப்புதான் பிழைப்பை கொடுக்கும் என்று தெரியாது. தனது கனவு பரிகாசத்திற்குள்ளாகும்போது இதயம் வலிக்கும்.

இவர்களின் இலட்சியம் என்ன ஆனது? இவர்களின் குடும்பத்தின் கனவு எங்கே போனது? அதை கேட்க நினைத்தேன். காலப்போக்கில் இவர்களின் கனவு மரித்து போய்விடக் கூடாது, அந்த கனவுகளுக்கு உயிர் கொடுக்க வேண்டுமென நினைத்தேன். இவர்களது கனவுகளுக்கு உயிர்கொடுக்க, இவர்களது நம்பிக்கைக்கு உரம் கொடுக்க வேண்டும், அந்த நம்பிக்கையைச் செயலாக்க அவர்களுக்கு வலிமை கொடுக்க வேண்டும், அதற்காகவே இந்த தொடரை எழுதவும் நினைத்தேன்.

அவர்களின் கனவு இன்னும் கரைந்து போகவில்லை. அதை அடைய வேண்டும் என்ற தாகம் அவர்களை உறங்க விடாமல் செய்கிறது. கனவு காண்பது எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியம் அதைக் காப்பாற்றுவது, அதை வளர்த்தெடுப்பது மற்றும் தொடர்ந்து அதை உயிரோடு வைத்திருப்பது. கனவுகளைச் சிதைப்பதற்கு இன்றைக்கு பல்வேறு தேவையற்ற கவனஈர்ப்புகள் நம் கண்முன்னே கொட்டிக் கிடக்கின்றன.

இன்றைய இளைய தலைமுறைய ஆக்கிரமித்துள்ள புது கண்டுபிடிப்புகளின் மூலம் வரும் தொழில்நுட்ப ஈர்ப்பாகட்டும், காலம் காலமாக வரும் காதல் ஈர்ப்பாகட்டும், பழகும் நட்பின் ஈர்ப்பாகட்டும், வாழும் சமூக ஈர்ப்பாகட்டும், நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் அரசியல் ஈர்ப்பாகட்டும், மனித வாழ்க்கை மேம்பாட்டிற்கு தேவையான ஆராய்ச்சியின் ஈர்ப்பாகட்டும், தனித்திறன் ஈர்ப்பாகட்டும் எந்தவித ஈர்ப்பும் ஒருவரை உயர்த்துவதும், தாழ்த்துவதும் - அவரவர் தனித்திறனையும், அறிவின் ஆழத்தையும், நம்பிக்கையின் வலிமையையும், அறியாமையின் எல்லையையும், ஏமாற்றத்தின் எதார்த்தையும் பொருத்துதான் அமையும்.

Angel is happy because of knowledge, Devil is also happy because of ignorance.

தேவதை மகிழ்ச்சியாக இருக்கிறாள் அவளது அறிவின் ஆழத்தால். சைத்தானும் மகிழ்ச்சியாக இருக்கிறான் அவனது அறியாமையின் ஆழத்தால். நாம் ஒவ்வொருவருக்குள்ளும் தேவதையும், சைத்தானும் இருக்கிறார்கள். நாம் எதை தண்ணீர் ஊற்றி வளர்க்கிறோம் என்பதை பொறுத்து தான் நமது குணம் வெளிப்படுகிறது.

(தொடரும்)

(கட்டுரையாளர், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த அப்துல் கலாமின் முன்னாள் அறிவியல் ஆலோசகர்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com