அத்தியாயம் - 20

நமது தமிழக விவசாயிகளின் சாதனைகளைப் பாருங்கள், சீனாவைவிட 3 மடங்கு அதிகம். அப்புறம் ஏன் தமிழக விவசாயிகள் இன்னமும் கடனில் தவிக்கிறார்கள்? இந்தச் சாதனையை மாநில அரசு விரிவாக்கவில்லை.
அத்தியாயம் - 20

இரண்டாம் பசுமைப்புரட்சிக்கு வாய்ப்புகளைப் பயன்படுத்து; திறமைகளை உருவாக்கு!

1999-2001 வரை மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராக டாக்டர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் இருக்கும்போதுதான், வளர்ந்த இந்தியாவை 2020-க்குள் உருவாக்குவோம் என்ற தொலைநோக்குப் பார்வை திட்டத்தை பல்வேறு துறைகளைச் சேர்ந்த 5000 தலைசிறந்த நிபுணர்களை வைத்து 25 தொகுதிகளை 5 தலைப்பில் உருவாக்கினார். 1993-2001வரை அவர் TIFAC (Technology Information Forecasting and Assessment Council) சேர்மன் ஆக இருந்தார். அப்போது அவரது வழிகாட்டுதலில் டாக்டர் ஒய். எஸ். ராஜன், டாக்டர் விஜயராகவன், பேராசிரியர் டாக்டர் எஸ்.கே. சின்கா மற்றும் விஞ்ஞானி கவுதம் கோஸ்வாமி ஆகியோர் இணைந்து முன்னெடுத்த முயற்சிதான், இரண்டாம் பசுமைப்புரட்சிக்கு இந்தியாவில் போடப்பட்ட முதல் அடித்தளம். அதுதான் விவசாயம் 2020 தொலைநோக்குப் பார்வை திட்டம். அதை முதன்முதலில் செயல்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற முடிவெடுத்தவுடன் அப்துல் கலாம் தேர்ந்தெடுத்த களம் பீகார்.

1999-2000-இல் பீகாரில் ஆர்.பி.சேனல்-5, மஜ்கோலி பரப்பு பாசனக் கால்வாய்ப் பகுதி, பாலிகஞ்ச் போன்ற மற்ற 5 பரப்பு பாசன பகுதிகளில் பரீட்சார்த்த முயற்சியாக அறிவியல் சார்ந்த நவீன வேளாண்மை தொழில்நுட்பத்துடன், சான்றளிக்கப்பட்ட உயர் மகசூல் வகை அரிசி மற்றும் கோதுமை விதைகளைப் பயன்படுத்தி, பயிரிடும் நிலத்தில் நீர் வற்றி வறண்டு பிளவு ஏற்படும்போது மீண்டும் குறைந்த நீர் பாய்ச்சுவது, இடைவெளிவிட்டு நடுதல், இயற்கை மற்றும் செயற்கை உரங்களைத் தேவையான அளவு தேவையான நேரத்தில் பயன்படுத்துதல், இயற்கை பூச்சிக்கொல்லி உபயோகித்தல் இப்படி பல்வேறு முறைகளை அறுவடைக்கு முன்பும், அறுவடையின்போதும், அறுவடைக்குப் பின்பும் நவீன தொழில்நுட்பத்தைக் கடைப்பிடித்து குறைந்த நீரில் செய்யப்படும் வேளாண்மையை முன் எடுத்தார்கள்.

அதில் விவசாயிகளையும், வேளாண்மை விஞ்ஞானிகளையும், வேளாண்மை பல்கலைக் கழக பேராசிரியர்கள், மாணவர்களையும் ஒருங்கிணைத்து மாநில் அரசின் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்பையும் பெற்று இந்த முயற்சியை ஒருங்கிணைந்த திட்டமாக முன்னெடுத்தார்கள். கலாம் தலைமையில் மத்திய, மாநில அரசின் பல்வேறு அதிகாரிகள், பல்கலைக் கழகங்கள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், மாணவர்களை வரவழைத்து விவசாயிகளோடு ஒன்றிணைந்து இந்த முயற்சி நடைபெற்றது.

விளைவு, ஒரு ஹெக்டேரில் 2 முதல் 3 டன் நெல் விளைந்த இடத்தில் 5 முதல் 6 டன் நெல் விளைவிக்கப்பட்டது. ஒரு ஹெக்டேரில் 1 டன் முதல் 1.5 டன் கோதுமை விளைந்த இடத்தில் 2.6 டன் முதல் 3 டன் கோதுமை விளைவிக்கப்பட்டது. அதாவது, ஒரு ஹெக்டேரில் 6 டன் நெல் உற்பத்தித் திறனை சீனா எய்தியது. அந்த சாதனையை டாக்டர் அப்துல் கலாம் தலைமையிலான விஞ்ஞானிகள், விவசாயிகளோடு சேர்ந்து செய்து சாதனை படைத்தார்கள்.

இதை செய்து முடித்துவிட்டுதான் விவசாயத்தையும், விவசாயம் சார்ந்த உணவு பதப்படுத்துதலையும் இந்தியா 2020 தொலைநோக்குப் பார்வைத் திட்டத்தில் இரண்டாம் பசுமைப்புரட்சி திட்டமாக முதலில் வைத்தார் டாக்டர் அப்துல் கலாம்.

‘‘சூரியனைப்போல் பிரகாசமாக இருக்க வேண்டும் என்றால், முதலில் சூரியனைப்போல் எரியக் கற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று அவர் சொன்னதை முதலில் செயலில் செய்து காட்டிவிட்டு, இந்த பீகாரின் வெற்றியைப்போல் இந்தியா முழுவது விவசாயம் செழிக்க வேண்டும்; அது சூரியனின் வெளிச்சத்தைப்போல் விவசாயிகளின் வாழ்வில் இருளைப்போக்கி வெளிச்சத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவை இலட்சிய இந்தியா 2020-இல் வலியுறுத்தினார்.

2003-இல் 11-வது குடியரசுத் தலைவரான டாக்டர் அப்துல் கலாமோடு, தொழில்நுட்ப இயக்குநராக நான் பணியாற்றிய போதுஅவருடன் பீகாருக்குச் சென்றபோது, பாலிகஞ்ச் பகுதியைச் சேர்ந்த முக்கிய விவசாயிகளான பால்மிகி சர்மா, சுரேந்திர சிங், பி.பி. சின்கா போன்ற விவசாயிகளின் முக்கியப் பிரதிநிதிகள் சில தேவைகளைச் சொன்னார்கள். அதாவது, 2 மடங்கு விளைவித்தாலும், விளைச்சலைப் பாதுகாத்துவைக்க சேமிப்புக் கிடங்குகள் வேண்டும். நீர்ப்பாசனம் தொடர்ந்து கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. சாலை வசதி இல்லை. தொலைத்தொடர்பு வசதி இல்லை. குளிர்பதனக் கிடங்குகள் இல்லை. அது மட்டுமல்ல, குறைந்தபட்ச ஆதரவு விலையும், பயிர்க்கடனும் சுலபத்தில் கிடைக்கவும் நீங்கள் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கேட்டார்கள். இவற்றை எல்லாம் ஏற்பாடு செய்து கொடுத்தால் 2 மடங்கு விளைச்சலின் பலன் எங்களுக்கு முழுமையாகக் கிடைக்கும் என்று சொன்னார்கள். உடனடியாக பீகார் மாநிலத்தின் நீர்வள அமைச்சர் ஜெகதானந் சிங்கிடம் சொல்லி, இவை அனைத்தையும் அந்த விவசாயிகளுக்குச் செய்துதரும்படி டாக்டர் கலாம் பணித்தார்கள்.

டாக்டர் அப்துல் கலாமோடு 2003, 2005, 2008, 2011 வரை தொடர்ந்து பீகாருக்குச் சென்று விவசாயிகளோடு கலந்துரையாடி இந்த திட்டத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணித்து வந்திருக்கிறேன். இந்த இரண்டாம் பசுமைப்புரட்சித் திட்டத்தை செயல்படுத்தியதின் விளைவு, விவசாயிகளின் வருமானம் அங்கு 3 மடங்கு உயர்ந்திருக்கிறது. 2500 ஹெட்டேரில் 3000 விவசாயிகளோடு தொடங்கப்பட்ட இந்த திட்டம், இன்றைக்கு 10000 ஹெக்டேரில் விரிவு படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் இது பீகார் முழுவதற்கும், ஏன் இந்தியா முழுவதற்கும் இன்னமும் சென்று சேரவில்லை என்பது ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

பீகாருக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில்தான் திருந்திய நெல் சாகுபடி (SRI - System of Rice Intensification) முறையில் 60,000 ஹெக்டேரில் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த வேளாண்மை முறையைக் கடைப்பிடித்து, ஒரு ஹெக்டேரில் சராசரியாக 7 டன் நெல் உற்பத்தித் திறனை உருவாக்கி சாதனை படைத்தது தமிழ்நாடு அரசும், விவசாயிகளும். இந்த முறையில், ஒரு ஹெக்டேரில் 18 டன் நெல்லை விளைவித்து திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூர் விவசாயி டி. அமல்ராணி, ரூ.1 லட்சம் ICAR-யிடம் இருந்து 22 ஜனவரி 2013-இல் விருது பெற்றிருக்கிறார். தாராபுரம் விவசாயி எம்.பார்த்தசாரதியும் ரூ.1 லட்சம் பரிசை ஒரு ஹெக்டேரில் 13 டன் விளைவித்து பெற்றிருக்கிறார். இந்தியாவின் ஒட்டுமொத்த நெல் உற்பத்தி திறன் ஒரு ஹெக்டேருக்கு 3 டன்; சீனாவின் ஒட்டுமொத்த நெல் உற்பத்தி திறன் ஒரு ஹெட்டேருக்கு 6 டன். ஆனால் நமது தமிழக விவசாயிகளின் சாதனைகளைப் பாருங்கள், சீனாவைவிட 3 மடங்கு அதிகம். அப்புறம் ஏன் தமிழக விவசாயிகள் இன்னமும் கடனில் தவிக்கிறார்கள்? இந்தச் சாதனையை மாநில அரசு விரிவாக்கவில்லை.

தமிழகத்தில் நீடித்த நிலைத்த கரும்பு உற்பத்தி (Sustainable Sugarcane Initiative) திட்டத்தின் மூலம் அறிவியல் தொழில்நுட்பத்தை வேளாண்மையில் பயன்படுத்தி 13 நவம்பர் 2006-இல் தருமபுரி, சோமனஹல்லியை சேர்ந்த வரதராஜன் என்ற விவசாயி ஒரு ஹெக்டேரில் 300 டன் கரும்பு உற்பத்தி செய்து மத்திய, மாநில அரசின் விருதைப் பெற்றுள்ளார். 21 பிப்ரவரி 2012-இல் ஈரோடு, வன்னிப்புதூரை சேர்ந்த ஏ.பெருமாள்சாமி என்ற விவசாயி ஒரு ஹெக்டேரில் 245 டன் கரும்பு விளைவித்து சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் ஒட்டுமொத்த கரும்பு உற்பத்தி திறன் ஒரு ஹெக்டேருக்கு 80 டன்தான். தமிழகத்தின் கரும்பு உற்பத்தி திறன் ஒரு ஹெட்டேரில் 180 டன் கரும்பு உற்பத்தி செய்யும் வல்லமை பெற்றவர்கள் தமிழக விவசாயிகள். அப்புறம் ஏன் கரும்பு சர்க்கரை ஆலைகளில் கரும்பு விற்ற நிலுவைத்தொகையை வாங்க கரும்பு விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். கேள்வி நியாயமானதுதானே?

தமிழகத்தில் ஒட்டுமொத்த துல்லிய பண்ணைத் திட்டத்தில் பூக்கள் உற்பத்தி 1.5 மடங்கு அதிகம் உற்பத்தி செய்து தமிழக விவசாயிகள் சாதனை படைத்திருக்கிறார்கள்.

அப்படி என்றால், தமிழகமும் பீகாரும் விவசாயத்தில் மற்ற இந்திய மாநிலங்களுக்குப் போட்டி அல்ல. அது வளர்ந்த நாடான சீனாவிற்கு போட்டியிடும் வல்லமை பெற்ற மாநிலங்கள். ஆனால் இது பீகார் மற்றும் தமிழ்நாடு முழுமைக்கும் எதிரொலிக்கவில்லை. அதற்கு காரணம் நமது விவசாயிகளின் சாதனைகள் தனித் தனித் தீவுகளாக இருக்கின்றன. ஆனால் அதை என்றைக்கு இணைத்து மாலையாகப் பின்னுகிறோமோ அன்று ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் அதன் பொருளாதார பலன் நம் நாட்டிற்கும் கிடைக்கும். விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் 3 மடங்கு உயரும்.

டாக்டர் கலாம் 1999-2000-இல் பீகாரில் எடுத்த இந்த முயற்சியின்போது அவர் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர். ஆனால் அவர் 11-வது குடியரசுத் தலைவரான பின்பும், அந்த பதவில் இருந்து விலகிய பின்பும் தொடர்ந்து பலமுறை சென்று விவசாயிகளோடு உரையாடி ஊக்குவித்தார். அவரது வருகை மூலமாக பீகார் மாநில அரசின் கவனம் அந்த பகுதி விவசாயிகளின் சாதனையைத் தொடர்ந்து நிகழ்த்த வழி பிறந்தது. ஆனால், பீகார் மாநில அரசு, பல்வேறு அரசியல் பிரச்னைகள் காரணமாக, இந்த சாதனையை பீகார் முழுமைக்கும் எடுத்துச்செல்லத் தவறிவிட்டது.

