1. தேடுவது பொருள்; பாடுவது குறள்

மனிதனை தெய்வ நிலைக்கு உயர்த்தும் இந்த அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றில் மையமாக இருக்கும் பொருள், மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம் என்று வாழ்வது வாழ்க்கையல்ல. அதற்கு ஓர் அர்த்தம், பொருள் இருக்கிறது. வாழ்க்கை ஓர் அனுபவமாக இருக்கலாம்; ஆனால், அதனை அனுபவிக்க சில அடிப்படை லட்சியங்கள் உள்ளன. பாரத மெய்ஞான மரபின்படி, வாழ்வின் புருஷார்த்தங்கள், அதாவது அடிப்படை நோக்கங்கள் - தர்மம் (அறம்), அர்த்தம் (பொருள்), காமம் (இன்பம்) மற்றும் மோட்சம் (வீடு).

இதில் முதல் மூன்றான அறம், பொருள், இன்பம் இது மூன்றும் முறையாக இருந்தால்தான், இறுதி இலக்காகிய வீடு (விடுதலை) கிடைக்கும். முக்தி என்பது, இறப்புக்குப் பின் அடைவது மட்டுமல்ல; இருக்கும்போதும் அனுபவிக்கக்கூடியதுதான். அறத்தைப் பின்பற்றி, அறத்தோடு பொருள் ஈட்டி, வாழ்க்கையின் இன்பங்களை அறத்தோடு அனுபவிக்கும்போது, தீமை, வறுமை, ஆசை முதலிய தளைகளில் இருந்து தானாகவே விடுதலை கிடைத்துவிடுகிறது.

அதனால்தான், தமிழகத்தின் தெய்வப்புலவர் திருவள்ளுவர், அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் மொழியும் முப்பாலாகிய திருக்குறளைப் படைத்தார். இந்த முப்பாலிலேயே அப்பாலும் (வீடுபேறும்) அடங்கிவிடுகிறது. இதைத்தான் திருவள்ளுவர்,

“வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்” (குறள் 50)

என்று ஒரே குறளில் எடுத்துரைத்துள்ளார்.

இந்த உலகத்திலேயே வாழும் முறைப்படி வாழ்ந்துவிட்டால், வானில் உறைகின்ற தெய்வத்துக்கு இணையான நிலையைப் பெற்றுவிடலாம் என்கிறது திருக்குறள்.

மனிதனை தெய்வ நிலைக்கு உயர்த்தும் இந்த அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றில் மையமாக இருக்கும் பொருள், மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இறைவனையே ஈஸ்வரன் என்றுதான் அழைக்கிறோம். இதன் பொருள், அனைத்து ஐஸ்வர்யங்களையும், அதாவது பொருள் வளங்களையும் உடையவன் என்பதே. ஆக, வாழ்க்கைக்கு பொருள் அவசியமாகிறது. அதனைப் பொருட்படுத்தாமல் இருக்கமுடியாது.

பர உலக வாழ்வுக்கு, அதாவது இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாறுவதற்கு, மோட்சப் பெருவாழ்வு வாழ்வதற்கு, அறப்பண்புகளாகிய அருள் எவ்வாறு அவசியமோ, அதேபோல, இந்த மண்ணுலகில் இக வாழ்வை நன்கு வாழ்வதற்கு பொருள், அதாவது செல்வம் அவசியமாகிறது என்கிறார் திருவள்ளுவர். பொருளின் இந்தப் பெருமையை, அறத்துப்பாலில் துறவறவியலுக்குக்குக் கீழே அருளுடைமை என்ற அதிகாரத்தில் அவர் கூறியிருப்பது கூடுதல் சிறப்புடையது. அந்தக் குறள் -

“அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.” (குறள் 247)

ஆகையால், பொருள் செல்வத்தைத் தேடுவதை வாழ்வின் லட்சியங்களில் ஒன்றாகக் கருதி, கடைப்பிடிக்க வேண்டும். பொருள்சார் விழிப்புணர்வு (financial awareness) அவசியம் என்பதை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது பாரதம் முழங்கியிருக்கிறது. உலகின் முதல் பொருள் நூல் என்று வர்ணிக்கப்படும் அர்த்த சாஸ்திரம், நம்நாட்டு அறிஞர் சாணக்கியரால்தான் படைக்கப்பட்டது.

ஆயினும், ஒருகாலத்தில் பொருளாதார வல்லரசாகத் திகழ்ந்த இந்தியா, இன்று செல்வவளம் மிகுந்த நாடாக இல்லை. இதனை ஏழைநாடு என்று சொல்வதைவிட ஏழைகள் மிகுந்த நாடு என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஏழைமை நிலையில் இருந்து விடுபட, ஒவ்வொருவரும் தமது பொருள்வளத்தைப் பெருக்கிக்கொள்வது அவசியம். இதனை, அர்த்த சாஸ்திரத்துக்கு இணையான பழந்தமிழ் இலக்கியமான திருக்குறள் இவ்விதம் எடுத்துரைக்கிறது.

“பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை
பொருள்.” (குறள் 751)

அதாவது, ஒரு பொருளாக மதிக்கத்தகாதவரையும், பொருள்படுத்தக்கூடியவராக, மதிக்கப்படக்கூடியவராக மாற்றக்கூடிய சிறப்பு, பொருளைத் (செல்வத்தை) தவிர வேறு எந்தப் பொருளுக்கும் இல்லை. எவ்வளவு அழகான குறள்.

இன்னொரு குறளில், பொருள் சேர்க்க வேண்டியதன் அவசியத்தை,

“இல்லாரை எல்லோரும் எள்ளுவர், செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.” (குறள் 752)

என்று சற்று அதிரடியாகவே கூறுகிறார் திருவள்ளுவர். இதன் பொருள், ஏழைகள் அவமதிப்புக்கு உரியவர்கள் என்பது அல்ல. செல்வம் இருப்போரை வாழ்த்திப் போற்றுவதும், இல்லாதவரை எள்ளி நகையாடுவதும் உலக மக்களின் இயல்பு. ஆகையால் அதனைச் சுட்டிக்காட்டி, அனைத்து மக்களையுமே செல்வத்தைச் சேர்க்க வேண்டும் என்று தூண்டுகிறார் தெய்வப்புலவர்.

பொருளியல் நோக்கில், உலகில் உள்ள மனிதர்களை சில பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1. பொருளைப் பொருள்படுத்தாதோர், 2. பொருள் திரட்டும் திறனற்றோர், 3. பொருள் ஈட்டுவதில் தயக்கமுள்ளோர், 4. பொருளைப் பொறுப்புடன் சேர்ப்பவர், 5. பொருளை எவ்வழியிலும் குவிப்பவர், 6. பொருளைச் சேர்த்தும் முறையாகப் பயன்படுத்தாதவர், 7. பொருளின் மதிப்பறியாமல் செலவழிப்பவர், 8. பொருளைச் சேர்ப்பதிலும், செலவழிப்பதிலும் திட்டமிட்டுச் செயல்படுபவர், 9. பொருளை மேலும் பல ஆக்கங்களுக்குப் பயன்படுத்துவோர் என வகைப்படுத்தலாம்.

பொருளைப் பொருள்படுத்தாத துறவிகளுக்குக்கூட பொருள் ஒருவகையில் தேவையாக இருக்கிறது. ஆகையால், அதனை முழுமையாக யாரும் ஒதுக்கிவிட முடியாது. ஆனால், பலருக்குப் பொருளை எவ்வாறு ஈட்டுவது என்ற பொருள் சார்ந்த அறிவு, திறமை இருப்பதில்லை. அவ்வாறு திறமை இருந்தாலும்கூட சிலருக்கு, பொருள் சேர்ப்பது என்பது ஏதோ பாவச் செயல் என்பதுபோன்ற வீண் அச்சத்தாலோ அல்லது மிகவும் கடினமான செயல் என்பதுபோன்ற தேவையற்ற மலைப்பு அல்லது சோம்பலாலோ தயக்கம் ஏற்படுகிறது.

இந்த அச்சம், மலைப்பு, சோம்பலைக் களைந்து பொறுப்புடன் பொருளைச் சேர்ப்பவர்கள் ஓரளவிலேயே இருக்கின்றனர். எனினும், பொருளைச் சேர்ப்பவர்களில் கணிசமானோர் தீய வழிகள் உட்பட எந்த வழியிலும் அதைச் சேர்க்கலாம் என்ற எண்ணத்தில் செயல்படுகின்றனர். இது மாபெரும் சமூகத் தீங்கு. மறுபுறத்தில் கஷ்டப்பட்டு ஈட்டும் செல்வத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல், அதாவது முறையாகச் செலவழிக்காமல் கருமித்தனமாகப் பலர் வைத்திருக்கின்றனர். செல்வம் என்பது ஆற்றைப்போல வருவதும் போவதுமாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், ஒரே இடத்தில் செல்வம் தேங்கி வெளியேற வழி தெரியாதபோது, அது சாக்கடையாக மாறிவிடுகிறது. ஆற்றால் பலருக்குப் பயன், சாக்கடையால் யாருக்குப் பயன்?

இதற்கு நேர்மாறாக வேறு சிலர், தங்கள் மூதாதையர் சேர்த்துவைத்த செல்வத்தை மட்டுமன்றி, கஷ்டப்பட்டு உழைத்து ஈட்டும் செல்வத்தைக்கூட கண்மூடித்தனமாக ஊதாரியாகச் செலவழிக்கிறார்கள். இது அவருக்கும், அவரைச் சார்ந்துள்ள குடும்பத்தாருக்கும் தீங்கை இழைக்கக்கூடியது. செலவழிப்பது அவசியம் என்றாலும், வகை தெரியாமல் செலவாக அழிப்பது ஏற்புடையதல்ல. மிகச் சிலரே பொருளை ஈட்டுவதிலும், அதனைச் செலவழிப்பதிலும் ஒரு வழிமுறையை வைத்துக்கொண்டு திட்டமிட்டுச் செயல்படுகின்றனர். இவர்கள் பாராட்டுதலுக்கு உரியவர்கள்.

மிக மிகச் சிலரே தம்மிடமுள்ள செல்வத்தை மேலும் பெருக்கி, பல்வேறு ஆக்கங்களுக்கு உதவும் வகையில் அதனைப் பயன்படுத்தும் நுட்பங்களை கைக்கொள்கின்றனர். இவர்கள் போற்றத்தக்கவர்கள். இதுபோன்றோர் மூலம்தான், அவர்கள் சார்ந்துள்ள குடும்பம் மட்டுமின்றி, சமூகமும் நன்கு பயன்பெறுகிறது.

இவ்வாறாக, பொருளை நேர்மையான வழிமுறைகளில் ஈட்டுவதற்கும் பெருக்கிக்கொள்வதற்கும் தூண்டுகோலாகவும், அவற்றை முறையாகச் செலவழித்தல், சமூகத்தில் தேவைப்படுவோருக்குப் பயனுள்ள வகையில் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு வழிகாட்டியாகவும் அமைந்துள்ள பல்வேறு யோசனைகளை, வழிமுறைகளை, அறிவுரைகளை மிக அருமையாக சின்னஞ்சிறு குறள் பாக்களில் எடுத்தியம்பியுள்ளார் திருவள்ளுவர்.

‘அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி
குறுகத் தறித்த குறள்’ 

என்று திருக்குறளைப் புகழ்ந்துரைக்கிறார், சங்ககாலப் பெண்பாற் புலவரான ஔவையார்.

அணு என்பது மிகவும் நுண்ணியது, அதனையும் துளைத்து அதற்குள் ஏழு கடல் கொள்ளளவுள்ள விஷயங்களைப் புகட்டி நிற்கிறது குறள் என்று புகந்துரைக்கிறார் ஔவையார். அணுவைத் துளைத்துப் பகுக்க முடியும் என்பது மட்டுமல்ல, அதற்குள்ளே பல விஷயங்களைப் புகுத்தி செறிவூட்டவும் முடியும் என்பதை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தெரிந்துவைத்துள்ளனர் என்பதற்கு குறள் குறித்த ஔவையின் இந்தக் குறளே சான்று.

அந்த வகையில், அணு போன்ற சிறு வடிவில் இருந்தாலும் கடல் போன்ற பெரும் தகவல்களைத் தருகின்ற “பொருள்” நிறைந்த அந்தக் குறள்களை உங்களுடன் இனி வாரந்தோறும் பகிர்ந்துகொள்கிறேன்.

***

துணைத் தகவல்

சாணக்கியரும் வள்ளுவரும்

அர்த்தசாஸ்திரம் என்ற பொருளியல் நூலைப் படைத்த சாணக்கியருக்கும், பொருட்பாலை உள்ளடக்கிய திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு.

இருவருமே, பொதுவாக கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். இருவருமே இன்றைய தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர்கள் என்பது சில ஆய்வாளர்களின் கருத்து. சாணக்கியர் தமது நூலில் குமரி வழிபாடு பற்றிக் கூறுவதால், அவர் கன்னியாகுமரியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்பது சிலரது கூற்று. இதேபோல், உயர்திணையாகிய மனிதரைக் குறிப்பிடுகையில் அஃறிணைக்குரிய பேசுவார், செய்வார் என்று கூறாமல் பேசும், செய்யும் என்று குறிப்பிடுவது குமரி வட்டார மக்களின் பேச்சு வழக்கு. இதுபோல் திருக்குறளில் இடம்பெற்றுள்ளதால், திருவள்ளுவரை கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பார் உள்ளனர்.

விஷ்ணுகுப்தர் என்றும் கௌடில்யர் என்றும் அழைக்கப்படும் சாணக்கியர், தட்சசீலம் (இன்றைய பாகிஸ்தானில் உள்ள டாக்ஸிலா என்ற நகரம்) பல்கலைக்கழகத்தில் படித்தவர், அங்கேயே ஆசானாகவும் உயர்ந்தவர். இவர் தனது அர்த்தசாஸ்திரம் நூலில் தம்மை திரமிள என்று குறிப்பிடுகிறார். அக்காலத்தில் திரமிள என்ற சொல் தமிழரையே குறிக்கும் என்பதால், இவர் தமிழ்நாட்டுப் பிராமணர் என்பது சிலரது கருத்து. எனினும், தற்போது கேரள மாநிலத்தில் உள்ள கொச்சியைச் சேர்ந்தவர் இவர் என்பது வேறு சில ஆய்வாளர்கள் கருத்து. மலையக மக்களின் தமிழோடு சம்ஸ்கிருதம் கலப்புற்றதே இக்கால மலையாள மொழி. இம்மொழி தோன்றுவதற்கு முன்னர், கேரளத்தில் தமிழே பேசினர். மேலும், தஞ்சாவூர் உள்ளிட்ட சோழர் பகுதியில் இருந்து பிராமணர் உள்ளிட்ட தமிழர்கள், அக்காலத்திலேயே கொச்சி உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வசித்தனர். அவர்கள் சோழியர்கள் எனப்பட்டனர். நந்த வம்சத்தைப் பூண்டோடு அழிக்கும் வரையில் அவிழ்த்த குடுமியை முடியமாட்டேன் என்று வஞ்சினம் பூண்ட சாணக்கியர், சோழியர் என்று கருதப்படுகிறார். இதைத்தான் ‘சோழியன் குடுமி சும்மா ஆடுமா?’ என்ற பழமொழி நினைவூட்டுகிறது.

அதேநேரத்தில் கொச்சி, மலபார் உள்ளிட்ட கேரளப் பிரதேசங்கள், அதர்வண வேதத்தில் குறிப்பாக மந்திர-தந்திர வித்தைகளில் சிறந்து விளங்கின. ஆகையால் மந்திர-தந்திர வித்தைகளிலும் சோதிடம் பார்ப்பதிலும் சோழியர்கள் கைதேர்ந்தவர்கள் என்று கருதப்படுகிறது. இதேபோல் திருவள்ளுவர், வள்ளுவர் குலத்தைச் சார்ந்தவர். இந்த வள்ளுவர் குலத்தினர், மந்திர-தந்திர வித்தைகளிலும் சோதிடம் பார்ப்பதிலும் கைதேர்ந்தவர்கள். குறி சொல்லுவதில் இவர்கள் வல்லவர்கள் என்பதை ‘வள்ளுவன் வாக்கு பொய்க்காது’ என்ற பழமொழி எடுத்துரைக்கிறது.

இதேபோல், சாணக்கியர் பிகார் மாநிலம் பாட்னா அருகே பிறந்தவர் என்று ஆய்வாளர்களின் மாற்றுக் கருத்து இருப்பதைப் போலவே, திருவள்ளுவர் சென்னை மயிலாப்பூரில் (திருமயிலையில்) பிறந்தவர் என்ற மாற்றுக் கருத்தும் உள்ளது.

எது எப்படியோ, சாணக்கியரும் திருவள்ளுவரும் உலகின் முன்னோடி பொருளியல், அரசியல் நிபுணர்கள் - ஆசான்கள் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், திருக்குறள் எந்நாட்டவர்க்கும் ஏற்ற பொதுமறையாக இருப்பதைப்போலவே, அர்த்தசாஸ்திரத்தை பாடலிபுத்திர மௌரியப் பேரரசுக்கு மட்டுமின்றி உலகுக்குப் பொதுவாகவே சாணக்கியரும் படைத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com