வரலாற்றின் வண்ணங்கள்

1. கடவுளின் குரல்

முனைவர் க. சங்கராநாராயணன்

மனிதர்களில் அனைவருக்கும் பல ஆசைகள் உண்டு. அவற்றுள், கடவுளைப் பார்க்க வேண்டும் என்பது பலரது ஆசை. குறைந்தபட்சம், அவருடைய குரலையாவது கேட்க வேண்டும் என்பது அவா. கடவுளோடு பேசத் தொடங்கிவிட்டால், பிறரைப் போல அவரும் பொதுவாகிவிடுவார் என்ற வேடிக்கைக் கற்பனைகள்கூட உண்டு.

பல அருளாளர்களின் வரலாறுகளைப் படிக்கிறோம். அவர்கள் வாழ்வில் பல்வேறு அருட்செயல்கள் நடந்தனவென்றும் கேட்கிறோம். இவை வரலாறா, கதைகளா என்ற கேள்வி நம் மனத்திரையைக் கிழிக்காமல் இல்லை. இதற்கு எங்கேயாவது ஓர் ஆதாரம் கிடைக்குமா என்ற கேள்வியும் கூடவே வருகிறது. வரலாறு தனக்குள் இருக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் பதிவை வைப்பதில்லை. சில பதிவுகளை மட்டுமே கொண்டிருக்கும் ஒரு விசித்திர புத்தகம் அது. ஆனாலும், பக்கங்கள் இல்லாமலும் முழுக்கதையையும் புரிந்துகொள்ளும்படி அமைந்த புத்தகம் அது. அத்தகையதோர் நிகழ்வொன்று, காஞ்சிக் கோயில் கல்வெட்டில் பதிவாகியிருக்கிறது. அதைப்பற்றிப் பார்ப்போமா..

காஞ்சியில் கைலாயநாதர் கோயில் என்றொரு பல்லவர் காலக் கற்றளி. சிற்ப அழகெல்லாம் சீரோடு பதிந்த செந்தரத்துத் தளி ஒன்றைக் காட்டுங்கள் என்று யாராவது கேட்டால், இந்தக் கோயிலைக் காட்டுங்கள். சிற்ப அழகைப் பார்ப்பதா அல்லது கட்டடக் கலையைப் பார்ப்பதா அல்லது வரலாற்றின் இறுமாப்பை எண்ணி மகிழ்வதா என்ற குழப்பத்தை ஏற்படுத்துவதற்கென்றே, பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் இந்தக் கோயிலைக் கட்டினான் போலும். ஏழாம் நூற்றாண்டு இறுதி அல்லது எட்டாம் நூற்றாண்டு தொடக்கத்தில் கட்டப்பெற்ற இந்தத் தளி, எண்ணரிய வியக்கவைக்கும் பகுதிகளைத் தன்னுள் கொண்டிருக்கிறது. சிற்பக்கலையின் உச்சம், சீர்மிகு கல்வெட்டழகின் செம்மை, ஓவியத்தின் ஒளிர்மை, உணர்வுகளின் உறைவிடம் இந்தத் திருத்தளி.

இந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டுகள், அரசனின் புகழை இசைக்கின்றன. அவனுடைய இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்ட விருதுப் பெயர்கள், அவனுடைய பல்துறைத் திறமையைப் பறைசாற்றி நிற்கின்றன. இது போக, கற்றளியின் கருவறையைச் சுற்றிய கல்வெட்டு, அவனுடைய பரம்பரையை வர்ணித்து, தந்தையான பரமேசுவரவர்மனின் புகழையும் பாடுகிறது. அதையடுத்து, இராசசிம்மனான இரண்டாம் நரசிம்மன் பிறந்து ஆண்ட புகழை வர்ணிக்கிறது. அவன், கலைகொஞ்சும் மங்கையரிடம் இன்புறும் வேளையில் காமன்; வேதவழியைக் காப்பதில் இந்திரன்; நல்லோரை வதைப்போரின் நெஞ்சைக் கிழிப்பதில் திருமால்; நல்லோருக்கு செல்வத்தை அளிப்பதில் குபேரன் என்று அவனைப் பற்றிய வர்ணனைகள், கவித்துவத்தின் உச்சம் தொடுபவை.

இப்படியெல்லாம் வர்ணித்துவிட்டு, அந்தக் கல்வெட்டு தரும் செய்திதான் சுவையானது. துஷ்யந்தன் போன்ற மன்னர்கள் கிருத யுகத்தில் வாழ்ந்தவர்கள். கன்வர் போன்ற முனிவர்களாலும் போற்றப்பட்டவர்கள். அவர்கள், ஆகாயவாணியைக் கேட்டார்கள் என்றால், அதில் பெரிய வியப்பு ஒன்றுமே இல்லையே. ஆனால், குணங்களே அற்றுப்போன இந்தக் கலியுகத்தில், ஸ்ரீபரன் என்ற பெயருடைய எங்கள் மன்னவன் அந்தக் குரலைக் கேட்டானே, இதல்லவோ பேராச்சரியம் என்று அந்தக் கல்வெட்டு வர்ணிக்கிறது.

ஆக, இரண்டாம் நரசிம்மவர்மனான பல்லவ மன்னன், கடவுளின் குரலை ஆகாயவாணியாகக் கேட்டான் என்று கல்வெட்டு கூறுவது தெளிவாகிறது. என்ன கேட்டிருப்பான் என்பதுதான் கேள்வி. இதற்கான விடை பெரியபுராணத்தில் இருக்கிறது. சென்னை, திருநின்றவூரில் அவதரித்த பூசலார் நாயனார், ஈசனுக்கு ஆலயம் அமைக்கப் பொருள் இல்லாமல் தவித்தார். பிறகு, நெஞ்சத்தில் கோயில் கொண்ட இறைவனுக்கு நெஞ்சகத்திலேயே கோயில் எழுப்ப முனைந்தார். அப்படி அவர் ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக அமைத்திருந்த கோயில் முடிந்து, அதற்குத் திருக்குடநீராட்டுக்கு நாள் குறித்தார். அதே நாளில், காடவர்கோனாகிய பல்லவர் வேந்தனும், தான் எழுப்பியிருந்த கோயிலுக்குத் திருக்குடநீராட்டுக்கு நாள் குறித்திருந்தான். பூசலாரின் பெருமையை உலகுக்கு அறிவிக்க எண்ணிய ஈசன், அன்றே பூசலார் கோயில் குடநீராட்டுக்குச் செல்லவிருப்பதால், வேறொரு நாளில் திருக்குடநீராட்டை வைக்குமாறு பல்லவ மன்னனுக்குக் கனவில் கூறினார். பிறகு பூசலாரைத் தேடிச் சென்ற அரசன், இறைவனுக்கு அவர் எழுப்பிய கோயில் அவரது நெஞ்சகத்தில் இருப்பதை அறிந்தான். அனைவரும் பூசலாரைப் போற்றினர் என்று பெரியபுராணம் அவருடைய சரிதையைத் தருகிறது.

‘நின்றவூர்ப் பூசலன்பன் நெடிதுநாள் நினைந்து செய்த நன்றுநீ டாலயத்து நாளைநாம் புகுவோம் நீ இங்கொன்றிய செயலை நாளை ஒழிந்துபின் கொள்வாய்’ என்று இறைவன் ஆணையிட்டதாகப் பெரியபுராணம் கூறுகிறது. இவ்விதம், இறைவன் இட்ட ஆணையே, காஞ்சி கைலாயநாதர் கோயில் கல்வெட்டு சுட்டும் அசரீரி (ஆகாயவாணி) என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும், பூசலார் நாயனாரின் காலத்தில்தான் கைலாயநாதர் ஆலயம் எடுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருதுகின்றனர். ஆயினும், அரசனின் கனவில் இறைவன் கூறினார் என்று பெரியபுராணமும், இறைவனுடைய ஆணையை அரசன் அசரீரியாகக் கேட்டான் என்று கல்வெட்டு கூறுவதும் ஆராயத்தக்கது.

எது எப்படியோ, இந்தக் கலியுகத்திலும் கடவுளின் குரலை ஒரு அரசன் கேட்டான் என்ற கூற்று வியக்கவைக்கிறது. இதைப்போலவே, மற்றொரு செய்தியும் இருக்கிறது. காஞ்சி காமாட்சி அன்னையின் ஆலயத்தின் வடக்குப்புற கோபுரத்தில், “சோமநாத யோகியார்க்கு காமாட்சியின் திருவுளம் உண்டு” என்ற கல்வெட்டு பொறிப்பொன்று பதினேழாம் நூற்றாண்டு எழுத்துகளில் காணப்பெறுகிறது. அவர் யார் என்னவென்பது தெரியாவிட்டாலும், காஞ்சி அன்னை திருவுளமுடையவர் என்று கல்வெட்டு கூறுவது வியப்பாக இருக்கிறது. திருவாரூர் கல்வெட்டு தொடங்கி, பல்வேறு கல்வெட்டுகளும் இறைவனின் ஆணையாகவே அமைந்திருந்தாலும், இறைவனின் குரலை அசரீரியாக அரசன் நேரடியாகக் கேட்டதாக அமைந்த கல்வெட்டு, வரலாற்றின் வண்ணம்தானே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

SCROLL FOR NEXT