அதிகாரம் - 10. இனியவை கூறல்

கொடுப்பதைக் காட்டிலும் இனிமையான சொற்களைப் பேசுதல் சிறந்தது. இனிமையான சொற்கள்தான் நன்மையைத் தரும். இன்முகத்துடன் பேசும் சொற்களில்தான் பயன் அதிகமாக இருக்கும்.
அதிகாரம் - 10. இனியவை கூறல்

அதிகார விளக்கம்

வாழ்க்கையில் நல்லவற்றை அறிந்தவர் சொல்லும் வார்த்தைகளில் உண்மை இருக்கும். கண்களை கசிந்துருகச் செய்யும். கொடுப்பதைக் காட்டிலும் இனிமையான சொற்களைப் பேசுதல் சிறந்தது. இனிமையான சொற்கள்தான் நன்மையைத் தரும். இன்முகத்துடன் பேசும் சொற்களில்தான் பயன் அதிகமாக இருக்கும்.

91. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

உண்மையை உணர்ந்தவர்களின் வாய்ச் சொல் எந்த அளவுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமோ, அதுபோல் நல்ல இனிமையான வார்த்தைகள் மனத்தில் இன்பத்தையும், நெஞ்சில் ஈரத்தையும் கசிந்துருகச் செய்துவிடும்.

92. அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து

இன்சொலன் ஆகப் பெறின்.

உள்ளம் மகிழ்ந்து கொடுக்கும் பொருளுதவியைவிடவும், முகம் மலர்ந்து சொல்லும் இனிமையான வார்த்தை சிறந்தது.

93. முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்

இன்சொ லினதே அறம்.

முகம் மகிழ்ந்து, உள்ளத்தில் இருந்து இனிமையான சொற்களைப் பேசுவதே சிறந்த அறம்.

94. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்

இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.

மற்றவர்கள் இன்பமுறும் வகையில் இன்சொல் பேசுபவர்க்கு துன்பமும் துயரும் வாழ்க்கையில் ஏற்படாது.

95. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற.

பணிவு உடையவராகவும், இனிமையான சொற்கள் பேசுபவராகவும் இருப்பதே ஒருவருக்கு மிகச் சிறந்த அணிகலன். மற்றவையெல்லாம் அதற்குப்பின்தான்.

96. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின்.

நன்மை அறிந்து இனிமையான வார்த்தைகள் பேசினால், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும்.

97. நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்ற

பண்பின் தலைப்பிரியாச் சொல்.

பயன்கருதி பக்குவமாகப் பேசப்படும் நல்ல வார்த்தை, நன்மை தருவதுடன், நன்றி உணர்வையும் கொடுக்கும்.

98. சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்

இம்மையும் இன்பம் தரும்.

கீழ்த்தரமான எந்த உள்நோக்கமும் இல்லாத இனிமையான சொற்கள், இப்போது மட்டுமல்லாமல் எப்போதும் இன்பம் தரக்கூடியவை.

99. இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ

வன்சொல் வழங்கு வது?

இனிய வார்த்தைகள் பேசுவதால் இன்பம் கிடைக்கும் என்று நினைப்பவன், வன்மையான வார்த்தைகள் ஏன் பேசப்போகிறான்?

100. இனிய உளவாக இன்னாத கூறல்

கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.

இனிய வார்த்தைகள் இருக்கும்போது வன்மையான வார்த்தைகள் பேசுவது, கனி இருக்கும்போது காயைப் பறிப்பது போன்றதாகும்.

இந்த அதிகாரத்தில் உள்ள குறள்கள் குறித்த விரிவான, தெளிவான விளக்கத்துக்கு தொடர்புகொள்ள - சிவயோகி சிவகுமார் (9444190205) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com