நலம் நலமறிய ஆவல்

50. நமக்குள் ஒரு ஞானி - 2

நாகூர் ரூமி
நீங்கள் யார் என்று தெரிந்துகொள்வதுதான் இந்த உலகுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரிய சேவையாகும் - ரமண மகரிஷி

நமது உடலில் உள்ள உயிரணுக்களின் தோற்றத்தில், அமைப்பில், செயல்பாடுகளில் எப்படி ஒரு தெய்வீக ஏற்பாடு உள்ளது என்பதைப் பற்றிக் கொஞ்சம் பார்த்தோம். கருவாக நாம் அம்மாவின் வயிற்றினுள் இருந்தபோது உருவம் எதுவும் நமக்குக் கிடையாது. உருவமற்ற திசுவாக நாம் இருந்தோம். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சில உயிரணுக்கள் கைகளாக, சில கால்களாக, சில மூளையாக – இப்படியாகக் கொஞ்ச நாளில் நமக்கு உருவம் கிடைக்கிறது. ஒவ்வொரு உயிரணுவுக்கும் தான் ‘எங்கே’ போக வேண்டும் என்று ரொம்ப தெளிவாகத் தெரிந்திருக்கிறது! வாய்க்குப் போக வேண்டியது வயிற்றுக்கோ, நாக்குக்குப் போக வேண்டியது மூக்குக்கோ தப்பித் தவறிக்கூடப் போவதில்லை. இதில் இன்னொரு ஆச்சரியம் உண்டு. அது என்ன?

ஓராயிரம் பார்வையிலே

அஹ்மத் நோயன் என்பவர் எழுதிய Physiology in Life and Medicine என்ற நூலில் 40-வது பக்கத்தில் ஒரு தகவலைக் கூறுகிறார். அது ஆச்சரியத்தின் உச்சகட்டம் என்று சொல்லலாம்.

கருவில் உடல் உறுப்புகள் உருவாகிக்கொண்டிருக்கும் வேளையில், அங்குள்ள உயிரணுக்களையெல்லாம் பிரித்தெடுத்து வேறு ஒரு சூழலில் வைத்து, பின்னர் கொஞ்ச காலம் கழித்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்தால்கூட, கண் உருவாக வேண்டிய உயிரணுக்கள் தங்கள் கூட்டாளிகளையும், மூக்கு உருவாக வேண்டிய உயிரணுக்கள் தங்கள் கூட்டாளிகளையும் அடையாளம் கண்டு ‘என் இனம், என் மக்கள்’ என்று அவர்களோடு போய் சேர்ந்துகொள்கிறதாம்! மூளையோ, நரம்பு மண்டலமோ, கண்ணோ இல்லாத உயிரணுக்களுக்கு ‘இது நம்ம ஆளு’ என்று எப்படி அடையாளம் காண முடிகிறது?! ‘ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்’ என்ற பாடலைப் போலத்தான்!

மிக முக்கியமான கேள்வி என்னவெனில், இந்த உயிரணுக்களெல்லாம் தாங்கள் செய்ய வேண்டிய வேலைகளைக் கற்றுக்கொண்டு செய்யுமா? இல்லை. அவை உருவாகும்போதே தான் செய்ய வேண்டிய வேலைக்குத் தேவையான அறிவுடனும், கடமையை நிறைவேற்றும் தகுதியுடனும்தான் உருவாகின்றன. வேறு வார்த்தைகளில் சொன்னால், ஒவ்வொரு செல்லும் ஒரு ஞானியாகவே பிறக்கிறது. வாழும் காலமெல்லாம் ஞானியாகவே வாழ்கிறது. கோடிக்கணக்கான ஞானிகளின் கூட்டமைப்புதான் மனித உடல் என்று சொன்னால் அது மிகையில்லை.

ஏ.டி.பி. (ATP - Adenosine Tri Phosphate)

நாம் உண்ணும் உணவிலிருந்து நமக்குத் தேவையான ஆற்றல் நமக்குக் கிடைக்கிறது என்று நமக்குத் தெரியும். ஆனால், அதில் நமக்குத் தெரியாத ஒரு விஷயமும் இருக்கிறது. அது என்ன? நம் உணவிலிருந்து கிடைக்கும் ஆற்றலை நம் உயிரணுக்கள் நேரடியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது!

ஆமாம். முதலில் எல்லா ஆற்றலும் ஒரு ஆற்றல் பொட்டலமாக சேமித்து வைக்கப்படுகிறது. அந்த ஆற்றல் பொட்டலத்தின் பெயர்தான் ATP. அதில் மூன்று அடுக்குகளாக, மூன்று வகை ஃபாஸ்ஃபேட்டுகளாக ஆற்றல்கள் சேமிக்கப்பட்டிருக்கும். அவற்றை விஞ்ஞானம் AMP, ADP, ATP என்று கூறுகிறது. ஒவ்வொன்றுக்கும் நீளமான பெயர்கள் உண்டு. நான் வேண்டுமென்றே அவற்றைத் தவிர்த்துவிட்டேன். இம்மூன்று பெயர்களிலும் உள்ள P என்பது ஃபாஸ்ஃபேட்டைக் (phosphate) குறிக்கும் என்று புரிந்துகொண்டால் போதும்.

நமது உடல் ஒரு நாளைக்கு 48 கிலோ ATP-யை பயன்படுத்துகிறது. ஆனாலும், ஒரு நாளின் எந்த ஒரு கணத்தில் நம் உடலில் ஒரு கிராமுக்கு மேல் ATP இருக்காது. ஏனெனில், ATP ஒட்டுமொத்தமாக சேமித்து வைக்கப்படுவதில்லை. அவ்வப்போது தேவைக்கேற்ப உருவாக்கிக்கொள்ளப்படுகிறது! ஒவ்வொரு விநாடியும் கோடிக்கணக்கான உயிரணுக்களும், சுமார் ஒரு கோடி அளவு ATP ஆற்றலைச் சாப்பிடுகின்றன, உருவாக்குகின்றன!

நம் ATP ஆற்றல் மூன்று வகை ஃபாஸ்ஃபேட்டுகளாக சேமிக்கப்பட்டிருக்கும் என்று ஏற்கெனவே பார்த்தோம். நம் உயிரணுக்களுக்கு சக்தி தேவைப்படும்போதெல்லாம் அது ATP-ஐ பொட்டலத்தைப் பிரிக்கும்; அல்லது உடைக்கும். அப்போது ஆற்றல் வெளியாகும். ஒரேயொரு ஃபாஸ்ஃபேட் இணைப்பு உடைந்தால் ADP உருவாகும். இரண்டு இணைப்புகள் உடைந்தால் AMP உருவாகும். உடைந்தது போக மீதி இருக்கும் ஆற்றல், உயிரணுக்களின் வேலைக்கு சக்தியூட்டுகின்றன. இதெல்லாமே படுவேகமாக, தவறே இல்லாமல் கணந்தோறும் நடந்தேறுகின்றன!

கல்லீரல் எனும் ராட்சச தொழிற்சாலை

எப்படி நம் கல்லீரல் அதற்குள் வந்து சேரும் க்ளூகோஸையெல்லாம் க்ளைகோஜனாக மாற்றுகிறது என்பதைப் பற்றியெல்லாம் சர்க்கரை நோய் பற்றிய கட்டுரைகளில் ஏற்கெனவே பார்த்தோம். இங்கே நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, நமது கல்லீரலில் உள்ள ஒவ்வொரு உயிரணுவிலும் ஐநூறு வகையான வேறுபட்ட காரியங்கள் நடைபெறுகின்றன என்பதைத்தான்! அவ்வளவும் ஒரு விநாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்துக்குள்ளேயே!

நம் உணவு, நாம் உள்வாங்கும் காற்று – இப்படி பல வழிகளில் நம் உடலுக்குள் புகும் கெட்ட பாக்டீரியாக்களை நம் கல்லீரலுக்குள் இருக்கும் குப்ளர் செல்கள் என்ற பெயர் கொண்ட செல்கள் அழித்தொழிக்கின்றன! அது என்ன குப்ளர் என்று ஒரு பெயர்? அது ஒன்றுமில்லை, குப்ளர் என்ற ஜெர்மன்காரர் அதைக் கண்டுபிடித்ததால் அதற்கு அவருடைய பெயர் வைக்கப்பட்டது! இதில் விசேஷம் என்னவென்றால், எல்லா பாக்டீரியாக்களும் தீமை செய்வதில்லை. இதுபற்றி ஏற்கெனவே விரிவாகப் பார்த்தோம். குப்ளர் செல்களின் விசேஷம் என்னவெனில், எந்த பாக்டீரியா கெட்டது என்று கண்டுபிடித்து அவற்றை மட்டுமே கொல்லும்! எது நல்லது, எது கெட்டது என்று அதற்கு எப்படித் தெரியும்? எல்லாக் கேள்விகளுக்கும் பதில் ஒன்றுதான். எல்லா அறிவையும் கொடுத்தே ஆண்டவன் அவற்றை அனுப்பியிருக்கிறான்!

தற்கொலைப் படைகள்

நமது உயிரணுக்களுக்குள் தற்கொலைப்படைகளும் உண்டு! செல்களின் எண்ணிக்கை தேவையைவிட அதிகமாகிவிட்டாலோ, செல்களுக்கு நோய் வந்துவிட்டாலோ, அல்லது குறைபாடுகள் ஏற்பட்டுவிட்டாலோ அவைகளை தீர்த்துக்கட்ட புரோட்டீன்களை உருவாக்குகின்றன! ஆனால், செல்கள் தங்கள் வேலையை சரியாகச் செய்துகொண்டிருக்கும்வரை, நம் உடல் ஆரோக்கியமாகப் பாதுகாக்கப்படும்வரை, கொலைகாரப் புரோட்டீன்கள் தடுக்கப்படுகின்றன! ஆனால், செல்கள் நோயுற்றாலோ, கேன்ஸர் வந்துவிட்டாலோ, அல்லது உடலுக்கு ஏதாவது தீங்கு செய்யலாம் என்று தெரிந்தாலோ, உடனே இந்தப் புரோட்டீன் துப்பாக்கிகள் இயக்கப்படுகின்றன. பிரச்னைக்குரிய செல்கள் தாக்கி அழிக்கப்படுகின்றன! ஆரோக்கியமான செல்களுக்குள் புரோட்டீன்கள் உருவானாலோ, பிரச்னைக்குரிய செல்கள் வாழ அனுமதிக்கப்பட்டாலோ அது உடலுக்குத் தீங்குதான்.

அப்படியானால், எந்த நேரத்தில் எந்த இடத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று செல்களுக்குத் தெரிந்திருக்கின்றது! பிரச்னைக்கு எப்போதுமே உடனடித் தீர்வுதான். இங்கே ‘வாய்தா’ வாங்கவே முடியாது!

தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து, தனக்குள் இருக்கும் கொலகார புரோட்டீனை தயார்நிலையில் வைத்துவிட்ட ஒரு செல், முதலில் மற்ற செல்களின் உறவுகளைத் துண்டித்துக்கொள்கிறது! தனக்குள் அது சுருங்கிக்கொண்டு, தன் அண்டையிலுள்ள செல்களின் கண்களுக்கு மறைந்துகொள்கிறது! பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக செல் உடைய ஆரம்பிக்கிறது. அதன் உடைந்த பாகங்களை ஆரோக்கியமான செல்கள் கபளீகரம் செய்துவிடும்!

இதிலும் ஓர் ஆச்சரியம் என்னவெனில், இப்படி செத்துப்போன செல்களையெல்லாம் உயிருள்ள மற்ற செல்கள் உடனேயே சாப்பிட்டுவிடுவதில்லை. பல செத்த செல்களை அப்படியே விட்டுவிடும். ஏன்? ஏனெனில் அந்த செத்த செல்களின் வேலை இன்னும் முடியவில்லை! அப்படீன்னா? உதாரணமாக, நம் தோல் பகுதியின் மேற்புறத்தின் செல்கள், நம் நகங்கள் ஆகியவற்றில் செத்துப்போன செல்கள் அதிகம் இருக்கும். அவை நம் உடலுக்கு இன்னும் கொஞ்சகாலம் தேவைப்படுவதால் அவை அழிக்கப்படுவதில்லை! இப்படி லட்சக்கணக்கில் சாகும் செல்களில் எவற்றை வைத்துக்கொள்வது, எவற்றை அழிப்பது என்று உயிருடன் உள்ள கோடிக்கணக்கான செல்கள், தவறே இல்லாத மிகச்சரியான முடிவுகளை கணந்தோறும் எடுக்கின்றன! ஒரு குற்றவாளிகூட தப்பிப்பதில்லை. அதேசமயம், எந்தக் காலத்திலும் ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்படுவதோ கொல்லப்படுவதோ இல்லை! செல் நீதி எப்போதுமே நல் நீதிதான்!

எல்லாரையும் தெரியும்

சில உலோகங்களையும் கனிமப் பொருள்களையும் பொடியாக்கி உங்கள் முன் வைத்தால், எந்தப் பொடி எந்த உலோகத்துடையது என்று உங்களால் தவறிழைக்காமல் மிகச்சரியாகச் சொல்லமுடியுமா? நீங்கள் உலோகவியல் / கனிமவியல் படித்திருந்தால் ஒருவேளை சொல்லலாம். இல்லையெனில், அது கடினமான காரியம்தான். தவறு நேர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இரும்புச் சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், ஆக்ஸிஜன், நைட்ரஜன் போன்ற பல சமாசாரங்களை மிகச்சரியாக அடையாளம் கண்டுகொள்ள, அவற்றைப் பயன்படுத்த நம் செல்களால் முடியும்.

நம் உடலில் ரத்தம் தயாரிக்கப்படுவதற்குத் தேவையான பொருள்களில் விட்டமின் பி-12 மிக முக்கியமானது. இது இல்லையெனில் ரத்தசோகை நோய் ஏற்பட்டு ஒருவர் இறந்துகூடப்போகலாம். விட்டமின் பி-12 அவ்வளவு முக்கியமானது. விட்டமின் பி-12 இல்லையென்றால் ரத்தமில்லை. ரத்தம் இல்லையென்றால் உயிரே இல்லை. ஆனால், விட்டமின் பி-12 நம் வயிற்றுப் பகுதியில், சிறுகுடலில்தான் பாதுகாக்கப்படுகிறது. ஆனால் ரத்தமோ, நம் எலும்பு மஜ்ஜைகளில்தான் தயாரிக்கப்படுகிறது. எலும்பு மஜ்ஜை வயிற்றுப் பகுதியிலிருந்து ரொம்ப தூரம்! ஆனாலும், மிகச்சரியான நேரத்துக்கு மிகச்சரியான அளவில் எலும்பு மஜ்ஜைக்கு விட்டமின் பி-12 அனுப்பப்படுகிறது!

சிறுகுடல் பாதுகாப்பு

நாம் உண்ட உணவு செரித்த பிறகு, அது இரைப்பையில் இருந்து சிறுகுடலுக்கு இறங்குகிறது. அப்போது கடுமையான ஆஸிட்கள் சுரக்கின்றன. அவையும் சேர்ந்து சிறுகுடலுக்குள் இறங்கும். நமது வயிற்றை அப்படிப்பட்ட ஆஸிட்களிலிலிருந்து பாதுகாக்க இரைப்பையைச் சுற்றி ஒரு சிறப்பு பாதுகாப்பு வளையம் உள்ளது. ஆனால், சிறுகுடலுக்குள் அப்படி எதுவும் இல்லை. அப்படியானால் அந்த ஆஸிட்களிலிலிருந்து சிறுகுடலைப் பாதுகாப்பது எப்படி? குறிப்பாக, சிறுகுடலின் பகுதியாக உள்ள டியோடினம் எனப்படும் முன்சிறுகுடல் பாதிக்கப்பட்டுவிடுமே!

அதற்கு நாம் எதுவும் செய்யவேண்டியதில்லை. சிறுகுடலுக்குள் ப்ரொசெக்ரீட்டின் என்றொரு ஹார்மோன் உள்ளது. அது அந்தச் சமயத்தில் செக்ரீட்டின் என்ற ஹார்மோனாக மாற்றப்பட்டு, அந்த ஆஸிட்களிடமிருந்து டியோடினத்தைப் பாதுகாக்கிறது! அதுவும் எப்படித் தெரியுமா? ஆஸிட் வந்துவிட்டது என்று தெரிந்தவுடன், உடனே செக்ரீட்டின் ரத்த ஓட்டத்தில் கலந்து நம் கணையத்துக்கு விரைந்து செல்கிறது. அங்கு செய்தியைச் சொன்னவுடன், ’பைகார்பனேட் அயான்’கள் எனப்படும் என்ஸைம் அடியாட்களை அழைத்துக்கொண்டு விரைந்து சிறுகுடலுக்குள் திரும்பும் செக்ரீட்டின், அவர்களின் உதவியோடு அந்த ஆஸிட் எதிரிகளிடமிருந்து டியோடினத்தைக் காப்பாற்றுகிறது!

செக்ரீட்டின் மூலம் டியோடினம் அனுப்பும் செய்தியை கணைய எப்படி மிகச் சரியாகப் புரிந்துகொள்கிறது? எப்படி உடனே ‘பைகார்பனேட் அயான்’களை தயாரித்து அனுப்புகிறது? எல்லாம் ஆண்டவனுக்கே வெளிச்சம்!

சர்க்கரையும் உங்கள் உடலும்

நீங்கள் சாப்பிடும் உணவில் உங்களுக்குத் தேவைப்படும் சர்க்கரை அளவைவிட அதிகமான சர்க்கரை இருந்தால் என்னாகும்? ரத்தத்தில் கலந்திருக்கும் நூற்றுக்கணக்கான மாலிக்யூல்களிலிலிருந்து, முதலில் சர்க்கரை மாலிக்யூல்களை உங்கள் கணையம் அடையாளம் கண்டு அவற்றை தனிமைப்படுத்தும்! பிறகு அவற்றை எண்ணி வைக்கும்! அவை அளவுக்கு அதிகமாக உள்ளனவா இல்லையா என்று தெரிந்துகொள்ள! கண்ணோ, கையோ, மூளையோ இல்லாமலே சர்க்கரை அணுத் திரண்மங்கள் எண்ணப்படுகின்றன!

அப்படி எண்ணிப் பார்த்த பிறகு, சர்க்கரை மாலிக்யூல்கள் அளவுக்கு அதிகமாக இருக்குமானால், அவற்றை வேறொரு இடத்தில் பாதுகாப்பாக சேமித்துவைக்க முடிவு செய்கிறது கணையம்! அதற்காக தொலைவில் இருக்கும் செல்களை வேலைக்கு அமர்த்திக்கொள்கின்றது!

ஆனால், ஒரு உத்தரவு கிடைக்காமல் தொலைதூரத்தில் உள்ள அந்த செல்கள், அந்த அளவுக்கு மிஞ்சிய சர்க்கரை மாலிக்யூல்களை சேமித்து வைக்காது! அந்த உத்தரவைக் கொடுக்கும் ஹார்மோனின் பெயர்தான் இன்சுலின்! இந்த இன்சுலின் யார், அவருடைய வேலை என்ன என்பதெல்லாம்கூட கணையத்தின் டி.என்.ஏ.யில் ஒரு சூத்திரமாக, ஒரு ’ஃபார்முலா’வாக பதிவு செய்யப்பட்டிருக்கும்! அந்த ‘ஃபார்முலா’வைப் படித்துவிட்டுத்தான் சிறப்பு என்சைம்கள் இன்சுலினை உருவாக்கும்!

இன்சுலின் கொடுக்கும் உத்தரவை சிரமேற்கொண்டு உடலின் பல பாகங்களில் உள்ள எல்லா செல்களும் செயல்படுத்தும். அதிகமாக உள்ள சர்க்கரை, எலும்புகளில் ஆங்காங்கு க்ளைகோஜனாக சேமித்து வைக்கப்படும்! நாம் ஒரு கோப்பை தேநீர் அருந்தும்போது, அதில் தேவைக்கு அதிகமாக சர்க்கரை இருக்குமானால் நடப்பது இதுதான்! இது நடக்காமல் போனால், நாம் ‘கோமா’வுக்குப் போய் இறக்க நேரிடலாம்! எனவே, ஒவ்வொரு முறை வெள்ளைச் சீனி என்ற விஷயத்தைப் போட்டு தேநீர் குடிக்கும்போதெல்லாம், கணையத்துக்கும் இன்சுலினுக்கும் நன்றி சொல்லிக்கொண்டே அருந்துவது நல்லது! இன்னும் உண்டு, பார்க்கத்தானே போகிறோம்…

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT