வரலாற்றின் வண்ணங்கள்

3. அவதாரங்கள்

முனைவர் க. சங்கராநாராயணன்

அவதாரங்கள் என்பவை என்ன, மானுடர்களா இல்லை தெய்வங்களின் தோற்றங்களா என்ற கேள்வி ஆன்மிகத்தின் அடிதொட்ட ஒவ்வொருவருக்கும் உண்டு. இறைவனின் அவதாரமாக பல்வேறு மகான்களும் தோன்றியிருக்கின்றனர். இறைவியின் அவதாரமாகவும் பல்வேறு இறைப்பெண்டிரையும் இம்மண் கண்டதுண்டு. இவர்களைப் பற்றிய செய்திகள் பல்வேறு இலக்கியங்களிலும் கொண்டாடப்பட்டிருக்கின்றன. கல்வெட்டில் ஏதேனும் அவதாரச் செய்தி உண்டா என்பது கேள்வி. அரசனை அவதாரம் என்று கூறும் புகழுரைகள் பல உண்டு. ஆனால், பொதுமக்களில் ஒருவரை அவதாரம் என்று கூறினால் அது புகழுரையாக இருக்க வாய்ப்பில்லை அல்லவா. அத்தகைய செய்திகளைப் பார்க்கலாம்.

திருச்சி, லால்குடி அருகே உள்ள ஆலம்பாக்கம் என்னும் ஊரில் உள்ள கயிலாயநாதர் கோயில் தந்திவர்ம பல்லவனின் காலத்தில் எடுப்பிக்கப்பெற்றது. இந்தக் கோயிலில் பல்வேறு கல்வெட்டுகள் காணப்பெறுகின்றன. அவற்றுள் ஒன்று, அரசனின் காலம் குறிப்பிடப்பெறாமல் இடம்பெற்றுள்ளது. கிரந்த எழுத்துகளால் அமைந்துள்ளது. வடமொழியில் அமைந்த இந்தக் கல்வெட்டு, அவ்வூரில் இருந்த ஒரு குடிமகளை அவதாரமாகக் குறிப்பிடுகிறது.

வள்ளி என்னும் பெயருடைய அந்தப் பெண், மலைமகளின் அவதாரம் என்றே கல்வெட்டு குறிப்பிடுகிறது. அவள் சிவகுலத்தில் தோன்றியவள். அழகு, பெருந்தன்மை ஆகியவற்றோடு இயைந்தவள். சிவபெருமானையே காதலனாக வரித்தவள். அவள் தன்னுடைய காதலனான சிவபெருமான் வீற்றிருக்கும் தந்திவர்மன் எடுப்பித்த கயிலாயத்தில், அதாவது கயிலாயநாதர் ஆலயத்தில் வீற்றிருக்கும் பெருமானுக்கும் உமையவளுக்கும் சேர்த்து ஒரு மண்டபம் எடுப்பித்தாள். அதற்கான ஆவணமாகத்தான் இந்தக் கல்வெட்டு இடம்பெற்றுள்ளது. இந்தக் கல்வெட்டு, தந்தியால் எடுக்கப்பட்ட கயிலாயம் அந்தணர்தம் குழுவால் போற்றப்படுவது. அப்போது கௌரியின், அதாவது மலைமகளின் அவதாரமாகத் திகழ்ந்தவள் வள்ளி என்ற பெயருடையவள். அழகிய உடலை உடையவள். அவள் தன் காதலனாகிய சிவபெருமான் லீலைபுரிவதற்காக அகன்ற மண்டபம் ஒன்றை விரைவாக எடுப்பித்தாள் என்பது கல்வெட்டுப் பகுதி. இந்தக் கல்வெட்டு, எழுத்தமைதி கொண்டு 9-10-ஆம் நூற்றாண்டாகக் கணிக்கப்பெற்றுள்ளது. இத்தகையதோர் இனிய நிகழ்வைப் பதிவு செய்துள்ள இந்தச் செய்தி, வரலாற்று ஆர்வலர்களுக்கு புதிய செய்தியாக அமையும்.

*

ஆந்திர மாநிலத்தில் உள்ள அனந்தபூர் ஜில்லா பெனுகொண்டாவில் உள்ள அவிமுக்தேச்வரர் கோயிலில் உள்ள இரு கற்றூண்களில் ஒரு கல்வெட்டு காணப்பெறுகிறது. இந்தக் கல்வெட்டின் காலம் இந்தக் கல்வெட்டிலேயே மறைபொருளாகத் தரப்பெற்றுள்ளது. ஆண்டின் பெயர் பார்த்திவ என்றும் சுக்ல பக்ஷ தசமி ஞாயிற்றுக்கிழமை என்றும் தரப்பெற்றுள்ளது. இந்தக் குறிப்புகளைக் கொண்டு, இந்தக் கல்வெட்டின் காலம் பொ.நூ. 1405-ஆம் ஆண்டு பிப்ரவரி 15 என்று தீர்மானிக்க முடிகிறது. கல்வெட்டு க்ரந்த எழுத்துகளால் ஆனது. இந்தக் கல்வெட்டு அந்தப் பகுதியை பிரம்மபுரம் எனவும், மலையை கனகிரி எனவும் குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டில் உள்ள புராணச் செய்தியானது, சிவபெருமான் கும்பத்தில் தோன்றிய அகத்தியருக்கு பிரம்ம சரஸ்ஸின் கரையில் அவிமுக்தேச்வரர் என்னும் பெயரோடு அருள்மழை பொழிந்ததைக் குறிப்பிடுகிறது. அகத்தியரின் தவத்தால் மகிழ்ந்த எந்தை, ஒரு துறவியின் வடிவுகொண்டு அங்கே அருள் பொழிந்ததையும் குறிப்பிடுகிறது. மேலும், அவர் மூன்று இடங்களில் மூன்று லிங்கங்களாகக் குடிகொண்டதையும் குறிப்பிடுகிறது. அகத்தியர் அதன் பிறகு வாமனேந்த்ரர் என்னும் பெயரில் அவதாரமெடுத்து, சிவபெருமானுக்கு அவிமுக்தேச்வரர் என்னும் கோயில் எடுப்பித்த செய்தியையும் குறிப்பிடுகிறது.

*

இதனைப் போலவே ஆந்திர மாநிலம் பெஜவாடாவில், இந்திரகீல மலையில் உள்ள ஒரு தூணில், சிவபெருமான் வேடன் வடிவத்தில் அர்ச்சுனனோடு இருக்கும் வடிவம் பொறிக்கப்பெற்றுள்ளது. இந்தத் தூணில் ஒரு கல்வெட்டும் இடம் பெற்றுள்ளது. அந்தக் கல்வெட்டு, வடமொழியில் தெலுங்கு எழுத்துகளால் எழுதப்பெற்றுள்ளது. கல்வெட்டுத் தொடக்கம், அர்ச்சுனனின் பல்வேறு பெயர்களையும் குறிப்பிடுகிறது. அர்ச்சுனன் பாசுபதம் பெற தவமியற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது. அவன் தவம் இயற்றிய இந்திரகீல மலை, இந்தத் தூண் இடம் பெற்ற மலையே என்றும், அப்போது அர்ச்சுனனுக்கு இந்திரனின் சொற்படி வழிகாட்டிய இயக்கன் ஒருவன் மறுபிறவி எடுத்ததாகவும், அவன் கலியமபோயி என்பவருக்கு மகனாகத் திரிகூட போயி என்னும் பெயரில் பிறந்தாகவும் குறிப்பிடுகிறது. அவன் அனுமனைப்போல முற்பிறவியை அறிந்தவன் எனவும், சிறந்த நற்பண்புகளை உடையவன் எனவும் கல்வெட்டு இயம்புகிறது. தனது முற்பிறவி நினைவு வர, தானே இயக்கன் என்பதை உணர்கிறான். அர்ச்சுனனுக்கு வழிகாட்டி அவன் தவம் இயற்றிய இடத்தில் ஒரு தூணை நிறுவியதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதனை விஜயாசார்யார் என்பவர் எழுதியதாகவும் கல்வெட்டு கூறுகிறது. இந்த அறச்செயலானது, இந்திரகீல மலை இருக்கும்வரையிலும் நிலைபெறட்டும் என்ற வேண்டுதலோடு கல்வெட்டு நிறைவுறுகிறது.

ஆக, உமையன்னையின் அவதாரம், அகத்தியரின் அவதாரம், ஒரு இயக்கனின் மறுபிறவி என்ற மூன்று செய்திகள் கல்வெட்டுகளில் இருந்து தெரியவருகின்றன. இவை உண்மையா இல்லையா என்ற கேள்விகளெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். காலந்தோறும் அவதாரங்களாகக் கொண்டாடப்பட்ட செய்தியைக் கல்வெட்டுகளும் சான்றாகத் தருவது குறிப்பிடத்தக்கதல்லவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT