23. துக்கம் தவிர்த்தல்

பெண்களைப் பற்றி நினைக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் நானொரு நல்ல பையனாகவே இருந்துவிட முடிவு செய்திருந்தேன். அதாவது பள்ளிக்குச் செல்லும் நேரம். விளையாட்டு மைதானத்தில் இருக்கும் நேரம்.

அன்றைக்கு முழுவதும் நான் வசந்த மண்டபத்தில்தான் அமர்ந்திருந்தேன். அலையடித்துக்கொண்டிருந்த குளத்து நீரும், பசுமையின் பல நிறங்களைச் சதுரம் சதுரமாகக் காட்டிக்கொண்டிருந்த வயல்வெளியும், ஓயாமல் சத்தமிட்டுக்கொண்டிருந்த சிட்டுக் குருவிகளும், எப்போதாவது சரளைக் கற்களை அரைத்துக்கொண்டு மெல்ல நகர்ந்துபோகும் மாட்டு வண்டிகளும், வைக்கோல் வாசனையும் பொதுவாக எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அன்று எதன்மீதும் கவனம் செல்லவேயில்லை. அது துக்கமா என்று தெரியவில்லை. நெஞ்சை அழுத்தத்தான் செய்தது. ஆனால் அப்பாவிடம் நான் வினய் குறித்துச் சொன்னதைத் தவறு என்று என்னால் நினைக்க முடியவில்லை. ஏதோ ஒருவிதத்தில் அவனுக்கு நான் நல்லது செய்ததாகவே தோன்றியது. ஆனால் அப்பா எடுத்த முடிவு எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அம்மா பதில் சொல்லாமல் அதை ஏற்றது அதைவிடப் பெரிதாகத் தாக்கியது. ஒன்று மட்டும் எனக்குப் புரியவில்லை. என் வீட்டில் மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?

இப்போது நினைத்துப் பார்த்தாலும் எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. முதல் முதலில் வினய் பீடி குடித்த விவகாரம் வீட்டுக்கு வந்தபோது, என்றைக்காவது ஒருநாள் அவன் பத்மா மாமியின் பெண்ணோடு ஊரை விட்டு ஓடிப்போவான் என்று ஏனோ எனக்குத் தோன்றியது. அவனுக்கு அந்தப் பெண்ணின் மீது ஒரு கண் இருந்ததை நான் அறிவேன். என் வயதுக்கு நான் அதையெல்லாம் வெளிப்படையாகப் பேசுவது கூடாது என்று என்னையறியாமல் நினைத்துக்கொண்டிருந்ததால், அவனிடமோ, வேறு யாரிடமோ அதைப்பற்றிப் பேசியதில்லை. பெண்களின் மீதான ஈர்ப்பு பற்றி ஏராளமான ஐயங்களும் குழப்பங்களும் எனக்கிருந்த காலம் அது. உள்ளுக்குள் முட்டி மோதிக்கொண்டிருந்த பல சங்கதிகளை உதறி உதிர்த்து ஒவ்வொன்றாக எடுத்துப்பார்த்தால், என்னை எனக்கே பிடிக்காமல் போய்விடும் என்று தோன்றும். அதனாலேயே பெண்களைப் பற்றி நினைக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் நானொரு நல்ல பையனாகவே இருந்துவிட முடிவு செய்திருந்தேன். அதாவது பள்ளிக்குச் செல்லும் நேரம். விளையாட்டு மைதானத்தில் இருக்கும் நேரம். வீட்டில் இருக்கும் நேரம். குளித்துவிட்டு பெருமாளை விழுந்து சேவிக்கும் நேரம். அம்மாவோடு செலவழிக்கும் நேரம். படிக்கிற நேரம்.

பொதுவாகப் பள்ளி விட்டு வீடு திரும்பும் நேரங்களில்தான் நான் பெண்களைக் குறித்து நினைப்பேன். சென்ற வருடம் வரை என் வகுப்பில் என்னோடு படித்துக்கொண்டிருந்த பல பெண்கள், அந்த வருடம் சட்டென்று தாவணிக்கு மாறிவிட்டிருந்தார்கள். வி மடிப்புத் தாவணியும் மடித்துக் கட்டிய இரட்டைப் பின்னலும். ஓ. கடவுளல்ல; ஒரு கலைஞனால் மட்டுமே அப்படியொரு வடிவழகைப் படைக்க முடியும். எனக்கு தாவணி அணிந்த அத்தனைப் பெண்களுமே அன்றைக்கு அழகாகத் தெரிந்தார்கள். பிறந்தது முதல் என்றுமே நான் கண்டறியாத பெண்களின் இடுப்பை அந்தத் தாவணிப் பெண்களிடம்தான் முதலில் கண்டேன். அரைக்கணம் போதும் எனக்கு. அதற்குமேல் நான் உற்றுக் கண்டதில்லை. அந்த அரைக்கணத்து நினைவை ஒரு முழு நாளுக்குச் சேமித்துவைத்து மாலை வீடு திரும்பும்போது எடுத்து நினைப்பேன்.

ஆனால், வினய் என்னிடம் இடுப்பைக் குறித்துப் பேசியதில்லை. மிக நேரடியாக அவன் மார்பைப் பற்றித்தான் சொன்னான். பெண்களின் மார்பு. அவன் சொன்னபோது எனக்குச் சற்றுப் பூரித்துப்போனது உண்மை. ஆனாலும் ஐயோ இப்படி அசிங்க அசிங்கமாகப் பேசுகிறானே என்றுதான் நினைத்தேன். எதையெல்லாம் குற்றம் என்று நினைத்தேனோ அதெல்லாம் பிடித்திருந்தது. எதையெல்லாம் திருட்டுத்தனம் என்று நினைத்தேனோ, அதையெல்லாம் ரகசியமாக ரசித்துக்கொண்டிருந்தேன். நான் ரகசியமாகச் செய்ததை வினய் வெளிப்படையாகச் செய்தபோது, அவன் ஒரு நல்ல பொறுக்கியாவான் என்று நினைத்தேன். சற்றும் எதிர்பாராவிதமாக அவன் மயானத்தில் சாம்பல் பூசிக்கொண்டு நின்றதைக் கண்டபோது என்னால் தாங்க முடியாமல் போய்விட்டது.

விஜய் வீட்டை விட்டுப் போனபோது எனக்கு வருத்தம் இருந்ததே தவிர, நான் அதைக் குறித்துப் பெரிதாக யோசிக்கவில்லை. முதலில் அவன் ஒரு பெரிய மந்திரவாதியாகிவிடுவான் என்று நினைத்தேன். பிறகு அவன் சித்தராவான் என்று தோன்றியது. சித்தெல்லாம் ஒன்றுமில்லை என்று அவன் சொன்ன பிறகு, அவன் அல்லிக் குளத்துக்கு அடியில் தவம் செய்யும் ரிஷிகளுள் ஒருவனாகிவிடுவான் என்று முடிவு செய்துகொண்டேன். ஆனால் வினய்யின் நடவடிக்கை எனக்கு மிகுந்த குழப்பத்தையும் அதிர்ச்சியையும் தந்தது. ஒரு பித்தனுக்குரிய குணாதிசயங்கள் அவனிடம் சேரத் தொடங்கியிருப்பதாகத் தோன்றியது. ஒருவிதத்தில் அது என் அச்சம்தான். என் வயதும் ஒரு காரணமாயிருக்கலாம். ஆனால் அப்படி ஒரேயடியாக அவன் வீட்டை விட்டுப் போவதற்கு நான் காரணமாவேன் என்று எதிர்பார்க்கவில்லை.

அப்பா, பள்ளிக்கூடத்தில் அவனுக்கு டிசிகூட வாங்கவில்லை. அதெல்லாம் அவசியமில்லை என்று சொல்லிவிட்டார். ‘இங்க படிச்சிக் கிழிச்சதெல்லாம் போதும். அவனுக்கு சரியான இடம் காஞ்சீபுரம்தான்’ என்று சொன்னார். அவர், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியாரின் பரம பக்தர். ‘வேதாந்த தேசிகரோட புத்ரன் வரத நாராயணாச்சார்ட்டே நேரடியா பாடம் கேட்டவர். அவரளவு ஞானஸ்தர் லோகத்துலயே கிடையாது’ என்று அடிக்கடி சொல்லுவார். மாதம் ஒருமுறை காஞ்சீபுரத்துக்குப் போய் வரதராஜரை சேவித்துவிட்டு, மடத்துக்கும் சென்றுவிட்டு வருவார்.

வினய் அங்கே தங்கிப் படித்தால் புத்தி தடுமாறாமல் இருக்கும் என்று அப்பா நினைத்தார். கட்டுக் குடுமியும் பன்னிரண்டு திருமண்ணும் வைரக்கல் வைத்த கடுக்கண்ணுமாக வினய் வீட்டுக்குத் திரும்பிவரக் குறைந்தது எட்டாண்டுகள் ஆகும் என்று கேசவன் மாமா சொன்னார்.

‘ஆனா வரும்போது ஞானப்பழமா வருவாண்டா உங்கண்ணன். நாலாயிரமும் படிச்சிருப்பான். திருப்பதிலயோ ஸ்ரீரங்கத்துலயோ காஞ்சீபுரத்துலயோ அவனுக்கு உத்தியோகம் ஆயிருக்கும். புத்தி தெளிஞ்சிருப்பான். பகவத் ஸ்மரணம் தவிர இன்னொண்ணு இருக்காது பாத்துக்கோ’ என்று கேசவன் மாமா சொன்னார்.

நான் அம்மாவிடம் கேட்டேன். ‘பண்ணது தப்புதான். அதுக்கு அடிச்சாச்சு, கண்டிச்சாச்சு. எதுக்காக இப்படி மடத்துல கொண்டு போய்த் தள்ளினார் அப்பா?’

‘தங்கணுமேன்ற தவிப்புதான்’ என்று சொல்லிவிட்டு அவள் போய்விட்டாள். எனக்குப் புரியவில்லை. எங்கு தங்க வேண்டும்? எதற்குத் தங்க வேண்டும்? அவள் ஏதோ சொல்ல நினைப்பதையும், ஆனால் கவனமாக அதைத் தவிர்ப்பதையும் என்னால் உணர முடிந்தது. என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை. பெருமாள் ஏன் என்னைச் சிறுவனாகப் படைத்தான் என்று நொந்துகொண்டு வசந்த மண்டபத்துக்குப் போய் அமர்ந்தேன்.

வெகு நேரம் அழுதுகொண்டுதான் இருந்தேன். சொல்லாமல் வீட்டைவிட்டுப் போன விஜய்க்காகக்கூட நான் அத்தனை அழவில்லை என்பதை நினைத்துக்கொண்டேதான் அழுதேன். ஒருவேளை, இந்த அழுகை இருவருக்கும் சேர்த்த அழுகையாக இருக்குமோ என்று தோன்றியது. ஆனால் அப்போதும் அம்மா அழவில்லை என்பதுதான் உறுத்திக்கொண்டே இருந்தது. எப்படி அவளால் முடிகிறது? ஒரு பிள்ளை சொல்லாமல் ஓடிப்போனான். இன்னொருவனை வலுக்கட்டாயமாகக் கொண்டுபோய் எங்கோ தள்ளிவிட்டு வந்தாயிற்று. நான்கு பேர் இருந்த வீட்டில் மிச்சம் இருப்பது இரண்டே பேர். முடியுமா? தகிக்காதா? தாங்கக்கூடியதுதானா அது?

எனக்கு யாரிடமாவது பேச வேண்டும் போலிருந்தது. அம்மாவிடமோ, அப்பாவிடமோ, மாமாவிடமோ அல்ல. வினோத்திடமும் அல்ல. வேறு யாரிடமாவது. ஆனால் யாருடன் பேசுவது? எனக்குப் புரியவில்லை. மிகவும் குழப்பமாகவும் கலக்கமாகவும் இருந்தது. என்னால் இனிமேல் பாடங்களில் கவனம் செலுத்த முடியுமா என்று சந்தேகமாக இருந்தது. எல்லா அதிர்ச்சிகளும் ஒரு நாளில் நடந்து முடிந்துவிடுகின்றன. ஆனால் அவற்றின் வீரியமும் தாக்கமும் வாழ்நாள் முழுதும் தொடரும் போலிருக்கிறது.

அந்தக் கணத்தில்தான் எனக்குத் தோன்றியது. எதற்கும் அதிர்ச்சியுறாத ஒரு வாழ்வை எனக்கே எனக்காகப் பிரத்தியேகமாகச் செய்துகொண்டால் என்ன? துக்கம் தரத்தக்க எதையும் அண்டவிடாதிருப்பது. துக்கத்தின் ஒரு சொட்டு நிழலும் என் மீது படியாமல் பார்த்துக்கொள்வது. துக்ககரமான எந்த ஒரு நிகழ்விலும் பங்கு கொள்ளாதிருப்பது.

குருநாதர் இறந்துவிடுவார் என்று தெரிந்தபோது, நான் ஆசிரமத்தைவிட்டுப் புறப்பட்டுவிட்டதன் காரணம் அதுதான். எனக்கு அவர்மீது பற்றில்லாமல் இல்லை. பாசமில்லாமல் இல்லை. பக்தியோ, மரியாதையோ சற்றும் குறைந்ததேயில்லை. நான் ஆக நினைத்த வடிவை அவர் எனக்குச் சமைத்துக் கொடுத்தவர். என் ஆளுமையின் பிரம்மாண்டம் அவர் வடிவமைத்தது. அதில் சந்தேகமில்லை. ஆனாலும் மரணம் துக்ககரமானது. உலவிய ஒரு உயிரைக் கிடந்த கோலத்தில் காண்பது ஒரு சவால். வைராக்கியத்துக்கோ, விரக்திக்கோ இட்டுச்செல்லும் எது ஒன்றும் எனக்குத் தேவையில்லை என்று அன்று முடிவு செய்தேன்.

அன்றைக்கு மாலை வரை நான் வசந்த மண்டபத்தில் இருந்து எழவேயில்லை. எப்படியும் என்னைத் தேடிக்கொண்டு வினோத் அங்கு வருவான் என்று நினைத்தேன். ஆனால் வரவில்லை. தென்பட்டுக்குப் போகிற யாரிடமாவது அம்மா என்னைப் பார்த்தால் வீட்டுக்கு வரச் சொல்லி, சொல்லி அனுப்புவாள் என்று தோன்றியது. அப்படியும் யாரும் வந்து என்னைப் பார்க்கவில்லை. ஒரு முழு நாள் என்னைக் குறித்து நினைக்காமலே இருந்திருப்பாளா? நான் என்ன ஆனேன், எங்கே போனேன் என்று தேடத் தோன்றாதா?

இதுவும் எனக்கு வியப்பாக இருந்தது. அம்மாவின் பல பக்கங்களை நான் திறக்கவேயில்லை என்று தோன்றியது. ஆனால் அவள் ஒரு சராசரி இல்லை என்று மட்டும் அடிக்கடி நினைப்பேன். இந்தச் சொற்கள் இப்போது வருவன. அன்றைக்கு எனக்கு இதற்கெல்லாம் அர்த்தம் தெரியாது. மொழியற்ற வடிவில் உணர்ந்ததுதான். இதையேதான் பின்னாள்களில் என் குரு சொன்னார். மொழியற்ற, சிந்தனையுமற்ற வடிவில் இறைவனுடன் பேசுவது குறித்து. சிந்திப்பதை நிறுத்திவிட்டு, மொழி களைந்து உரையாடுவது குறித்து.

முடியுமா என்று ஏன் அப்போது கேட்டேன்? தெரியவில்லை. எனக்கே முடிந்திருக்கிறதே. இப்போதுதான் அதுவும் புலப்படுகிறது.

இருட்டும் நேரம் நான் வசந்த மண்டபத்தை விட்டுப் புறப்பட்டேன். அப்போதும் வீட்டுக்குப் போகத் தோன்றவில்லை. என்னமோ நினைத்துக்கொண்டு, அல்லிக் குளத்தைக் கடந்து கடற்கரைச் சாலை வரை போனேன். சட்டென்று கோவளம் பக்கம் காலை எட்டிப் போட்டு நடக்க ஆரம்பித்தேன். முக்கால் மணி நேரம் எதையெதையோ நினைத்தபடி நடந்துகொண்டே இருந்தேன். நடுநடுவே அம்மா தேடுவாள், அம்மா தேடுவாள் என்று தோன்றியபடி இருந்தது. ஆனாலும் திரும்பத் தோன்றவில்லை. என்னையறியாமல் கடலையொட்டி இருந்த தர்காவுக்குப் போய்ச் சேர்ந்திருந்தேன்.

அந்த நேரத்திலும் தர்காவில் ஏழெட்டுப் பேர் இருந்தார்கள். நெற்றியில் ஸ்ரீசூர்ணம் இட்ட பையன் இங்கு எதற்கு வந்திருக்கிறான் என்று அவர்களுக்குத் தோன்றியிருக்கும். நான் இலக்கே இல்லாமல் தர்காவைச் சுற்றி வந்துகொண்டிருந்தேன். அந்த இடம் முழுதும் காய்ந்த மீனின் வாசனை அடித்தது. காற்றில் ஈரம் இருந்தது. அந்த ஈரத்தின் வாசனை மணலில் இருந்து எழுந்துவந்து காற்றில் கலந்துகொள்வதாக நினைத்தேன். சிறிது நேரம் தர்காவின் பின்புறம் கடலை நோக்கியவாறு அப்படியே அமர்ந்திருந்தேன். வெகு தொலைவில் ஒரே ஒரு படகு கரையை நோக்கி வந்துகொண்டிருந்தது தெரிந்தது. அந்தப் படகில் ஒரு விளக்கு இருந்தது. படகு நீரில் ஏறி இறங்குவதற்கேற்ப அந்த விளக்கின் ஒளியும் மேலே ஏறி ஏறி உள்ளிறங்கிக்கொண்டிருந்தது. என் மனத்தை யாரோ கழட்டி எடுத்து அந்தப் படகுக்குள் பொருத்திவிட்டாற்போல் உணர்ந்தேன்.

எவ்வளவு நேரம் அதையே பார்த்துக்கொண்டிருந்தேனோ தெரியாது. யாரோ என் பின்னால் வந்து நிற்பதுபோலத் தெரியவும், சட்டென்று எழுந்துகொண்டேன்.

அவரை எனக்குத் தெரியும். அம்மாவோடு சில சமயம் அந்தப் பக்கிரியைப் பார்க்க நானும் வந்திருக்கிறேன். அவர் ஒரு பிச்சைக்காரர் என்று முதலில் நினைத்தேன். அம்மா அவரிடம், வீட்டுக்கு வரும் சிறு பிரச்னைகளை விவரித்து மந்திரித்துக்கொண்டு போவதையும், தாயத்து கேட்டு வாங்கி வருவதையும் கண்டபின், அவர் பிச்சைக்காரர் இல்லை என்று முடிவு செய்துகொண்டேன். ஒரு முஸ்லிம் சாமியார் என்று எண்ணிக்கொள்வது எனக்கு வசதியாக இருந்தது.

எதிர்பாராவிதமாக அந்த மனிதர் என் முன்னால் வந்து நின்றபோது என்ன பேசுவதென்று எனக்குத் தெரியவில்லை. கடற்கரையின் வெளிச்சமற்ற வெளிச்சத்தில், என்னை அவருக்கு அடையாளம் தெரிந்ததா என்றும் தெரியவில்லை.

‘வீடு எங்கே?’ என்று அவர் கேட்டார்.

‘திருவிடந்தை’

‘தனியா வந்திருக்கியா? வீட்ல தேடுவாங்களே.’

‘போகணும்’ என்று சொன்னேன்.

‘கெளம்பு, கெளம்பு. சீக்கிரம் போ’ என்றார்.

நான் தலையசைத்துவிட்டு நாலடி நடந்திருப்பேன். அவருக்கு என்ன தோன்றியதோ. வேகமாக என்னை நெருங்கி என் தோளை அழுத்தி நிறுத்தினார். ஒரு கணம் என்னை உற்றுப் பார்த்தார். என் நெற்றிப் பொட்டில் கைவைத்து என்னவோ சொன்னார். அந்த மொழி எனக்குப் புரியவில்லை. கொஞ்சம் பயமாக இருந்தது. அவர் சித்தரா, டாக்டரா என்று வீட்டுக்குப் போனதும் அம்மாவிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஏனெனில், ஒரு சமயம் அப்பாவுக்குத் தீராத வயிற்றுப்போக்கு வந்தபோது, அம்மா அந்தப் பக்கிரியிடமிருந்துதான் ஏதோ ஒன்றை வாங்கிவந்து அப்பாவுக்கு வெந்நீருடன் சேர்த்துக் கொடுத்தாள். அதைச் சாப்பிட்ட பின்பு அப்பாவுக்கு பேதி நின்றுவிட்டது. அன்றைக்கு அது என்னவென்று கேட்கத் தோன்றவில்லை எனக்கு. இன்று மறக்காமல் கேட்க நினைத்துக்கொண்டேன்.

அவர் என் நெற்றிப் பொட்டில் கைவைத்து மந்திரித்துவிட்டு, ‘போ’ என்று சொன்னதும் அவருக்கு நான் தேங்ஸ் சொன்னேன். சிரித்தார். அப்படியொரு சிரிப்பை என் வாழ்நாளில் நான் கண்டதில்லை. இருட்டில் நாலைந்து பற்கள் மட்டும் வெளியே தெரியும்விதமான பூடகச் சிரிப்பு. ஒரே ஓட்டமாக நான் அந்த இடத்தை விட்டுப் பறந்துவிட்டேன்.

ஆனால், என்னையறியாமல் மறுநாள் ஏனோ அவரிடம்தான் போய் நின்றேன்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com