2011-இல் நான், அன்றைய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு தமிழ்நாட்டை வளமாக்கும் தொலைநோக்குப் பார்வை திட்டத்தை டாக்டர் அப்துல் கலாமின் அறிவுறுத்தலோடு கொடுத்து, அதை அவர்கள் தேர்தல் அறிக்கையாக ஏற்றுக்கொண்டார். அதில் முக்கியத் திட்டமாக இந்த இரண்டாம் பசுமைப்புரட்சித் திட்டத்தை அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் 19 லட்சம் ஹெக்டேரில் எப்படி விரிவுபடுத்துவது என்ற விரிவான ஆலோசனையை வழங்கினேன். அதை முழுமையாகச் செயல்படுத்தி இருந்தால், தமிழகம் உலகத்திற்கு உணவளிக்கும் நாடாக இன்றைக்கு மாறியிருக்கும். அது மட்டுமல்ல, 1 கோடி விவசாய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைத்திருக்கும், அவர்களின் வாழ்க்கைத்தரம் 3 மடங்கு உயர்ந்து இருக்கும். ஆனால், யார் ஆட்சிக்கு வந்தாலும், தலைவர்களின் முழு அர்ப்பணிப்பும், மேற்பார்வையும், அமைச்சர்களுக்கு இலக்கு நிர்ணயித்து வேலை வாங்கும் திறனும் இருந்தால்தான் அது சாத்தியம்.

இருபது ஆண்டுகளுக்கு முன் விவசாயத்தின் உற்பத்தி திறனை அதிகரித்து சாதனை படைத்துப் பார்த்துவிட்டு மக்களுக்கு இந்தியா 2020-ஐ இலக்கை கொடுத்த டாக்டர் அப்துல் கலாம் செய்த சாதனையைப் பீகாரும், தமிழ்நாடும் ஓரளவு முன்னெடுத்தது.

ஆனால் இன்றைக்கும் இந்தியாவில் விவசாயிகள் கண்ணீர் சிந்தும் நிலை ஏன் ஏற்படுகிறது? ஒருபக்கம் வெள்ளம், ஒருபக்கம் வறட்சி என்ற நிலைபோல், ஒரு சில விவசாயிகள் பெற்றுக்கொண்ட திறமைகளினால் பலன் பெறுவதும், பெரும்பாலான விவசாயிகளுக்கு அப்படி ஒரு வாய்ப்பு இல்லாமல் போவதற்கும் மத்திய, மாநில அரசுகள்தாம் பொறுப்பு. விவசாயிகள் கடன் இல்லாமல் வாழும் நிலை வருமா என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் 3 மடங்கு வருமானம் பார்க்கும் வழிமுறை இதே இந்தியாவில் விவசாயத்தில் செயல்படுத்தப்பட்டிருக்கிறது.

‘‘திறமைகள் அனைவருக்கும் சமமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் வாய்ப்புகள் அனைவருக்கும் சமமாக இருக்கிறது. வாய்ப்புகளைப் பயன்படுத்து, திறமைகளை வென்று எடு’’ என்றார் அப்துல் கலாம். ஆம், வென்றுபார்க்க வழிகளும் இருக்கின்றன. வாய்ப்புகளும் இருக்கின்றன. அதைச் செயல்படுத்திப் பார்க்கத்தான் விழிப்புணர்ச்சி பெற்ற அரசியல் தலைவர்களின் பற்றாக்குறை காணப்படுகிறது. வாய்ப்புகளை உருவாக்குவோம். நம் மக்களின் திறமையை மேம்படுத்துவோம். கண்டிப்பாக அவர்கள் வாழ்வு சிறக்கும்.

அடுத்து வரும் அரசு, விவசாயத்தில் என்ன செய்ய வேண்டும்? எவ்வாறு இதை நாம் செய்யப்போகிறோம்? சோதனைகளை வென்று சாதனை படைக்கப்போகிறோமா, இல்லை தொடர்ந்து இதே நிலை தொடருமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

உங்கள் கனவுகளை, லட்சியங்களைப் பகிர்ந்துகொள்ள தொடர்புகொள்ளுங்கள் - vponraj@gmail.com

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com