குவியத்தின் எதிரிகள்: 4 குறுக்கான இடையாடல்கள்

தாற்காலிகக் குவியத்துக்காக உடல் செலவிடும் சக்தி, நீடித்த நேரத்துக்குத் தேவைப்படும் ஆற்றலைவிட அதிகமானது. எனவே, சரியான பதில் கிடைக்காதபோது, ஏமாற்றங்கள் எரிச்சலைத் தோற்றுவிக்கின்றன.
குவியத்தின் எதிரிகள்: 4 குறுக்கான இடையாடல்கள்

‘பட்டுக்கோட்டைக்கு வழி சொல்லுடா’ன்னா, ‘கொட்டைப் பாக்கு பத்து பணம்’ங்கான்’ என்று ஒரு பழமொழி உண்டு. கேள்வி ஒன்றுக்குச் சம்பந்தம் இல்லாத பதில் வருவதில் உண்டான எரிச்சலை, இதுபோன்ற பழமொழிகள் வெளிக்காட்டுகின்றன. ஏன் எரிச்சல் வர வேண்டும்? அவர் காதில் பட்டுக்கோட்டை என்பது கொட்டைப்பாக்கு என்று கேட்டிருக்கலாம், அல்லது அவர் வேறு சிந்தனையில் இருந்திருக்கலாம்.

ஆனால், நமது எதிர்பார்ப்பு என்பது வேறு வகையான குவியம். ‘நான் சொல்வதை சரியாகத்தான் சொல்கிறேன். கேட்பவருக்கு மிகச்சரியாக அது புரியும் வகையில்தான் சொல்கிறேன். எனவே, எனக்கு வேண்டிய பதில் வர வேண்டும்’ இதுதான் நமது அச்சமய, தாற்காலிகக் குவியத்தின் எதிர்பார்ப்பு. இந்தத் தாற்காலிகக் குவியத்துக்காக உடல் செலவிடும் சக்தி, நீடித்த நேரத்துக்குத் தேவைப்படும் ஆற்றலைவிட அதிகமானது. எனவே, சரியான பதில் கிடைக்காதபோது, ஏமாற்றங்கள் எரிச்சலைத் தோற்றுவிக்கின்றன. கேள்வியின் நேரமும், பதிலின் அவகாசமும் மிகக் குறுகிய காலகட்டத்தவை; ஏமாற்றத்தின் ஆழம் அதிகம்.

நீடித்த காலத்தின் குவியம், ஆயத்தங்களைக் கொண்டு துவங்குவது. என்ன செய்ய வேண்டும் என்பதையும், எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் முன்கூட்டியே தீர்மானித்துக்கொள்கிறோம். அதன்படி நடக்க எத்தனிக்கையில், வரும் இடையூறுகளையும் மனம் எதிர்பார்த்து, அதற்கு ஏற்ப தன் பதில்களை முன்கூட்டியே தயார் செய்து வைத்துக்கொள்கிறது.

இரண்டு மணி நேரம் தொடர்ந்து படிக்கப்போகிறோம் என உறுதி எடுத்துவிட்டால், ‘அம்மா, நான் படிக்கப்போறேன். அக்காகிட்ட சொல்லிவை. அத எடுக்க வர்றேன், இதை எடுக்க வர்றேன்னு ரூம்ல அநாவசியமா தொல்லை பண்ணக் கூடாது’ என்றோ, அம்மா பத்து தடவை கூப்பிட்டபின் ‘ம்’ என்று பதில் சொல்லவோ நாம் ஆயத்தப்படுத்திக்கொள்கிறோம். எதிர்பார்த்த விளைவுகளை நாம் நோக்கியிருப்பதால், நமது தேவைகளும் அதற்குள் அடங்கிப்போகின்றன.

இடையூடல்கள் என்பவை பரிமாற்றத்தைச் சேர்ந்தவை. பரிமாற்றப் பகுப்பாய்வுகள், நாம் மூன்று நிலைகளில் இருப்பதாகச் சொல்கின்றன. பேரன்ட், அடல்ட், சைல்டு என்று அவை வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன. நாமாக அனுமானித்துக் கற்றவற்றை ‘பேரன்ட்’ என்ற நிலையாகவும், உணர்ச்சிவயமான தகவல் நிலைகள் ‘சைல்டு’ என்பதாகவும், இவை இரண்டையும் சரிதூக்கிப் பார்த்து, எந்த இடத்தில் எது தேவையோ அவ்வாறு பரிமாற்றம் செய்வது ‘அடல்ட்’ என்ற நிலையாகவும் பரிமாற்றப் பகுப்பாய்வு வரையறுக்கிறது. இதில், ஒரு நிலையில் இருந்து பேசி, வேறொரு நிலையிலிருந்து பதிலை எதிர்பார்க்கையில், சம்பந்தமே இல்லாமல் வேறொரு நிலையிலிருந்து பதில் வரும்போது, எதிர்பார்ப்பு சிதைகிறது. ஏமாற்றம், கோபம், எரிச்சல் பொங்குகிறது.

உதாரணமாக, ‘இன்னிக்கு ரஜினி படம் ரிலீஸ். ஃப்ரெண்ட்ஸோட பாத்துட்டு வரட்டுமா?’ என்று ஆசையுடன் (சைல்டு - உணர்ச்சி) கேட்கையில், ‘அடுத்த மாசம் செமஸ்டர். படிக்கற வழியப் பாரு’ என்று பதில் (பேரன்ட் -  முன்முடிவு) வருகையில், எரிச்சல் ஏற்படுகிறது. சைல்டு எதிர்பார்த்தது, ‘போயிட்டு வா’ அல்லது ‘இன்னிக்கு செம கூட்டமா இருக்குமே? இன்னொரு நாள், நாம எல்லாரும் போவமா?’ என்ற அடல்ட் நிலை பதில். வந்ததோ, பேரன்ட்டில் இருந்து. இது குறுக்கான இடையூடல். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஏமாற்றம்; எரிச்சல்.

இந்தக் குறுக்கான இடையூடலைத் தவிர்க்க வழியென்ன? நாம் எப்படிக் கேட்டாலும், எதிரே இருப்பவரின் மன நிலையல்லவா இடையூடலை வழிநடத்துகிறது? என்பது சரியான காரணம்தான். ஆனால், நமது எதிர்பார்ப்பு என்பது ஏமாற்றமாக விரியாமல், ‘சரி, இவங்க மனநிலைமை வேற’ என்ற புரிதல், வேறுவகையில் கேள்வியையோ, அல்லது உரையாடலையோ நகர்த்திவிடும். எதிர்பார்ப்பின் பதில் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும், பதிலை உள்வாங்க சில நொடிகள் எடுத்துக்கொள்வது பெரும்பலனைத் தரும்.

இதனால்தான், குழந்தைகளின் ‘அம்மா... அப்பாகிட்ட கேட்டு சொல்லேன்’ என்பது ஒரு நல்ல உத்தி. அம்மாவுக்கு, அப்பாவின் உடல்மொழியும் தெரியும். எது நல்ல நேரம் என்பதை அவள் சரியாகக் கணக்கிட்டுக் கேட்பாள். தெரிந்தோ தெரியாமலோ, உடல்மொழியின் அவசியத்தை, வீட்டில் இருப்போர் கவனித்து உள்வாங்கிவிடுகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com