11. கிருஷ்ணார்ப்பணம்

ஏற்கெனவே கடித்தது போக மிச்சமிருந்த அந்த அப்பத்தை இரண்டாகக் கிள்ளி எடுத்தான். அப்பத்துக்குள் இருந்து ஒரு சிறிய - மிகச் சிறிய கிருஷ்ணர் விக்கிரகம் கீழே விழுந்தது. பித்தளைக் கிருஷ்ணர்.

அன்றைக்குக் கிருஷ்ண ஜெயந்தி. மற்றப் பண்டிகைகள் எப்படி இருந்தாலும் எங்கள் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக இருக்கும். காலை எட்டு மணிக்கு மிஷினுக்குப் போய்விட்டு வா என்று சொல்லி, ஒரு பையில் அரிசி, ஒரு பையில் வறுத்த உளுத்தம்பருப்பைக் கொடுத்து அம்மா எங்களை அனுப்பிவைப்பதில் அது ஆரம்பிக்கும். அந்நாள்களில் திருவிடந்தையில் மாவு மிஷின் கிடையாது. கோவளத்துக்கோ, கேளம்பாக்கத்துக்கோதான் போக வேண்டும். சைக்கிள் ஓட்டும் ஆசையில் வினய் தானே போய் வருவதாகச் சொல்லிவிட்டு, அண்ணாவின் சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பிப் போவான். ‘டேய், டேய், ஒரு நிமிஷம் இருடா..’ என்று கத்தியபடியே இன்னொரு சிறு பிளாஸ்டிக் கவரில் நாலைந்து பிடி ரேஷன் அரிசியைப் போட்டு எடுத்துக்கொண்டு அம்மா வெளியே ஓடி வருவாள். இதுவும் வருடம் தவறாமல் நடக்கும். ‘இத முதல்ல குடுத்து அரைச்சிக் குடுக்க சொல்லி தனியா வாங்கிண்டுடு. அதுக்கப்பறம் அரிசியைப் போடச் சொல்லு’ என்பாள். முன்னதாக அரைத்துச் சென்றவர்கள் எதைப் போட்டு அரைத்திருப்பார்களோ என்ற சந்தேகம். அது கடலை மாவாகவோ, மஞ்சள் தூளாகவோ, கேழ்வரகு மாவாகவோ இருந்தால் அரிசி மாவு நன்றாக வராது. நிறம் மாறிவிடும். மணமும் ருசியும்கூட மாறிவிடும். நான்கு பிள்ளைகளைப் பெற்றவளுக்குப் பண்டிகை என்பது பட்சணங்களுக்கான தினம். கடவுள் ஒரு சாக்கு. பக்தி ஒரு சாக்கு. எப்போதுமா விதவிதமாக சமைத்துக்கொண்டும் தின்றுகொண்டும் இருக்கிறோம்? எப்போதோ ஒரு நாள். வருடத்துக்கு ஒரு முறை. அதில் அம்மாவுக்கு எந்தக் குறையும் இருந்துவிடக் கூடாது.

அன்று முழுதும் அம்மா பச்சைத் தண்ணீர் தவிர எதுவும் சாப்பிடமாட்டாள். சமையல் மேடையில் இருக்கும் அடுப்பு தரைக்கு வந்துவிடும். ஒரு மணைப் பலகையைப் போட்டு உட்கார்ந்துகொண்டு, அடுப்பில் வாணலியை ஏற்றி எண்ணெய்யைச் சுடவைக்க ஆரம்பித்தால், பிற்பகல் மூன்றரை நான்கு மணி வரை வேலை ஓயவே ஓயாது. முறுக்கு, தட்டை, தேன் குழல், அதிரசம், அப்பம், சுய்யம், கொழுக்கட்டையில் வெல்லக் கொழுக்கட்டை ஒரு ரகம், உப்புக் கொழுக்கட்டை ஒரு ரகம் என்று ஒன்று மாற்றி ஒன்று செய்துகொண்டே இருப்பாள். இடையிடையே பசிக்கிறது என்று யாராவது வந்தால், ஐந்து நிமிடம் அடுப்பை அணைத்துவிட்டு கேட்பவர்களுக்கு மட்டும் சாப்பிட ஏதாவது கொடுப்பாள். அது பழங்களாக இருக்கும். காப்பியாக இருக்கும். ஆனால் கண்டிப்பாக அன்றைக்குப் பகல் முழுதும் வீட்டில் சமையல் கிடையாது. அதில் மாற்றம் இராது.

எங்கள் நான்கு பேரில் எனக்குத்தான் தின்பண்டங்கள் மீது சபலம். கண்ணெதிரே ஒரு தேன்குழல் உருவாகிப் பூத்து, எண்ணெய் மினுமினுப்புடன் தாம்பாளத்தில் வந்து இறங்கும்போது நாக்கில் நீரூரும். ஆனால் அம்மா தொட விடமாட்டாள். அடுக்கடுக்காகப் பண்டங்களைச் சுட்டுச் சுட்டு இறக்குவாளே தவிர, அவளும் ஒரு விள்ளலைக்கூட வாயில் போடமாட்டாள். அம்மா நகர்ந்து செல்லும் சில விநாடிகளில் ஒரு துண்டு தட்டையையாவது எடுத்து மென்றுவிட ஒவ்வொரு வருடமும் முயற்சி செய்வேன். என்றுமே அது நிறைவேறியதில்லை. அம்மாவுக்கு அடுப்பில் கண் இருந்திருக்கிறது. அல்லது அவள் பட்சணங்களுக்குள் தன்னை ஒளித்து வைத்துவிட்டுத்தான் கொல்லைப் பக்கம் எழுந்து போவாள். நான் அடுக்களைக்குள் நுழைந்தாலே, எங்கிருந்தோ அவளது குரல் வந்துவிடும். ‘எதையும் தொடக் கூடாது.’

‘ராத்திரி எப்படி எல்லாத்தையும் சாப்பிடமுடியும்? இப்ப கொஞ்சம் குடுத்தா என்ன?’ என்று நான் கேசவன் மாமாவை உதவிக்கு அழைப்பேன்.

‘அதெல்லாம் எனக்குத் தெரியாது. உங்கம்மா கொன்னுடுவா’ என்று சொல்லிவிட்டு மாமா நகர்ந்துவிடுவார்.

வினய்யும் வினோத்தும் அன்றைய பகல் முழுதும் வீட்டுக்குள் காலடிகூட எடுத்துவைக்கமாட்டார்கள். எத்தனை முயற்சி செய்தாலும் எதுவும் கிடைக்காது என்பது தெரியுமாதலால், நாளெல்லாம் வீதியில் அலைந்து திரிந்துவிட்டு இருட்டும் நேரம்தான் வீடு திரும்புவார்கள். அண்ணா, கேட்கவே வேண்டாம். எடுத்துவந்து எதிரே வைத்தாலும் சாப்பிடலாமா வேண்டாமா என்று பத்து நிமிடங்கள் யோசித்துவிட்டு முடிவு சொல்லக்கூடியவன் அவன். பிரச்னையெல்லாம் எனக்குத்தான்.

அன்றைக்கு நடந்த சம்பவம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அது எனக்கு மறக்கமுடியாத கிருஷ்ண ஜெயந்தி. அம்மா முள் முறுக்கு, தேன்குழலை மட்டும் முடித்துவிட்டு, அடுத்த சுற்றுக்கு ஆயத்தம் ஆவதற்கு முன்னால் எழுந்து வாசலுக்குச் சென்றிருந்தாள். பக்கத்து வீட்டு மாமி என்ன காரணத்துக்காகவோ கூப்பிட்டிருந்தாள். அதுதான் சந்தர்ப்பம் என்று எனக்குத் தோன்றியது. ஓசைப்படாமல் அடுக்களைக்குள் நுழைந்து ஒரு முள் முறுக்கை மட்டும் எடுத்து நிஜார் பையில் போட்டுக்கொண்டு கிணற்றடிக்குப் போய் உட்கார்ந்துகொண்டேன். உதவிக்கு ஒரு பாடப் புத்தகம். படிக்கிற பாவனையில் சிறு சிறு துண்டுகளாக உடைத்து உடைத்துத் தின்னத் தொடங்கியிருந்தேன்.

