நூற்றுக்கு நூறு

17. அறிவியல் என்பது ஆச்சரியமே!

சந்திரமௌலீஸ்வரன்

கணக்குப் பாடத்தைவிட அறிவியல் பாடம் கஷ்டம் என சொல்லும் பிள்ளைகளை நாம் அதிகம் பார்க்கிறோம். அறிவியல் பாடத்தில் நிறைய படிக்கவேண்டி இருக்கிறது, நிறைய ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டி இருக்கிறது, வரிசையாக எழுத வேண்டும் என எத்தனை சவால்கள்.. இப்படித்தான் மாணவர்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். அந்த நினைப்பு தவறில்லை. ஆனால், அதனால் அந்தப் பாடத்தைக் குறித்து பயம் கொள்ள வேண்டாம் என்பதுதான் நிஜம்.

அதெப்படி, அறிவியல் பாடத்தை பயமில்லாமல் பார்க்கமுடியும் எனக் கேட்பவர்களுக்கு, பதிலொன்று உண்டு. அறிவியல் பாடம் என்பது பாடம் மட்டுமில்லை. நாம் நம் தினசரி நடவடிக்கைகளில் உணரும் விஷயமும்கூட!

தினசரி உணரும் விஷயம் எப்படி பயமாக இருக்கமுடியும். அதைப் பாடமாகப் படிப்பது ஆச்சரியம்தானே!

அறிவியல் பாடத்தைப் பொறுத்தவரை, மாணவர்களின் பயம் என்பது பாடத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்காதது; புரிந்துகொண்ட பாடத்தை அதற்குரிய சொற்களஞ்சியங்களோடு எழுதிப் பழக்கப்படுத்திக்கொள்ளாதது எனும் இரண்டு பெரிய காரணங்களால் மட்டுமே!

அறிவியல் பாடத்தில் ஒவ்வொரு அம்சமும் மற்றொரு அம்சத்துடன் தொடர்புகொண்டிருக்கும். ஆகவே, ஒரு கோட்பாட்டினை விளக்கமாக எழுதுவது அவசியம் என்பதால், பாட புத்தகத்தில் தொடக்கத்தில் மிக விவரமாக எழுதப்பட்டிருக்கும். இதனை வாசிக்கும் மாணவனுக்கு தனது பாடம் அதிக அளவில் இருப்பதாக அயற்சி தோன்றுகிறது. இதனை ஆசிரியர்கள் அவசியம் புரிந்துகொள்ள வேண்டும்.

பாடத்தில் இருக்கும் ஒவ்வொரு கோட்பாட்டினையும் சுருக்கமாகவும், அதே சமயம் அன்றாடப் பழக்கத்தில் இருக்கும் சொற்களோடு, விளக்கிச் சொல்லி போதிக்க வேண்டும். தொடக்க நிலையில் இதே யுத்தியைக் கடைப்பிடித்து, எளிய தினசரி நடைமுறை மொழியைக்கொண்டே மாணவர்களை அறிவியல் கோட்பாடுகளை விளக்கிச் சொல்ல அனுமதித்து ஊக்குவிக்க வேண்டும். இந்த முறையால் மாணவர்களுக்கு அறிவியல் மீது இருக்கும் அச்சம் அகலும். அறிவியல் ஆச்சரியமூட்டக்கூடியதுதான் என்பதும் புரியும்.

இதன் தொடர்ச்சியாக, அந்தக் கோட்பாடுகளை விளக்கும்போது கையாள வேண்டிய அருஞ்சொற்களை (technical terms) மாணவர்களுக்குப் படிப்படியாக அறிமுகம் செய்து, அவற்றை அவர்களது சொந்த மொழியில் விளக்கவும், சில சமயம் எழுதவும் அனுமதிக்க வேண்டும்.

அறிவியல் என்பது தன்னாலும் புரிந்துகொள்ள இயலும் என்பதை மாணவர் எப்போது உளவியல்பூர்வமாக உணர்கிறாரோ, அவருக்கு அப்போதே பாடத்தின் மீது ஆர்வம் பலமாகவே உருவாகும் என்பது கண்கூடு!

அறிவியல் என்பது பாடமில்லை. தினசரி நாம் சந்திக்கும் நிகழ்வுகளில் அறிவியல் கலந்திருக்கிறது என்பது இயல்பாக மாணவர்களுக்கு புரியவைக்கப்பட வேண்டும்.

இதை வாசிக்கும் எல்லோருக்கும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்கும். சைக்கிள் ஓட்டும்போது, பெடலை மிதித்து நாம் கொடுக்கும் விசையால் இயங்கும் பின் சக்கரம், அதனுடன் சைக்கிளின் ஏனைய பாகங்கள் மூலம் இணைக்கப்பட்டு அதன் காரணமாக இயங்கும் முன் சக்கரம், இவை இரண்டின் இயக்கங்கள், அசைவுகள் இவற்றை கீழே விழாமல் செலுத்தும் நமது லாகவம் என்பது சைக்கிள் ஓட்டும்போது எளிதாகவும் சுலபமாகவும் செய்யும் செயல்போலத் தெரியலாம். ஆனால், அதன் பின்புலத்திலே இருக்கும் Physics, centre of mass போன்றவை, சைக்கிள் ஓட்டும்போது போதிக்கப்படுவதில்லை!

அறிவியல் பாடத்தை அதற்கான மொழியுடன் படிப்பதுதான், மாணவர்களை அதன் மீது பயம் கொள்ள வைக்கிறது. இன்றளவில் இருக்கும் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு, விடியோக்கள் மூலம் அறிவியல் கோட்பாடுகளை செயல்முறை விளக்கங்களாக செய்து காண்பித்து புரியவைக்க இயலும். பாடத்தின் கோட்பாடுகள் தனக்கான மொழியில் புரிந்துகொள்ளப்பட்டால், அதனை பாடத்தின் தன்மைக்கு ஏற்ப அருஞ்சொற்பொருள் கொண்டு விளக்கும் மொழியைக் கொண்டு எழுதிப் புரிந்துகொள்வது இயல்பாகக் கைவரப்பெறும்.

அறிவியல் பாடத்தை ஆங்கில வழிக் கல்வியில் கற்றுக்கொள்ளும் மாணவர்களில் பலருக்கு, அறிவியலை விளக்கும் ஆங்கிலமே அச்சத்தை வரவழைக்கிறது.

அறிவியலை ஆங்கிலத்தில்தான் கற்றுக்கொள்ள வேண்டும் எனும் கட்டாயத்தை முதலில் தவிர்க்க வேண்டும். அறிவியல் என்பது ஆச்சரியமூட்டும் பாடம். அதனை நன்கு ரசித்துப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படிப் புரிந்துகொள்ளும் தன்மை வந்துவிட்டால், அதனை ஆங்கிலத்தில் விளக்கவும், தேர்வுகளில் ஆங்கிலத்தில் பதில் அளிக்கவும் இருக்கும் பயம் தானாகவே விலகிவிடும்.

அறிவியல் பாடம் என்பதன் அடிப்படை மிகவும் வலுவானதாக இருக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர்கள் பாடத்தைக் கற்பிக்கும் முறையிலும், தேர்வின் முறையிலும் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும்.

அறிவியல் பாடம் என்பது மனப்பாடம் செய்து, விவரங்களை மட்டும் எழுதி மதிப்பெண் வாங்கும் பாடமில்லை என்பதை ஆசிரியர்கள் முதலில் உறுதியாக நம்ப வேண்டும். இந்த நம்பிக்கையை நடைமுறைப்படுத்துவதும் அவர்கள் ஈடுபடுவது முக்கியம்.

மதிப்பெண் பெறுவது மிக முக்கியம் என்றாலும், மாணவர்கள் பாடத்தைப் புரிந்துகொண்டுதான் தேர்வு எழுதுகிறார்கள் என்பதை உறுதி செய்துகொள்வது ஆசிரியர்களின் முதற் கடமையாகும்.

1. பாடத்தில் இருக்கும் வாக்கியங்களைக் கொண்டே விடை சொல்வது; விடை எழுதுவது என்பதைக் கட்டாயமாக்காமல், அறிவியல் பாடங்களில் பாடங்களைப் புரிந்துகொண்டிருப்பது முக்கியம். அதனை மாணவர்கள் தங்கள் மொழியில் விளக்குவதை வகுப்பில் ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்

2. வகுப்பறையில், கரும்பலகையில் எழுதியதை மாணவர்கள் பார்த்து எழுதி அதைப் பின்னர் மனப்பாடம் செய்வது எனும் வழியை மாற்ற, வகுப்பறையில் மாணவர்கள் அறிவியல் பாடத்தைப் புரிந்துகொண்டதை உறுதி செய்துகொள்ள அவர்களது சிந்திக்கும் திறனை வளர்க்கும் செயல்முறை சார்ந்த கேள்விகளைக் கேட்டு, பதிலை ஊக்குவித்துப் பெறும் முறையைக் கையாள வேண்டும்.

3. மதிப்பெண் பெறுவது மிக முக்கியம் என்றாலும், மாணவர்கள் பாடத்தைப் புரிந்துகொண்டுதான் தேர்வு எழுதுகின்றனர் என்பதை உறுதி செய்துகொள்வது ஆசிரியர்களின் முதற் கடமையுமாகும்.

4. ஆங்கிலத்தைக் கற்பதில் இருக்கும் சவால்களின் காரணமாக மாணவர்களுக்கு அறிவியல் பாடத்திலும் சவால்கள் உருவாகின்றன என்பதை ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். மாணவர்கள் கோட்பாடுகளைப் புரிந்துகொண்டுவிட்டார்கள் என்பதைக்கொண்டே அவர்களுக்கு மதிப்பெண் வழங்க ஆசிரியர்கள் அவசியம் முன்வர வேண்டும். தொடக்க நிலையில், பாடங்களில் இருக்கும் அதே வாக்கியங்களைக்கொண்டே பதிலளிக்க வேண்டும் எனும் நிர்பந்தத்திலிருந்து விலக்கு அளித்து, படிப்படியாக அறிவியல் கோட்பாடுகளின் மீது ஆர்வம் உண்டாக்கி பின்னர் அறிவியல் கோட்பாடுகளை அதற்கான மொழியில் எழுதும் பழக்கத்தையும் அறிமுகம் செய்துவைக்க வேண்டும்.

5. அறிவியல் என்பது தொடர்ந்து கற்க வேண்டிய முக்கியமானதொரு அம்சம் என்பதை மாணவர்களுக்குப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் புரியவைக்க வேண்டும். மதிப்பெண் பெறுவதை மட்டும் மனதில் கொண்டு, மாணவர்களை பாடங்களை மனப்பாடம் செய்ய வேண்டும் என்று நிர்பந்திக்கக் கூடாது.

அறிவியல் பாடம் என்பது ஆச்சரியமும் விருப்பமும் கொண்டு பயிற்றுவிக்கப்பட வேண்டும். நிர்பந்தமும், கட்டாயமும் கொண்டு படிக்கப்படக் கூடாது என்பதுதான் இந்தப் பாடத்தில் நூற்றுக்கு நூறு வாங்க முதல்படி.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களை நம்பித்தான் தோ்தலில் நிற்கிறோம் -சீமான்

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலி

காரைக்கால் அம்மையாருக்கு குருபூஜை

கண்ணன் அலங்காரத்தில் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT