நேரா யோசி

குவியத்தின் எதிரிகள்: 8 வண் நுகர்வு

சுதாகர் கஸ்தூரி

“எங்கிட்ட 200 புடவை இருக்கு. அதுல நூறு பட்டுப்புடவை.”

அந்தப் பெண்மணியை ஒரு திருமண வரவேற்பில் சந்தித்தேன். எனது அறிவியல் கதைகள் பற்றியும் பேஸ்புக் பதிவுகள் பற்றியும் மிகப் பரவலாகப் பேசிக்கொண்டிருந்தார். பள்ளி ஆசிரியையான அவர், மிகக் கடுமையான சமூகத் தடைகளைத் தாண்டி வந்திருந்தார். ஜாதிக் கொடுமைகளைத் தைரியமாக எதிர்கொண்டு, சிதைபட்டிருந்த மணவாழ்வைத் தாண்டி, ஒரே மகளைத் தன்னந்தனியராகப் படிக்க வைத்திருந்தார்.

‘‘மியூச்சுவல் ஃபண்டுல சில லட்சம் போட்டிருக்கேன். பொண்ணு பேர்ல பிபிஎஃப் கட்டிட்டு வர்றேன். ஒவ்வொரு வருஷமும் சின்னச் சின்னதா ஆர்.டி. போட்டு, மொத்தமா கொஞ்சம் தொகை வந்ததும் குந்துமணி அளவாச்சும் தங்கம் வாங்கிப் பொண்ணுக்குப் போட்டிருக்கேன். ஒரு ஃப்ளாட் புக் பண்ணியிருக்கேன். பெண்ணு வெளிநாடு போய்ப் படிக்கணுங்கறா. பைசா வேணுமே?”

இந்த அளவுக்குத் தெளிவாகத் தன் பிற்காலத் தேவைகளைக் கணிக்கத் தெரிந்து, திட்டமிட்டு செயலாக்கியிருந்த அவரது சேமிப்பில், ஒரு கரையான் புற்று தென்பட்டது. நூறு பட்டுப் புடவையா என்றேன், திகைத்து. சிரித்தார். “ஆமா, எனக்கு அது ஒரு வெறி. வீக்னெஸ்னு நினைக்காதீங்க. சின்ன வயசுல பட்டுப்பாவாடை, புடவைன்னு கட்ட முடியலேன்னு ஒரு தாபம் இருந்துகிட்டே இருக்கு. இப்ப கிழவியாயாச்சு. ஆனாலும் பட்டுப் புடவைன்னா குமரியாயிருவேன்”

சேமிப்பு வேறு, சேமித்துக் குவித்து அடைத்து வைத்தல் என்பது வேறு. வாங்கிக் குவிக்கும் அந்த நுகர்வு ஆரோக்கியமானதல்ல. தேவைக்கு அதிகமானது எது என்பதைத் தெளிவாகச் சிந்திக்கத் தவறும் கணம், பன்முகமாக நாம் சிந்தித்துத் தெளிவான மன ஆளுமையுடன் எடுக்கும் முடிவுகளை தரமிழக்கச் செய்துவிடுகிறது. இதில் பாலின வேறுபாடோ, வயது வேறுபாடுகளோ இல்லை எனச் சொல்லிவிட முடியாது. பல ஆய்வுகள், அசாதாரண நுகர்வில் பெண்களே அதிகம் ஈடுபடுகிறார்கள் எனச் சொல்கின்றன.

ஸஸ்ஸெக்ஸ் பல்கலைக் கழகத்தில் ஹெல்கா டிட்மார் என்ற ஆய்வாளர், வண் நுகர்வு பற்றித் தன் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடுகிறார் - “இரு காரணிகள் முக்கியமாகத் தெரிகின்றன. ஒன்று, ‘நாம் யார்’ என்பது பற்றிய நமது கணிப்புக்கும், ‘நாம் யாராக இருக்க விரும்புகிறோம்’ என்பதற்குமான இடைவெளி. இரண்டு, ‘நுகர்வுகள் பற்றிய நமது முன் முடிவுகள்’.

ஹெல்கா டிட்மார்

முதல் காரணி பற்றி பல கோணங்களில், பல அனுபவங்களை நாமே அலசலாம்.

‘‘நான் வேற எதையும் வாங்கமாட்டேன் சார். ஆனா, மாசம் ரெண்டாயிரம் ரூபாய்க்குப் புத்தகம் வாங்கிடுவேன்” என்பவரிடம், ‘அதில் எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறீர்கள்?’ என்று கேட்கக் கூடாது. நட்பு முறிந்துவிடும் சாத்தியம் இருக்கிறது. ‘‘சின்ன வயசுல, எங்கூடப் படிச்சவங்க, எதாவது ஆங்கிலப் புத்தகம் பத்திப் பேசுவாங்க. நான் முழிச்சிகிட்டிருப்பேன். சரி, நாமளும் படிச்சுக் காட்டுவோம்னு அன்னிக்கு நினைச்சதுதான்” என்று எதாவது காரணம் என்றாவது வெளிவரும். ஆக, வாழ்வில் என்றோ இருந்த ஒரு குறைபாட்டை இன்று நிவர்த்தி செய்யும்விதமாக மனம் ஆழ்கிறது.

ஏனெனில், நினைவுக்கும், நிகழ்வுக்கும் உணர்ச்சியில் வித்தியாசம் காண்பது எளிதல்ல. பல ஆண்டு முன்பு நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் தீவிரம் இன்றும் மனத்தில் இருப்பதற்கு, அது குறித்த நினைவுகளை உணர்வுகள், இன்றைய நிலையுடம் பொருத்திவைக்கிறது. சுய இரக்கம் என்ற உணர்வு, “அன்னிக்கு நான் எளியவனா இருந்ததால்தானே அப்படி இளக்காரமா பேசினாங்க” என்ற நினைவு, மீண்டும் மீண்டும் நான் பலமின்றி இருக்கிறேன் என்பதையே உறுதிப்படுத்தும். “நான் அன்று பலமின்றி இருந்தேன்” என்ற தெளிவான சிந்தனையாக, உணர்வு, காலம், இடம் கடந்து சிந்தனையைத் தாக்குவதில்லை. முன்பு நடந்ததை நினைத்து அழுபவர்கள், அந்நிகழ்வு என்றோ நடந்தது என்பதை அழும்போது நினைப்பதில்லை.

உணர்வுகள், நிகழ்காலத்தைத் தவறாகவே நினைக்க வைக்கின்றன. இது இறந்தகாலத்தைக் குறித்த தாக்கமாகவும், அதனை எதிர்காலத்தில் சரிசெய்ய, இன்று வாங்கவும் தூண்டுகின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் ஆங்கிலம் தெரியாது அவமானப்பட்ட ஒருவர், இன்றும் மூன்றாவது முறையாக ஆக்ஸ்ஃபோர்டு அகராதி வாங்குவதன் அடிப்படைக் காரணம், இன்று அவரது மனத்தில் தோன்றும் தற்காப்பின்மை. உணர்வு, அது என்றோ நடந்தது என்பதை அந்நேரத்தில் அறிவுறுத்துவதில்லை.

இதன் நீட்சியாக, ‘‘நான்தான் அன்னிக்கு படிக்காமப் போயிட்டேன். நீயாச்சும் படி” என்று, மகளுக்கும் மகனுக்கும் வாங்கிக் குவிப்பதை சொல்லிச் சமாளிப்பார்கள். இது ஓரளவுக்குச் சரியாகவே நமக்குப் படலாம். ஆனால், அதீதமாக ஒரு உணர்வு வெறியில் செயல்படுபவர்களைச் சற்றே கவனிக்கவேண்டி இருக்கிறது.

இரண்டாவது காரணி பற்றிப் பேசும் முன், வண் நுகர்வு பற்றி சில வார்த்தைகள். ஓனியோ மேனியா – வண் நுகர்வு (Compulsive buying disorder) என்பது யாருக்கோ வருகிற மனநோய் அல்ல. நம்மில் பலருக்கும் பல பொழுதுகளில் வந்துபோகிற, கரை தாண்டுகின்ற உணர்ச்சி வெள்ளமே அது. ‘‘ஆபீஸ்ல எல்லாரும் 10,000 ரூபாய்க்கு புடவை எடுத்தாங்க. அதான் சரி, நாமளும் ஒண்ணு எடுப்பமேன்னு எடுத்தேன்” என்பது சமூக அழுத்தத்துக்குப் பலியாகும் தருணம். இதனை நன்கு அறிந்தவர்கள் விற்பனை விற்பன்னர்கள். “உங்க பக்கத்து வீட்டுல இருக்கு, எதிர் வீட்டுல இருக்கு, அப்ப உங்க வீட்டுல இருக்க வேண்டாமா?” என்று டிவியில் வரும் விளம்பரம், சமூக அழுத்தத்தை முன்னிறுத்துகிறது.

‘‘மனசு சரியில்லாதப்போ, அப்படியே மால் வரை போயிட்டு வருவேன். என்னமாச்சும் வாங்குவேன். நுகர்தல் மருத்துவம் என்பது ரொம்பவே பயனுள்ளது” என்பவர்கள், நம் அனுதாபத்துக்கு உரியவர்கள். மனது சரியில்லை என்பது, என்னில் ஏதோ சரியில்லை என்பதான பாதுகாப்பற்ற உணர்வின் வழித்தோன்றல். வாங்குதல் என்பது, நீ தனியனாக, பொருளாதார ரீதியாக, உன்னை நிறைவு செய்யக்கூடிய வலுவில் இருக்கிறாய்” என்பதை மனது தனக்குத்தானே சொல்லிக்கொள்ளும் மாய உணர்வு. இந்த நுகர்தலில் கிடைக்கும் நிறைவு, அடுத்த நாளே காணாமல் போகும். அதில் ஒரு குற்ற உணர்வு தோன்றுவதைத் தடுக்க, ‘‘நான் சரியாத்தான் செய்கிறேன்’’ என்பதாக உலகுக்குக் காட்ட, மீண்டும் செயற்கையாக நுகர்வில் ஈடுபடுவோர் உண்டு. அல்லது, அதனைத் தவிர்க்க அதிகமாக உண்பது, மனச்சோர்வில் ஆழ்வது என்பதாக உழல்பவர்களும் உண்டு.

இதற்கும், நேராக யோசிப்பதற்கும் என்ன தொடர்பு?

ஒரு பொருளையோ, சேவையையோ எடுத்துக்கொள்ளும் முன், அதன் அவசியம் பற்றிய சிந்தனை தேவை. “இது இப்போது எனக்குத் தேவைதானா?” என்ற கேள்வி, எப்போதும் ‘‘இல்லை” என்ற பதிலை மட்டுமே தரத் தேவையில்லை. காரணங்கள், தேவைகள் நிஜமாக இருக்குமானால், நுகர்வில் தவறில்லை. சில நேரங்களில், உணர்வின் உந்துதலுக்கு ஆட்பட்டு நுகர்வதும் தவறல்ல. எல்லாவற்றையும் தேவையின் அடிப்படையில் மட்டுமே ஆராய்ந்துவிட முடியாது. அது, வாழ்வைச் சுவையற்றதாகச் செய்துவிடும். ராத்திரி 10 மணிக்கு குடும்பத்துடன் சென்று ஐஸ்க்ரீம் சுவைத்து வரும் தம்பதிகள் ஊதாரிகள் அல்லர். வாழ்வின் சிறு சிறு ஆசைகளை, மகிழ்வுகளைப் பங்கிட்டு வாழத் தெரிந்தவர்கள். சம்பளம் வந்த அன்று டாக்ஸியில் சென்று பிளாக்கில் டிக்கட் வாங்கி சினிமா பார்த்துவிட்டு, மாத நடுவில் வட்டிக்குக் கடன் வாங்கி அரிசி வாங்கியவர்களை நாம் அறிந்திருக்கிறோம். இதுபோன்று சிலவற்றை நாமும் சில சந்தர்ப்பங்களில் செய்துவிடும் சாத்தியம் இருப்பதால், ஒரு நிமிடம் அது குறித்து, அதன் தேவை குறித்துச் சிந்திப்பது அவசியமாகிறது.

சிந்தனை, இருபுறமும் சாயாமல், அளவுடன் இருப்பதற்கு, நுகர்வதைச் சற்றே தள்ளிப்போட்டு, வேறு தருணத்தில், வேறு இடத்தில் அத்தேவையைக் குறித்து சிந்தித்து அதன் முடிவை நடைமுறைப்படுத்த - நேராக யோசிக்க வேண்டும்.

(தொடர்ந்து யோசிப்போம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT