அறிமுகம்...

சால்ட்  போல கரைந்தும், அரித்தும் காரியம் சாதித்துக் கொள்ளத் தெரிந்த குழந்தைகளுக்கும் அவர்களை சதா காரம் காட்டி  கண்டித்துக் கொண்டே இருக்க நினைக்கும் பெற்றோர்களுக்குமான மினி மின்மினித் தொடர்.
அறிமுகம்...

சால்ட் சில்ட்ரன்... பெப்பர் பேரன்ட்ஸ்...

சால்ட்  போல கரைந்தும், அரித்தும் காரியம் சாதித்துக் கொள்ளத் தெரிந்த குழந்தைகளுக்கும் அவர்களை சதா காரம் காட்டி  கண்டித்துக் கொண்டே இருக்க நினைக்கும் பெற்றோர்களுக்குமான மினி மின்மினித் தொடர்.

 சில தீர்மானங்கள் ..

ம்மா எனக்கு ஸ்லீவ்லெஸ் ஷர்ட் வேணாம், இதைப் போட்டுக்கிட்டு ஃபிரெண்ட்ஸ் கூட விளையாடப் பிடிக்கல ...

கர்நாடிக் மியூசிக் வேண்டாம் நான் western டான்ஸ் கிளாஸ் தான் சேரப் போறேன். 

லூஸ் ஷாக்ஸ் எல்லாம் போட்டுகிட்டுப் போய் எக்ஸ்கியூஸ் கேட்க வைக்காதிங்கம்மா, அந்த பி.டி மாஸ்டர் அதான் சாக்குன்னு கிரௌண்ட்ல நிக்க வெச்சு சும்மா மிரட்டறார், பயமில்லைனாலும்  பயந்த மாதிரி நடிக்க வேண்டியதா இருக்கு. எனக்குப் பிடிக்கல!

என் ஃபிரெண்ட்ஸ் முன்னாடி என்னை டிஸ்கரேஜ் பண்ணாதிங்கம்மா, ஐ ஹேட் இட்.

தீபா ஆன்ட்டி கிட்ட, நான் தினமும் லேட்டா எழுந்துக்கறேன்ன்னு ஏம்மா சொன்னிங்க? அவங்க பையன் ஸ்கூல் வேன்ல என்னைக் கிண்டல் பண்றான். யார்கிட்டயும் என்னைப் பத்தி கம்ப்ளெயிண்ட் பண்ணாதீங்கம்மா இனிமே.

சில பகிர்மானங்கள் ...

ம்மா... உங்களுக்கொன்னு தெரியுமா? இந்தப் பிரதீப் இருக்கானே அவனுக்கு ஸ்வேதா மேல ஒரு கிரஷ் ...

பிரியங்கா  நேத்து சன் டி.வி  சீரியல்ல First night பார்த்தாளாம். இன்னைக்கு முழுக்க  ஸ்கூல்ல அதைப்பத்தியே  எல்லார் கிட்டயும் சொல்லிகிட்டே இருந்தா...

சில வருடங்களுக்கு முன்...

கங்கா மாதிரி நானும் ஐ.ஏ.எஸ் ஆகப் போறேன். (கற்பனை உபயம்-தங்கம் சீரியல் )

 சிலவாரங்களுக்கு முன் ...

வாணி மாதிரி நான் லாயர் ஆகப் போறேன் (வாணி ராணி )

‘பேசாம உள்ளம் கொள்ளை போகுதடா’ நான்டி (நந்திதா ) போல ஃபேஷன் டிசைனர் ஆயிடறேம்மா, அப்புறம் எல்லாருக்கும்  விதம் விதமா ட்ரஸ் டிசைன்  பண்ணித் தருவேன் .

மேலே சொன்ன அத்தனையும் என் 12 வயது மகள் அவ்வப்போது என்னிடம் பகிர்ந்து கொண்டவை

அவள் வளர வளர அவள் வளர்கிறாளா? இல்லை என்னை வளர்க்கிராளா?! என்று பல முறை எனக்குள் கேட்டுக் கொண்டபடியே நாட்கள் கடக்கின்றன...

இன்றைய குழந்தைகளை இதைச் செய், இதைச் செய்யாதே என்று நம்மால் கட்டுப் படுத்தவோ, கட்டளையிடவோ  முடிவதில்லை அதிகம் வளைத்தால் வளையும் மூங்கில்கள் அல்ல அவர்கள்.

அவர்கள் நம்மிடம் கேட்பது அனுமதிகளை அல்ல அங்கீகாரங்களை மட்டுமே! பல நேரங்களில் எளிதில் உடைந்து போகும் உள்ளீடற்ற மரங்களாகவே மாறிப் போகின்றனர் .

வரமா ?சாபமா?!

கடந்த தலைமுறையினருக்கு ஏழு கடல், ஏழு மலை தாண்டியும் கூட கிட்டாமல் ஏக்கம் கொள்ள வைத்த கிடைக்காத பல வசதிகளும், வாய்ப்புகளும் இந்தத் தலைமுறையினருக்கு விரல்நுனியில்  கிடைத்து விடுவது ஒரு வகையில் வரம் என்றாலும் பல வகையில் சாபமாகவும் மாறிப் போகும்அவலங்கள் இன்று ஏராளம் .

நம் குழந்தைகளை  சாபங்களில் நழுவ விடாது வரங்களில் மூழ்கி முத்துக்களாய் ஒளிரச் செய்ய செய்ய வளரிளம் பருவக் குழந்தைகளின் பெற்றோர்களாய் நாம் என்னென்ன செய்ய வேண்டும், என்னவெல்லாம் செய்யக் கூடாது என்ற யோசனைகளும், பல குழப்பங்களும் நம்மில் பலருக்கு உண்டு .

நம் குழந்தைகள் நம்மோடு தான் வாழ்கிறார்கள்; ஆனால் அவர்களது உலகில் நம்மைத் தவிர இன்னும் யாரெல்லாம் இருக்கிறார்கள்?  என்னவெல்லாம் இருக்கிறது? அதில்  தேவதைகளைத் தவிர மந்திரவாதிகள், பூதங்களுக்கும் இடமுண்டா !

கணினி எனும் மாய மந்திரவாதி, அலைபேசி  எனும் கையடக்க  பூதம், இவற்றை எல்லாம் கட்டுப் படுத்தும் வல்லமை கொண்ட அலாவுதீனின் அற்புத விளக்கை நாம் கண்டுபிடிக்க வேண்டும். அது பெற்றோர்களின் அன்பும், அரவணைப்பும் கலந்த ஆதூரத்தைத் தவிர வேறு என்னவாக இருந்து விட முடியும்?!

குழந்தைகளின் வளமான எதிர்காலத்தின் மீது திடமான நம்பிக்கை கொண்ட எல்லா பெற்றோர்களும் செய்ய வேண்டிய முதல்  கடமையாகச் சில விதிகள்...

தோழமையான அணுகுமுறை, குழந்தைகளுடனான உரையாடல்களில் கவனமும், அன்பும் எப்போதும் நீடித்திருக்கச் செய்தல், மிக அவசியம் என்று உணரும் போது தயங்காமல் குழந்தைகள் மனநல மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வது, கண்டிப்பை கடும் வசைச் சொற்கள் தவிர்த்து விழியசைவில் காட்டப் பழகுவது என்று நாம் முயற்சிக்க வேண்டும்.

எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விதி ஒன்று இருக்கிறது. அதுவே நம் குழந்தைகளுக்கு அவர்கள் செய்யும் செயல்களின் மீதான பொறுப்புணர்வை உணரச் செய்வது என்பது.

பதின் வயதுப் பெற்றோர்களுக்கு இதைப் போல பேசிக் கொள்ள, தமக்கான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள, கலந்துரையாட, குழப்பங்களில் இருந்து விடை பெற என்று ஏராளமான விசயங்கள் இருக்கும். அவற்றையெல்லாம் இந்தத் தொடர் மூலமாக கொஞ்சமாவது தீர்க்க முடிகிறதா? என்று பார்க்கலாம்.

இனி ஒவ்வொரு வாரமும் வெள்ளியன்று ‘சால்ட் சில்ட்ரன்... பெப்பர் பேரன்ட்ஸ்...’ எனும் இந்தத் தொடர் மூலமாக நாம் நமது குழந்தைகளைப் பற்றி குறிப்பாக வளரிளம் குழந்தைகளைப் பற்றிப் பேசுவோம்.

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com