அம்மா, பக்கத்து வீட்டு மாமியிடம் பேசி முடித்துவிட்டு மீண்டும் அடுக்களைக்கு வந்து, விட்ட இடத்தில் இருந்து வேலையைத் தொடங்கியும் அரை மணி நேரத்துக்குமேல் ஆகிவிட்டது. நான் முழு முறுக்கையும் திருப்தியாகச் சாப்பிட்டுவிட்டு, அதற்குப் பின்பும் படித்துக்கொண்டே இருந்தேன். அம்மா கண்டுபிடிக்கவில்லை என்பது எனக்கு மிகுந்த சந்தோஷம் தந்தது.

மாலை அப்பா வீடு திரும்பி, கிணற்றடியில் குளித்து முழுகி திருமண் இட்டுக்கொண்டார். பஞ்சக்கச்சம் உடுத்தி பூஜையில் அமர்ந்து பாராயணத்தை ஆரம்பித்தார். நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் நாநூறு பாசுரங்கள் சேவிப்பது அவர் வழக்கம். பெரியாழ்வாரில் நூறு. ஆண்டாள் முழுமையாக. நம்மாழ்வார் கொஞ்சம். மற்றவர்களில் ஆளுக்குக் கொஞ்சம். மொத்தமாகச் சேவித்து முடித்த பிறகு அனைவரையும் கூப்பிட்டார். அம்மா, செய்த பட்சணங்கள் அனைத்தையும் எடுத்துவந்து பூஜையறையில் அமுது செய்விக்க வைத்தாள். அப்பா அனைத்து பட்சணங்களின் மீதும் ஒரு துளசி இலையைக் கிள்ளிப் போட்டுவிட்டு நாறு நறும்பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு நூறு தடாய் வெண்ணெய் வைத்த பாசுரத்தைச் சொல்லி முடித்து, கற்பூர ஆரத்தி ஆன பிற்பாடு எந்தத் தடையும் இல்லை, எடுத்துச் சாப்பிடுவதற்கு. பட்சணங்கள் ஒரு பக்கம் என்றால் வடை, அக்கார அடிசிலுடன் விருந்தும் இருக்கும். முழுநாளும் உண்ணாதிருந்துவிட்டு ஒரே மொத்தமாகத் தின்று தீர்க்க வருடத்துக்கு ஒரு தினம்.

அன்றைக்கு அம்மா, கிருஷ்ண விக்ரகத்தின் முன் அத்தனைப் பலகாரங்களையும் கொண்டு வைத்ததும் அண்ணாவுக்கு என்ன தோன்றியதோ. சட்டென்று குனிந்து ஒரு அப்பத்தை எடுத்துக் கடித்துவிட்டான்.

நாங்கள் பயந்தே போய்விட்டோம். மிக நிச்சயமாக ஒரு பூகம்பம் வெடித்துவிடும் என்று எனக்குத் தோன்றியது. அப்பா துர்வாசரைப்போல உக்கிரமாக எழுந்து நின்றார். கேசவன் மாமா அவசர அவசரமாக அண்ணாவைப் பிடித்து இழுத்து, அவன் கையில் இருந்த அப்பத்தைப் பிடுங்கிப்போட்டு, ‘அறிவில்லே ஒனக்கு? ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்காதோ? இன்னும் ரெண்டு நிமிஷத்துல முடிஞ்சிடப்போறது. அதுக்குள்ள என்ன?’ என்று கேட்டார்.

நான் அம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். நைவேத்தியத்துக்கு முன்பு ஒரு விள்ளல்கூட உள்ளே போய்விடக் கூடாது என்ற அவளது பல்லாண்டுக் கால விரதத்தை ஒரே ஒரு அப்பக் கடியில் முறியடித்திருக்கிறான் அண்ணா. என்னைப்போல் திருட்டுத்தனமாக அவன் அதைச் செய்திருந்தால் எந்தப் பிரச்னையும் வந்திருக்கப் போவதில்லை. எதற்காக இப்படி எல்லோரும் கூடியிருக்கும்போது செய்தான்? அதுவும் சில விநாடிகளில் அம்மாவே எடுத்துக் கொடுத்துவிடவிருந்த சூழ்நிலையில்?

அப்பா அவனைக் கண்டபடி திட்ட ஆரம்பித்தார். இரண்டு நிமிடங்கள் மூச்சு விடாமல் திட்டித் தீர்த்துவிட்டு, ‘தரித்திரம். வந்து வாய்ச்சுது பாரு நமக்குன்னு’ என்று சொல்லிவிட்டு ஓய்ந்தார்.

‘விட்டுடுங்கோ, பரவால்ல’ என்று அம்மா சொன்னாள்.

‘என்ன பரவால்ல? அந்த அப்பத்த நகர்த்தி வை. அது வேண்டாம் இன்னிக்கு’

‘பரவால்ல. அம்சி பண்ணிடுங்கோ’

‘அதான் எடுத்துத் தின்னுட்டானே. அப்பறம் எதுக்கு அது பெருமாளுக்கு?’

அம்மா, அண்ணாவை ஒரு பார்வை பார்த்தாள். சற்று சிரித்தாள். அவனும் சிரித்தான். ‘நான் ஒண்ணும் சொல்லமாட்டேண்டா. நீ சாப்ட்டா சந்தோஷம்தான். பெருமாள் ஒண்ணும் நினைச்சிக்கமாட்டார்’ என்று சொன்னாள்.

இது எனக்கு வியப்பாக இருந்தது. சற்று துணிச்சல் உண்டாகி, ‘நானும் ஒரு தப்பு பண்ணேம்மா’ என்று சொன்னேன்.

‘என்ன?’

‘மத்தியானம் நீ ரேகா மாமியோட பேசிண்டிருந்தப்போ ஒரு முள்ளு முறுக்க எடுத்துண்டு போயிட்டேன். ரொம்ப ஆசையா இருந்ததும்மா’ என்று சொன்னேன்.

அப்பா, மாமா, அம்மா மூவருமே சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. பூஜை முடித்து நைவேத்யமாகாமல் பெருமாள் காத்துக்கொண்டிருப்பதை யார் அவர்களுக்கு எடுத்துச் சொல்வது? அந்தப் பேரமைதி மிகவும் குரூரமாக இருந்தது. வினய் என்னை யாருக்கும் தெரியாமல் இடுப்பில் கிள்ளினான். சனியனே என்று சொன்னான்.

அம்மா என்ன நினைத்தாளோ. சட்டென்று குனிந்து முள் முறுக்கு இருந்த பாத்திரத்தை மட்டும் உள்ளே எடுத்துச் சென்று வைத்துவிட்டுத் திரும்பி வந்து, ‘நடக்கட்டும்’ என்று சொன்னாள்.

எனக்கு அது தாங்கமுடியாத அவமானமாக இருந்தது. ‘விஜய் சாப்ட்டது மட்டும் தப்பில்லியா?’ என்று திரும்பத் திரும்பப் பொறுமிக்கொண்டிருந்தேன். அம்மாவோ அப்பாவோ அதற்கு பதில் சொல்லவேயில்லை. நல்ல நாளும் அதுவுமாகக் குழந்தைகளைக் கடிந்துகொண்டு பண்டிகை சந்தோஷத்தைக் கெடுக்க வேண்டாம் என்று அப்பா நினைத்திருப்பார். அன்றிரவு நாங்கள் அமைதியாகச் சாப்பிட்டோம். படுத்துவிட்டோம்.

அம்மா அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு ஒரு தம்ளர் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டுப் படுக்க வந்தபோது, ‘ஐயோ நீ ஏன் சாப்பிடலை?’ என்று அப்பா கேட்டார்.

‘குழந்தைகள் தெரியாம பண்ணாலும் தப்பு தப்புதான். இது பிராயச்சித்தம்’ என்று அம்மா சொல்லிவிட்டாள். எனக்கு மிகவும் சங்கடமாகிப்போனது. ‘நீ சாப்பிடும்மா, சாப்பிடும்மா’ என்று திரும்பத் திரும்ப அவளிடம் கெஞ்சிப் பார்த்தேன். முடியவே முடியாது என்று மறுத்துவிட்டாள். ஏதோ ஒரு கணத்தில் எனக்குத் தோன்றியது. வம்புக்காகவே அம்மா நான் எடுத்துத் தின்ற பண்டத்தை மட்டும் நைவேத்தியத்துக்கு வைக்காமல் உள்ளே எடுத்துச் சென்றுவிட்டு, அண்ணா எடுத்துச் சாப்பிட்டதை அனுமதித்ததற்குத்தான் அது பிராயச்சித்தம்.

சரி, பட்டினி கிடக்கட்டும் என்று நானும் போய்ப் படுத்துவிட்டேன்.

அன்று நள்ளிரவு அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது அண்ணா ஓசைப்படாமல் என்னை மட்டும் எழுப்பினான்.

‘என்னடா?’ என்று அடிக்குரலில் கேட்டேன்.

‘எழுந்து வா’ என்று சொன்னான்.

நாங்கள் இருவரும் பூஜையறைக்கு வந்தோம். அம்மா வீடெங்கும் முதுகு உடைய வரைந்திருந்த கிருஷ்ணர் பாதங்கள் அங்கேதான் வந்து பூர்த்தியடைந்திருந்தன. ஒரு சிறிய பெஞ்சைக் கவிழ்த்துப்போட்டு நாலாபுறமும் தோரணம் கட்டி, பூமாலைகள் தொங்கவிட்டு அப்பா ஒரு தாற்காலிக சன்னிதியை உருவாக்கி அதில் கிருஷ்ணனை ஏளப்பண்ணியிருந்தார். துளசியும் ரோஜாவும் சாமந்தியும் மல்லியும் உதிரிகளாக அந்த பெஞ்சு சன்னிதிக்குள் குவிந்துகிடக்க, அண்ணாவிடம் இருந்து மாமா பிடுங்கிப்போட்ட அப்பத்துண்டு ஒரு மூலையில் அப்படியே கிடந்தது.

அண்ணா அந்த அறையில் விளக்கைப் போடவில்லை. ஆனால் அப்போதும் எரிந்துகொண்டிருந்த குத்து விளக்குகளின் ஒளியில் எல்லாமே பளிச்சென்று தெரிந்தன.

‘எதுக்குடா கூப்ட்ட? என்ன பண்ணப் போற?’ என்று கேட்டேன்.

‘அந்த அப்பத்த எடுத்துண்டு வா’ என்று அண்ணா சொன்னான்.

நான் கீழே கிடந்த அப்பத்துண்டை எடுத்து வந்து அவனிடம் நீட்டி, ‘இருந்தாலும் நீ பண்ணது தப்புடா. அம்மாக்கு தெரியாம சாப்ட்டிருக்கலாம். இப்படி எல்லார் எதிர்லயும் அப்படி செஞ்சிருக்க வேண்டாம்’ என்று சொன்னேன்.

அவன் பதில் சொல்லவில்லை. அவன் ஏற்கெனவே கடித்தது போக மிச்சமிருந்த அந்த அப்பத்தை இரண்டாகக் கிள்ளி எடுத்தான். அப்பத்துக்குள் இருந்து ஒரு சிறிய - மிகச் சிறிய கிருஷ்ணர் விக்கிரகம் கீழே விழுந்தது. பித்தளைக் கிருஷ்ணர்.

‘மாமா அப்படி கலாட்டா பண்ணாம இருந்திருந்தார்னா அப்பவே இதை எடுத்து அப்பாகிட்ட குடுத்திருப்பேன். இனிமே குடுக்கறதுல உபயோகமில்லே. நீ யார்ட்டயும் சொல்ல வேண்டாம்’ என்று சொன்னான்.

நான் நடுங்கிக்கொண்டிருந்தேன். அண்ணாவா! என் அண்ணாவா இதனைச் செய்தான்! அவனால் இதெல்லாமும் முடியுமா! அன்றைக்கு வீட்டுக்கு வந்த சட்டை போட்ட சித்தர், வாழைப் பழத்தில் இருந்து பிள்ளையார் எடுத்ததைப் போன்றதொரு காரியம். ஆனால் அண்ணா அவரிடம் கேட்டானே. உங்களால் ஒரு பெருமாள் விக்கிரகத்தை எடுத்துத்தர முடியுமா என்று? பதிலே சொல்லாமல் அவர் போனாரே.

நான் சட்டென்று அவனிடம் கேட்டேன், ‘உன்னால ஒரு பிள்ளையார் சிலையை எடுத்துத்தர முடியுமா?’

அவன் சிறிதும் யோசிக்கவில்லை. விண்ட அப்பத்தை மேலும் இரு துண்டுகளாக்கினான். இப்போது அதே அளவில் ஒரு பிள்ளையார் சிலை கீழே விழுந்தது.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com