சால்ட் சில்ட்ரன்.. பெப்பர் பேரன்ட்ஸ்..

குழந்தைகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்...

கார்த்திகா வாசுதேவன்

சால்ட் சில்ட்ரன்... பெப்பர் பேரன்ட்ஸ்- 1

இந்தத் தொடரின் அறிமுகப் பகுதியை வாசித்த பின்; என் வீட்டிலிருந்து  குழந்தைகளை ‘சால்ட் சில்ட்ரன்’ என்று எதற்கு குறிப்பிட்டிருக்கிறீர்கள்? என்றொரு கேள்வி வந்து விழுந்தது. குழந்தைகள் பெற்றோர்களை அரித்துக் காரியம் சாதித்துக் கொள்கிறார்கள் என்றல்லவா எழுதி இருக்கிறீர்கள்? எப்படி அம்மா நீங்கள் இப்படி எழுதலாம்? நாங்கள் அப்படியா செய்கிறோம்? ஆங்ரி பேர்டாக தலையை சிலுப்பிக் கொண்டு குழந்தைகள் கேட்கும் போது; பதிலுக்கு கோபமே வரவில்லை. ச்சே...ச்சே இல்லடா... சால்ட் மாதிரி பேரண்ட்ஸ் அவங்கவங்க குழந்தைங்களை கண்டதும் அப்படியே உருகிக் கரைஞ்சு போயிடறாங்களே, அப்படியும் தான் அதற்கு அர்த்தம் என்று தோளோடு சேர்த்து அணைத்துக் கொஞ்சும் போது; ‘தயவு செய்து உங்க குழந்தைங்கள நீங்க முதல்ல புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க, அப்புறமா அவங்கள சால்ட்டா? சுகரா? பெப்பரான்னு டிஸ்கிரைப் பண்ணலாம்’ என்றபடி தான் செய்து கொண்டிருந்த கிராஃப்டில் மூழ்கிப் போன மகளைப் பார்த்து கொஞ்சம் ஆச்சரியமாகக் கூட இருந்தது அந்த நொடியில்...

இந்த வயதில் நான் எப்படி இருந்தேன்? என நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன. என் மகளுக்கு இருக்கும் திடமான தீர்மானங்களும், பகிர்மானங்களும் எனக்கும், என் போன்ற பிற பெண் குழந்தைகளுக்கும் அன்று இருந்தனவா?  ஆணோ, பெண்ணோ... எந்தக் குழந்தையாக இருக்கட்டும். வாழ்வின் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கேனும் தனது பெற்றோரின் அருகாமையை மிகவும் விரும்பக் கூடியவர்களாகத் தான் என்றுமே குழந்தைகள் இருக்கிறார்கள். ஆனால் இந்தப் பொருள் தேடும் பூமியில் அவர்களின் விருப்பத்தை உள்ளபடி நிறைவேற்ற நேரமிருக்கிறதா? என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறி! அந்தக் கேள்விக்குறியின் இடுக்கில் நின்று கொண்டு தான் பெற்றோர்கள் தங்களது பொருளாதாரத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டு, தங்களது பிள்ளைகளின் பாசத் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டியதாக இருக்கிறது. இந்த நிலை எல்லாத் தலைமுறை தாய், தந்தையருக்கும் பொருந்திப் போகும் ஒன்றே!

இன்றைய குழந்தைகளுக்கு தங்களது பெற்றோரைக் கேள்வி கேட்கும் அதிகாரம் இருக்கிறது. அன்றைய குழந்தைகளுக்கு அது இருந்ததில்லை. அல்லது அப்படியொரு அதிகாரம் இருக்கிறது என்று அன்றைய குழந்தைகள் நம்பியிருக்கவில்லை. அது ஒன்று மட்டுமே அவர்களுக்கிடையிலான சின்ன வித்யாசம்.

எனது பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் எனக்கிருந்த ஒரே ஏக்கம்.. நான் மாலையில் வீடு திரும்பும் போது என்னை வரவேற்க என் அம்மா வீட்டிலிருக்க வேண்டும் என்று பலநாள் விரும்பி இருக்கிறேன். ஆனால் ஸ்ட்ரைக், அரசியல் தலைவர்களின் மரணம், திடீர் ஜாதிக் கலவரங்கள் இப்படியான அகஸ்மாத்தான ஏதோ சில தருணங்களில் மட்டுமே என்னால் என் அம்மாவை மாலையில் என் வருகைக்கு முன்பே வீட்டில் காண முடிந்திருக்கிறது. மற்ற நாட்களில் மணி எப்போதடா 5.30 ஆகும்? எப்போதடா அம்மாவின் குரல் வாசலில் கேட்கும்? என்று தான் பெரும்பாலான மாலை நேரங்கள் கழியும். ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொண்டு எங்களோடு இருங்களேன்... என்று கேட்க மனம் ஏங்கும். ஆனால் இப்படியெல்லாம் கேட்டால் அம்மா திட்டுவாரோ?! நாம் இப்படிக் கேட்டால் ‘ஐயோ சின்ன பாப்பா பார்... அம்மாவைத் தேடுது!’ என்று மற்றவர்கள் கேலி செய்வார்களோ? என்றெல்லாம் எண்ணி அம்மாவுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்ற ஏக்கத்தை அப்படியே மனதில் புதைத்த நாட்கள் தான் அதிகம்.

இது அன்று எனக்கு மட்டுமே நிகழ்ந்த ஏமாற்றம் அல்ல! வேலைக்குப் போகும் அம்மாக்களின் பிள்ளைகள் அனைவருக்குமே இந்த ஏக்கம் அன்று இருந்திருக்கும். அவரவர் உள்ளும், புறமுமாய் கேட்டுப் பாருங்கள்.. சொல்வதற்கு எல்லோருக்குமே ஒரு அம்மா ஏக்கக் கதை இருக்கும்.

இன்று என் குழந்தைகளுக்கும் அதே ஏக்கம் இருக்கலாம். ஆனால் அவர்கள் அன்று நாங்கள் செய்ததைப் போல, எதையோ எண்ணிக் கொண்டு தங்கள் மனதிலிருக்கும் ஏக்கத்தை மறைக்க நினைப்பதில்லை. ‘இன்று உங்களோடு தான் இருக்க வேண்டும் அம்மா. என்ன செய்வீர்களோ தெரியாது! விடுமுறை எடுத்துக் கொண்டு எங்களுடன் மட்டுமே இருங்கள். நோ சமையல், நோ கிளீனிங், நோ ரீடிங், நோ ரைட்டிங், நோ...நோ படிப்ஸ்... ஒன்லி ஃபன், இது எங்கள் உத்தரவு’ என்று சொல்லக் கூடிய உற்சாகமான தைரியம் இன்றைய குழந்தைகளுக்கு இருக்கிறது. குழந்தைகளின் இத்தகைய உத்தரவுகளை அப்பாக்களும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது தான் இந்த தைரியத்துக்கான மூலம்.

ஏதோ ஒருவகையில் பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்குமான தலைமுறை இடைவெளி அடிப்படையிலான மரியாதை பேதங்கள் சற்றே விலகி இருக்கின்றன. இதனால் கூடிப் போனது அவர்களுக்கிடையிலான அந்நியோன்யம். இதைத் தானே என்றென்றைக்குமாக குழந்தைகளாக இருந்த, இருக்கின்ற, இருக்கப் போகிற குழந்தைகள் அனைவருமே விரும்பக் கூடும். அந்த மாற்றம் இந்தத் தலைமுறை குழந்தைகளின் வரம்! 

இதே விதமாக கடந்த தலைமுறையில் என் பாட்டியோ, அம்மாவோ கூட நினைத்திருக்கக் கூடும். அது பெற்றோருக்கும், குழந்தைகளுக்குமான இடைவெளி நிரப்புதலை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப் படுவதென்பதால் என்னைப் பொறுத்த வரை இன்றைய குழந்தைகள் முந்தைய தலைமுறையினரைக் காட்டிலும் பெருமளவில் சுதந்திரமானவர்களே!

இணையத்தில் கன்னியப்பன் என்றொருவர் எழுதிய குழந்தைகளைப் பற்றிய கவிதையொன்றை வாசிக்க நேர்ந்தது...

“திரும்பி விட்டார்கள் 
பள்ளியிலிருந்து பிள்ளைகள் 
பேரப் பிள்ளைகள்; 
பசியாற சாதமுடன் 
முட்டைப் பொரியல் அல்லது 
நூடுல்ஸ்; 
தாத்தாவிற்கும் வேண்டும், தா! என்று 
செல்லங்களிடம் கேட்பேன் வேண்டுமென்றே! 
தரமாட்டார்கள்; 
மீண்டும் மீண்டும் கேட்பேன், 
என்னிடம் தயங்கியபடி கேட்டார்கள் 
ஒரு கேள்வி! 
இரவினில் நீங்கள் அருந்தும் 
பானத்தை 'என்றாவது' கேட்டோமா 
நாங்கள்? 
கவனம்!! 
குழந்தைகள் நம்மையும் 
கவனித்துக் கொண்டுதான்... 
இருக்கிறார்கள்.”

- சரியாகத் தான் சொல்லி இருக்கிறார். குழந்தைகள் அனைத்தையும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். கவனித்த அளவில் அதைப் பற்றி பெரியவர்களிடம் கேள்வி கேட்கும் உரிமை கொண்டவர்களாகவும் இன்று இருக்கிறார்கள் என்பது தான் இதில் மகிழ்வளிக்கும் செய்தி.

என்னோடு படித்தவர்களில் சந்திரன் என்றொரு வகுப்புத் தோழன். 7 ஆம் வகுப்பு படிக்கையில் தினசரி தெரு முக்கிலிருக்கும் பெட்டிக் கடையில் தனது தாத்தாவுக்கு சுருட்டும், தாய் மாமனுக்கு கத்தரி சிகரெட்டும் வாங்கித் தந்த பின்னரே பள்ளிக்கு கிளம்புவது அவனது தினசரி வாடிக்கையாக இருந்தது. மருமகனே... தினம் வாங்கறியே... எப்போதாவது நீயும் ஒரு இழுப்பு, இழுத்திருப்பாய் தானே! என்ற கடைக்காரரின் கிண்டல், மாப்ள... சும்மாச் சொல்லுடா... நிஜம் தானே கடைக்காரர் சொல்வது?! என்ற இளவட்டங்களின் கேலி எல்லாமும் சேர்ந்த அவமானத்தில், ஒவ்வொரு முறை சுருட்டும், சிகரெட்டும் வாங்கித் தந்து விட்டு பள்ளிக்கு வரும் போதும் அவன் முகம் சொல்ல மாட்டாத துயரத்தில் கூம்பி இருக்கும். ஆனால் இனிமேல் சிகரெட் வாங்கி வரச் செல்ல மாட்டேன் என்று அவன் தன் தாத்தாவிடமோ, மாமாவிடமோ சண்டை போட்டதில்லை, ஏனெனில் அவர்கள் மரியாதைக்குரியவர்கள், அவர்களை எதிர்த்து வாயாடக் கூடாது என்றொரு பிம்பம் அவனுக்கு, அவனது அம்மாவாலோ, பாட்டியாலோ ஏற்படுத்தப் பட்டிருக்கலாம். குழந்தைமை எந்த மனச்சங்கடத்தையும் சில நிமிடங்களில் சகஜமாக்கி விடும். ஆனால் அதனால் தோன்றிய வடு காலத்திற்கும் மறைவதே இல்லை. 

