குவியத்தின் எதிரிகள் - 24. சினிமா நட்சத்திரங்களின் தீபாவளிப் பேட்டிகள்

நாம் எவரை நாயக/நாயகியாக எடுக்கிறோம் என்பது, சூழ்நிலைக்கும், அச்சூழலில் அவர்களது ஒரு பண்பு எடுப்பாகத் தெரிந்ததற்குமான தொடர்பு சார்ந்தது.

‘‘தீபாவளி, பொங்கல்னு வந்துடக் கூடாது. டிவில ஒரே சினிமாக்காரங்க பேட்டிதான் இருக்கும். ‘தமில்ல நல்லா நனிக்கு பேச்சு வர்து’ன்னு குழர்ற வடநாட்டு நட்சத்திரம்தான் பொங்கல் வாழ்த்து சொல்லுவா’’ என்றார் ஒரு நண்பர். கடலூர் - சென்னை நெடுஞ்சாலையில், உணவு விடுதி ஒன்றில் காரை நிறுத்திவிட்டு, ஆர்டர் கொடுத்த உணவுவரும்வரை பேசிக்கொண்டிருந்தோம்.

‘‘ஏன், அவங்க சொன்னா என்ன? சினிமாக்காரங்கன்னா மட்டும் ஏன் சார் உங்களுக்கு வெறுப்பு?’’ என்றார் மற்றொருவர். ‘‘இதை புகழடைந்தவர் மேலான காழ்ப்புணர்ச்சின்னு சொல்லுவாங்க. ஒருவிதப் பொறாமை, வெறுப்பு ஆத்திரத்தின் வெளிப்பாடு’’.

‘‘அந்தப் பொண்ணு மேல எனக்கென்ன பொறாமை இருக்கப்போவுது?’’ என்றார் முதலில் பேசியவர். ‘‘நிதானமா யோசிச்சுப் பாருங்க. என்ன விழாவா இருந்தாலும், சினிமாவில் புகழ் பெற்றவர் அல்லது சின்னத்திரை நட்சத்திரம். அவங்க வீட்டுல மட்டும்தான் தீபாவளியோ ரம்ஜானோ நடக்குதா? ஏன், வாழ்க்கையில போராடி வெற்றிபெற்று வந்த ஒரு விளையாட்டு வீர்ர்/வீராங்கனை அல்லது மாற்றுத்திறனாளி, ஒரு தொழிலதிபர்.. இவங்க எல்லாம் மக்களுக்கு முன்னுதாரணம் இல்லையா?’’

ஒரு துறையில் வெற்றிபெற்றவரைப் பல துறைகளிலும், அவரது சொந்த வாழ்விலும் வெற்றிபெற்றவராக நேரான நீட்டலுடன் பார்ப்பது, கடவுளர்களின் தலைக்குப் பின்னே காணப்படும் ஒளிவட்டம் போன்ற மாயை விளைவு. (Halo effect). இது நமது அனுமானப் பிழைகளில் ஒன்று. ஒரு துறை வெற்றி - புகழ், அவரை மேலே தூக்கி வைக்கிறது. பத்தாம் கிளாஸ்கூடப் படிக்காத, அரசியல்வாதியையோ / நடிகரையோ ஒரு பல்கலைக் கழகம் வரவேற்று படிப்பு பற்றிப் பேசச் சொல்வது ஜால்ரா அடிப்பது என்பது மட்டுமல்ல; இந்த ஒளிவட்ட விளைவின் தாக்கம்தான். இதில் சில விதிவிலக்குகள் உண்டு எனினும், வெட்டவெளிச்சமாகத் தெரியும் ஒவ்வாமைகள் பல.

திரையில் நல்ல தலைவனாக நடிப்பவர், நிஜவாழ்வில் அப்படி இருக்க சாத்தியமில்லை என்பது அனைவருக்கும் தெரிந்தே இருக்கிறது. இருந்தும், அப்படிப்பட்ட ஒருவர் அறிக்கை விடுகிறார் என்றால், ஏன் மக்கள் உணர்ச்சிக் கொந்தளிக்கிறார்கள்? இதில் படித்தவர்கள் கவனமாகத் தங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் இருக்க, குழும சிந்தனையால் தூண்டப்பட்ட பலர் வெளிப்படையாகத் தங்கள் உணர்வை சமூக ஊடகங்களில் காட்டுவதைக் காண்கிறோம். இது ஹேலோ விளைவின் தாக்கத்தின் தீவிரத்தைக் காட்டுகிறது.

இதன் அடிப்படை, ‘‘ஒவ்வொரு விளைவுக்கும், ஒரு முகம் தேவைப்படுகிறது’’ என்கிறார்கள் ஆய்வாளர்கள். இன்றிலிருந்து நூறு வருடத்துக்கு முன்பே, எட்வர்ட் லீ தார்ன்டைக் (Edward Lee Thorndike) என்பவர், ஒரு பண்பில் கிடைக்கும் புகழின் தாக்கம், பிற பண்புகளில் ஏற்றப்படும் என்று, ஒளிவட்ட விளைவைக் காட்டினார். அழகான முகம் கொண்ட ஒருவர் சொன்னால், எந்த சோப்பையும் நாம் வாங்கிவிடுவோம் என்பதன் அடிப்படை அது. அவருக்கு அந்தச் சோப்பு பற்றி எதுவும் தெரிந்திருக்கத் தேவையே இல்லை.

எட்வர்ட் லீ தார்ன்டைக்

இந்த ஹேலோ விளைவு, எதிர்மறையாகவும் தாக்கத்தைத் தொடுக்கிறது. ஒரு பிரபலம் (அவர் அடிக்கடி விளம்பரத்தில் வருவதால் வந்த புகழ்), இதனை கண்கூடாகக் கண்டிருக்கிறேன். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் பிரபலமடைந்துகொண்டிருந்த, விலை மலிவான ஒரு சலவை சோப்பினைப் பயன்படுத்துவதால் கைகளில் தோல் உரிகிறது என்றும், புண்ணாகிறது என்றும் விளம்பரத்தில் காட்டுவார். இதனைப் பலரும் நம்பினார்கள். ‘இவ்வளவு மலிவான விலையில் ஒருத்தன் கொடுக்கிறான்னா, அதுல என்னமோ பிரச்னை இருக்கு’ என்பது மக்களின் மனத்தில் இருந்த ஒரு சந்தேகத்தை, அவரது முகம், கை விளம்பரத்தில் காட்டியது. இதனால் அந்த சலவை சோப்பினை நடுத்தர, உயர்மட்ட மக்கள் பயன்படுத்துவது குறைந்தது.

பரோடாவில் ஒரு மருந்து ஆய்வுச்சாலையின் தலைவரிடம் இதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார் - ‘‘அந்தக் குற்றச்சாட்டு உண்மையல்ல. நீங்கள் குறீப்பிடும் சோப்புக்கரைசலை, ஆய்வகப் படிகள் கொண்டு பரிசோதித்தேன். முயலின் கண்ணில் இந்தக் கரைசலை விட்டுப் பார்த்து அதன் எதிர்விளைவைக் கவனித்தேன். ஒன்றும் பாதகமாக நடக்கவில்லை. இது மனிதர்களின் கைகளுக்குப் பாதகமானதல்ல’’.

எத்தனை பேருக்கு இந்த ஆய்வினைப் பற்றித் தெரியும்? அப்படியே தெரிந்தாலும், ஓரிருவர் ‘‘ஆமா, எனக்குக் கை எரிஞ்சது’’ என்றால், அதனை நம்பிவிடுவோம். இதில் இரு அனுமானப் பிழைகள். ஒன்று பிரபலத்தின் விளைவு; மற்றது, சமூக ஒத்திசைவுப் பிழை.

சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க வாழ்வு பற்றி அறிய முயலும் ஒரு அல்ப ஆர்வமும், தனது அனுமான நீட்சியை உறுதிப்படுத்துவதற்கு அல்லது அதனை மறுதலிப்பதனைப் பதிவு செய்வதற்கே என்கிறார்கள் ஆய்வாளர்கள். தனது அபிமான நட்சத்திரத்தின் பன்முக வாழ்வு ஜொலிப்பதைக் கண்டு ஆனந்தப்படுபவர்கள் ஒரு ரகம் என்றால், அதன் தோல்விகளை மறைமுகமாக ஆனந்திப்பவர்கள் பிரபலங்களின் மீதான பொறாமையின் பிறழ்வைக் கொண்ட ரகம். எனவே, இரு வகையினருக்கும் பிரபலங்கள் குறித்த செய்திகள் தேவைப்படுகிறது. தொலைக்காட்சிச் சேனல்கள் இதனை நன்கறிந்தவை. எனவேதான், வடஇந்திய நடிகை ‘அனைவருக்கும் பொங்கேல் நல்வால்த்துக்கல்’ என்பதை ஆர்வத்துடன் கேட்க ஒரு கூட்டம் பொங்கலன்று டிவி முன் அமர்ந்திருக்கிறது.

இதனை எதிர்த்துக் கேட்பவர்களை, பிரபலங்கள் மீதான பொறாமைப் பிறழ்வு கொண்டவர்கள் என முத்திரை குத்திவிடுகிறோம். நண்பர் கேட்ட கேள்வி நியாயமானது. பிரபலம் தேவை என்றால், சினிமா தவிர்த்துப் பல துறைகளிலும் பிரபலமானவர்களைத் தொலைக்காட்சி சேனல்கள் காட்ட மறுக்கக் காரணம், சேனல்கள் விரும்புமளவு பெரிய அளவிலான மக்களை அந்நிகழ்ச்சிகள் சென்று சேராது, TRP rating சரியாக அமையாது என்ற அவர்களது தயக்கம்.

இதைப்பற்றி ஏன் பேசுகிறோம்? பிரபலம் என்றால் நம் மனத்துக்கு, நம் வகுப்பில் நன்கு படிக்கும் ஒரு பையனோ, பெண்ணாகவோ இருக்கலாம். அழகான முகம் கொண்ட, நன்கு பேசத் தெரிந்த ஒருவராக இருக்கலாம். அவரை முன்னுதாரணமாக வைத்து மனம் ஒளிவட்டத்தை அவர் தலையின் பின் சுழல விட்டுவிடுகிறது. இதன் விளைவு, ‘‘எனக்கு கணக்கு சரியா வராது. ஆனா, ரோஷிணி கம்ப்யூட்டர் எடுத்திருக்கா, ஸோ.. நானும்..’’ என்பதான தவறான முடிவுகள்.

நாம் எவரை நாயக/நாயகியாக எடுக்கிறோம் என்பது, சூழ்நிலைக்கும், அச்சூழலில் அவர்களது ஒரு பண்பு எடுப்பாகத் தெரிந்ததற்குமான தொடர்பு சார்ந்தது. தொடர்ந்து, அதுபோன்ற சூழலில் அப்பண்பு சிறந்து விளங்கினால், நாம் அதனைப் பிற சூழலுக்கும், பிற பண்புகளுக்கும் நீட்டிவிடும் சாத்தியம் இருப்பதால், ஒரு சூழலில் தீர்மானமான முடிவு எடுக்கும் முன்பு அதில் யார் யார் நமது மனத்தில் வந்து போகிறார்கள் என்பதைக் குறித்து நேராக யோசிப்பது நலம்.

(யோசிப்போம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com