அத்தியாயம் - 25

உயிரி தொழில்நுட்பத்தில் மரபணு மாற்றம் செய்யும் தொழில்நுட்பத்தால் மக்களுக்கு நல்லதா அல்லது தீங்கா? இது வாழ்க்கையை வளப்படுத்துமா, இல்லை சில பேர்களின் பிழைப்புக்கு ஒரு சாக்கா..
அத்தியாயம் - 25

அறிவு அமைதியானால் சருகு சண்டமாருதம் பாடும்

கனவுகளோடு ஏரோனாட்டிக்ஸ் இன்ஜினீயரிங் படித்து வேலை கிடைக்காத மாணவனை சமீபத்தில் சந்தித்தேன். ‘‘கனவுத் துறையில் வேலை கிடைக்கவில்லை IAS படிக்கச் செல்கிறேன்’’ என்று போய்விட்டார். ‘‘விமான நிறுவனங்கள் தொடர்ந்து இந்தியாவில் மூடப்பட்டுக்கொண்டு வருகின்றன. புது விமான வடிவமைப்பு, ஆராய்ச்சி, மேம்பாடு, மற்றும் உற்பத்தியை இந்தியா முன்னெடுக்கவில்லை. அதனால் மாணவர்களுக்கு வேலையில்லை. விமான ரிப்பேர் மற்றும் சேவைக்கு இன்ஜினீயரிங் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. டிப்ளமா படிப்பு போதும். அப்புறம் எதற்கு நாங்கள் இன்ஜினீயரிங் படிக்க வேண்டும்’’ என்று கேட்கிறார் அந்த மாணவர்.

இது பெரும்பாலான இன்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களின் நிலையாக இருக்கிறது. அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. கலை மற்றும் அறிவியல் படிக்கும் மாணவர்கள் நிலையும், கேள்விக்குறியாகவே இருக்கிறது. 2 சதவிகித அரசுத் துறை வேலைவாய்ப்பை, உயர்கல்வி கற்ற 90 சதவிகிதம் பேர் நம்பி இருக்கும் அவலம். இதைப்பற்றி புலம்புவதைவிட இதற்கான காரணங்கள் என்ன என்று நாம் அறிந்து அதை சரிசெய்ய நடவடிக்கை எடுத்தால்தான் படித்த, இனிமேல் படிக்கும் மாணவர்களின் கனவுகளுக்கு சிறகை நாம் கொடுக்கமுடியும்.

அடுத்து, பயோ டெக்னாலஜியில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவரை சந்தித்தேன். ‘‘என்ன செய்கிறீர்கள்?’’ என்று கேட்டேன். அவர் சொன்னார், ‘‘உயிரி தொழில்நுட்பத்தில் ஜீன் டார்கெட்டிங்கில் நான் வல்லுநர். ஓர் ஆராய்ச்சித் திட்டத்தில் பணியாற்றினேன். ஆனால், இந்தியாவில் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு ஊக்கம் இல்லாத காரணத்தால், ஆராய்ச்சியை தொடர்வதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே இப்போது ஒரு கல்லூரியில் தற்காலிக ஆசிரியர். வெளிநாட்டுக்குச் செல்ல முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். ஏனென்றால், பயோ டெக்னாலஜி படித்தால் இந்தியாவில் வேலை கிடைக்காது என்ற நிலை. அதனால், இதைப் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கையும் குறைவாகத்தான் இருக்கிறது. எப்போது என் வேலை போகும் என்று தெரியவில்லை. என்னைப்போன்று ஆராய்ச்சிப் பட்டம் முடித்தவர்களுக்கும் உயிரி தொழில்நுட்ப மேல்மட்ட ஆராய்ச்சிக்கு வழியில்லை. பொய்யான பரப்புரைகளை நம்பி மத்திய அரசு நம் நாட்டு ஆராய்ச்சியில் விளைந்த மரபணு பயிர்களை தடை செய்வதால், மரபணு பொறியியல் ஆராய்ச்சியின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது.

அரசியல்வாதிகள் செய்யும் தடையினால், அரசு இந்த ஆராய்ச்சியை ஊக்கப்படுத்தவில்லை. அதனால் எங்களுக்கு தொடர்ந்து ஆராய்ச்சியை முன்னெடுக்க முடியவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக செய்யப்பட்ட ஆராய்ச்சியினால் பல்வேறு நிலைகளில் மரபணு பொறியியல் முன்னுக்கு வந்தது.

பல்வேறு பயிர்கள் மரபணு மாற்றப்பட்டு வயல்களில் சோதித்து பார்க்கப்பட்டு, இன்றைக்கு விவசாயிகளுக்கு நல்ல பலன்களை கொடுக்கிறது. பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கப்பட்டார்கள். உயிரி தொழில்நுட்ப வல்லுநர்கள் உருவானார்கள். ஆனால் இப்போது புது ஆராய்ச்சி மேம்பாட்டு திட்டங்கள் இல்லாமல், பயோ டெக்னாலஜி ஆய்வுக்கூடங்கள் நாடெங்கும் செயலிழந்து அல்லது மூடப்பட்டு வருகின்றன. அதற்கு ஓர் உதாரணம், பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ் துறை மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் மூடப்பட்டுவிட்டது’’ என்றார்.

அதன்பின் அந்த ஆராய்ச்சியாளர் சொன்னதுதான் மனதை உலுக்கும் இன்றைய அவல நிலையை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. ‘‘30 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி கட்டமைப்பு இந்தியாவில் இன்றைக்கு தகர்க்கப்படுகிறது. யாரால் தெரியுமா? அடுத்தவர் எழுதிக்கொடுக்கும் ஸ்கிரிப்டை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் நடிகர், நடிகைகள், யார் கதையையோ, தன் கதைபோல சித்திரித்து, அதிலும் வெற்றிபெற்ற திரையுலகினர், அரசியலில் தனது வாய்ச்சொல்லை மூலதனமாக்கி இடத்திற்கேற்ப, நேரத்திற்கேற்ப, காலத்திற்கேற்ப மாற்றி மாற்றி பேசும் அரசியல்வாதிகள், அறிவாளிகள், போலி சுற்றுச்சூழல்வாதிகள், படித்த மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குகிறார்கள்’’ என்றார்.

‘‘கற்றறிந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் என்ன செய்கிறார்கள்?’’ என்றேன்.

‘‘அவர்கள் குரல் எங்கும் எடுபடவில்லை. அமைதியாக இருக்கிறார்கள்’’ என்றார்.

‘‘பொய்யை உண்மைபோல் பேசும் சினிமா, ஊடக, அரசியல்வாதிகளால் அறிவியல் ஆராய்ச்சிக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது. இவர்கள் சர்வதேச அரசியல் பேசுகிறார்கள். இவர்களின் டிவி ஊடகங்கள் தினமும் மக்கள் முன் கொண்டுவந்து பிரேக்கிங் நியூஸ் போட்டு இவர்கள் வெட்டிக் கருத்துகளை மக்களின் கருத்தாக திணிக்கிறது.

இவர்களின் வெகுஜன, சமூக வலைத்தள, யூடியூப், வாட்ஸ்ஆப் மூலம் அள்ளிவிடும் போலி கதைகளை உண்மை என்று படித்தவர்களும் நம்பும் வகையில், திரைத் துறையினர் சொன்னால் சரிதான் என்று நம்பும் நிலை நம் அறிவின் கண்ணை மறைக்கிறது. எந்தப் பிரிவினராக இருந்தாலும் இவர்கள் சொல்வதை நம்பி எதையும் சுலபமாகத் தடை செய்ய முடியுமோ அதை தடை செய்துவிடுகிறார்கள்’’ என்றவர் மேலும் தொடர்ந்தார்:

‘‘ஏன் சாதியை தடை செய்ய முடியுமா இவர்களால். குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று பிரசாரத்திற்கு 100 கோடியை செலவு செய்ய தெரிந்தவர்களால், சாராய உற்பத்தியை தடை செய்ய முடியுமா; பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்று சொல்பவர்களால், அதன் உற்பத்தியை தடை செய்ய முடியமா? பீடி, சிகரெட், புகையிலை கேன்சர் வரும் என்று நிரூபிக்கப்பட்டு பின்பும், கேன்சர் வரும் என்று விளம்பரம் செய்து விற்கும் இவர்களால், அதன் உற்பத்தியை தடை செய்ய முடியுமா? ஆனால் நடக்காத ஒன்றை இவர்களால் பொய்யாக பரப்ப முடிகிறது. மரபணு மாற்றப்பயிறால் கேன்சர் வரும் என்று நம்பவைக்க முடிகிறது. அதற்கு ஊடகங்கள் துணை நிற்கின்றன. அந்த பொய் பிரசாரத்தின மூலம் இந்தியாவில் நடைபெறும் மரபணு ஆராய்ச்சியை தடை செய்ய முடிகிறது. படித்தவர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் எல்லாம் இவர்களின் செயலால் வேதைனைப்பட்டு, கடைசியில் இவர்களிடமே சரண் அடைந்து கூட்டத்தோடு வாழுவோம் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அறிவு அமைதியாகும் பொழுது சருகு சண்டமாருதம் பாடுகிறது. இதற்கு ஒரு விடிவு காலம் இல்லையா?

‘‘60 ஆண்டு கால ஆராய்ச்சிகள் இன்றைக்கு கேள்விக்குறியாக தொக்கி நிற்கின்றன. அதைத் தொடரலாமா, வேண்டாமா, அதன் சாதக, பாதகங்கள் என்ன, அதன் பயன்கள், விளைவுகள் என்ன என்று சிந்திக்காமல் ஏற்படுத்தப்படும் தடைகள், ஆராய்ச்சியை கொஞ்சம், கொஞ்சமாக அழித்து, கடைசியில் அறிவார்ந்த வளர்ந்த நாடுகளை நம்பி நாம் இருக்கும் நிலைக்கு நம்மை தள்ளும் நிலையை உருவாக்குகிறார்கள்.

என்ன என்றுகூட சிந்திக்க வழியில்லாமல், எடுத்தேன், கவிழ்த்தேன் என்று முடிவெடுக்கிறார்கள். இதனால் படித்தவர்கள், இந்தியாவில் வேலை கிடைக்காமல் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலைமை. அதுவும் இனிமேல் கிடைக்காது என்ற நிலை வந்துவிட்டது. வேறு என்ன செய்வது ஸ்விக்கியும், ஊபர் ஈட்ஸும் இருக்கிறது. சாப்பாடு விற்று பிழைக்க வேண்டிய நிலைமைக்கு ஆகிவிட்டோம்’’ என்று ஆதங்கப்பட்டார் உயிரி தொழில்நுட்ப துறையில் உண்மையிலேயே டாக்டர் பட்டம் பெற்றவர்.

இதுதான் இன்றைய மாணவர்களின் பெரும்பாலான மாணவர்களின் நெஞ்சுக்குள் எரியும் பெரும் நெருப்பு.

அரசியல்வாதிகள் ஏன் அறிவியல் ஆராய்ச்சிக்கு தடையாக இருக்கிறார்கள். அறிவியலின் நன்மை, தீமைகளை, தொடர்ந்த அறிவியல் ஆராய்ச்சியின் மூலம்தான் மேம்படுத்த வேண்டும், அல்லது விளைந்த தீங்கை சரிசெய்ய முடியும். ஆனால் அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப்போல, அறிவியல் என்றாலே அது இயற்கைக்கு எதிரானது என்று மக்களை நம்பவைக்கும் ஒரு செயலை ஒரு கூட்டம் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது. அது எண்ணத்தை தடை செய்யும், சிந்தனையை தடை செய்யும், செயலைத் தடை செய்யும், அது நம் எதிர்கால சந்ததிக்கும், படித்த மாணவர்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக மாறும். இதை சரி செய்வதா? இப்படியே விட்டுவிடுவதா? இல்லை மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதா, சரி போனதெல்லாம் போகட்டும், மிச்சமெல்லாம் உச்சம் தொடுவோம் என்று களத்தில் இறங்குவதா?

முதலில் உயிரி தொழில்நுட்பத்தில் மரபணு மாற்றம் செய்யும் தொழில்நுட்பத்தால் மக்களுக்கு நல்லதா அல்லது தீங்கா? இது வாழ்க்கையை வளப்படுத்துமா, இல்லை சில பேர்களின் பிழைப்புக்கு ஒரு சாக்கா. இதைப்பற்றி விவாதம் நடந்தால் நல்லது. இதைப்பற்றி சொல்வதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்றால் 7 வருடம் உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி துறையில் பணியாற்றிவிட்டுத்தான் பாதுகாப்புத் துறை ஆராய்ச்சிக்கு விஞ்ஞானியாக சென்றேன்.

1989-இல் நான் பெங்களுரில் உள்ள இந்திய அறிவியல் ஆராய்ச்சி கழகத்தில் விஞ்ஞான உதவியாளராகவும், 1991-95 வரை மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் உயிரி தொழில்நுட்பத் துறையிலும் இளநிலை தகவல் தொழில்நுட்ப விஞ்ஞானியாகவும் பணிபுரிந்தேன். அங்குதான் மரபணு பொறியியல் மூலம், உயிர் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மரபணு வரிசை, மரபணு மாற்றம் போன்றவற்றை பற்றிய ஆராய்ச்சிக்கு உதவியான தொழில்நுட்பங்களை அறிந்துகொண்டேன். அங்குதான் ஜெனிடிக் இன்ஜினீயரிங் துறையில் மிகுந்த அனுபவம் கிடைத்தது.

இந்தியாவில் உயிரி தொழில்நுட்பத் துறையில் மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்திற்கு ஒரு சிறப்பிடம் இருக்கிறது என்றால், அது டாக்டர் கே. தர்மலிங்கம், டாக்டர் கே. வேலுத்தம்பி, டாக்டர் சேகர், டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி, டாக்டர் வேலு ராஜா, டாக்டர் ரபீக் மற்றும் பல பேராசிரியர்களின் சிறப்பான ஆராய்ச்சியின் பயனாக இந்திய அளவில் புகழ் பெற்ற உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கூடம் உருவாக்கப்பட்டது. இவர்களிடம்தான் நான் உயிரி தொழில்நுட்பத்தைப் பற்றி அதிகம் கற்றுக்கொண்டேன்.

இந்த நிலையில் மரபணு மாற்றம் பற்றி நான் அறிந்துகொண்டது, அதில் ஆராய்ச்சி பணியாற்றியது எனக்கு இந்த தொழில்நுட்பத்தில் அதிக நாட்டத்தை உருவாக்கியது. எல்லா உயிரினங்களிலும் மரபணு இருக்கிறது இதில் 4 base இருக்கிறது. அதாவது நான்கு காரம் இருக்கிறது. ATGC என்று சொல்வார்கள் அது எந்த வரிசையில் ATGC இருக்க வேண்டும் என்பதை பற்றிய விவரம் DNA-வில் இருக்கும். அந்த DNA-யில் இருந்து ஒரு பதிப்பு வரும். அதுதான் mRNA. DNA-விலிருந்து இருந்து RNA வரும்போது ATGC வரிசை வந்து mRNA-யில் பதிப்பாக முதலில் உருவாகும். அதுதான் காரவரிசையாக மாறும். அதாவது, காரவரிசை mRNA-யில் முதலில் இருக்கும். அந்த mRNA-யில் ரைபோசோம் என்ற ஒரு அமைப்பில் போய் இது பதியும். DNA-வில் இருந்து RNA வருவதை transcription என்போம். mRNA என்ன காரவரிசையில் இருக்கு என்பதை படிக்க ஒரு சிஸ்டம் இருக்கு. அந்த கார வரிசையில் படித்துவிட்டு அந்த மூன்று காரத்திற்கு ATGC என்றால், நித்தியோனைன் என்ற அமினோ அமிலமாக எடுத்துக்கொள்ளும். ஒவ்வொரு மூன்று காரமும் புரத அமினோ அமிலமாக மாறுவதால், அதுக்கு translation நடக்கிறது என்று சொல்வோம். அப்படி நிறைய காரங்கள் இருக்கும்போது ஒரு அமினோ அமிலமாக மாறுகிறது. அப்போது அந்த கார வரிசை அமினோ அமிலங்களின் தொகுப்பாக மாறிவிடும். அதுதான் புரதம், அதாவது புரோட்டின். நிறைய புரோட்டீன்கள் என்சைம்களாக நொதிகளாகச் செயல்படும்.

நாம் எந்தவித வியாதிக்கு எந்த புரதத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் நமது ஆராய்ச்சியின் தேவை. தாவரங்கள் சூரிய ஒளிச்சேர்க்கை (photosynthesis) நடத்தி, ஸ்டார்ச்சை உற்பத்தி ஆக்குகிறது. இந்த செயலை செய்வதற்கான புரதங்கள் தாவரத்தில் இருக்கிறது. அதற்கான நொதிகள் தாவரத்தில் இருக்கிறது. அதன்மூலம் photosynthesis கார்பன் தன்மையை மோதல் பண்ணி ஸ்டார்சை உருவாக்குகிறது.

முக்கியமாக என்ன புரதங்கள், என்ன நொதிகள் நமது உடம்பில் இருக்கிறது என்பதுதான் நமது மனித உடல் கட்டமைப்பின் உருவாக்கமாகிறது. ஒரு குறிப்பிட்ட புரதம் நமது உடம்பில் இல்லை என்றால் நமக்கு வியாதி வருகிறது. அதை மரபணுக்கோளாறு என்று சொல்கிறோம். ஒரு குறிப்பிட்ட ஹீமோகுளோபின் இல்லை என்றால், நமக்கு சிக்கில் செல் அனீமியா வியாதி வருகிறது. அப்படி என்றால், டிஎன்ஏ-வில் ஒரு பிழை இருப்பதால் அது புரதத்திலும் அந்தப் பிழை பரிணமித்து அதன் செயல்பாடு பாதிக்கப்படும். இதுதான் ஜெனிடிக் அமைப்பு (Genetic Code). கார வரிசைகளில் இருந்து அமினோ அமில தொகுப்பு உருவாகும். அதன் அடிப்படையில்தான் ஒவ்வொரு புரதமும் வெவ்வேறு தன்மைகள் கொண்டதாக இருக்கும். ஒவ்வொரு நொதிகளுக்கும் வெவ்வேறு தன்மைகள் உருவாகும். இதையெல்லாம் முடிவு பண்ணுவது முதல் டிஎன்ஏ-வில் என்ன கார வரிசை இருக்கிறது என்பதுதான் முடிவு செய்யும். இதுதான் நமது மரபணுவின் தலைவிதி அடிப்படையாகும். இந்த தலைவிதி சரியில்லை என்றால் இதை சரிசெய்யும் மரபணுவை வைத்து மாற்றி அமைத்து நல்ல பலன் கொடுக்கவைப்பதுதான் மரபணு மாற்றம்.

மரபணு மாற்ற பயிர்களுக்கு ஏன் இப்படி ஒரு எதிர்ப்பு அலை, அதன் காரணம் என்ன, எதிர்ப்பில் உண்மை இருக்கிறதா, இல்லையா, மரபணு மாற்றம் தீமையென்றால் எதற்கு அதை உலகமெங்கும் பயிரிடுகிறார்கள். தீமை இருக்கிறது என்றாலும் அதை சரி பண்ணுவதும் அறிவியல் ஆராய்ச்சியில்தானே இருக்கிறது. பார்ப்போம்.

உங்கள் கனவுகளை, லட்சியங்களைப் பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள் - vponraj@gmail.com

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com