இன்று சந்திரன், சொந்த ஊரில், சொந்தத் தொழில் செய்து கொண்டு வாழும் வளமான மனிதன். அவனது வாழ்வில் மகிழ்ச்சிக்குப் பஞ்சமில்லை. ஆனால் அவனது மனைவியோ, அம்மாவோ அவனது குழந்தைகளை  உப்பு, புளி வாங்க மளிகைக் கடைக்கு அனுப்பினால் கூட ரெளத்திரமாகி விடுவான். ‘உங்களுக்கு அறிவில்லையா? கண்ணில்லையா? மனசாட்சி இல்லாமல் பச்சைப் பிள்ளைகளைப் போய் கடைக்கு அனுப்புகிறீர்கள்! தின்று விட்டுத் தூங்கும் சோம்பேறிகளே நீங்கள் செல்ல வேண்டியது தானே... கடைகளுக்கும், காடுகளுக்கும்!’ என்றெல்லாம் எடுத்தெறிந்து பேசி விடுவான். போதாக்குறைக்கு; பிள்ளைகளிடமும், ‘அவங்க தான் சொல்றாங்கன்னா, நாங்க படிக்கனும், கடைக்கெல்லாம் போக முடியாதுன்னு சொல்றதுக்கு உங்களுக்கென்ன பயம்? அப்பா இருக்கேன், நீங்க பாட்டுக்கு படிங்க, விளையாடுங்க, சாப்பிடுங்க, தூங்குங்க, சந்தோசமா இருங்க... அவ்வளவு தான்’ என்று வேறு ஏற்றிவிடுவான். இதற்கு பயந்து கொண்டு அவர்களது வீட்டுப் பெண்கள், குழந்தைகளை கடைகளுக்கு அனுப்புவதில்லை. அவர்களது விளையாட்டிலும் தலையிட்டுத் தடுப்பதில்லை.

அன்று தனக்காக கேட்க முடிந்திராத கேள்விகளை இன்று தன் குழந்தைகளுக்காக சந்திரன் கேட்டுக் கொண்டிருக்கிறான். அவர்களையும் கேள்வி கேட்கத் தூண்டுகிறான். 

எந்தக் காலத்து குழந்தைகளாக இருந்தாலும் பெற்றோரைப் பொறுத்தவரை இயல்பளவில் அவர்களது எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், விருப்பங்கள் அனைத்துமே ஒன்றாகவே இருக்கின்றன. ஆனால் அவர்களுக்கான சுதந்திரத்தின் எல்லைக்கோடுகள் தான் காலம் தோறும் மாறிக் கொண்டே இருக்கின்றன. பெற்றொரின் அதிகார எல்லையில் எதுவரையில் குழந்தைகளை அனுமதிக்கலாம்? குழந்தைகளின் விருப்பங்களைத் தீர்மானிப்பதில் எதுவரை பெற்றோரை அனுமதிக்கலாம் எனும் இந்தச் சடுகுடு ஆட்டத்தில் வெல்வதும், வீழ்வதும், விட்டுக் கொடுப்பதுமாக இரு தரப்புமே எப்போதுமே ஆக்டிவ்வாகத் தான் இருக்கிறார்கள். 

இதில், பெற்றோர் தங்களது பிள்ளைகளின் எதிர்பார்ப்புகளின் மீதான தங்களது புரிதலை அகலப் படுத்திக் கொண்டால் போதும். அவர்கள் கேட்பது அதைத் தான். அதை மட்டும் தான். எங்களைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அப்புறம் தீர்மானியுங்கள் நாங்கள் எப்படிப் பட்டவர்களென...’ என்று உலகம் முழுக்க பேரோசையுடன் ஒலிக்கும் பல கோடிக் குழந்தைகளின் குரலோடு என் குழந்தைகளின் குரலும் இருப்பதால் என்னால் அதை உணர முடிந்திருக்கலாம். உங்களது குழந்தைகளின் குரலும் அதிலுண்டு... ஒருவேளை உங்களது வேலைப் பளுவால், நீங்கள் அந்தப் பேரோசையை கேட்காதொழிந்திருந்தால் தயவு செய்து இன்றேனும் காது கொடுங்கள். 

குழந்தைகள் காத்திருக்கிறார்கள்...

நீங்கள் காது கொடுத்த பின்னரே அவர்கள் நிஜம் பேசத் தொடங்குவார்கள், கேள்வி கேட்கத் தொடங்குவார்கள், 

குழந்தைகளின் கேள்விகளுக்கு அசராது பதில் சொல்லிக் கொண்டே இருப்பதற்கும் அசாத்தியப் பொறுமை வேண்டும்... 

அதைப் பற்றி அடுத்த வாரம் விரிவாகப் பேசலாம்...

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எம்.பி. சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலையா? வைகோ பதில்

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT